
சரியான நிதி ஆலோசகர் யார்?
இன்றைய காலகட்டத்தில் நோயைப் போக்க சரியான மருத்துவரைத் தேர்வு செய்வது போல், சரியான நிதி ஆலோசகரைத் தேர்வு செய்வதும் அவசியம். எப்படி அடையாளம் காண்பது என்கிறீர்களா? இதோ சில வழிமுறைகள்...

1. முதலீட்டாளர்கள் பரிந்துரைப்பார்கள்
ஒரு நல்ல நிதி ஆலோசகர் என்பவர், முதலீட்டாளர்களால் மற்றவர்களுக்குப் பரிந்துரை செய்யப்படுபவராக இருப்பார்.
2. முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசுபவர்
ஒரு சிறந்த நிதி ஆலோசகர் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசி, அவர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப, திட்டமிட்டுக் கொடுப்பார்.
3. கட்டணம் கேட்பார்
தரமான, சிறந்த சேவை இலவசமாகக் கிடைக்காது. அந்த வகையில் நல்ல நிதி ஆலோசகர் அவருடைய சேவைக்கு நியாயமான கட்டணம் கேட்பவராக இருப்பார்.
4. அதிக கமிஷனுக்கு ஆசைப்பட மாட்டார்
நல்ல நிதி ஆலோகர், முதலீட்டாளர்களின் முதலீட்டைப் பெருக்குவதற்கான திட்டங்களைப் பரிந்துரை செய்வார். தனக்கு அதிக கமிஷன் கிடைக்கும் திட்டங்களாக இருந்தாலும், அது முதலீட்டாளர்களுக்கு ஏற்றது என்றால் மட்டுமே பரிந்துரை செய்வார்.
5. காப்பீடு, முதலீட்டைப் பிரித்திருப்பார்
நல்ல நிதி ஆலோசகர் என்பவர், காப்பீடு மற்றும் முதலீட்டை தனித்தனியாக மேற்கொள்ளச் சொல்வார். ஆயுள் காப்பீடு என்று வருகிறபோது டேர்ம் பிளானை மட்டுமே பரிந்துரை செய்வார்.
- சேனா சரவணன்