நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 16 - வீட்டுக் கடன் சலுகையைப் பயன்படுத்தலாமா?

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 16 - வீட்டுக் கடன் சலுகையைப் பயன்படுத்தலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
நிம்மதி தரும் நிதித் திட்டம் - 16 - வீட்டுக் கடன் சலுகையைப் பயன்படுத்தலாமா?

ஓவியம்: பாரதிராஜா

ம்மில் பலருக்கும் ரியல் எஸ்டேட்மீது தீராத மோகமுண்டு. சொந்தமாக ஒரு வீடு வாங்கிய பின்பும், இரண்டாவது வீட்டுக்கு ஆசைப் படுவார்கள். திருநெல்வேலியில் சொந்த வீட்டில் வசிக்கும் அப்துல் ஹக்கீமும் இன்னொரு வீடு வாங்குவதைப் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். தனக்குக் குடும்ப நிதித் திட்டமிடல் கேட்டு, அவர் சமீபத்தில் நம்முடன் தொடர்புகொண்டார். 

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 16 - வீட்டுக் கடன் சலுகையைப் பயன்படுத்தலாமா?

“என் வயது 31. நெல்லையில் பொதுத்துறை வங்கியொன்றில் மேலாளராகப் பணியாற்று கிறேன். எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. முதல் குழந்தைக்கு மூன்று வயது; இரண்டாவது குழந்தைக்கு மூன்று மாதம் ஆகிறது.

பிடித்தங்கள் போக எனக்கு மாதச் சம்பளம் ரூ.44 ஆயிரம். தற்போது எண்டோவ்மென்ட் பாலிசி ஒன்றில் முதலீடு செய்துவருகிறேன். 18 ஆண்டுகளுக்கான பாலிசி அது. தற்போது மூன்று ஆண்டுகள்தான் முடிந்துள்ளன. காலாண்டு பிரீமியமாக ரூ.17 ஆயிரம் செலுத்தி வருகிறேன். இந்த பாலிசி  முதிர்வு பெறும்போது ரூ.19,76,000 கிடைக்கும் என்கிறார்கள். இதைத் தொடரலாமா அல்லது குளோஸ் செய்துவிட்டு வேறு முதலீட்டைத் தொடங்கலாமா என்று சொல்லவும்.

ஆர்.டி-யில் மாதம் ரூ.4,000 செலுத்திவருகிறேன். என்.பி.எஸ் கணக்கில் மாதம் ரூ.8,000 (நிறுவனம் ரூ.4,000 + என் பங்கு ரூ.4,000) செலுத்தப்படுகிறது. தற்போது வரை ரூ.5 லட்சம் உள்ளது.

என் அப்பாவுக்குச் சொந்தமாக மூன்று வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் நான் வசிக்கிறேன். ஆனாலும், நான் சொந்தமாக இன்னொரு வீடு வாங்க நினைக்கிறேன். வங்கியில் வேலை பார்ப்ப தால், வீட்டுக் கடன் ரூ.50 லட்சம் கிடைக்கும்.

என் இரு மகன்களுக்கும் மேற்படிப்புக்கு தலா ரூ.10 லட்சம் தேவைப்படும். பிறகு, எனக்கும் என் மனைவிக்கும் ஓய்வுக்காலத்தில் எவ்வளவு பணம் தேவைப்படும் எனச் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும். என் மகன்களுக்கு ஆடம்பரமாகத் திருமணம் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. எனினும், இரு மகன்களுக்கும் சேர்த்து ரூ.15 லட்சம் தேவை. (இங்கு குறிப்பிட்டுள்ள தொகைகள் இன்றைய மதிப்பில்)

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 16 - வீட்டுக் கடன் சலுகையைப் பயன்படுத்தலாமா?



அனைத்துக் குடும்பச் செலவுகளுக்கும் ரூ.14,000 ஆகிறது. இரண்டு லட்சம் ரூபாய்க்கு நகைக் கடன் உள்ளது. அதற்கு மாதம் ரூ.10,000 செலுத்தி வருகிறேன். இன்னும் ஏழு மாதங்களில் இது முடிந்துவிடும். அதன்பிறகு இன்னும் கூடுதலாக என்னால் எதிர்காலத்துக்கு முதலீடு செய்ய முடியும்.

எனக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டுமா என்று சொல்லுங்கள். எனக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இதுவரை நம்பிக்கை வரவில்லை. அதில் நான் முதலீடு செய்யலாமா எனத் தெளிவுபடுத்தவும்” என்ற அப்துல் ஹக்கீம், தன் வரவு செலவு விவரங்களை மெயில் அனுப்பி வைத்தார்.

வரவு செலவு விவரங்கள்: குடும்ப வருமானம்: ரூ.44,000. இன்ஷூரன்ஸ் பிரீமியம் மாதம் : ரூ.5,700; ஆர்.டி: ரூ.4,000; குடும்பச் செலவுகள்: ரூ.14,000; நகைக் கடன்: ரூ.10,000  (7 மாதங்களில் முடிவடையும்)ஆக மொத்தம்: 33,700;  மீதம்: ரூ.10,300.  

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 16 - வீட்டுக் கடன் சலுகையைப் பயன்படுத்தலாமா?

இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“சொந்தமாக வீடு இருப்பவர்களுக்கும், வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கும்  புதிதாக வீடு வாங்க வேண்டும் என்ற சிந்தனை இயல்பாகவே வந்துவிடுகிறது. உங்களுக்கு  ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருக்கும் நிலையில், இன்னொரு வீடு வாங்குவது தேவையில்லாத சுமையே. குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது என்பதற்காக மட்டுமே வீடு வாங்க நினைப்பது தவறு. இதனால் உங்களின் மற்ற இலக்குகளுக்கு முதலீடு செய்வதில் சிரமமான சூழ்நிலை ஏற்படக்கூடும்.

நீங்கள் கேட்ட அனைத்து இலக்குகளுக்கும் முதலீட்டைத் தொடங்க வேண்டுமானால், உங்களுக்கு மாதம் ரூ.19 ஆயிரம் தேவைப்படும். ஆனால், தற்போது ரூ.10,300 மட்டுமே உங்களால் முதலீடு செய்ய முடியுமென்பதால், மூத்த மகனின் மேற்படிப்புக்கும், உங்களின் ஓய்வுக்காலத்துக்கும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி இப்போது முதலீட்டைத் தொடங்குங்கள். இரண்டு மகன்களின் திருமணத்துக்கும், இளைய மகனின் மேற்படிப்புக்கும் நகைக் கடனை முடித்த பின் அடுத்த ஆண்டிலிருந்து முதலீட்டைத் தொடங்கலாம்.

நீங்கள் ஏற்கெனவே தொடங்கியுள்ள இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தொடரலாம். அதன் மூலம் கிடைக்கும் முதிர்வுத்தொகை ரூ.19 லட்சத்தை மறுமுதலீடு செய்யலாம். உங்களின் ஓய்வுக்காலத்தில் அவ்வப்போது சுற்றுலா சென்றுவர இதிலிருந்து கிடைக்கும் வட்டியைப் பயன்படுத்திக்கொள்ளவும்.     

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 16 - வீட்டுக் கடன் சலுகையைப் பயன்படுத்தலாமா?

தற்போது ஆர்.டி-யில் முதலீடு செய்துவரும் ரூ.4,000 ரூபாயை ரூ.2 லட்சம் கிடைக்கும் வரை தொடரவும். பிறகு அந்த ரூ.2 லட்சத்தை அவசர கால நிதியாக வைத்துக்கொள்ளவும். அதற்குப் பிறகு, 2,000 ரூபாயை ஆர்.டி-யில்  முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையை ஓய்வுக் காலத்துக்கான மருத்துவ அவசர கால நிதியாக வைத்துக்கொள்ளவும். இன்னொரு 2,000 ரூபாயை ஆர்.டி-யில் தொடர்ந்து  முதலீடு செய்து, இதனை அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் கழித்து பெரிய அளவில் சுற்றுலா செல்லப் பயன்படுத்திக் கொள்ளவும்.

இப்போது மாதம் ரூ.15 ஆயிரம் செலவு, 7% பணவீக்கம் என்ற அடிப்படையில் கணக்கிட்டால், உங்களுக்கு ஓய்வுக்காலத்தில் கார்ப்பஸ் தொகையாக ரூ.2.6 கோடி தேவையாக இருக்கும். என்.பி.எஸ் மூலம் உங்களுக்கு ஓய்வுக்காலத்தில் ரூ.2.12 கோடி கிடைக்கும். மீதம் ரூ.51 லட்சம் சேர்க்க மாதம் ரூ.2,500 முதலீடு செய்ய வேண்டும்.

உங்களுக்கு ரூ.40 -50 லட்சம் அளவுக்கு டேர்ம் இன்ஷூரஸை உடனடியாக எடுத்துக்கொள்ளவும். நகைக் கடன் முடிந்ததும் மூன்று லட்சம் ரூபாய்க்கு மெடிக்கல் பாலிசி எடுத்துக்கொள்ளவும்.
நீண்ட காலத்தில், பங்குச் சந்தையின் சந்தை ஏற்ற இறக்கத்தைக் கடந்து, பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரக்கூடிய முதலீடு என்றால் மியூச்சுவல் ஃபண்ட்தான். எனவேதான், இதில் பலரும் முதலீடு செய்து வருகிறார்கள். இதனை நீங்கள் புரிந்துகொண்டால், அந்த முதலீட்டின் மீது உங்களுக்கும் நம்பிக்கை ஏற்படும்.

பரிந்துரை: கோட்டக் மீடியம் டேர்ம் பிளான் - ரூ.2,000, ஹெச்.டி.எஃப்.சி கார்ப்பரேட் டெப்ட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் - ரூ.2,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. ஃபோகஸ்டு புளூசிப் ரூ.2,300, மோதிலால் ஆஸ்வால் மோஸ்ட் ஃபோகஸ்டு மல்ட்டி கேப் 35 ஃபண்ட் ரூ.2,000, டி.எஸ்.பி. பி.ஆர் ஸ்மால் அண்ட் மிட் கேப்-ரூ.2,000.”

குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878


- கா.முத்துசூரியா 

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 16 - வீட்டுக் கடன் சலுகையைப் பயன்படுத்தலாமா?