
தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in
மென்தா ஆயில்
மென்தா ஆயில் பற்றி சென்ற வாரம் சொன்னது. “தொடர்ந்து ஹையர் பாட்டத்தை தோற்றுவித்த மென்தா ஆயில், மேலே பழைய உச்சமான 1228-யைத் தாண்டாமல், அதற்கு அருகில் மட்டுமே சென்று இறங்கியது. எனவே, இதை ஒரு ஏறுமுகமான முக்கோணம் என்று அழைப்பார்கள்.

இந்த நிலையில், 1228 என்ற இந்த எல்லை வலுவான தடைநிலையாக உள்ளது. இந்த எல்லை உடைக்கப்பட்டு ஏறினால், மிக வலுவாக ஏறி புதிய உச்சங்களைத் தோற்றுவிக்கலாம்.
அடுத்த முக்கிய எல்லைகள் 1265, 1290 மற்றும் 1330 ஆகும். மாறாக, கீழே முக்கிய ஆதரவு 1160-ல் உள்ளது. இந்த எல்லை உடைக்கப்பட்டால், முக்கோணத்தில் கீழ் எல்லையான 1094 என்ற எல்லையை நோக்கி நகரலாம்.”
மென்தா ஆயில் பற்றி சென்ற வாரம் கொடுத்த விவரங்கள் இன்னும் அப்படியேதான் உள்ளன. இதை, ‘பிக் பிக்சர்’ என்று சொல்வோம். அதாவது, மேலேயிருந்து ஒரு கழுகுப் பார்வையில் பார்த்தால் எப்படியிருக்கும் என்று சொல்வோமோ, அதைப் போலவே உள்ளது.
இதுவரை, உச்சத்தில் தொடர்ந்து டோஜி களையும், சிறிய ஸ்பின்னிங் டாப்புகளையுமே தோற்றுவித்துக்கொண்டு இருந்தது. எனவே, சென்ற திங்களன்று, 1228 என்று நாம் ஏற்கெனவே கொடுத்துள்ள வலுவான தடை நிலையைத் தாண்ட முடியாமல் திணறியது.
இந்தத் திணறல் அடுத்த நாளும் பிரதிபலித்து, செவ்வாயன்றும் இறங்கத் தொடங்கியது. புதனன்று குறைந்தபட்சப் புள்ளியாக 1160-யைத் தொட்டது.

இந்த எல்லைதான், நாம் சென்ற வாரம் கொடுத்திருந்த முக்கியமான உடனடி ஆதரவு நிலையாகும். இந்த எல்லைதான் முக்கோண வடிவத்தின் கீழ்மட்ட முக்கிய ஆதரவு நிலையாகும். இந்த எல்லை வியாழனன்றும் தக்க வைக்கப்பட்டுள்ளது.
காளைகள் இந்த எல்லையை இதுவரை பாதுகாத்து வருகின்றன. ஒருவேளை இந்த எல்லை உடைக்கப்பட்டால், நாம் ஏற்கெனவே கொடுத்துள்ள 1094 என்ற எல்லையை நோக்கி நகரலாம்.
மேலே 1190 என்பது உடனடித் தடை நிலையாக இருக்கிறது. இதை உடைத்து மேலே ஏறினால் 1228 என்ற மிகப் பெரிய தடைநிலை உள்ளது.

காட்டன்
காட்டன் தொடர்ந்து கேப்டவுன் மற்றும் கேப்அப் என்ற முறையில் பலமுறை இயங்கிக் கொண்டிருக்கிறது. சென்ற வாரமும், இந்த கேப் டவுன் மற்றும் கேப் அப்பை எப்படிச் சமாளிப்பது என்று விரிவாகச் சொல்லியிருந்தோம்.
சென்ற வாரம் திங்களன்று, மேலே உள்ள தடை நிலையான 18650 என்ற தடைநிலையை உடைத்து ஏற முயன்று, அதில் தோல்வியைக் கண்டது. திங்களன்று 18550 என்ற புள்ளியில் முடிந்தது. அடுத்து, செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாள்களிலும் மெள்ள மெள்ள இறங்கி முடிந்தது. இந்த இறக்கம் மிகவும் வலுவானதாக மாறி, வியாழனன்று ஒரு கேப்டவுனில் தொடங்கியது.
கேப் டவுனில் தொடங்கினால் ஏறி முடிவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எழுதியிருந்தோம். அப்படியே 18240-ல் தொடங்கி, மெள்ள மெள்ள ஏறி, 18430 வரை ஏறியது. வெள்ளியன்று இந்த ஏற்றத்தைத் தக்கவைக்க முயற்சி நடக்கிறது.
இந்த நிலையில், 18240 என்பது தற்போதைய முக்கிய ஆதரவாக உள்ளது. இந்த எல்லை உடைக்கப்பட்டால், 18040 வரை இறங்கலாம். இது ஒரு நீண்டகால ஆதரவு எல்லை ஆகும்.
இந்த எல்லை உடைக்கப்பட்டால் பெரும் வீழ்ச்சி வரலாம். மேலே 18540 என்பது உடனடித் தடை நிலையாகும். அதற்கு மேலே 18700 என்பது வலிமையான தடை நிலையாகும். இதைத் தாண்டினால் பெரும் ஏற்றம் வரலாம். ஆக, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, காட்டன் தற்போதைக்கு 18040 என்பதை வலிமையான ஆதரவாகக் கொண்டுள்ளது.
மேலே 18700 என்பதை வலிமையான தடைநிலையாகவும் கொண்டு இயங்கலாம்.