
செல்லமுத்து குப்புசாமி
ஆங்கிலத்தில் oxymoron என்ற சொல் எனக்குப் பிடிக்கும். எதிர்மறையான பொருள் தரும் இரு சொற்களை ஒன்றாக இணைத்து எழுதுவதை அல்லது பேசுவதை அப்படிக் குறிப்பார்கள். நேர்மையான திருடன், எல்லோரும் அறிந்த ரகசியம் என்பது மாதிரி. அந்த வகையில் நான் இப்போது சொல்லும் நிகழ்ச்சியும் ஒரு ஆக்ஸிமோரன்தான்.

அப்படியொரு உண்மைக் கதைதான் இது. சென்னையில் ஒரு பிரபலமான நகைக்கடை. சில ஆண்டுகளுக்கு முன்பு கவர்ச்சிகர திட்டமொன்றை அறிவித்தது.
நீங்கள் குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே செலுத்திவிட வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய். ஐந்து வருடம் கழித்து ஒரு கிராம் ரூ.2,000 என்கிற கணக்கில், நம் பணத்துக்கு எத்தனை கிராம் தங்கம் வருமோ, அத்தனை கிராமுக்கு நகை வாங்கிக்கொள்ளலாம். அப்போது விலை ஒரு கிராமுக்கு ரூ.3,000 இருந்தாலும் சரி, 4,000 இருந்தாலும் சரி.
மேலோட்டமாகப் பார்த்தால், இது அருமையான திட்டம்போலத் தோன்றும். ஆனால், கொஞ்சம் கணக்குப்போட்டுப் பார்த்தால், பல சங்கதிகள் புலப்படும். ரூ.2,000-ஐ ஆண்டுக்கு 10% வளர்கிற முதலீடு எதிலாவது போட்டிருந்தால், ஐந்து ஆண்டுகளின் முடிவில் அது ரூ.3,220 ஆக வளர்ந்திருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறவர்கள், மியூச்சுவல் ஃபண்டின் மூலம் முதலீடு செய்கிறவர்களில் பலருக்கு ஐந்தாண்டு காலத்தில் 15% வருடாந்திர வளர்ச்சி என்பதுகூட சாத்தியமே. அப்படி 15% வளர்ந்தால், அந்த ஆண்டு முடிவில் ரூ.2,000 பணமானது ரூ.4,022-ஆக உயர்ந்திருக்கும்.
அதையெல்லாம்விட முக்கியமானது, ஐந்தாண்டுகளுக்கு நம் பணம் கட்டுண்டு போகிறது. ஐந்தாண்டு கால இடைவெளியில் நமக்கு லாபகரமான வாய்ப்புகள் பல கிடைக்கப்பெறலாம். கையில் பணமில்லாமல் போனால் அவற்றைப் பயன்படுத்த முடியாமல் போகும் நிலை நமக்கு ஏற்படலாம்.

“எனக்கு ஷேர் மார்க்கெட், மற்ற முதலீடுகளெல்லாம் தெரியாது; அதனால் தங்கம் வாங்குகிறேன். இப்போது வாங்கினாலும் லாக்கரில் வைக்கப் போகிறேன். ஐந்து வருடங்கள் கழித்து வாங்கினாலும் லாக்கரில்தானே வைக்கப் போகிறேன். அதனால் ஐந்து வருடங்கள் கழித்து ரூ.2,000-க்கு வாங்கிக்கொள்கிறேனே” என்று சொல்வோருக்கு மேலே சொன்ன இந்தத் தர்க்கங்கள் பொருந்தாது.
அந்த வகையினர் பெரும்பாலும் பாதுகாப்பான விஷயங்களை நாடுகிறவர்களாகவே இருப்பார்கள். ‘ஷேர் மார்க்கெட் ரிஸ்க்கானது’ என்று உபதேசம் செய்கிறவர்களாக இருப்பார்கள். ஆனால், ‘இந்த நகைக்கடை நம் பணத்தை யெல்லாம் தூக்கிக்கொண்டு ஓடிவிட்டால்..? அல்லது அந்த நிறுவனம் திவாலாகிக் காணாமல் போனால்..?’ இந்த ரீதியில் அவர்கள் யோசித்திருக்க மாட்டார்கள். “அது எப்படித் திவாலாகும்? 70 வருட பாரம்பர்யம் கொண்ட கடையாச்சே” என்கிற எண்ணம் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும்.
ஆனால், சற்றுமுன்பு நான் சொன்ன அந்தக் கடையில், கடந்த நான்கைந்து மாதங்களாக தங்க நகைகள் ஏதுமில்லை. சென்னையிலுள்ள அதன் நான்கைந்து கிளைகளிலும் அதே நிலைதான். வெள்ளியில் மோதிரம், சங்கிலி, தோடு எனப் பெயருக்கு சிலவற்றைக் காட்சிக்கு வைத்திருக் கிறார்கள். தற்செயலாக என் மகளின் பிறந்தநாளுக்கு ஒரு மோதிரம் வாங்கலாம் என அங்கு சென்றபோது நான் கண்ட காட்சி இது. மேலே குறிப்பிட்ட ஐந்தாண்டுத் திட்டம் நிறைவடையும்போது எல்லாக் கிளை களையும் மூடிவிட்டுக் காணாமல் போவதற்கான சாத்தியங்கள் ஏராளம்.
எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் ரூ.5 லட்சத்தை அந்தத் திட்டத்தில் செலுத்தியிருக்கிறார். 5,00,000 / 2,000 = 250 கிராம் தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நிம்மதியாக இருந்தவர், தற்போது இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ந்துபோயிருக்கிறார்.
கடைக்குச் சென்று விசாரித்திருக் கிறார். அங்கே வேலை செய்த ஊழியர், ‘நம்பிக்கையா போங்க சார்’ என்று சொல்லியனுப்பினாராம். ஆனால், நண்பரோ, கீழேயுள்ள பல தீர்வுகளில் ஒன்றை வலியுறுத்தியிருக்கிறார்.
1. எனக்கு இன்னும் ஒன்றரை வருடம் பாக்கியிருக்கிறது. அதற்கு 15% வட்டி என எடுத்துக்கொண்டு 250 கிராமில் 219 கிராமுக்கு மட்டும் நகை கொடுங்கள். இப்போதே வாங்கிக் கொள்கிறேன்.
2. எனக்கு நகையே வேண்டாம். என் ரூ.5 லட்சம் பணத்துக்கு வங்கி தரும் வட்டி தந்தால் போதும்.
3. ‘அய்யா, எனக்கு வட்டிகூட வேண்டாம். என் பணம் ரூ.5 லட்சத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துவிடுங்கள், ப்ளீஸ்.’
இதில் எதற்கும் மசியவில்லை அவர்கள்.
“சரி, ஒன்றரை வருடம் கழித்தே வந்து வாங்கிக் கொள் கிறேன். எனக்கு உங்கள்மீது நம்பிக்கை வருகிற மாதிரி ஏதா வது சொத்து கேரன்டியாகக் கொடுங்கள்” என்று அவர் கேட்க, கடைக்காரர்கள் சிரித்தார்களாம்.

இதிலிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான பாடமுள்ளது. எதெல்லாம் சாத்தியமில்லையோ, எதெல்லாம் இலகுவாக பணம் பண்ண (அல்லது) லாபம் சம்பாதிக்க முடியுமென்ற நம்பிக்கையூட்டி இழுக்கிறதோ, அதெல்லாம் ஆபத்து என்பதை உணர்ந்துகொள்வது அவசியம்.
அதைவிட முக்கியமானது, முறையாகக் கட்டுப்படுத்தப்பட்ட, அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுகிற முதலீடுகளைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, வங்கிகள். நமது டெபாசிட் பணத்தில் எவ்வளவு சதவிகிதத்தை வங்கிகள் பணமாக வைத்திருக்க வேண்டும், வாராக் கடன்கள் எவ்வளவு இருக்கலாம் என்பது போன்ற பல நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வங்கி வகுத்து, அதன்படி வங்கிகள் செயல்படுகிறதா என்று மேற்பார்வையிடுகிறது. இதேதான் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கும். இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் போட்ட பணம் காணாமல் போவதற்கான சாத்தியமில்லை.
ஆனால், இந்த நகைக்கடை ஓனர் விஜய் மல்லையா போல ‘எஸ்கேப்’ ஆகிவிட்டால், நண்பரின் ரூ.5 லட்சத்தை யாரிடம் போய்க் கேட்பது, யாரிடம் புகார் அளிப்பது? போலீஸ், “எங்களைக் கேட்டா பணம் போட்டீங்க?” என்று கேட்கும். “டிவியில விளம்பரமெல்லாம் போட்டாங்களே? அப்ப நீங்க ஏன் தடுக்கலை?’’ என்று நாம் கேட்க முடியுமா? அப்படியே கேட்டாலும், “ஈமு கோழி விளம்பரம் வந்தப்ப நாம் என்ன செஞ்சமோ, அதையே தான் செஞ்சிட்டிருந்தோம்” என்பார்கள்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், எந்த முதலீடாக இருந்தாலும் அதில் வெளியேறுவதற்கான வாய்ப்பு/கதவு எப்போதுமே திறந்திருக்க வேண்டும். விரும்புகிறபோது நாம் வெளியேற முடியுமெனில், நஷ்டம் வரும்போது நம் நஷ்டத்தைக் குறைத்துக் கொள்ள அதிலிருந்து வெளியேற முடியும். அந்தவொரு வாய்ப்பே இல்லையென்றால், நாம் போட்ட பணம் முழுவதையும்கூட இழக்க வேண்டியிருக்கும்.
ரியல் எஸ்டேட்போல அல்லாமல், பங்குச் சந்தையிலும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலும் நமக்கு நஷ்டம் வரும்போது சட்டென்று அதிலிருந்து வெளியேறுவது சாத்தியம். இந்த வாய்ப்புதான் இந்த முதலீடுகளில் உள்ள மிகப் பெரிய சாதகம்.
நம் நோக்கம் நல்ல நிறுவனங்களைக் கண்டறிந்து, விதை மரமாகும் வரை காத்திருந்து கனியைச் சுவைப்பதுதான் என்றாலும், விதையே முளைக்கவில்லை அல்லது மரம் வாடுகிறது என்னும்போதே உணர்ந்து, அது முற்றிலுமாகப் பட்டுப்போவதற்குள் அதிலிருந்து வெளியேறி விடுவது அவசியம். நேரம் அறிந்து வெளியேறுவது பங்குச் சந்தை முதலீட்டில் புத்திசாலித்தனம்.
பிற்காலத்தில் இந்த நிறுவனம் பெரிதாக வளர்ந்து லாபம் தரும் என்று நினைத்து, ஒரு நிறுவனத்தின் பங்குகளை நாம் வாங்கியிருக்கிலாம். அப்படி வாங்கிவிட்ட ஒரே காரணத்தால் அதன் மீது நிபந்தனையற்ற காதலும், சமரசமற்ற விசுவாசமும், எல்லையில்லாத பக்தியும் கொண் டிருக்க வேண்டிய அவசியமில்லை. அவ்வாறான மனநிலைக்கு நாம் தயாராகவிட்டால் ‘பங்குச் சந்தை முதலீடு’கூட இந்த தங்க நகைக்கடை போல ஆனாலும் ஆச்சர்யமில்லை!
(லாபம் சம்பாதிப்போம்)