
கடனை விரைந்து முடிக்க சுலபவழி!
வீட்டுக் கடன், கார் கடன் போன்ற பெரிய கடன்களை, கடனுக்கான காலம் முடிகிற வரை கட்ட வேண்டும் என்கிற கட்டாயமில்லை. இந்தக் கடன்களை எவ்வளவு வேகமாகத் திரும்பக் கட்டுகிறோமோ, அவ்வளவுக்கு நமக்கு லாபம் கிடைக்கும்.

ஒருவர், 20 ஆண்டுகளுக்குக் கடனைத் திரும்பக் கட்டுகிற மாதிரி வீட்டுக் கடன் வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். இவர், தன் சம்பள உயர்வுக்கேற்ப ஆண்டுக்கு 5% அல்லது 10% மாதத் தவணைத் தொகையை அதிகரித்துக் கட்டினால், கடன் காலம் முடியும் முன்பே கடன் தொகையைக் கட்டி முடித்துவிடலாம். உதாரணமாக, 20 ஆண்டு கடனுக்கான மாதத் தவணையை ஆண்டுதோறும் 5% அதிகரித்துக் கட்டினால், அந்தக் கடன் 12 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிடும். புதிய முதலீட்டுக்கு நீங்கள் திட்டமிட இது உதவும்.
அதேசமயம், வீட்டுக் கடனுக்கான வட்டி ஒற்றை இலக்கத்தில் (சுமார் 8.35 - 9%) இருக்கும் பட்சத்தில், கூடுதலாகக் கட்டும் கடன் தொகையை, வேறு முதலீடுகளில் (உதாரணமாக, பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்) முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் சராசரியாக ஆண்டுக்கு 12-15% வருமானம் கிடைக்கலாம். முடியுமானால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.
எனினும், வீட்டுக் கடனுக்குத் திரும்பக் கட்டும் அசல் மற்றும் வட்டிக்கு வரிச்சலுகை உண்டு. வரிச் சலுகை அவசியம் வேண்டுமென்கிறவர்கள், மாதத் தவணையை அப்படியே கட்டி வரலாம். இதன் மூலம் வரிச் சலுகைக்கான பலனை கடன் காலம் முடிகிற வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். வரிச் சலுகை வேண்டாம் என்கிறவர்கள், முன்கூட்டியே கடனை அடைப்பதே நல்லது!
- சேனா சரவணன்