நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: அந்நியச் செலாவணிக் கையிருப்பு... $400 பில்லியனைத் தாண்டிய இந்தியா!

ஏற்றம் தொடருமா?எம்.அரவிந்த்
இந்த செப்டம்பர் முதல் வார இறுதியில், நம்மிடம் இருக்கும் அந்நியச் செலாவணியின் மொத்தக் கையிருப்பு (Forex Reserve) 400 பில்லியன் டாலரைத் தாண்டியது. 1991-ம் ஆண்டு இரண்டு வார இறக்குமதிக்குக்கூட போதிய அளவு அந்நியச் செலாவணி இல்லாத நிலையில் கஷ்டப்பட்ட நாம், இன்று உலகளவில் அதிக அளவிலான அந்நியச் செலாவணி கைவசம் வைத்துள்ள நாடுகளில் ஆறாவது இடத்தில் (பார்க்க அட்டவணை) இருப்பது உண்மையிலேயே மிகப் பெரிய முன்னேற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.

உலகிலுள்ள அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டின் தலைமை வங்கி மூலம் அந்நியச் செலாவணிக் கையிருப்பைச் சேர்த்து வைத்துக்கொண்டு, பிறகு தங்கள் தேவைகளுக்கேற்ப பயன்படுத்து கின்றன. ஒவ்வொரு நாடும் தங்களுக்கு ஏற்படும் அந்நிய செலாவணிச் செலவுகள்/கடன்கள் போன்றவற்றை இந்தக் கையிருப்பு தொகையிலிருந்து எடுத்தே செலவு செய்கின்றன.
உதாரணமாக, வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யையோ அல்லது தங்கத்தையோ வாங்கி, நம் நாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமெனில், நம் நாட்டுப் பணத்தைத் தந்து வாங்க முடியாது. அமெரிக்க டாலர் பணத்தைத் தந்துதான் வாங்க வேண்டும். நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு முதலீடு அமெரிக்க டாலரில் வரும் போது, அதை வாங்கி வைத்துக்கொண்டு, நமக்குத் தேவைப்படுகிற போது, அதை வெளிநாட்டுக்குத் தந்து நமக்குத் தேவையான கச்சா எண்ணெயையோ அல்லது தங்கத்தையோ வாங்கிக்கொள்ள முடியும். நம் நாடு உள்பட அனைத்து நாடுகளும் அந்நியச் செலாவணிக் கையிருப்பைச் சேர்த்து வைத்துக்கொள்வதன் தாத்பரியம் இதுதான்.

கையிருப்பு எவ்வளவு?
நமது அந்நியச் செலாவணிக் கையிருப்பை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். 2017 செப்டம்பர் முதல் வார இறுதிக் கணக்கின்படி, அயல்நாட்டு நாணய சொத்துகள் (Foreign Currecny Assets) 376.2 பில்லியன் டாலர்கள் உள்ளன. தங்கக் கையிருப்பு (Gold) 20.69 பில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது. சிறப்பு வரைவு உரிமம் (Special Drawing Rights) 1.52 பில்லியன் டாலர் மதிப்புக்கொண்டதாக உள்ளது. பன்னாட்டு பண நிதியத்திலுள்ள ((Reserves Tranche Payment in IMF - RTP) கையிருப்பு 2.3 பில்லியன் டாலர் ஆகும். ஆக, இவற்றையெல்லாம் கூட்டினால் நம்மிடம் இருக்கும் அந்நியச் செலாவணி மொத்தக் கையிருப்பு 400.71 பில்லியன் டாலர்களாகும்.

மேற்சொன்ன நான்கில் முதலிரண்டு நம்மிடம் உள்ளவை. மூன்று மற்றும் நான்காவதாக இருப்பவை, பன்னாட்டு பண நிதியத்துடன் (IMF) தொடர்புடையவை. பன்னாட்டு பண நிதியத்தில் இந்தியாவும் ஒரு உறுப்பு நாடாகும்.
2011-ல் 7.5 சதவிகிதமாக இருந்த தங்கம், செப்டம்பர் 2017-ல் 5.16 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதாவது, முன்பு நம் கையிருப்பிலிருந்த அளவுக்கு நம்மிடம் இப்போது தங்கம் இல்லை. 2011-ல் 1.49 சதவிகிதமாகவிருந்த எஸ்.டி.ஆர் (SDR) விகிதம் 2017-ல் 0.38 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. 2011-ல் 0.96 சதவிகிதமாக இருந்த பன்னாட்டு நிதிக் கையிருப்பு (RTP) 2017-ல் 0.57 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ஆனால், 2011-ல் 90 சதவிகிதமாக இருந்த அயல்நாட்டு நாணய சொத்துகள் (Foreign Currecny Assets) செப்டம்பர் 2017-ல் 93.88 சதவிகிதமாக உயர்ந்தும் உள்ளது. அயல்நாட்டு நாணய சொத்துகள் நம்மிடம் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவது, நம் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பதற்கு ஒரு அத்தாட்சியாகும்.
அந்நியச் செலாவணியின் பயன்கள்
உலகளாவிய நெருக்கடி வரும்போதும், நாணய வர்த்தகம் மிகவும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் போதும் உள்நாட்டு நாணயத்தின் மதிப்பைப் பாதுகாக்க இந்த அந்நியச் செலாவணி கையிருப்பு பெரிதும் உதவுகிறது. அத்துடன் மற்ற நாடுகளிடம் நமது நம்பகத்தன்மையை உயர்த்துகிறது. நாட்டின் பொருளாதார தரவரிசைக் குறியீட்டைச் சிறப்பாகப் பெறுவதற்கு உதவுகிறது.
கையிருப்பு அதிகரிப்பதற்கான காரணங்கள்
அந்நியச் செலாவணிக் கையிருப்பு அதிகரிப்பதற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, நமது நாட்டுக்குத் தொடர்ந்து வரும் அந்நிய முதலீடுகள். இரண்டாது, ஏற்றுமதி - இறக்குமதி இடையே உள்ள வித்தியாசம் குறைதல். மூன்றாவது, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (Current Account Deficit) விகிதம் குறைந்துவரும் நிலை. (2012 இறுதியில் நமது ஜி.டி.பி-யில் 6.35% என்கிற அளவுக்கு இருந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, 2016-ல் 0.1 சதவிகிதமாகக் குறைந்தது. என்றாலும், கடந்த காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் 2017) அது, 2.4 சதவிகிதமாக மீண்டும் உயர்ந்தது கவனிக்க வேண்டிய எச்சரிக்கை ஆகும்.
கவனிக்க வேண்டிய பிரச்னைகள்
நமது அந்நியச் செலாவணிக் கையிருப்பு 400 பில்லியன் டாலராக இருப்பதை மேலோட்டமாகப் பார்க்கும்போது, எல்லாம் சிறப்பாக இருப்பதாகத் தோன்றினாலும், நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ஏற்றுமதி சரிவடைவது. கடந்துபோன மாதங்களில் ஒரு சில மாதங்களில் நம் ஏற்றுமதி உயர்ந்தாலும், பல மாதங்கள் சரிவையே கண்டுள்ளன. 2003 வரை உலகளாவிய ஏற்றுமதிகளின் ஆண்டு வளர்ச்சி 15% வரைகூட இருந்தது. ஆனால், 2015-17 காலகட்டத்தில் அது 3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கடந்த வருடம், ஏற்றுமதியாளர்களுக்குச் சாதகமாக டாலர் 68-69 ரூபாய் நிலைகளைத் தொட்டது. என்றாலும், அதே காலகட்டத்தில் நமது ஏற்றுமதிகள் வளர்ச்சிப் பாதையில் செல்லவில்லை.

இதற்குக் காரணம், வளரும் நாடுகள் அனைத்தும் நமக்கு பெரிய போட்டியாக உள்ளன. தவிர, உலகளவில் பொருளாதாரம் மந்தமாக உள்ளது. மேலும், இந்தியாவில் வட்டி விகிதத்தைக் குறைத்தாலும், வங்கிகள் நிறுவனங்களுக்கு வழங்கும் கடன் தொகையின் அளவு கடந்த ஓரிரு ஆண்டுகளாகக் குறைந்து காணப்படுகிறது. (வீட்டு கடன் வளர்ச்சிகூட). இவை போக, சமீபத்தில் அறிமுகமான ஜி.எஸ்.டி-யால் ஏற்றுமதியாளர்களுக்குச் சிறு சிறு அசௌகர்யங்கள் தோன்றுகின்றன. முதல் ஒரு சில மாதங்களுக்குப் புதிய முறைக்குத் தங்களை முழுவதும் பழகிக் கொள்ள சிறிது அவகாசம் தேவைப்படுகிறது. அதோடு அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய வரவு (Input Credit) கிடைப்பதிலும், வரும் மூன்று மாதங்களுக்குக் காலதாமதம் ஏற்படலாம். நவம்பர் 2016-க்குப் பின், நமது இறக்குமதிகளும் சற்று உயர்ந்துள்ளன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, அடுத்த இரண்டு, மூன்று காலாண்டுகளில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இன்னும் உயரும். எனவே, ஏற்றுமதி வளர்ச்சி குறித்து நாம் கவனம் கொள்ளவேண்டும்.
சீனப் பொருளாதாரத்தில் ஏற்றுமதி ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. அவர்கள் தங்கள் நாணய மாற்று விகிதத்தை எப்போதும் சற்று தளர்த்தியே வைத்திருப்பார்கள். ஒரு டாலருக்கு இணையாக அதிக யுவான் கிடைக்கும் என்பதற் காகவே அப்படி வைத்திருக்கிறார்கள். 2015-ம் ஆண்டு, சீன மத்திய வங்கி இரண்டு முறை, தனது நாணய விகிதத்தைக் குறைத்தது. இதன் விளைவாக, ரூபாய் மதிப்பு சரிவடைந்தது.

இந்தியாவோ, இறக்குமதி அதிகமுள்ள நாடு என்பதால், ரூபாய் மதிப்பு சரிவடைந்தால் நமது இறக்குமதிக் கடன் தொகை உயர்வடைகிறது. அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதி விலையும் உயரும். அதன் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்ந்து பணவீக்கம் சற்று உயரும். எனவே, இறக்குமதி சுமையும் அதிகம் தெரியாத அளவுக்கு நமது ரூபாயின் மதிப்பைச் சற்றுத் தளர்த்தினால், ஏற்றுமதியாளர்களுக்குச் சாதகமாக மாறும்.
2016 நவம்பருக்குப் பிறகு நமது வங்கி அமைப்பு களில் அதிக அளவு பணப்புழக்கம் (liquidity) காணப்படுகிறது. ஆனால், கடன் வளர்ச்சிக் குறைவாக உள்ளது. முதலீட்டாளர்களுக்கு வழங்கவேண்டிய வட்டித் தொகை அதிகமாக இருப்பதால், வங்கிகள் லாபகரமாகச் செயல் படுவது சற்றுச் சிரமமாகவே இருக்கும். 2016-17-ம் நிதியாண்டில், நமது ரிசர்வ் வங்கியின் ஆண்டுக் கணக்கு அறிக்கையிலும் நாம் சில தெளிவுகளைக் காணலாம்.

பொதுவாக, அதிக அந்நியச் செலாவணி நம் நாட்டுக்குள் வந்தால், அதை நமது ரிசர்வ் வங்கி வாங்கும். இதனால் நம் நாட்டு நாணயம் அதிகமாக புழக்கத்தில் இருக்கும். இதனால் உள்நாட்டு நாணயம் வீழ்ச்சியடையும். எனவே, அதிக புழக்கத்தில் உள்ள உள்நாட்டு நாணயத்தை (Excess liquidity) வெளியே எடுப்பதற்கு உள்நாட்டு அரசுக் கடன் பாத்திரங்களை அதே அளவுக்கு வெளியிட்டு, அதிக பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும். இதை ‘ஸ்டெரிலைசேஷன்’ (Sterilization) என்பார்கள். அமெரிக்கா போன்ற மிகக் குறைந்த வட்டி விகிதம் உள்ள நாடுகளில் இதைச் செய்வதில் அதிக செலவு இருக்காது. ஆனால், நமது வட்டி விகிதம் அதிகமாக உள்ள தால் (Risk free rate of return 6%) இந்த ‘ஸ்டெரிலை சேஷன்’ செயல்பாடு லாபகரமாக அமையாது. நீண்ட கால ரெப்போ விற்பனை, குறுகிய மற்றும் நீண்டகால கடன்பத்திர விற்பனை போன்ற நடவடிக்கைகளைத் தற்போது நமது ரிசர்வ் வங்கி கையாள்கிறது.
இனி என்ன செய்ய வேண்டும்?
1991-ம் ஆண்டு, இரண்டு வாரங்களுக்குத் தேவையான இறக்குமதி செய்யும் அளவுக்கு மட்டுமே அந்நியச் செலாவணிக் கையிருப்பு இருந்தது. ஆனால், தற்போது 10 - 11 மாதங்களுக்கான இறக்குமதியைச் சமாளிக்கும் அளவுக்கு நம்மிடம் கையிருப்பு அதிகரித்துள்ளது. நடப்புக் கையிருப்பைத் தவிர, 17.1 பில்லியன் டாலர்கள் ஃபார்வர்டு (Forward books) கணக்கிலும் வைத்திருக்கிறோம். (கடந்த ஆண்டு நிலையைவிட ஃபார்வர்டு கணக்கு 10 பில்லியன் டாலர் அதிகமாகவே உள்ளது).
என்றாலும், இவற்றால் நமக்குக் கிடைக்கும் லாபம் மிகவும் குறைவு. 1.7 சதவிகிதமாக இருந்த லாப நிலை மெள்ளக் குறைந்து ஒரு வருடத்தில் 0.7 சதவிகிதமாக மாறி, கடந்த ஆண்டு லாபமற்ற நிலைக்குச் சென்றுவிட்டது. நாம் (ரிசர்வ் வங்கி) இன்னும் முனைப்புடன் செயல்பட வேண்டும். உலக வர்த்தகத்தில் ரூபாயின் பங்கு 1% மட்டுமே உள்ளது. ஏற்றுமதி வர்த்தகத்தில் நமது பங்கு 2% மட்டுமே.
மற்ற வளர்ந்த நாடுகள்போல் நாம் முழு மூல தனக் கணக்கு மாற்று நிலைக்கு (Capital account convertibility) வரவில்லை. நம் அண்டை நாடான சீனா மாறாமல் நாம் மாற மாட்டோம் என நாம் முன்பு சொன்னோம். ஆனால், சீனா தற்போது எஸ்.டி.ஆர்-ல் இடம் பிடித்துவிட்டதால், அவர்கள் நம்மைவிட முன்னேறிச் சென்று விட்டனர். நாமும் கருத்தொத்த மற்ற வளரும் / வளர்ந்த நாடுகளுடன் சேர்ந்து பன்னாட்டு நிதிகளை (Sovereign Funds) உருவாக்கி, ரூபாயின் பயன்பாட்டை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.
விரைவில் 500 பில்லியன், பின்னர் ஒரு ட்ரில்லியன் டாலர் கையிருப்பாக்குவோம் என்கிற ஆசை நமக்கிருந்தாலும், அதற்கு செயல்வடிவம் தந்து முன்னெடுத்துச் செல்லும் கடமை அரசுக்கு நிறையவே உண்டு!