
ஆர்.கணேசன், முதன்மை செயல் அதிகாரி, நவரத்னா ஹவுஸிங் ஃபைனான்ஸ்
வங்கி அல்லது ஒரு நிதி நிறுவனத்தில் கடன் பெற நாம் விண்ணப்பிக்கும்போது, வங்கித் தரப்பில் முதலில் பார்க்கப்படுவது இரண்டு விஷயங்களைத்தான். ஒன்று, கே.ஒய்.சி (KYC); அடுத்து, சிபில் (CIBIL) ஸ்கோர்.

கே.ஒய்.சி என்பது வாடிக்கையாளர்களின் பின்னணியை அறிந்துகொள்வதற்காக கேட்கப் படும் ஆதார் மற்றும் வருமான வரி எண் (PAN) போன்றவை. சிபில் (CIBIL) என்பது Credit Information Bureau of India Limited என்பதன் சுருக்கமாகும்.
சிபில் என்பது கடன் வாங்குபவர்களைப் பற்றியும், அவர்களின் திரும்பச் செலுத்தும் தகுதி பற்றியும் தெரிந்துகொள்ள ஏற்படுத்தப் பட்ட அமைப்பாகும். நமது உடல்நலனை அறிந்துகொள்ள மருத்துவப் பரிசோதனை எப்படி அவசியமோ, அதுபோல கடன் வாங்கும் தகுதி பற்றி அறிந்துகொள்ள சிபில் அறிக்கை உதவுகிறது. சிபில் எனக் கூறப்படும் இந்த அமைப்பு, தற்போது TransUnion CIBIL என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
பொதுவாக, எல்லோரும் சிபில் ஸ்கோர் பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். வாடிக்கையாளர்களின் தரத்தை அறிந்துகொள்வதற்காக சிபில் போலவே, மேலும் சில தர அமைப்புகளான CRIF High Mark, Equifax மற்றும் Experian இந்தியாவில் இருக்கின்றன.

எதற்காக சிபில் ஸ்கோர்?
சிபிலில் ஒருவர் 750-க்கும் அதிகமான ஸ்கோரைப் பெற்றிருந்தால், அவர் நல்ல தகுதியைப் பெற்றவராகக் கருதப்படுவார். அவர் குறைந்த ரிஸ்க் வாடிக்கையாளர் ஆவார். இதன் மூலம், வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், அவர் கடனைத் திருப்பிச் செலுத்தும் எண்ணம் கொண்டவரா, இல்லையா என்பதை அறிந்து கொள்ளும். இந்த வகை வாடிக்கையாளர்களுக்கு உடனடியாகக் கடன் வழங்கப்படுகிறது.
ஏன் குறைகிறது சிபில் ஸ்கோர்?
முதலில், சிபில் ஸ்கோர் குறைவதற்கான காரணங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
* பொதுவாக, கிரெடிட் கார்டு உபயோகமே சிபில் ஸ்கோரை உயர்த்தியும், தாழ்த்தியும் காட்ட வல்லது. எனவே, கிரெடிட் கார்டு வரம்பைவிட 30% அதிகமாக உபயோகித்தால் உங்களுடைய ஸ்கோர் குறைய வாய்ப்புண்டு.
* ஒரே நேரத்தில் அதிகமாகக் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பதும் ஸ்கோர் குறைவதற்கான காரணமாகும்.
* கிரெடிட் கார்டில் கட்ட வேண்டிய முழுத் தொகையை மாதந்தோறும் செலுத்தாமல், ஒரு பகுதியை (Part Payment) மட்டும் செலுத்துவதும் ஸ்கோர் குறைவதற்கான காரணமாகும்.
* நம் கடன் தொகையைத் திரும்பச் செலுத்துகிற மாதத் தவணைகளைத் தாமதமாகச் செலுத்துவதும் ஸ்கோர் குறைவதற்குக் காரணமாகிறது.
ஆக மொத்தத்தில், நாம் கடனுக்கான மாதத் தவணை அல்லது கிரெடிட் கார்டுக்குள்ள முழுத்தொகையையும் சரியாகச் செலுத்தாமல் இருப்பது நம் கிரெடிட் கார்டு ஸ்கோரை வெகுவாகப் பாதிக்கும்.
ஸ்கோரை உயர்த்தும் வழிகள்
இப்போது சிபில் ஸ்கோரை உயர்த்திக் கொள்ளும் வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
• உங்களது சிபில் அறிக்கையை அடிக்கடி நீங்கள் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே குறிப்பிட்டது போல, கடனுக்கான தவணையையும், கிரெடிட் கார்டுக்கான தொகையையும் தாமதமாகச் செலுத்துவது ஸ்கோரைக் குறைக்கும். எனவே, இவற்றை நேரத்தோடு கெடுதேதிக்கு முன்பே கட்ட வேண்டியது அவசியம். இவ்வாறு சிபில் அறிக்கையை நீங்களே எடுத்துப் பார்க்கும்போது, உங்களைப் பற்றி முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும். இதில் முறையாகச் செலுத்தப்பட்ட தொகைகள், சரியாகச் செலுத்தப்படவில்லை என இந்த அறிக்கை மூலம் தெரிய வந்தால், நீங்கள் வங்கியின் வழியாக சிபில் அறிக்கையைச் சரிசெய்து கொள்ள முடியும். அனைவரும் மிக எளிதாக சிபில் அறிக்கையை ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த அறிக்கையை அவ்வப்போது பதிவிறக்கம் செய்து, சரி பார்த்துக்கொள்வது அவசியமாகும்.

• ஒருமுறை உங்கள் விண்ணப்பம் வங்கி அல்லது நிதி நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப் படாவிட்டால் மீண்டும், மீண்டும் நீங்கள் மற்ற வங்கிகளை உடனடியாக அணுகக் கூடாது. உங்களது கிரெடிட் ஸ்கோர் உயர்ந்தபிறகு, வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களை நீங்கள் அணுகலாம்.
• உங்கள் கிரெடிட் கார்டு பேமென்ட்களைக் குறித்த காலத்துக்குள் செலுத்துவதும், வரம்பு (Limit) முழுவதையும் முழுவதுமாகப் பயன்படுத்தா மல் இருப்பதும் உங்கள் ஸ்கோரை உயர்த்தும்.
• கிரெடிட் கார்டு தொகையையும், கடனையும் சில தள்ளுபடிகள் பெற்று ஒரேடியாக செட்டில்மென்ட் செய்வதைத் தவிர்க்க வேண்டும். கிரெடிட் கார்டில் குறைந்தபட்ச தொகையை (Minimum Due) மட்டும் செலுத்திக்கொண்டே வரக்கூடாது. முழுத்தொகையையோ அல்லது கணிசமான தொகையையோ செலுத்தி வந்தால், உங்கள் ஸ்கோர் உயர வழிவகுக்கும்.
• கடனுக்காக வங்கியையோ அல்லது நிதி நிறுவனங்களையோ அடிக்கடி அணுகக் கூடாது. ஒவ்வொரு முறையும் நீங்கள் கடன் அல்லது கிரெடிட் கார்டு கிடைக்குமா என விசாரிக்கும் போது அவை உங்கள் பெயரில் அறிக்கையாகப் பதிவாகும். இது உங்கள் நிதி நெருக்கடியைத் தெரிவிப்பதுடன், உங்களின் கடன் வாங்கும் உந்துதலையும் வெளிப்படுத்தும். எனவே, இவற்றைத் தவிர்த்து உங்கள் ஸ்கோரை உயர்த்திக் கொள்ள லாம். நீங்கள் அதிகமாக கடனுக்காக விண்ணப்பிக் காமலும், கிரெடிட் கார்டை வரம்பை மீறி பயன்படுத்தாம லும் இருப்பது உங்கள் ஸ்கோரை உயர்த்தும்.
• கடன்களில் இரு வகை உண்டு. கார் கடன், வீட்டுக் கடன் போன்று ஒரு பொருளை ஈடுகொடுத்துப் பெறுவது பாதுகாப்பான கடன் (Secured Loan) ஆகும். மற்றொன்று, எந்தவித ஈடும் தராமல் பெறும் பாதுகாப்பற்றக் கடனான (Unsecured Loan) தனிநபர் கடன் (Individual Loan) மற்றும் கிரெடிட் கார்டு கடன். இந்த இரு கடன்களையும் கலந்து பெறும்போது ஸ்கோர் உயரும்.
• நீங்கள் யாருக்காவது ஜாமீன் (Guarantor) கையெழுத்திடும்போது மிகக் கவனமாக இருப்பது அவசியம். கடனை வாங்கியவர் கடன் பணத்தைச் சரியாக திரும்பச் செலுத்தாதபட்சத்தில் ஜாமீன் தாரரான உங்கள் ஸ்கோரும் குறைவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
• திடீரென, பெரும் தொகையைக் கொண்டு கடனை அல்லது கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை (Outstanding Amount) அடைக்கும் போது உங்களது ஸ்கோர் குறையும் வாய்ப்புள்ளது. ஏனெனில், உங்கள் வருமானத்தின் நிலையற்ற தன்மையை அது வெளிக்காட்டும். முறையான தவணையை நேரத்தோடு செலுத்துவது ஒருவரின் சிபில் ஸ்கோரை உயர்த்தும்.
ஒருவரே நான்கு அல்லது ஐந்து கிரெடிட் கார்டுகள் வைத்திருந்து ஒன்றோ அல்லது இரண்டோ மட்டும் உபயோகப்படுத்தியும் மற்ற கார்டுகளைப் பயன்படுத்தாவிட்டாலும் ஸ்கோர் குறையும். எல்லா கார்டுகளையும் கவனமாக பயன்படுத்தினால் ஸ்கோர் உயர வாய்ப்புண்டு.
சிபில் ஸ்கோர் குறையாமல் இருக்க இனி இந்த விஷயங்களில் உஷாராக இருப்பீர்கள்தானே?