
ஜி.எஸ்.டி கேள்வி பதில்கள்ஜி.கார்த்திகேயன் ஆடிட்டர், கோவை
நாங்கள் தனியார் ஆம்னி பேருந்து நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்களது பேருந்துகள் கோவை யிலிருந்து சென்னைக்கும், கோவையிலிருந்து பெங்களூருக்கும் தினமும் சென்று வருகின்றன. நாங்கள் எந்தவிதமான வரிகளை வசூல் செய்ய வேண்டும், சி.ஜி.எஸ்.டி-யா, ஐ.ஜி.எஸ்.டியா அல்லது எஸ்.ஜி.எஸ்.டியா? தாங்கள் இதற்கு விளக்கமளித்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
கே.கண்ணன், கோயம்புத்தூர்

“கோவையிலிருந்து சென்னை செல்லும் பேருந்தில் ஏறும் பயணிகளிடம் நீங்கள் சி.ஜி.எஸ்.டி மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி வசூல் செய்ய வேண்டும். இதுவே கோவையிலிருந்து பெங்களூரு செல்லவேண்டிய பேருந்தில் ஏறும் பயணிகளிடம் ஐ.ஜி.எஸ்.டி வசூல் செய்ய வேண்டும். இது நீங்கள் கொடுத்த தகவல்களின்படி, நான் கொடுத்திருக்கும் பதில். உங்களுடைய ஆடிட்டரிடம் மற்ற விவரங்களையும் கொடுத்து, இதற்கு விரிவான விளக்கங்களைப் பெற்றுக்கொண்டால் எந்தவிதத் தவறுகளும் நிகழ வாய்ப்பில்லை.’’

எங்கள் நிறுவனம் துணிகளுக்குச் சாயமிடும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. எங்களின் வருமானம் ஜி.எஸ்.டி வரம்புக்கு மேல் உள்ளதால், பதிவு செய்துள்ளோம். நாங்கள் செய்யும் ஜாப் ஒர்க்குக்கு 5% வரி வசூல் செய்கிறோம். ஆனால், நாங்கள் வாங்கும் சாயம் மற்றும் கெமிக்கல் போன்ற பொருள்களுக்கு 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப் பட்டுள்ளது. ஆகையால் உள்ளீட்டு வரி அதிகமாக உள்ளது. இதைத் திரும்பப் பெற முடியுமா? இது குறித்து சரியான விளக்கம் தேவை.
பொன்அமல்ராஜ், பெருந்துறை
‘‘உங்கள் ஜாப் ஒர்க்குக்கு 5% வசூல் செய்வது சரியானது. ஆனால், நீங்கள் வாங்கும் பொருள்களுக்கான உள்ளீட்டு வரி 18% என்பது தற்போது நடைமுறையில் ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. ஏற்றுமதியாளர்களுக்குத் திரும்பக் கொடுக்கப்படும் ரீஃபண்ட் தொகை போல, உள்நாட்டில் செய்யப்படும் தொழில்களுக்கு உள்ளீட்டு வரியைத் திரும்பக் கொடுப்பதில்லை. இது நடைமுறையில் உள்ள சிக்கல். இதனை உடனடியாகக் கவனிப்போம் என்று மத்திய அமைச்சரும், ஜி.எஸ்.டி கவுன்சிலும் கூறி வருகிறது. இதனை நடைமுறையில் விரைவில் செயல்படுத்துவார்கள் என்று நம்புவோம்.’’
உற்பத்தித் துறையில் பயணித்துக் கொண்டிருக்கும் நாங்கள், எங்கள் தொழில் நிறுவனத்தை தற்போதுதான் புதிதாக ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்துள்ளோம். நாங்கள் டிரான் 1 (Tran 1) படிவம் தாக்கல் செய்ய வேண்டுமா?
ஜே.பாஸ்கர், கிருஷ்ணகிரி
“டிரான் (Tran) படிவம் என்பது, உங்கள் கையில் இருக்கும் சரக்குக்கான வரி கிரெடிட் இருந்தால் மட்டும் தாக்கல் செய்ய வேண்டியது.
நீங்கள் உங்கள் நிறுவனத்தைப் புதிதாகப் பதிவு செய்ததாகக் கூறியிருக்கிறீர்கள். எனவே, உங்கள் கூற்றுப்படி பார்த்தால், ஜூன் 30-ம் தேதி எந்தவிதச் சரக்கும் இருப்பதாக தெரியவில்லை. இந்த அடிப்படையில் பார்த்தால், நீங்கள் டிரான் 1 படிவம் தாக்கல் செய்ய வேண்டியது அவசியமில்லை.”
என்னுடைய நிறுவனம் ஒரு கூட்டு நிறுவனமாகும். இதில் மூன்று பங்குதாரர்கள் இருக்கின்றனர். என் மகனின் படிப்புக்கான தனியார் பயிற்சிக்குக் கட்டணம் செலுத்துவதில் ஜி.எஸ்.டி வசூல் செய்து வருகின்றனர். இதை நாங்கள் எங்களுடைய நிறுவனத்தில் செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி-யிலிருந்து கழித்துக்கொள்ள முடியுமா?
பாண்டுரங்கன், பண்ருட்டி
“நீங்கள் கோரக்கூடிய ஜி.எஸ்.டி வரி, வியாபாரத்துக்கோ அல்லது வியாபார அபிவிருத்திக்கோ இல்லாதபட்சத்தில் உள்ளீட்டு வரியை மற்ற வரியிலிருந்து நீங்கள் எடுத்துக் கொள்ள முடியாது. வருமான வரிச் சட்டத்திலும் இந்தச் செலவு அனுமதிக்கப்படாது.
மேலும், இந்த உள்ளீட்டு வரியை எடுத்துக் கொள்ள முடியாது. இந்த ஜி.எஸ்.டி கட்டணம் உங்களுடைய தனிநபர் செலவில்தான் (Drawings) வைக்க வேண்டும்.
மேலும், நீங்கள்தான் நுகர்வோராகக் கருதப்பட்டு, உங்களிடமிருந்துதான் இந்த வரி வசூலிக்கப்படும். ஆகவே, இந்த வரியை உள்ளீட்டு வரிப் பயனாக எடுக்க முடியாது.”
