
திருச்சி கூட்டத்தில் வாசகர்கள் உற்சாகம்

நாணயம் விகடனும், ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து, திருச்சியில் `மியூச்சுவல் ஃபண்ட் - செல்வம் சேர்க்கும் செயல் திட்டம்’ என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கிளஸ்டர் மேனேஜர் ஏ.ஹெச். முகம்மது இப்ராஹிம், மியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும், தங்கம், ரியல் எஸ்டேட் முதலீட்டைவிட மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எத்தகைய சிறப்பான வசதிகளைக் கொண்டது என உதாரணங்களுடன் பேசினார்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் கூட்டுவட்டி சூட்சுமத்தை விளக்கமாக எடுத்துச்சொன்ன மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன், கடந்த காலத்தில் சூப்பர் வருமானம் தந்த சில ஃபண்டுகளின் வருமான விகிதத்தை சுட்டிக் காட்டி, புதிய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையூட்டினார். எஸ்.ஐ.பி முதலீட்டில் சந்தையின் ஏற்ற இறக்கத்தைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்றும், நீண்டகாலத்தில் சராசரியாக நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம் என்றும் சொல்லி, சந்தையில் நிகழும் சின்னச் சின்ன ஏற்ற இறக்கத்துக்கெல்லாம் பதற்றப்படும் முதலீட்டாளர்களுக்குத் தெளிவை ஏற்படுத்தினார். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்தான் அதிக லாபம் கொடுக்கக்கூடியது என்பதை உதாரணங்களுடன் விளக்கிய அவர், யாருக்கு எந்த ஃபண்டுகள் ஏற்றதாக இருக்கும் என்பதையும் கோடிட்டுக் காட்டினார்.

இறுதியாக, கேள்வி பதில் நேரத்தில் பல வாசகர்கள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த பல சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றார்கள். “எங்கள் முதலீட்டுக்கு விதை போட்ட பொன்னான நேரம் இது” எனப் பல புதிய முதலீட்டாளர்கள் நம்மிடம் சொல்லிச் சென்றது நிகழ்ச்சிக்குக் கிடைத்த பெரிய வெற்றி!
- கா.முத்துசூரியா
படங்கள்: என்.ஜிமணிகண்டன்