நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பாலிசி எடுக்க... க்ளெய்ம் பெற... நடைமுறைகளை எளிதாக்கும் இ - இன்ஷூரன்ஸ்!

பாலிசி எடுக்க... க்ளெய்ம் பெற... நடைமுறைகளை எளிதாக்கும் இ - இன்ஷூரன்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பாலிசி எடுக்க... க்ளெய்ம் பெற... நடைமுறைகளை எளிதாக்கும் இ - இன்ஷூரன்ஸ்!

பாலிசி எடுக்க... க்ளெய்ம் பெற... நடைமுறைகளை எளிதாக்கும் இ - இன்ஷூரன்ஸ்!

ன்றைக்கு எல்லாமே டிஜிட்டல் மயமாகிவருகிறது. இன்ஷூரன்ஸ் துறையிலும்  டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இ- இன்ஷூரன்ஸ் முறை செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்த இ-இன்ஷூரன்ஸ் குறித்து கேம்ஸ்ரெப்  (CAMSRep)நிறுவனத்தின் சி.இ.ஓ ரமணனிடம் பேசினோம்.   

பாலிசி எடுக்க... க்ளெய்ம் பெற... நடைமுறைகளை எளிதாக்கும் இ - இன்ஷூரன்ஸ்!

டிஜிட்டல்மயமாகும் இன்ஷூரன்ஸ்

``இ-இன்ஷூரன்ஸ் என்பது, இந்தியாவில் மட்டும் அல்ல, உலகம் முழுவதிலுமே புதிய கான்செப்ட்தான். இன்ஷூரன்ஸ் பாலிசிகள் அனைத்துமே இதுவரையிலும் பேப்பர் வடிவங்களில்தான் தரப்பட்டு வந்தன. இடையில் பாலிசிகளை வாங்கும் பர்ச்சேஸ் பிராசஸ் மட்டும் ஆன்லைனில் செயல்படுத்தப்பட்டது. அவற்றை பேங்க் பஜார், பாலிசி பஜார் போன்ற இணையதள நிறுவனங்கள் செயல்படுத்தின. ஆனால், இப்போது இன்ஷூரன்ஸ் பாலிசியின் அனைத்து நடைமுறைகளுமே ஆன்லைனில் நடக்கவிருக்கின்றன. பாலிசி வழங்கல் முதல், க்ளெய்ம் செட்டில்மென்ட் மற்றும் வாடிக்கையாளர் குறைதீர்ப்பு வரை அனைத்துமே டிஜிட்டலில் நடக்கவுள்ளன. 

முழுவதுமாக டிஜிட்டலில் செயல்படுவது என்பது, நிதிசார் துறைகளுக்கு ஒன்றும் புதிதல்ல. இப்போதெல்லாம் வங்கிகள் பாஸ்புக் வழங்குவதில்லை. மாதாந்திர அறிக்கைகளை, மின்னஞ்சலில் அனுப்புகின்றன. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்,  நியூ பென்ஷன் திட்டம் போன்றவை டிஜிட்டலில் செயல்படுத்தப்படுகின்றன. அரசும் தீவிரமாக டிஜிட்டல் இந்தியாவை முன்னெடுத்திருக்கிறது. இந்த நிலையில், இன்ஷூரன்ஸ் துறை மட்டும் எவ்வளவு காலம்தான் பேப்பர் வடிவங்களில் செயல்பட்டுக்கொண்டிருப்பது..? அதனால்தான் இன்ஷூரன்ஸ் துறையும் முழுவதுமாக டிஜிட்டல் தளத்தில் இயங்கத் தயாராகியிருக்கிறது. டிராவல் இன்ஷூரன்ஸ் என்பது, ஏற்கெனவே டிஜிட்டலில் செயல்படுத்தப்பட்டுவருவதை நாம் அறிவோம். ஐ.ஆர்.சி.டி.சி தளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, ஒரு ரூபாய்க்கும் குறைவாக உங்களுடைய பயணத்துக்கு நீங்கள் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது.

இ-இன்ஷூரன்ஸ் வசதி என்பது, எல்லா தரப்பு மக்களுக்கும், எல்லா வகை பாலிசிகளுக்கும்  மற்றும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கும்கூட பெரும்பலன்களைத் தரவல்லது. உதாரணமாக இமயமலையில் ட்ரக்கிங் போகும் ஒருவருக்கு   பர்சனல் ஆக்ஸிடென்ட் கவர் பாலிசியை விற்பனை செய்ய விரும்பும் இன்ஷூரன்ஸ் கம்பெனி, தனது ஏஜென்டை அனுப்பி விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து, கையெழுத்து வாங்கி எனப் பல நடைமுறைகளைச் செய்யவேண்டியிருக்கிறது. இதற்காகும் பணம், நேர விரயத்தை இ-இன்ஷூரன்ஸ் மூலம் தவிர்க்க முடியும். அவருடைய இ-இன்ஷூரன்ஸ் அக்கவுன்ட் வழியாக அவரே எளிதில் பர்சனல் ஆக்ஸிடென்ட் பாலிசியை வாங்க முடியும். நிறுவனமும் அவருக்கு எளிதில் ரிக்வெஸ்ட் அனுப்பி பாலிசியை விற்க முடியும். ஏனெனில், எலெக்ட்ரானிக் வடிவிலான இ-இன்ஷூரன்ஸ் அக்கவுன்ட்டில் ஒன்டைம் கே.ஒய்.சி பதிவாகியிருக்கும்.

இ-இன்ஷூரன்ஸ் மூலம் நாம் பெறக்கூடிய மேலும் ஒரு முக்கியமான நன்மை, நம் பாலிசி டாக்குமென்ட்களைப் பாதுகாக்க மெனக்கெட வேண்டியதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னையில் ஏற்பட்ட தொடர் மழை, புயல் காரணமாக இன்ஷூரன்ஸ் டாக்குமென்ட்கள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். ஆவணங்கள் இல்லாமல் க்ளெய்ம் பெறுவதில் சிக்கல்களைச் சந்தித்தவர்கள் ஏராளம்.  ஆனால்  டாக்குமென்ட்கள் எலெக்ட்ரானிக் வடிவத்தில் இருந்தால் இதுபோன்ற நிலையைத் தவிர்க்க முடியும்.

இ-இன்ஷூரன்ஸ் அக்கவுன்ட்

புதிதாக ஒருவர் இ-இன்ஷூரன்ஸ் அக்கவுன்ட் ஓப்பன் செய்ய, ஆதார் அல்லது பான் கார்டு போதுமானது. எங்கள் நிறுவனம் உள்பட நான்கு நிறுவனங்களுக்கு (CAMSRep, NSDL, CDSL, Karvy) இ-இன்ஷூரன்ஸ் அக்கவுன்ட்களை நிர்வகிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எங்கள் வெப்சைட்டில் ஆதார் அடிப்படையிலான கே.ஒய்.சி-யை நிறைவு செய்தால், இரண்டே நிமிடத்தில் இ-இன்ஷூரன்ஸ் அக்கவுன்ட் தொடங்கிவிடலாம். அக்கவுன்ட் தொடங்க, விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, பான் கார்டு மற்றும் கூடுதலாக முகவரி ஆதாரச் சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இரண்டு நாள்களில் உங்களுக்கு அக்கவுன்ட் ஓப்பன் செய்து தரப்படும்.

ஒரு  இ-இன்ஷூரன்ஸ் அக்கவுன்ட் இருந்தால் போதும், அனைத்து இன்ஷூரன்ஸ் பாலிசி களையும், அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங் களிடமிருந்தும் இதன் கீழ் வாங்கலாம். ஆதாரில் இருப்பதுபோலவே இதிலும் டூப்ளிகேஷனைக் கண்டறியும் மெக்கானிசம் உள்ளது. எனவே, இரண்டாவதாக ஒருவர் தன் பெயரில் அக்கவுன்ட் ஓப்பன் செய்ய முயற்சி செய்தால் தடுக்கப்படும்.

இ-இன்ஷூரன்ஸ் அக்கவுன்ட், 13 இலக்க எண்.  முதல் இலக்கம் இ-இன்ஷூரன்ஸ் நிர்வகிப்பு நிறுவனத்தைக் குறிக்கும். அடுத்த 11 இலக்கங்கள் ராண்டம் எண்கள், 13-வது இலக்கம் சோதனை இலக்கம் (Check Digit). ஒரு நபரின் ஆதார் அல்லது பான் எண்ணை உள்ளிட்டால் அதில் ஏற்கெனவே அக்கவுன்ட் இருக்கிறதா இல்லையா என்பதை இந்த இலக்கமானது தெரிவித்துவிடும். 18 வயதுக்குக் கீழ் இருப்பவர்களுக்கான பாலிசிகள் அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மூலமாக இயக்கப்படும்.

ஏற்கெனவே எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் இ-இன்ஷூரன்ஸ் அக்கவுன்ட்டில் சேர்த்துக்கொள்ள வசதி உள்ளது. அதற்கு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பெயர் மற்றும் பாலிசி நம்பர் கொடுத்தால் போதும், அதை ஒரு ரிக்வெஸ்ட்டாக நாங்கள் அந்த இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு அனுப்புவோம். அவர்கள் அதை மதிப்பிட்டு ஒப்புதல் தந்த பிறகு டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றப்படும்.

இ-இன்ஷூரன்ஸ் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, ITREX - insurance transaction exchange என்ற தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தகவல் பரிமாற்றங்களை இதன் மூலம் பாதுகாப்பாகச் செய்யும்படி கட்டமைத்துள்ளோம். இ-இன்ஷூரன்ஸ் அக்கவுன்ட்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் மற்றும் அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கும் பிரத்யேக அடையாள எண் உள்ளன. அதன்படி குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ITREX மூலம் விவரங்கள் பகிரப்படும். எனவே, விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும்.    

பாலிசி எடுக்க... க்ளெய்ம் பெற... நடைமுறைகளை எளிதாக்கும் இ - இன்ஷூரன்ஸ்!

நுகர்வோர் மற்றும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடையே பாலமாகச் செயல்பட்டு, எலெக்ட்ரானிக் வடிவத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் நாங்கள் இருக்கிறோம். பாலிசி விற்பனையிலிருந்து பாலிசி ரெக்கார்டு கீப்பிங் வரை அனைத்துமே இன்ஷூரன்ஸ் நிறுவனங்களால் செய்யப்படு கின்றன. இதுபோன்ற பல்வேறு சேவைகளுக்காக ஏஜென்ட்கள், கிளைகள் எனப் பெரும்  செலவை இன்ஷூரன்ஸ் நிறு வனங்கள் செய்து வருகின்றன. அவை தவிர்க்கப்படும். செலவுகள் மிச்சம் ஆகும்போது பிரீமியம் குறையவும் வாய்ப்பிருக்கிறது. இதுதான் எங்களுடைய நோக்கம்.

தற்போது முகவரியை மாற்றவேண்டும் என்றால், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து எல்லா ஒரிஜினல்களையும் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால், இ-இன்ஷூரன்ஸ் வசதியில் அதற்கான அவசியமில்லை. ஒரே ஆன்லைன் கே.ஒய்.சி மூலம் அதைச் செய்துவிடலாம்.

க்ளெய்ம் செய்வது எப்படி?

பாலிசிதாரர் எங்களின் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் க்ளெய்ம் செய்யும் வசதிகள் இதில் உள்ளன. உண்மையில், தற்போதைய நடைமுறையால்தான் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் 5,000 கோடி ரூபாய் வரை க்ளெய்ம் செய்யப்படாமல் இருக்கிறது. இதற்கு மிக முக்கியக் காரணம், சரியான ஆவணங்கள் இல்லாததுதான். இந்தப் பிரச்னை இ-இன்ஷூரன்ஸ் வசதியில் நிச்சயம் இருக்காது. இப்போது இறப்பிலும் ஆதார் இணைக்கப்படுவதால், ஒருவர் இறந்தால் அவருடைய ஆதார் இணைப்பு மூலம் அவருடைய பெயரில் உள்ள பாலிசிக்குத் தானாகவே செட்டில் மென்ட் நடைமுறைகளை நிறுவனங்களால் செயல்படுத்த முடியும்.

முக்கியமாக, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் க்ளெய்ம் பெறுவது மிகவும் எளிது. மருத்துவமனையில் காலை 9 மணிக்குப் போடப்படும் பில்லுக்கு இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்யப்பட்டு, சிகிச்சைப் பெற்றவர் வீட்டுக்குப் போக இரவு ஆகிவிடுகிறது. இதனால் பாலிசிதாரருக்கும் மருத்துவமனைக்கும் இழப்புதான். ஏனெனில், பிசிக்கல் டாக்குமென்ட்கள் தயார்செய்து கையெழுத்து போட்டு, இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பி, அவர்களிடமிருந்து ஒப்புதல் வந்து... என அதிக நேரம் செலவாகிறது.இ-இன் ஷூரன்ஸில் இந்த வேலைகள் அனைத்தும் 30 நிமிடங்களில் முடிந்து,க்ளெய்ம் செட்டில்மென்ட் செய்யப்படும். 

மோட்டார் இன்ஷூரன்ஸி லும் இ-இன்ஷூரன்ஸானது முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும். டிஜிட்டலில் க்ளெய்ம் ரிக்வெஸ்ட் செய்வதன் மூலம் விரைவாக க்ளெய்ம் பெற முடியும். சர்வேயருக்கான வேலை அதிகம் இருக்காது. நாமே புகைப்படம் எடுத்து ஜியோ டேக் ரிப்போர்ட் மூலம் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் பதிவு செய்யலாம்.
இதனால் ஏமாற்றுவதற்கான வாய்ப்புக் குறைவு. 

டிஜிட்டலில் அனைத்து நடைமுறைகளும் செயல்படுத்தப்படுவதால், உடனடி ஆதாரம் இருக்கும். ஏதேனும் பிரச்னை என்றாலும் அதை உடனே சரி செய்யலாம். எல்லாவற்றுக்கும் ஏஜென்ட்களைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை. நாமே ஆன்லைனில் அனைத்தையும் செய்துகொள்ள முடியும்.

பாலிசி புதுப்பித்தல், பிரீமியம் செலுத்துதல் என அனைத்தையும் எளிதில் வாடிக்கை யாளர்களை அணுகி தெரிவிக்க முடியும். தொடர்ந்து பிரீமியம் செலுத்தி வரும் பெர்சிஸ்டன்சி சதவிகிதமும் டிஜிட்டல் இன்ஷூரன்ஸ் நடைமுறையில் அதிகமாகவே உள்ளது. பழைய நடைமுறையில் சராசரியாக 67 சதவிகித பெர்சிஸ்டன்சி இருக்கிறதெனில், டிஜிட்டல் இன்ஷூரன்ஸில் பெர்சிஸ்டன்சி 97 சதவிகிதம் இருக்கிறது.

2022-ம் ஆண்டுக்குள் டிஜிட்டல் இன்ஷூரன்ஸ் தற்போதைய நிலையிலிருந்து 2000 சதவிகித வளர்ச்சியை அடையும் எனலாம்்’’ என முடித்தார்.

இன்ஷூரன்ஸ் நடைமுறைகளில்  நாமும் டிஜிட்டலுக்கு மாறுவோம்!

- ஜெ.சரவணன்

படம்: சொ.பாலசுப்ரமணியன்