நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 40 - பேமென்ட் முறைகளும் வங்கியின் பங்கும்!

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்
ஏற்றுமதிக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்வது குறித்து விரிவாகக் கடந்த இதழ்களில் பார்த்தோம். ஆவணங்கள் தயார் செய்தபின் வங்கியின் நடைமுறைகளைச் செயல்படுத்த வேண்டும்.

ஷிப்மென்டுக்கு முன் தயார் செய்ய வேண்டிய ஆவணங்களை கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்டிடம் கொடுத்த பிறகு, அவர்கள் ஷிப்மென்ட் நடைமுறைகளை முடிப்பார்கள். பின்னர் அவர்கள் பில் ஆஃப் லேடிங் மற்றும் எக்ஸ்போர்ட்டர் காப்பி ஆகிய இரண்டையும் தருவார்கள். பின்னர் ஷிப்மென்டுக்கான இன்வாய்ஸ், பேக்கிங் லிஸ்ட் உள்ளிட்ட ஆவணங்களுடன் அவர்கள் தரும் பில் ஆஃப் லேடிங், எக்ஸ்போர்ட்டர் காபி ஆகியவற்றையும், இறக்குமதியாளர் கேட்டிருக்கும் அனைத்து சான்றிதழ்களையும் வங்கியில் கொடுக்க வேண்டும். இவற்றுடன் சேர்த்து வங்கி மேலாளருக்கு பேங்க் கவரிங் லெட்டர் ஒன்றையும் எழுதித் தரவேண்டும். அதில் என்னென்ன ஒரிஜினல், என்னென்ன நகல் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் குறிப்பிட வேண்டும். அவற்றைப் பெற்றுக்கொண்டு வங்கியிலிருந்து ஒரு ‘அட்வைஸ் நம்பர்’ தருவார்கள்; அதை வாங்கிக்கொள்ளவும்.
அதன்பின் நம் வங்கியிலிருந்து இறக்குமதியாளரின் வங்கிக்கு அந்த ஆவணங்கள் அனுப்பப்படும். அந்த ஆவணங்களை இறக்குமதியாளர் பெற்றுக்கொண்டு, நீங்கள் அனுப்பிய சரக்கை அவர் துறைமுகத்திலிருந்து எடுத்துக்கொள்வார். அந்தப் பொருளுக்கானப் பணத்தை இறக்குமதியாளரின் வங்கி உங்கள் வங்கிக்கு அனுப்பும். இவை பொதுவான பரிவர்த்தனை முறை.
பேமென்ட் முறைகளில் பல வழிகள் உள்ளன. இவற்றில் எந்தப் பேமென்ட் முறையைச் செயல்படுத்தலாம் என்று இறக்குமதி யாளரிடம் கேட்டு உறுதி செய்துகொண்டு செயல்படுத்தவும். அது உங்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்குமா எனத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு, பின்வரும் பேமென்ட் முறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அட்வான்ஸ்
இறக்குமதியாளர் உங்கள் பொருளுக்கு அட்வான்ஸ் தருவதற்குத் தயாராக இருந்தால், ஷிப்பிங் பில்லில் இருக்கிற வங்கிக்கு, புரொஃபார்மாவில் பேமென்ட் டைப் 103 என்பதைக் குறிப்பிட்டு, இறக்குமதியாளரிடம் அட்வான்ஸ் பணத்தை அனுப்பச் சொல்ல வேண்டும். அவர் வேறெந்த வங்கிக் கணக்குக்கும் பணம் அனுப்பக் கூடாது. இப்படி அனுப்பும் பணத்தை இந்திய ரூபாயில் அனுப்பாமல், டாலரில் அனுப்புமாறு சொல்ல வேண்டும். இறக்குமதியாளர் சில சமயம், ‘‘நான் இந்தியாவுக்கு வர உள்ளேன். அதனால் நேரடியாகப் பணத்தைத் தந்து விடுகிறேன்’’ என்பார். பணத்தைக் கையில் வாங்குவதைத் தவிர்க்கவும். அட்வான்ஸ் பெறும் முறையில் உங்களின் ஏற்றுமதிக்கு 100 சதவிகிதப் பாதுகாப்பு இருக்கிறது.
லெட்டர் ஆஃப் க்ரெடிட் (LC-Letter of Credit)
ஏற்றுமதியில் இது மிகவும் பாதுகாப்பான வழிமுறை. இந்த முறையில் நம் பணத்துக்கு 90 சதவிகிதப் பாதுகாப்பு இருக்கிறது. இறக்குமதியாளர் எல்.சி ஆவணத்தைத் தயார் செய்து நமக்குத் தருவார். ஆனால், அந்த எல்.சி-யானது எல்.சி கன்ஃபார்ம் அட் சைட் (LC Confirm at sight) என்பதுதானா என்று பார்க்க வேண்டும். மேலும், இர்ரிவோக்கபுள் (Irrevocable) எல்.சி.யாகவும் இருக்க வேண்டும். அத்துடன், மல்டி நேஷனல் வங்கி அம்சத்தையும் கொண்டிருக்க வேண்டும். இந்த மூன்றும் இருந்தால்தான் எல்.சி முறையை ஏற்றுக்கொள்வது சிறந்ததாகும்.
இந்த முறையில் மூன்று வழிமுறைகள் உள்ளன. அவற்றை இனி பார்ப்போம்.
இஷ்ஷூவன்ஸ் (Issuance): நாம் இறக்குமதியாளருக்கு புரொஃபார்மா கொடுக்கிறோம். அவர் பர்ச்சேஸ் ஆர்டர் தருகிறார். அடுத்து இருவரும் அக்ரிமென்ட் போடுகிறோம். அடுத்து அவர் தன் வங்கியில் எல்.சி-க்கு மனு போடுவார், அவருடைய பேங்க் அவருக்கு எல்.சி அனுமதி தருகிறது. அந்த எல்.சி நம் வங்கிக்கு வரும். நம் வங்கி அதை நமக்குத் தரும். அதை வாங்கி, அதில் அவர் என்னென்ன ஆவணங்கள், என்னென்ன சான்றிதழ்கள் வேண்டுமெனக் கேட்டிருக்கிறார் என்பதை விவரமாகப் படித்துப் பார்க்க வேண்டும். உங்களுக்கு ஏதேனும் தெரியவில்லை என்றாலோ, புரியவில்லை என்றாலோ இறக்குமதி யாளரிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அதில் எது முடியும், முடியாது என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும். இருவரும் அதை ஒப்புக் கொண்டால், எல்.சி முறையைத் தொடரலாம்.
நெகோஷியேஷன் (Negotiation):
எல்.சி அட் சைட் ஆக இருந்தால், ஷிப்மென்ட் முடிந்த பிறகு ஆவணங்களை வங்கியில் தருகிறோம். இறக்குமதியாளர் கேட்கிற அனைத்தையும் நாம் கொடுத்திருக்கிறோமா என்று பார்த்துவிட்டு, நமது வங்கி, இறக்குமதி யாளரின் வங்கிக்கு அந்த ஆவணங்களை அனுப்பும்.இறக்குமதியாளர் தன் வங்கியிலிருந்து ஆவணங்களை வாங்கி, சரக்கை க்ளியர் செய்துவிடுவார். பின்னர் இறக்குமதியாளரின் வங்கி, நம் பேங்குக்குப் பணத்தை அனுப்பும். நம் வங்கியானது பணம் வந்துவிட்டதை நமக்குச் சொல்லும். பிறகு நாம் அந்தப் பணத்தை நம் செளகரியத்துக் கேற்ப மாற்றி எடுத்துக்கொள்ளலாம்.

எல்.சி அட் டேர்ம்ஸ் ஆக இருந்தால்: இறக்குமதியாளர் ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு தனது வங்கியில், 30 நாள்கள் கழித்துப் பணத்தை அனுப்புமாறு சொல்லிவிடுவார். அந்த விவரம் மட்டும்தான் நமக்கு அப்போது வரும்.பணமானது இறக்குமதியாளர் குறிப்பிட்ட அந்த 30-ம் நாளில்தான் வரும்.
டிபி அட் சைட் (Documents Against Payment)
ஷிப்மென்ட் முடிந்ததும் வங்கியில் ஆவணங்களைக் கொடுக்கிறோம். நம் வங்கியானது இறக்குமதியாளரின் வங்கிக்கு ஆவணங்களை அனுப்பும். இறக்குமதியாளருடைய வங்கி இறக்குமதியாளரிடம், ‘ஆவணங்கள் வந்துவிட்டது, அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு டாக்குமென்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்’ என்று தெரிவிக்கும். இறக்குமதியாளர் பணத்தைப் போட்ட பிறகுதான் டாக்குமென்டுகளை வங்கி கொடுக்கும். அதன்பின்பே அவர் பொருள்களை எடுக்க முடியும். அந்தப் பணம் நம் வங்கிக் கணக்குக்கு வந்துவிடும்.
டிஏ (Documents against Acceptance)
இது, பணத்தைப் பொறுமையாக வாங்கிக் கொள்வதாக நீங்க ஒப்புக்கொண்டு, ஏற்றுமதி செய்யும் முறையாகும். நாம் பேங்கில் கொடுக்கும் டாக்குமென்டுகளை எந்த அட்வைஸும் இல்லாமல் வங்கியானது இறக்குமதியாளருக்குக் கொண்டுபோய் சேர்த்துவிடும். அவரும் சரக்கை எடுத்துக்கொள்வார். பிறகு, அவர் எப்போது பணம் தருவதாகச் சொல்லியிருக்கிறாரோ, அப்போதுதான் பணம் கிடைக்கும். ஆனால், இதில் பணத்துக்கான உத்தரவாதமில்லை என்பதால், இது பாதுகாப்பானதல்ல; நன்கு தெரிந்த இறக்குமதியாளர் எனில் இந்த முறை யிலான பேமென்ட்டுக்கு ஒப்புக் கொள்ளலாம். டிபி அட் சைட் மற்றும் டிஏ டேர்ம்ஸ் இரண்டுக்கும் இ.சி.ஜி.சி உதவியை எடுத்துக்கொண்டால் பணத்துக்குப் பாதுகாப்புப் பெறலாம். இந்த இரண்டு முறைகளிலும் பணத்துக்கான பாதுகாப்பானது இ.சி.ஜி.சி-யுடன் 85%, இல்லையெனில் 5% என்ற அளவிலும் இருக்கிறது.
ஓப்பன் அக்கவுன்ட்
ஓப்பன் அக்கவுன்ட் முறை என்பது டாக்குமென்டுகளை கூரியரில் அனுப்புவதாகும். அவர் டாக்குமென்டுகளை வைத்து எளிதில் சரக்கை எடுத்துவிடுவார். இந்த முறையில் வங்கிக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. எனவே, பணத்துக்கும் உத்தரவாதம் இல்லை. இதை, நன்கு தெரிந்த, நம்பகமான இறக்குமதியாளரிடம் மட்டுமே செய்யலாம். இ.சி.ஜி.சி-யும் இந்த முறையில் கவர் ஆகாது. எனவே, இந்த முறையில் பணத்துக்கான பாதுகாப்பு என்பது பூஜ்யமே.
இதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன், மீண்டும் நினைவுப்படுத்துகிறேன். முக்கியமாக, எந்தவொரு ஆவணத்தையும் நேரடியாக இறக்குமதியாளருக்கு அனுப்பக்கூடாது. வங்கி வழியாக மட்டுமே அனுப்புவது நல்லது. ஒருவேளை இறக்குமதியாளர் பொருளுக்கான அட்வான்ஸ் பணத்தைத் தந்்திருந்தால் வேண்டு மானால் அனுப்பலாம். நீங்கள் ஆவணத்தை நேரடியாகத் தந்திருந்தாலோ, சரண்டர் செய்திருந்தாலோ இ.சி.ஜி.சி இன்ஷூரன்ஸுக்கு க்ளெய்ம் செய்ய முடியாது.
வங்கியில் ஆவணங்களைச் சமர்ப்பித்து பேமென்ட் முறைகளைச் செயல்படுத்தும்போது எக்ஸ்சேஞ்ச் கன்ட்ரோல் காப்பி என்ற ஒன்றைத் தயார் செய்ய வேண்டும். இது எதற்காகவெனில், இரண்டு நாடுகளுக்கிடையே செலாவணி பரிமாற்றம் நடப்பதற்காகத் தயார் செய்யப்படும் ஹுண்டி பேப்பர் (Hundi Paper) ஆகும். முதல் எக்ஸ்சேஞ்ச் காப்பி, இரண்டாம் எக்ஸ்சேஞ்ச் காப்பி ஆகிய இரண்டு படிவங்களில் கையெழுத்து போட்டுத்தர வேண்டும். அதில் பரிவர்த்தனையில் ஈடுபடும் வங்கிகளின் விவரங்கள், ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர் விவரங்கள், இன்வாய்ஸ் நம்பர், ஆர்டர் கன்ஃபர்மேஷன் நம்பர் ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும்.
ஏற்றுமதி வெற்றிகரமாக முடிந்து உங்கள் பொருளுக்கான பணமும் வந்தபிறகு இறுதியாக வரும் பேங்க் ரியலைசேஷன் சர்ட்டிஃபிகேட் என்ற ஆவணத்தை டி.ஜி.எஃப்.டி (DGFT) இணையதளத்தில் EBRC என்று தரவிறக்கம் செய்துகொள்ளலாம். ஊக்குவிப்புத் திட்டங் களுக்கும், ஐ.ஜி.எஸ்.டி-யைத் திரும்பப் பெறவும் இந்த ஆவணம் நமக்குத் தேவைப்படும். எனவே, எக்ஸ்போர்ட்டர் காப்பியையும், பி.ஆர்.சி-யையும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
பேமென்ட் முறைகளைப் புத்திசாலித்தனமாகச் செயல்படுத்தினால் ஏற்றுமதி பிசினஸில் கலக்கலாம்.
(ஜெயிப்போம்)