நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வரி சேமிப்பு முதலீடுகள்... அதிக லாபம் தரும் சக்சஸ் ஃபார்முலா!

நாணயம் விகடன்
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் விகடன்

வரிச் சலுகை முதலீடு மேற்கொள்வதன் மூலம் நீண்ட காலத்தில் ரிஸ்க் குறையும்; அதிக வருமானமும் கிடைக்கும்...

ந்த நிதியாண்டு தொடங்கி ஆறு மாதங்கள் முடிந்துவிட்டன. மீதமுள்ள ஆறு மாதங்களில் இந்த நிதியாண்டுக்கான வரி சேமிப்பு முதலீடுகளை நாம் செய்தாக வேண்டும் என்பதை எல்லோருமே நினைவில் கொள்வது அவசியம்.   

பொதுவாக, வருமான வரி சேமிப்பு என்றால் நம்மவர்களுக்கு முதலில் ஞாபகம் வருவது பிராவிடென்ட் ஃபண்ட் (பி.எஃப்), ஆயுள் காப்பீட்டு பாலிசி போன்றவை தான். இது ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் செய்யும் வருமான வரி சேமிப்பாக இருக்கும். ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்கள் பங்குச் சந்தை சார்ந்த வரி சேமிப்பு முதலீட்டுத் திட்டத்தில் பணத்தைப் போடுவார்கள்.

நாணயம் விகடன்
நாணயம் விகடன்

வரி சேமிப்பு என்பது அரசாங்கமே நமக்குத் தரும் சலுகை. அந்தச் சலுகையை நாம் துளிகூட வீணாக்காமல் பயன்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம். ஆனால், வரிச் சலுகை கிடைக்கிறது என்பதற்காகவே நமக்குப் பொருத்தமில்லாத திட்டங்களில் நாம் முதலீடு செய்யக் கூடாது. பல சமயங்களில், வரிச் சலுகை கிடைக்கிறது என்பதற்காகத் தவறான திட்டங்களில் நாம் பணத்தைப் போட்டுவிடுகிறோம். சரியான புரிதல் இல்லாமல், அவசரப்பட்டு நாம் செய்கிற அந்த முதலீடுகள் நமக்கு லாபகரமாக இருப்பதேயில்லை. மாதச் சம்பளம் வாங்கும் பணியாளர் ஒருவர், 80சி பிரிவின் கீழ் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் முதலீடு செய்து வரிச் சலுகை பெறலாம். இந்தத் தொகையை எதில் முதலீடு செய்வது என்கிற ஃபார்முலாவைச் சரியாகத் தெரிந்துகொண்டு செய்தால், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் நமக்கும் நிச்சயம் லாபகரமாக இருக்கும். சம்பளத்திலேயே பி.எஃப் பிடிக்கப்படுகிறது. அந்தத் தொகைக்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இதன் மூலமான வட்டிக்கும் வரிச் சலுகை உண்டு என்பதால், இதைத் தவிர்ப்பது நல்லதல்ல.   

வரிச் சலுகை தரும் பல முதலீடுகளில் உள்ள ப்ளஸ் மற்றும் மைனஸ் விஷயங்களை விரிவாகப் பார்ப்போம். அதன் மூலம் வரி சேமிப்பு முதலீடுகள் மூலம் அதிக லாபம் கிடைக்கும் ஃபார்முலாவை நாம் புரிந்துகொள்வோம். 

நாணயம் விகடன்
நாணயம் விகடன்

பொது வருங்கால வைப்புநிதி (PPF)

வரி முதலீட்டுத் திட்டங்களில் எல்லோரின் ‘ஆல் டைம் ஃபேவரைட்’டாக இருப்பது பொது வருங்கால வைப்புநிதி (Public Provident Fund - PPF) ஆகும். வரிச் சலுகைத் திட்டங்கள் கடந்த காலங்களில் பல மாற்றங்களைச் சந்தித்தாலும், பொது வைப்பு நிதித் திட்டம் என்பது நீண்ட காலமாகவே ஒரே சீராக இருந்து வந்துள்ளது. தலைமுறைகளாக இதில் முதலீடு செய்தவர்கள் ஏராளம். 

கடந்த காலத்தில் பி.பி.எஃப் முதலீட்டுக்கு அதிக வட்டி அளிக்கப்பட்டது. தற்போது 7.8 சதவிகிதமே வட்டி வழங்கப்படுகிறது. குறைந்துவரும் வட்டியின் தாக்கம் பி.பி.எஃப் முதலீட்டிலும் எதிரொலிக்கிறது. இதற்கான வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் மத்திய அரசால் அறிவிக்கப்படும்.

இதில் முதலீட்டுக் காலம் 15 வருடங்களாகும். இடைப்பட்ட காலத்தில்,  முதலீட்டின்மீது கடன் வாங்கும் வசதி இருப்பதுடன், இந்தத் திட்டம் மூலம் கிடைக்கும்  வட்டிக்கு மத்திய அரசின் உத்தரவாதம் இருக்கிறது. இதனால், முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தத் திட்டத்துக்கு  வரவேற்பு உள்ளது.    

வரி சேமிப்பு முதலீடுகள்... அதிக லாபம் தரும் சக்சஸ் ஃபார்முலா!

வரிச் சலுகை முதலீட்டில் துளியும் ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் பி.பி.எஃப் திட்டத்தைத் தேர்வு செய்யலாம். குறைந்துவரும் வட்டி விகிதச் சூழலிலும் பி.பி.எஃப் வட்டி  கூடுதலாக இருப்பது கவனிக்கதக்கது. ஆனால், இதன் நீண்ட கால லாகின்  பீரியட் (15 ஆண்டுகள்) என்பது பெரிய மைனஸாகவே பார்க்கப்படுகிறது. இந்த அளவுக்கு நீண்ட கால ‘லாக் இன் பீரியட்’ வேறெந்த முதலீட்டிலும் இல்லை.

வங்கி வைப்புநிதித் திட்டம் (Fixed Deposit)

‘வரிச் சலுகையும் வேண்டும். ஆனால், ரிஸ்க்கே இருக்கக்கூடாது. சுமார் ஐந்தாண்டு காலத்தில்  அந்தத் தொகை தேவை’ என நினைக்கும் முதலீட்டாளர்கள், வரிச் சலுகை தரும் வங்கி வைப்புநிதித் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.   

இதில் செய்யப்படும் முதலீட்டை ஐந்து ஆண்டுகளுக்குமுன்னதாக திரும்ப எடுக்க முடியாது என்பது இதிலுள்ள மைனஸ். தவிர, குறைந்துவரும் வட்டிவிகிதத்தால் இப்போது இருக்கக்கூடிய சூழலில், இந்த முதலீட்டில் பெரிய அளவிலான வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. இனிவரும் காலத்தில் வட்டி இன்னும் குறையவே வாய்ப்புள்ளது. அதைக் கவனத்தில்கொண்டு வங்கி வரி சேமிப்பு எஃப்.டி-யில் முதலீடு செய்வது அவசியம். வரிச் சலுகை கிடைக்கிற அதேசமயம், வங்கி எஃப்.டி மூலம் கிடைக்கும் வட்டியை விட அதிக வருமானம் கிடைக்கும் திட்டங்கள் உண்டு எனில், சிறிது ரிஸ்க் எடுப்பதன் மூலம் அந்தத் திட்டத்தைத் தேர்வு செய்வதே நல்லது.

நாணயம் விகடன்
நாணயம் விகடன்

டேர்ம் பிளானுக்கு மாறும் முதலீட்டாளர்கள்

வரிச் சலுகைக்காக, ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசி திட்டங்களைத் தேர்வு செய்வது கடந்த பல வருடங்களாக மக்களுக்குத் தெரிந்த, நன்கு பரிச்சயமான ஒரு வழிமுறையாக இருந்து வந்துள்ளது; தற்போதும் இருந்து வருகிறது. இன்ஷூரன்ஸில் எண்டோவ்மென்ட், டேர்ம் பிளான், யூலிப் என மூன்று வகையான பாலிசிகள் உண்டு. இவற்றுள் செலுத்தும் பிரீமியத்துக்கு 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 வரை வரிச் சலுகை உண்டு.  

இன்ஷூரன்ஸ் பாலிசி எனில், நம்மவர்கள் முதலில் எடுப்பது எண்டோவ்மென்ட் பாலிசிகளையே. இதில் போடும் பணம் திரும்பக் கிடைக்கும் என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் நம்மவர்களில் பலரும் இதைத் தேர்வு செய்கிறார்கள். பணம் திரும்பக் கிடைக்கும் என்பது நல்ல விஷயம் என்றாலும், நீண்ட காலத்தில் வெறும் 5 -  6  சதவிகிதம்கூட இதன் மூலம் நமக்கு லாபம் கிடைப்பதில்லை என்பதை இதில்  சேரும்முன் அவசியம் கவனிக்க வேண்டும். 

நாணயம் விகடன்
நாணயம் விகடன்

முன்பு என்டோவ்மென்ட் பாலிசிகளை அதிக அளவில் எடுத்தார்கள். அவர்களின் கவனம் இப்போது டேர்ம் இன்ஷூரன்ஸ் பக்கம் திரும்பத் தொடங்கியிருக்கிறது. இந்தத் திட்டத்தில் விபத்து ஏதும் நடந்து, உயிரிழப்பு ஏற்படும்பட்சத்தில்தான் இழப்பீடு கிடைக்கும். மற்றபடி இதில் போடும் பணம் திரும்பக் கிடைக்காது. என்றாலும், குறைந்த பிரிமீயத்தில் அதிக இழப்பீட்டினைத் தரக்கூடிய திட்டம் இது என்பதால், இந்தத் திட்டத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு பலரும் இதை எடுத்து வருகின்றனர். 

கடந்த காலத்தில், முதலீ்டு மற்றும் காப்பீட்டுத் திட்டமான யூலிப் பாலிசியில் பங்குச் சந்தை ஏற்றத்திலிருந்தபோது பலரும் அதில் முதலீடு செய்தார்கள். அது மட்டுமல்லாது, முதலீட்டுக் காலம் மூன்றாண்டுகள் எனக் குறைவாக
இருந்ததால், பலர் இவற்றில் முதலீடு செய்தார்கள். ஆனால்,  பங்குச் சந்தை அப்போது அதிக ஏற்ற, இறக்கத்தில் இருந்ததால், முதலீட்டாளர்களுக்கு இதில் அதிக வருமானம் ஏதும் கிடைக்காததுடன், பெரிய நஷ்டமும் வந்தது.

மேலும், காப்பீடு வேறு, முதலீடு வேறு என்கிற விழிப்புஉணர்வு பலரிடமும் அதிகரித்துள்ளதால், யூலிப் பாலிசியில் அதிக கவரேஜ் இல்லை என்பதை உணர்ந்து இந்த பாலிசி எடுப்பது குறைந்துள்ளது.

வரிச் சலுகையை மட்டும் பார்க்காமல், தங்களுக்கு அந்த இன்ஷூரன்ஸ் திட்டம் சரியான அளவுக்கு கவரேஜ் அளிக்கிறதா என்பதைக் கவனிப்பவர்கள், டேர்ம் இன்ஷூரன்ஸை எடுத்து வருகிறார்கள்.

நாணயம் விகடன்
நாணயம் விகடன்

தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme)

பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் கிடைத்தால், யாருக்குத்தான் மகிழ்ச்சியாக இருக்காது? அதன் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட  திட்டம்தான் என்.பி.எஸ். வரி சேமிப்புத் திட்டங்களில் முதலீட்டாளர்களை இது  அதிகமாக ஈர்த்து வருகிறது.மத்திய அரசின் அங்கீகாரத்துடன் செயல்படும் இந்தத் திட்டமானது, ஓய்வூதியம் வழங்கும் முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.    

நம் நாட்டில் பெருவாரியான மக்களுக்கு ஓய்வூதியம் என்பது நடைமுறையில் இல்லாத காரணத்தால், இந்தத் திட்டம் சிறந்த மாற்றாக இருக்கும்.  அதிலும் குறிப்பாக, தனியார் துறையில் இருக்கும் பல லட்சக் கணக்கான பணியாளர்களுக்கு ஓய்வூதியம் என்பது நிச்சயமாக எட்டாக்கனிதான். அந்த இடைவெளியைப் பூர்த்தி செய்யத்தான் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின் மூலம் கூடுதலாகச் செய்யப்படும் ரூ.50,000 வரையிலான முதலீட்டுக்கு 80CCD (1B) பிரிவின் கீழ் வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் சேரும்போது, முதலீட்டாளர்கள் தங்களுக்குத் தேவையான, உகந்தத் திட்டப் பிரிவில் சேரும் விருப்பத்தைத் தெரிவிக்கும் வாய்ப்புண்டு.

நாணயம் விகடன்
நாணயம் விகடன்

அதாவது, பங்குச் சந்தை சார்ந்தது, கடன் பத்திரம் சார்ந்தது, அரசுக் கடன் பத்திரம் சார்ந்த திட்டம் என இந்த மூன்றில் தங்களுக்கேற்ற ஒன்றைத் தேர்வுசெய்து முதலீடு செய்யலாம். அதேபோல், அந்தத் திட்டத்தை நிர்வகிக்கும் நிதி அதிகாரியையும் நாமே தேர்வு செய்துகொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் செய்யும் முதலீடுகளை 60 வயது வரை வைத்திருக்க வேண்டும் என்பது விதிமுறை. 60 வயதுக்குப் பிறகு ஒரு பகுதியை, அதாவது முதலீட்டின் 60 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ள முடியும். மீதமுள்ள தொகை ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும்.

ஓய்வூதியம் மற்றும் வரிச் சலுகை என்ற இரட்டை இலக்கைச் சார்ந்திருப்பது இந்தத் திட்டத்தின் ப்ளஸ். ஆனால், முதலீடு செய்துவிட்டு, நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் மைனஸ்.

இடைப்பட்ட காலத்தில் சுமார் 25 சதவிகிதத் தொகையை அவசரத் தேவைக்குத் திரும்பப் பெறலாம் என அண்மையில் கொண்டு வரப் பட்டுள்ள மாற்றம் வரவேற்கக்கூடியதாகும். தாங்களாகவே ஓய்வூதியத்தைத் திட்டமிட முடியாதவர்களுக்கு    என்.பி.எஸ் சரியான தேர்வாக இருக்கும்.

நாணயம் விகடன்
நாணயம் விகடன்

இ.எல்.எஸ்.எஸ்

குறைந்துவரும் வட்டி விகிதம், அதிக வருமானம் ஈட்ட வேறு பிற முதலீட்டுத் திட்டங்கள் இல்லாதது, எளிதான முதலீட்டு வழி போன்ற காரணங்களால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பிரபலமாகி வருகின்றன. பலரின் முதல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடே பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டமாகவே (Equity Linked Savings Scheme) இருக்கும். பெயருக்கேற்றாற்போல், இந்தத் திட்டமானது பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யும் தன்மை உடையது.    

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் மாதம் ரூ. 500 கூட முதலீடு செய்ய முடியும். மேலும், இந்த முதலீட்டை மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக எடுக்க முடியாது.இதில் முதலீடு செய்வதன் மூலம் வரிச் சலுகையும், நீண்ட காலத்தில் அதிக வருமானமும் கிடைக்கக் கூடும். 

இதர வரிச் சலுகை முதலீடுகளைக் காட்டிலும், இந்த ஃபண்டில்தான் குறைவான லாகின் பீரியட்.இதன் வருமானம் பங்குச் சந்தையின் செயல்பாட்டைப் பொறுத்திருக்கிறது. நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்படுவதால், பெரும்பாலும் இரட்டை இலக்க வருமானத்தை அளித்து வருகின்றன இந்த வகை ஃபண்டுகள்.

நாணயம் விகடன்
நாணயம் விகடன்

பிரிவு 80சி-ன் கீழ் வரிச் சலுகையைப் பெறும்  திட்டங்களைப் பற்றி நாம் விரிவாகப் பார்த்தோம். இவற்றில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவெனில், வரிச் சலுகையை மட்டும் மனதில் கொண்டு முதலீடு செய்வது பெரிய அளவில் பயன் தராது. வரிச் சலுகையும் பெற வேண்டும்; அதே நேரத்தில், நமது முதலீட்டுக்கு நல்ல வருமானமும் கிடைக்க வேண்டும் என்கிற அடிப்படையில் முதலீடு செய்தால்தான் ஒரே  முதலீட்டில் இரண்டு இலக்குகளை அடைந்து பலன் காண முடியும். 

முக்கியமாக, நமது நிதி இலக்குகள், கால அவகாசம், ரிஸ்க் எடுக்கும் திறன், வருமான எதிர்பார்ப்புகள் போன்றவற்றைக் கணக்கில் கொண்டு, நிதானமாக வரி சேமிப்பு முதலீடுகளைத் தேர்வு செய்தால், வரிச் சலுகையும் கிடைக்கும்; நமது முதலீடுகளும் சிறப்பானதாக அமையும்.

வரி சேமிப்புக்கான மொத்தத் தொகையையும் ஒரே முதலீட்டில், அதாவது ரிஸ்க் இல்லாத வங்கி எஃப்.டி அல்லது ரிஸ்க் கொண்ட இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் செய்துவிடக் கூடாது. வரிச் சலுகை முதலீடு என்றாலும், அதனைப் பிரித்து மேற்கொள்வதன் மூலம் நீண்ட காலத்தில் ரிஸ்க் குறையும்; அதிக வருமானமும் கிடைக்கும்.