
பாஸ்டன் ஸ்ரீராம்
இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலானவர்களுக்கு பென்ஷன் என்கிற பாதுகாப்புக் கவசம் இருந்தது. ஓய்வுபெறும்போது சொந்த வீடும், கையில் கொஞ்சம் காசும் இருந்தால் போதும் என்கிற நிலை. நிரந்தர வைப்பு நிதி தரும் வட்டியும் பென்ஷனும் வாழப் போதுமானதாக இருந்தது.

1990-களில் ஏற்பட்ட பொருளாதார மாற்றத்துக்குப் பிறகு நிலை வெகுவாக மாறியுள்ளது. சந்தைப் பொருளாதாரத்தில் வாழ்க்கைக்கான தேவையும் அதிகமாகிப் போனது; பென்ஷனும் பெரும்பாலும் வழக்கொழிந்துவிட்டது.
கடந்த சில ஆண்டுகளாகத் தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வுக் காலம் குறித்து யோசிக்க ஆரம்பித்ததன் விளைவாக இன்றைக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் நல்ல வளர்ச்சி கண்டு வருகின்றன. 2007, மார்ச் மாதம் ரூ.3 லட்சம் கோடியாக இருந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் சொத்து மதிப்பு, 2014-ம் ஆண்டு ரூ.10 லட்சம் கோடியை எட்டியது. அதன்பிறகு அசுர வளர்ச்சிகண்டு, இன்று அது ரூ.20 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதாவது, மூன்றே ஆண்டுகளில் இரு மடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது.
ஆனாலும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து எல்லோருக்கும் தெரிந்தபாடில்லை. அப்படித் தெரிந்தால், டிரெடிஷனல் இன்ஷூரன்ஸ் பாலிசிகளிலும், யூலிப் பாலிசிகளிலும் மக்கள் பணத்தைப் போட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள்.
மியூச்சுவல் ஃபண்ட் பற்றி கொஞ்சநஞ்சம் தெரிந்தவர்கள், “மச்சான் ஒரு டீ சொல்லேன்” என்கிற ரேஞ்சில், “ மாசம் அஞ்சாயிரம் இன்வெஸ்ட் பண்ணணும்; நல்ல மியூச்சுவல் ஃபண்ட் சொல்லேன்” என்று கேட்பார்கள்.
முதலீடு என்பது ரெடிமேட் சட்டையல்ல; எல்லோரும் ஒரே சட்டையை வாங்கிப்போட்டுக்கொள்வதற்கு. ரிட்டையர்மென்ட் பிளானிங் / வெல்த் கிரியேஷன் என்பது வீடு கட்டுவதுபோல. இடம், டிசைன், வீட்டின் அளவு, எத்தனை பெட்ரூம் என எல்லாம் முடிவு செய்து, நல்ல தரமான பொருள்களை வாங்கிக் கட்ட வேண்டும். டிசைன் செய்யவும், கட்டவும் அதற்காகப் படித்த அல்லது அனுபவம் உள்ள ஆள்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு ஊதியம் கொடுத்துக் கட்ட வேண்டும். அவ்வப்போது நாம் கொடுத்த பிளான்படிதான் கட்டுகிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும்.

அதுபோல, முதலீடு செய்ய ஆரம்பிக்கும்முன், 1) எதற்காக முதலீடு செய்கிறோம் 2) நம்முடைய இலக்கு என்ன 3) நம்முடைய ரிஸ்க் லெவல் எவ்வளவு, 4) மாதம் எவ்வளவு சேமிக்க முடியும், 5) எவ்வளவு நாள் தொடர்ந்து சேமிக்க முடியும் என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டும்.
உதாரணத்துக்கு, 30 வயதுடைய ஒருவர், மேற்சொன்ன கேள்விகளுக்குப் பின்வருமாறு பதில் சொல்லலாம். ‘‘ஓய்வுக் காலத்துக்காகச் சேமிக்க வேண்டும்; ஓய்வு பெறும்போது ரூ. 5 கோடி வேண்டும்; மாதம் ரூ.10 ஆயிரம் ஒதுக்கி முதலீடு செய்ய முடியும்; அடுத்த 35 வருடங்கள் இப்படி முதலீடு செய்ய முடியும். நடுவில் பணம் எடுக்க வேண்டிய சாத்தியங்கள் குறைவு’’ – இப்படி தெளிவாகப் பதில் சொன்னால்தான் உங்களுக்கேற்ற திட்டம் எது என்பதைச் சரியாக எடுத்துச்சொல்ல முடியும்.
‘இப்ப கையில் ரூ.25 லட்சம் இருக்கு. அடுத்த ஆண்டே பிள்ளைகளின் படிப்புக்கோ, திருமணத்துக்கோ தேவைப்படும்’ என்றால், பங்குச் சந்தைக்குள் பணத்தைப் போடாமல் இருப்பதே நல்லது. குறுகிய காலத் திட்டம் பங்குச் சந்தைக்கு உகந்ததல்ல.
சரி, கேள்விகளுக்கெல்லாம் பதில் தயார். அடுத்து என்ன செய்வது?
பங்குச் சந்தை குறித்து போதுமான அறிவு இருந்தால் நேரடியாக நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம். அப்படி இல்லாதோர் மியூச்சுவல் ஃபண்டுகளை நாடுவதே நலம். அப்படி மியூச்சுவல் ஃபண்டுகளில் போட முடிவு செய்தாலும் ஆயிரக்கணக்கில் இருக்கும் ஃபண்டுகளில் எதில் போடுவது என்று முடிவு செய்வது கடினம்.
ஈக்விட்டி ஃபண்ட், பாண்ட் ஃபண்ட், பேலன்ஸ்டு ஃபண்ட், ஸ்பெஷாலிட்டி ஃபண்ட், செக்டார் ஃபண்ட், ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் என்று நிறைய இருக்கின்றன. ஈக்விட்டிக்குள் லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் என்று கேட்டாலே தலையைச் சுற்றும் நிறையப் பேருக்கு. எனவே, ஒரு முதலீட்டு ஆலோசகரின் ஆலோசனை நிச்சயம் நமக்கு வேண்டும்.
முதலீட்டு ஆலோசகர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
உடல் நலம் காக்கும் மருத்துவரை நாம் எப்படித் தேர்ந்தெடுக்கிறோமோ, அப்படித்தான் முதலீட்டு ஆலோசகரையும் தேர்வு செய்ய வேண்டும். ‘நீங்க ஃபீஸ் ஏதும் கொடுக்க வேண்டாம்; மருந்து கம்பெனிகளிடம் கமிஷன் வாங்கிக்கறேன்’னு ஒரு டாக்டர் சொன்னால் அவரிடம் போவோமா? ஒரே மருந்தை நூறு கம்பெனிகள் தயாரிக்கின்றன, எந்த கம்பெனி அதிக கமிஷன் தருகிறதோ, அவர்கள் தயாரிக்கும் மாத்திரையைத்தானே அவர் நமக்குப் பரிந்துரை செய்வார்.கம்பெனி,அதையும் நம்மிடமிருந்துதானே வசூல் செய்யும்?
அதே லாஜிக்தான் முதலீட்டு ஆலோசகர் களுக்கும். அமெரிக்காவில் பிரபலமாக இருக்கும் ‘கட்டணம் மட்டும் வாங்கும் ஆலோசகர்கள் கான்செப்ட்’ இந்தியாவில் இன்னும் பிரபலமாகவில்லை. முதலீட்டுத் தொகையில் வாடிக்கையாளர் தரும் 0.5–1 % மட்டுமே இவர்களின் வருமானம். இவர்கள் பரிந்துரைக்கும் மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகளிடமிருந்து இவர்கள் கமிஷன் ஏதும் பெறக்கூடாது. இப்படியிருந்தால் அவர் பாரபட்சமின்றி நல்ல முதலீடுகளை நமக்கு எடுத்துச் சொல்வார்.
டாக்டர், வக்கீல், இன்ஜினீயருக்குக் கட்டணம் செலுத்தி, ஆலோசனை பெறுகிறமாதிரி, முதலீட்டு ஆலோசகர்களுக்கும் நாம் கட்டணம் கொடுத்தால்தான் நல்ல ஆலோசனைகளைப் பெற முடியும்.
‘லாபத்தில் பங்கு’ என்று ஒரு முறை இருக்கிறது. அதிலிருக்கும் ரிஸ்க், அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு, ரிஸ்க் அதிகமான முதலீடுகளை ஆலோசகர்கள் பரிந்துரைக்கும் வாய்ப்பு இருப்பதால், அதைத் தேர்வு செய்யாமல் இருப்பது நல்லது.
குறிப்பிட்டதொரு மியூச்சுவல் ஃபண்டை நிதி ஆலோசகர் பரிந்துரை செய்தால், என்ன காரணத்துக்காக அவர் அந்த ஃபண்டை நமக்குப் பரிந்துரை செய்கிறார் என்பதைக் கேளுங்கள். அந்த ஃபண்ட் டாப் 10 ஃபண்டுகளைவிட எந்த விதத்தில் சிறந்தது என்பதைக் கேளுங்கள். பதில் திருப்தியாக இருந்தால், அதில் முதலீடு செய்யுங்கள். சில டாக்டர்கள், ‘கேள்வியெல்லாம் கேட்காதீர்கள். நான் எழுதித் தருகிற மருந்தைச் சாப்பிடுங்கள்’ என்பார்கள். டாக்டர் விஷயத்தில் அது சரியாக இருக்கலாம். நிதி ஆலோசகர்கள் அப்படிச் சொன்னால், அவருக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு, மாறிவிடுவது நல்லது.
‘இதெல்லாம் ரொம்பக் கஷ்டம் பாஸ். எனக்கு சிம்பிளா 3-4 ஃபண்டைச் சொல்லுங்க, அதில் பணம் போடறேன்’னு சொல்றவரா நீங்க? உங்களுக்கென உருவானதுதான் ரோபோ இன்வெஸ்டிங் (Robo Investing) என்கிற கான்செப்ட். ரோபோ இன்வெஸ்டிங் தளங்களில் நீங்க அக்கவுன்ட் ஆரம்பித்தால், வயது, முதலீடு செய்ய இருக்கும் தொகை, காலம், உங்கள் ரிஸ்க் லெவல் என ஒரு சில அடிப்படைக் கேள்விகளைக் கேட்கும். பதில்களை வைத்து அதிலுள்ள அல்காரிதம் உங்களுக்கென ஒரு பிரத்யேகமான போர்ட்ஃபோலியோவைத் தரும். அது எவ்வளவு பிரத்யேகம் எனில், உலகிலுள்ள எல்லா மகர ராசிக்காரர்களுக்கும் ஒரே பலன் சொல்வது எவ்வளவு பிரத்யேகமோ, அந்த அளவுக்குத்தான் இருக்கும். அது சொல்லும் ஃப்ண்டுகளில் பணம் போட எழுதிக் கொடுத்தால் ஒவ்வொரு மாதமும் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்து அதுவே முதலீடு செய்துவிடும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை அதுவே ‘ரீபேலன்ஸிங்’ செய்துவிடும்.
இந்தியாவில் இந்த கான்செப்ட் இன்னும் சூடு பிடிக்கவில்லை. இந்தியாவில் சில நிறுவனங்கள் இந்த ரோபோ இன்வெஸ்ட்டிங் முறையில் நமக்கான போர்ட்ஃபோலியோவைத் தந்தாலும், அவர்கள் நம்மிடமிருந்து கட்டணத்தை வாங்கு வதற்குப் பதில், மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனி களிடமிருந்து கமிஷன் வாங்கிவிடுவார்கள். கம்பெனிகளிடமிருந்து கமிஷன் வாங்குகிறவர்கள் வாடிக்கையாளர்களுக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பினால், தப்பு அவர்கள் மீதல்ல, நம் மீதுதான்.
‘சரி, இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டாச்சு, எப்போதிருந்து நீங்கள் முதலீடு செய்யலாம்னு யோசிக்கிறீங்க?’ என்று கேட்டால், நாளைக்கு, அடுத்த மாசம், அடுத்த வருஷம் என்று இழுப்பார்கள். முதலீடு செய்ய ஆரம்பிக்க உகந்த நாள் ‘இன்று’ மட்டுமே. ‘நாளை’ என்று, முதலீடு செய்யும் நாளை தள்ளிவைத்தால், உங்களால் என்றைக்கும் முதலீட்டைத் தொடங்கவே முடியாது.
‘முதலீடு செய்ய இப்போது வழியில்லையே’ என்று சிலர் காரணம் சொல்வார்கள். உங்களுக்காக யாராவது முதலீடு செய்ய மாட்டார்கள். உங்களுக்கான முதலீட்டுப் பணத்தை நீங்கள்தான் உங்கள் வருமானத்திலிருந்து உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
தவிர, ஆயிரக்கணக்கில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கத் தேவையில்லை. சில நூறு ரூபாயில்கூட நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கலாம். முதலீடு செய்யத் தேவை, பணமல்ல. முதலீடு செய்ய வேண்டும் என்கிற மனம் மட்டுமே. இதைப் புரிந்துகொண்டால், இப்போதே முதலீட்டைத் தொடங்கிவிடுவீர்கள்!