
தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in
மென்தா ஆயில்
மென்தா ஆயில் பற்றி சென்ற வாரம் நாம் சொன்னது... “1160 என்ற எல்லையைக் காளைகள் இதுவரை பாதுகாத்து வருகின்றன. ஒருவேளை இந்த எல்லை உடைக்கப்பட்டால், நாம் ஏற்கெனவே கொடுத்துள்ள 1094 என்ற எல்லையை நோக்கி நகரலாம். மேலே 1190 என்பது உடனடித் தடைநிலையாக இருக்கிறது. இதை உடைத்து மேலே ஏறினால், 1228 என்ற மிகப் பெரிய தடைநிலை உள்ளது.”

ஒரு டிரேடராக நாம் வெற்றிகரமாகச் செயல்பட வேண்டுமெனில், நமக்கு ‘பிக் பிக்சர்’ பற்றித் தெரிய வேண்டும். சென்ற வாரம் அதை விளக்கமாகச் சொல்லியிருந்தோம். அதன் விளைவாக, மென்தா ஆயில் மேல்நோக்கி செல்லாமல் வலிமையாகத் தடுக்கப்படுவதைப் பார்த்தோம்.
பொதுவாக, டிரேடர்கள் வியாபாரம் செய்யும் போது, ஒரு கமாடிட்டி, குறிப்பிட்ட எல்லையைத் தாண்டமுடியாமல் தடுக்கப்படுகிற இடத்திலிருந்து கீழே திரும்பும்போது விற்று வாங்கலாம் என்பது விதிமுறை. அப்படி விற்று வாங்கி வியாபாரம் செய்தால், ஸ்டாப்லாஸை அந்த ரெசிஸ்டன்ட் எல்லைக்கு மேலே போட வேண்டும்.
அப்படிப் பார்த்தால், நாம் மென்தா ஆயிலை 1190-க்கு அருகில் விற்று வாங்கி, அதற்கு மேல் 1195-1200 என்கிற எல்லையைத் தாண்டி ஸ்டாப் லாஸைப் போட்டு வியாபாரம் செய்ய வேண்டும். அப்படிச் செய்திருந்தால், சென்ற வாரம் என்ன நடந்திருக்கும்?
சென்ற வாரம் திங்கள் முதல் 1190 என்கிற எல்லையைத் தாண்டவில்லை. 1180 என்ற எல்லை வரை சென்று, கீழே திரும்பிக்கொண்டிருந்தது. எனவே, டிரேடர்கள் சில சமயங்களில் விற்று வாங்கும் முறையைப் பின்பற்றினால்தான் லாபம் காண முடியும்.

இனி டிரேட் செய்வதற்கு நாம் அக்டோபர் மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்ளலாம். அக்டோபர் மாத கான்ட்ராக்டிலும் தற்போது 1190 என்பது பலமான தடைநிலையாக உள்ளது. இதன் கீழ் செல்லாத வரை மென்தாயிலை விற்று வாங்கலாம். ஆனால், 1190 என்ற எல்லை உடைக்கப்பட்டு ஏற ஆரம்பித்தால், ஒரு தலைகீழ் ஹெட் அண்ட் ஷோல்டர் உருவமைப்பு ஏற்பட்டு, ஒரு தற்காலிக ஏற்றம் வரலாம். தற்போது ஆதரவாக உள்ள எல்லை 1155 ஆகும். இதை உடைத்து இறங்கினால், வலிமையான இறக்கங்கள் வரலாம். முக்கிய எல்லைகள் 1140, 1105 ஆகும்.

காட்டன்
காட்டன் தொடர்ந்து கேப் அப் மற்றும் கேப் டவுனில் நடந்து வருகிறது. சென்ற வாரம் சொன்னது என்ன என்று பார்ப்போம். “இந்த நிலையில் 18240 என்பது தற்போதைய முக்கிய ஆதரவாக உள்ளது. இந்த எல்லை உடைக்கப்பட்டால், 18040 வரை இறங்கலாம். இது ஒரு நீண்ட கால ஆதரவு எல்லை ஆகும். இந்த எல்லை உடைக்கப்பட்டால், பெரும் வீழ்ச்சி வரலாம். மேலே 18540 என்பது உடனடித் தடைநிலை ஆகும். அதற்கு மேலே 18700 என்பது வலிமையான தடைநிலையாகும். இதைத் தாண்டினால் பெரும் ஏற்றம் வரலாம்.”
சென்ற வாரம் ஆதரவு நிலையான 18240 என்ற எல்லை இன்னும் வலிமையான ஆதரவாக உள்ளது. கடந்த திங்களன்று வந்த இறக்கம், 18240 என்ற எல்லை வரை இறங்கிச் சரியாக 18240 என்ற எல்லையை ஆதரவு எடுத்தது. பின்பு மேலே ஏறி, முன்பு கொடுத்த தடைநிலையான 18540-யைத் தொட்டது. தொட்டது மட்டுமல்லாமல், அடுத்தடுத்து நடந்த ஏற்றத்தில் 18640 என்ற உச்சத்தைத் தொட்டது. ஆனாலும், ஏற்கெனவே, நாம் கொடுத்துள்ள தடைநிலையான 18700-யைத் தாண்டவில்லை.
இனி 18700 என்ற எல்லையைத் தாண்டி ஏறினால், அது ஒரு டபுள் பாட்டம் உருவமைப்பைத் தோற்று வித்து, பெரிய ஏற்றத்துக்கு வழி வகுக்கும். இந்த டபுள் பாட்டத்தை அளவீடாகக் கொண்டு பார்த்தால், 18240 என்ற கீழ் எல்லைக்கும், 18700 என்ற மேல் எல்லைக்கும் உள்ள இடைவெளி 460 புள்ளிகளாகும். ஆக, மேல் எல்லையான 18700 உடைக்கப் பட்டால், அது படிப்படியாக 18850, 19050 மற்றும் 19160 வரை ஏறலாம். கீழே 18240 என்பது இன்னும் ஒரு வலிமையான ஆதரவாகும்.