நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 15 - V.பிரதீப்... S/O வர்ஷினி

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 15 - V.பிரதீப்... S/O வர்ஷினி
பிரீமியம் ஸ்டோரி
News
நிம்மதி தரும் நிதித் திட்டம் - 15 - V.பிரதீப்... S/O வர்ஷினி

ஓவியம்: பாரதிராஜா

“என் பெயர் வர்ஷினி. வயது 28. என் சொந்த ஊர் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். 2015-ம் ஆண்டு எனக்கும் சுரேஷுக்கும் திருமணம் நடந்தது. நாங்கள் ஒன்றரை வருடம்கூட  சேர்ந்து வாழவில்லை.  

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 15 - V.பிரதீப்... S/O வர்ஷினி

சுரேஷ், தான் நல்ல வேலையில் இருப்பதாகவும்,  நன்றாகச் சம்பாதிப்பதாகவும் பொய் சொல்லி என்னைத் திருமணம் செய்துகொண்டார். அவர் உண்மை நிலை தெரிந்தபின்னும், அவருடன் இணக்கமாகக் குடும்பம் நடத்தினேன். அவருடைய குடும்பம் கூட்டுக் குடும்பம் என்பதால், செலவைக் கட்டுக்குள் வைக்க இயலவில்லை. வீட்டில் யாரும் பொறுப்பெடுத்து செய்யாததால் எதுவும் சரியாக நடக்கவில்லை. 

பிறகு நடந்த சில கசப்பான நிகழ்வுகளால் நாங்கள் பிரிந்துவிட்டோம். நாங்கள் சேர்ந்து வாழ்ந்ததன் அடையாளமாக என் மகன் பிரதீப்  இருக்கிறான். அவனுக்கு இப்போது ஒரு வயதாகிறது.

கணவரைப் பிரிந்த நான், தற்போது சென்னையில் சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன். பெண்கள் விடுதி ஒன்றில் தங்கி வேலைக்குச் சென்று வருகிறேன். என் மகனை இப்போது என் பெற்றோர்  கவனித்துக் கொள்கிறார்கள். வார விடுமுறையில் சென்று அவனைப் பார்த்து வருகிறேன். இன்னும் நான்கு வருடங்களுக்கு என் மகன் என் பெற்றோருடன் தான் இருப்பான்.

என் திருமணத்துக்கு பெற்றோர் நிறையச் செய்துவிட்டார்கள். எனவே, அவர்களிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. யாரிட மிருந்தும் பண உதவி இல்லாமல் என் சொந்த உழைப்பால், என் மகனுக்குச் சிறப்பான எதிர் காலத்தை உருவாக்கித்தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என் வாழ்க்கையின் மிக முக்கியமான லட்சியம், என் மகனுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தருவதுதான்.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 15 - V.பிரதீப்... S/O வர்ஷினி



என் மகனை மிகச் சிறந்த பள்ளியில் சேர்க்க விரும்புகிறேன். யூ.கே.ஜி வரை என் பெற்றோரின் பாதுகாப்பில் என் மகன் இருக்கவேண்டிய சூழல் இருப்பதால், அடுத்த நான்கு வருடங்களில் என் மகனை முதல் வகுப்பில் சேர்க்க ரூ.2 முதல் 3 லட்சம் தேவையாக இருக்கும். 

எதிர்காலத்தில் என் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்க விரும்புகிறேன். அதற்கு,  அடுத்த 17 வருடங்களில் ரூ.50 லட்சம் வேண்டும். அடுத்த ஐந்து வருடங்களில் சொந்த ஊரில் ரூ.30 லட்சத்தில் வீடு வாங்க வேண்டும். அதே ஐந்து வருடங்களில் சொந்த ஊரில் ரூ.15 லட்சத்துக்கு விவசாய நிலம் வாங்க வேண்டும் என விரும்புகிறேன்.

இன்னும் முப்பது வருடங்களில் ஓய்வுக் காலத்தில் மாதம் ரூ.20 ஆயிரம் தேவையாக இருக்கும். (இங்கு குறிப்பிட்டுள்ள தொகை அனைத்துமே இன்றைய மதிப்பில்)

பிடித்தங்கள் போக என் மாத வருமானம் ரூ.31,000. மொத்தச் செலவுகள் ரூ.16,000. மீதமாகும் தொகை ரூ.15,000. கடந்த எட்டு மாதங்களாக பி.எஃப் தொகை ரூ.1,500 பிடித்தம் செய்து வருகிறார்கள். அடுத்த நான்கு அல்லது ஐந்து மாதங்களில் வேறு வேலைக்குச் சென்றுவிடு வேன். அப்போது என் சம்பளம் ரூ.50 ஆயிரமாக இருக்கும். இந்த மாற்றம் உறுதியானதுதான். எனவே, அடுத்த ஐந்து மாதங்களில் என் செலவு களுக்கு ரூ.20 ஆயிரம் என வைத்துக்கொண்டாலும் ரூ.30 ஆயிரம் எதிர்காலத்துக்காக ஒதுக்க முடியும்.

நான் இங்கே எனக்குத் தோன்றிய இலக்குகளைத் தெரிந்த அளவுக்குச் சொல்லியுள்ளேன். சரியான இலக்குகள் எவை, எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனத் தெளிவுபடுத்தி, அதற்கு முதலீட்டு ஆலோசனைகளைச் சொன்னால் எனக்குப் பயனுள்ளதாக இருக்கும்” எனப் படபடவென்று பேசி முடித்தார் வர்ஷினி.    

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 15 - V.பிரதீப்... S/O வர்ஷினி

இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“சிக்கலான சூழலில் மனம் துவண்டு மூலையில் முடங்கிவிடாமல், தன்னம்பிக்கையோடு செயல்படும் உங்கள் துணிச்சலைப் பாராட்டுகிறோம். அத்துடன் யாருடைய தயவும் இல்லாமல் தனித்து நின்றே சாதிக்க வேண்டும் என்ற உறுதியையும், மற்ற சில பெண்கள் உங்களிடமிருந்து படித்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் கேட்ட எல்லா இலக்குகளையும் அடைய வேண்டுமானால், அதற்கு மாதம் ரூ.85,900 தேவையாக இருக்கும். வருமானத்தைத் தாண்டிய முதலீடு என்பது சாத்தியமில்லை. முதலில் இலக்குகளைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியது முக்கியம். தேவைகள் எவை, அவற்றில் அத்தியாவசியம் எவை எனப் பிரித்தறிந்து அதற்கு முன்னுரிமை தரவேண்டியது அவசியம்.

நீங்கள் நான்கு வருடம் கழித்து சென்னையில் மகனைப் பள்ளியில் சேர்க்க முடிவு செய்துள்ளீர்கள். நீங்களும், உங்கள் மகனும் சென்னையில் இருக்கும் நிலையில், சொந்த ஊரில் வீடு கட்டுவதைப் பற்றி இப்போது யோசிக்க வேண்டாம். இதேபோலத்தான், விவசாய நிலம் வாங்கும் யோசனையும். சொந்த ஊரில் ஏதாவது ஒரு வகையில் பிடிப்பு இருக்க வேண்டும் என  யோசிப்பது சரியானது என்றாலும், மற்ற இலக்குகளின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு வீடு, நிலம் இரண்டையும் இப்போதைக்குத் தள்ளிப்போடுவதே  சரி.     

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 15 - V.பிரதீப்... S/O வர்ஷினி

உங்கள் மகனின் ஆரம்பப் பள்ளி சேர்க்கை, மேற்படிப்பு, முதுநிலைப் படிப்பு, உங்கள் ஓய்வுக்காலம் என நான்கு இலக்குகளுக்கு மட்டும் முதலீடு செய்யத் தொடங்குங்கள். பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரியில் சேர்க்க, அடுத்து வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு படிக்க என இரண்டு இலக்குகளாகப் பிரித்து முதலீடு செய்வதுதான் சரியாக இருக்கும். இந்த நான்கு இலக்குகளுக்குமே மாதம் ரூ.29,200 முதலீடு செய்ய வேண்டும்.

முக்கியமான இந்த நான்கு இலக்குகளுக்கும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு முதலீடுகளை ஆரம்பிக்கவும். உங்கள் மகன் முதுநிலைப் படிப்புக்கும், உங்கள் ஓய்வுக்காலத்துக்கும் மட்டும் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிடக் குறைந்த முதலீட்டில் தொடங்கி, ஆண்டுக்கு 5% முதலீட்டை அதிகரித்துக் கொள்ளுங்கள். காரணம், உங்கள் மகனைப் பள்ளியில் சேர்த்தபிறகு செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்பதால் முதலீட்டுக்கான தொகையை ரூ.22,200-க்குள் அடக்கி, செலவுகளைச் சமாளிக்க முடியும்.

இப்போதைய மாதாந்திரச் செலவுகள் ரூ.20 ஆயிரம் என்ற அடிப்படையில் கணக்கிட்டால், அடுத்த முப்பது ஆண்டுகளில் உங்கள் ஓய்வுக்காலத்தில் மாதம் ரூ.1,52,000 தேவை. அப்படியானால் கார்ப்பஸ் தொகையாக உங்களுக்கு ரூ.4 கோடி தேவைப்படும்.

உங்களுக்கான பி.எஃப் தொகை ஆண்டுக்கு 5% அதிகரிக்கும் என்ற அடிப்படையில் கணக்கிட்டால் ரூ.55 லட்சம் கிடைக்கும். மீதம் ரூ.3.45 கோடியைச் சேர்க்க, அட்டவணையில் சுட்டிக்காட்டியபடி, ரூ.8,000 முதலீட்டில் தொடங்கி ஆண்டுக்கு 5% முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.

அடுத்த சில மாதங்களில் புதிய வேலைக்குப் போனதும் ரூ.1 கோடி அளவுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளவும். தற்போது பின்வருமாறு முதலீட்டைத் தொடங்கி, வேலை மாறியதும் முதலீட்டுத் தொகையை அதிகரித்துக்கொள்ளவும்.
பரிந்துரை: மோதிலால் ஆஸ்வால் மோஸ்ட் ஃபோகஸ்டு 25 - ரூ.2,500, மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் -ரூ.3,000, ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் -2,300, ஹெச்.டி.எஃப்.சி  கார்ப்பரேட் டெப்ட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ரூ.2,600, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. லாங் டேர்ம் -ரூ.2,600.”   

குறிப்பு: பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878

- கா.முத்துசூரியா     

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 15 - V.பிரதீப்... S/O வர்ஷினி