
பா.பத்மநாபன், நிதி ஆலோசகர், fortuneplanners.com
முதலீட்டாளர்களுக்கு இன்று பலவிதமான சவால்கள் காத்திருக்கின்றன. எதில் முதலீடு செய்வது, முதலீடு செய்ய யாரை அணுகுவது, முதலீட்டின் மூலம் எத்தனை சதவிகிதம் வருமானம் கிடைக்கும், ரிஸ்க் என்ன என்பது போன்றவற்றை அந்தச் சவால்களாகக் குறிப்பிடலாம். இவற்றைப் பள்ளிக்கூடத்திலோ அல்லது கல்லூரியிலோ இதுவரை நமக்கு யாரும் சொல்லித் தந்ததில்லை.

மேலும், நம் முன்னோர்களுக்கும் இதைப்பற்றிய விவரங்கள் பெரிதாகத் தெரிவதில்லை. அதற்கான அவசியமும் அவர்களுக்கு ஏற்படவில்லை. பாதுகாப்பான முதலீட்டில் கிடைத்த வட்டி அதிகம் என்பதுடன், பணவீக்கமும் குறைவாக இருந்தது என்பதால், பெரிய அளவில் ரிஸ்க் எதுவுமில்லாமல், அவர்கள் தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து முடிந்துவிட்டார்கள்.
இன்று எல்லாமே தலைகீழாக இருக்கும்நிலையில், முதலீட்டாளர்கள் செய்யும் தவறுகள் அதிகமாகவே இருக்கின்றன. இப்படிச் செய்யும் தவறுகளால் நம்முடைய லாபம் பெருமளவு குறைகிறது. நமது நஷ்டத்தைக் குறைத்து, லாபத்தை அதிகரிக்க, முதலீடுகளில் நாம் செய்யும் தவறுகளைத் திருத்திக்கொள்வது அவசியம்.
முதலீட்டுப் பிரிவு வாரியாக முதலீட்டாளர்கள் செய்யும் தவறுகளை இனி விளக்கமாகப் பார்ப்போம்.
ஃபிக்ஸட் டெபாசிட்
இந்த வகையான முதலீடுகளில் பணத்துக்கும், அதற்குக் கொடுப்பதாகச் சொல்லப்படும் வட்டிக்கும் உத்தரவாதம் இருக்கிறது. ஆனால், பணவீக்க உயர்வால் ஏற்படும் இழப்புக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

பலரும் இதை மிகப் பாதுகாப்பான சேமிப்பு மற்றும் முதலீடாகக் கருதி, நீண்ட கால முதலீட்டுக்குப் பயன்படுத்துகிறார்கள். அதிகபட்சமாக 1.5 வருடத்துக்குள் தேவைப்படுகிற பணத்தை இதில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு தனி மனித வருமான வரம்புபடி வரி வசூலிக்கப்படும். பலருக்கும் இது தெரிவதில்லை. மேலும், சில வருடங்கள் கழித்து மீண்டும் முதலீடு செய்தால், முன்பு கொடுத்த வட்டி கிடைக்காமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
குறைந்த காலத்தில் ரிஸ்க் இல்லாத முதலீடாகக் கருதப்பட்டாலும், நீண்ட கால முதலீட்டுக்கு இதைவிட ஒரு ரிஸ்க்கான முதலீடு கிடையாது.

தங்கம்
இது ஒரு கமாடிட்டி. பெரும்பாலானோர் இதைத் தேவைக்கானதாகவும் (அணிந்து அழகு பார்க்க), சிலர் இதையொரு முதலீடாகவும் கருதுகிறார்கள். இதன் விலை ஓரளவுக்கு இந்தியாவில் உயர்ந்ததற்குக் காரணம், கறுப்புப் பணம் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டிருப்பதுதான். இனிவரும் காலத்தில் கறுப்புப் பணத்தால் தங்கம் வாங்க முடியாது. மேலும், நம்முடைய ரூபாயின் மதிப்பு அமெரிக்கா டாலரைவிட குறைந்து வருவதால்தான் தங்கத்தின் மதிப்பு அதிகரித்தது. தங்கம், கடந்த பல வருடங்களில் பெரிய வருமானம் எதுவும் தரவில்லை. (பார்க்க, தங்கம் விலை அட்டவணை)
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், தங்கம் 20 வருடங்களில் 70% விலை குறைந்து, மீண்டும் அதே நிலையை எட்ட 28 வருடங்கள் ஆகியுள்ளது. தங்கமானது 1980-ம் ஆண்டு விற்ற விலையும், 2008-ம் ஆண்டு விற்ற விலையும் ஒன்றே. அதே சமயம், நம்முடைய ரூபாய் மதிப்பு 600% சரிந்ததால், நமக்குத் தங்கம் மிக அதிகமாக விலை உயர்ந்துள்ளது.
ஆனால், இன்னும் ஐந்து வருடங்களில் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலரைவிட உயர்வதற்கான வாய்ப்புகள் எவ்வளவு? ஒரு அமெரிக்க டாலர் 70 ரூபாய் என அதிகபட்சமாக கணக்கில்கொண்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் 10% மட்டுமே வளர்ச்சி கிடைக்கும். ஒருவேளை, தங்கம் விலை ஏறாமலோ அல்லது தற்போதைய நிலையில் இருந்தாலோ, இதில் கிடைக்கக்கூடிய வருமானம் மிகச் சொற்பமே.
மேலும், எப்போது வேண்டுமானாலும் தங்கத்தை விற்றுக் காசாக்கிக்கொள்ள முடியும் என்றாலும், நிஜ வாழ்வில் எந்தப் பெண்ணுமே தங்கத்தை விற்க சம்மதிப்பதேயில்லை.

அப்படியே விற்றாலும், ஒவ்வொருமுறையும் தங்க நகையை விற்று வாங்கும்போது செய்கூலி, சேதாரம் என்கிற வகையில் ஒரு பெரும் தொகையை இழக்க வேண்டியிருக்கும். ஒரு பவுன் (எட்டு கிராம்) தங்கநகையை நாம் வாங்கும்போது, அதற்கு சுமாராக ஒரு கிராம் தங்கம் செய்கூலி, சேதாரம் என்று வைத்துக்கொண்டால், நமக்குக் கிடைப்பது ஏழு கிராம் மதிப்பிலான தங்கம் மட்டுமே. சில ஆண்டுகளுக்குப்பின் அதனை மீண்டும் விற்றால், செய்கூலி, சேதாரமாக சுமாராக ஒரு கிராம் தங்கம் கழிக்கப்பட்டு, ஆறு கிராமாக அதன் மதிப்புக் குறையும். இப்படி மதிப்பு குறைவது நம் கண்ணுக்குத் தெரியாமலே நடப்பதால், நாம் அது பற்றி பெரிதாகக் கவலைப்படுவதில்லை.
ரியல் எஸ்டேட்
கடந்த பத்தாண்டுகளில் இதன் விலை தாறுமாறாக ஏறியதற்கு சில முக்கியக் காரணம், கறுப்புப் பணம்தான். இதன்மீது அசைக்க முடியாத நம்பிக்கை நம்மவர்களுக்கு எப்போதுமே உண்டு. தவிர, உணர்வுபூர்வமான ஒரு விஷயமாகவும் இதை நம்மவர்கள் பார்க்கிறார்கள்.
இன்றைக்குப் பலரும் வேலைக்குச் சேர்ந்தவுடன் கடனில் ஒரு வீட்டை வாங்கிவிடுவார்கள். இதனால் குறைந்த அளவு தொகையையே அவரால் வீட்டுக்குக் கொண்டு செல்ல முடியும். தவிர, இளம்வயதில் வருமானமும், கையிலுள்ள முதலீடும் குறைவாகவே இருக்குமென்பதால், சிறிய வீட்டை மட்டுமே வாங்க முடியும்.

வீடு என்பது நீண்ட கால வசிப்பிடம். மேலும், வருங்காலத்தில் நம் தேவை என்னவாக இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அந்த நிலையில், அசையாத சொத்தில் முதலீடு செய்வது நல்ல தீர்வாக இருக்காது.
உதாரணமாக, ஒருவர் மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிப்பதாக எடுத்துக்கொண்டால், அவருக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, ரூ.25 லட்சத்துக்கு வீட்டுக் கடன் வாங்கி, மாதம் ரூ.25 ஆயிரம் தவணை கட்டி, ஊருக்கு ஒதுக்குப்புறமாக வீட்டை வாங்கி, கஷ்டப்பட்டு அதைத் திரும்பக் கட்டுவது. இரண்டாவது, அதே தவணைப் பணத்தில் 60 சதவிகித வாடகை கொடுத்து, நகர்ப்புறத்தில் வசித்துக் கொண்டு மீதமிருக்கும் 40 சதவிகிதத்தைச் சேமிப்பது.
இன்றைய நிலையில், வேலை என்பது யாருக்கும் நிரந்தரம் கிடையாது. நாளை எந்த நிறுவனத்தில், என்ன சம்பளத்தில் வேலையில் இருப்போம் என யாருக்கும் தெரியாது. வீட்டுக் கடன் மூலம் வாங்கிய ஒரு வீட்டின் மதிப்பு உயரவில்லையெனில் (கடந்த ஐந்து வருடங்களில் நடந்ததுபோல), அந்த முதலீட்டினால் நமக்குப் பெரிய பிரயோஜனம் எதுவும் இருக்காது.
வீட்டின் பயன், ஒன்று நாம் வசிக்க வேண்டும் அல்லது வாடகைக்கு விடுவதன் மூலம் நல்லதொரு வருமானம் கிடைக்க வேண்டும். ஆனால், தற்சமயம் வாடகை மூலம் சொற்ப வருமானமே கிடைக்கிறது. இப்படிக் கிடைக்கும் வாடகை வருமானத்துக்கும் தனிமனித வருமான வரம்புக்கேற்ப வரி கட்டவேண்டும்.

ஒரு புதிய அப்பார்ட்மென்ட்டில் சதுர அடி விலை ரூ.10,000 என எடுத்துக்கொண்டால், ஆயிரம் சதுர அடி வாங்கினால் 1 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இன்னும் ஐந்து வருடங்களில் ஒரு சதுர அடி விலை 15,000 ரூபாயாக உயர்வதாக எடுத்துக்கொண்டால், பலரும் தனக்கு 50% லாபம் என்று நினைக்கிறார்கள். உண்மையில் அது வெறும் 25 சதவிகிதமே. மேலும், அதை விற்கும்போது அதற்கு வருமான வரி கட்ட வேண்டும் என்பதைப் பலரும் உணர்வதில்லை.
பங்குச் சந்தை நேரடி முதலீடு
பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் பல தவறுகளைச் செய்கிறார்கள். முதலில், சந்தை பற்றி சரியாகப் புரிந்துகொள்ளாமலேயே அதில் முதலீடு செய்கிறார்கள். பங்குச் சந்தை என்பது என்ன, அது எப்படிச் செயல்படுகிறது, அதில் எத்தனை துறை சார்ந்த பங்குகள் இருக்கின்றன, எந்தப் பங்கில் நாம் முதலீடு செய்ய பரிசீலனை செய்யலாம் எனப் பலவித கேள்விகளுக்கான பதிலை நாம் சரியாகப் புரிந்து கொண்டால் மட்டுமே பங்குச் சந்தைக்குள் முதலீடு செய்யத் துணிய வேண்டும். அவர் சொல்கிறார், இவர் சொல்கிறார் என எந்தப் பங்கிலும் முதலீடு செய்யாமல், யார் எந்தப் பங்கைப் பரிந்துரைத்தாலும், அதை நாமாக ஆராய்ந்து பார்த்தே அதில் முதலீடு செய்ய வேண்டும்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறவர்கள், குறுகிய காலத்தில் அபரிமிதமான லாபத்தை எதிர்பார்க்கிறார்கள். பங்குச் சந்தை முதலீட்டில் குறைந்த காலத்திலேயே சில சமயம் நல்ல லாபம் கிடைக்கலாம். ஆனால், எப்போதும் கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. நல்லதொரு பங்கில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்து வைத்திருக்கும்பட்சத்தில் பணவீக்கத்தைவிடக் கூடுதலான வருமானம் கிடைக்கும். ஆனால், பங்கு முதலீட்டை நீண்ட காலத்துக்கு வைத்திருக்கும் பொறுமை நம்மில் பலருக்கும் இருப்பதில்லை.
ஒரே ஒரு பங்கை வாங்கி, அதன் மூலம் நல்ல லாபம் பார்க்க வேண்டும் என்று நினைப்பதைவிட, பல்வேறு நல்ல பங்கு களை வாங்கி ஒரு போர்ட்ஃபோலியோவாக வைத்திருக்கும்பட்சத்தில், நீண்ட காலத்தில் முதலீடு செய்தால், சில பங்குகளின் விலை உயர்ந்து, சில பங்குகளின் விலை குறைந்து, சராசரியாக நல்லதொரு லாபம் கிடைக்க வாய்ப்புண்டு.

ஏற்கெனவே வாங்கிய பங்கின் விலை உயரும்பட்சத்தில், அதில் இன்னும் அதிகமாக முதலீடு செய்து எதிர்காலத்தில் நல்ல லாபம் பார்க்கும் வாய்ப்பைத் தவறவிடுகிறார்கள். ஆனால், மோசமான பங்கில் முதலீடு செய்துவிட்டு, அதன் விலை குறையும்போது மீண்டும் மீண்டும் வாங்கி நஷ்டத்தை அதிகமாக்கிக் கொள் கிறார்கள். இந்தத் தவற்றை நாம் செய்யவே கூடாது.
மியூச்சுவல் ஃபண்ட்
பங்குச் சந்தை பற்றி தெரியாதவர்கள் அதில் நேரடியாக இறங்கி, தவறான பங்குகளை வாங்கி, கையைச் சுட்டுக் கொள்வதைவிட, பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்வது நல்லது.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ரிஸ்க் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. என்றாலும், இந்த ரிஸ்க்கைப் புரிந்துகொண்டு இதில் முதலீடு செய்வதன் மூலம், நீண்ட காலத்தில் நல்லதொரு லாபத்தைப் பார்க்க முடியும்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது எல்லோருக்கும் உகந்தது. 500 ரூபாய் தொடங்கி, பல லட்சம் ரூபாய் வரை இதில் முதலீடு செய்ய முடியும். குறைந்த அளவு வருமானம் கொண்டவர்கள் இதில் முதலீடுசெய்து, எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். நிறைய ரிஸ்க் எடுக்க நினைப்பவர்களுக்கு பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், மிதமான ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்களுக்கு பேலன்ஸ்டு ஃபண்ட் திட்டம், குறைவான ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்களுக்குக் கடன் சார்ந்த ஃபண்டுகள் எனப் பிரித்து முதலீடு செய்ய முடியும். நம் தேவை என்ன என்பதையறிந்து, அதற்கேற்ப முதலீடு செய்யும் வசதி இதிலுள்ளது.

வரிச் சலுகை வேண்டுமென்கிறவர்கள் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்ய முடியும். வரிச் சலுகைக்கான திட்டங்களில் மிகக் குறைந்த ‘லாகின்’ காலம் (மூன்று ஆண்டுகள்) கொண்டது இதுதான். தவிர, திட்டங்களில், லாபத்துக்கு ஒரு வருடத்துக்குப்பின் எந்தவொரு வரியும் கட்டத் தேவையில்லை.
பலரும் இந்த முதலீட்டில் நிலைத்து நிற்காமல் இருப்பதற்கான காரணம், அவர்கள் இதை ஓர் இலக்குடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பது. மேலும், மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்வது எளிது என்பதால், உடனடித் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இந்த முதலீட்டினைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். குழந்தையின் திருமணம் அல்லது ஓய்வுக்காலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் முதலீடாக இருக்கும்பட்சத்தில், அதற்காக தவிர அதனை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது.
பங்குச் சந்தையாக இருந்தாலும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடாக இருந்தாலும் சரி, கடன் வாங்கி முதலீடு செய்யக்கூடாது. உடனடியாகத் தேவைப்படாத பணத்தை மட்டுமே நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும்.
எல்லா முதலீடுகளிலும் ரிஸ்க் உள்ளவையும், ரிஸ்க் இல்லாதவையும் இருக்கின்றன. நாம் எடுக்கக்கூடிய ரிஸ்க் எவ்வளவு என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். எந்த முதலீடாக இருந்தாலும், பணவீக்கத்தைத் தாண்டி நீண்ட காலத்தில் வருமானம் தராத எந்த முதலீடும் சிறந்த முதலீடாகாது என்பதைப் புரிந்துகொண்டு, சரியான முதலீடுகளைத் தேர்வுசெய்வது அவசியம்.