
BIZ பாக்ஸ்

பிரதமர் அமைத்த பொருளாதார ஆலோசனைக் குழு
தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியனின் பதவிக் காலம் அடுத்த மாதம் 16-ம் தேதியுடன் முடிகிற நிலையில், ஓராண்டு காலத்துக்கு அவருக்குப் பதவி நீட்டிப்புக் கிடைத்துள்ளது. பொருளாதார விஷயங்களில் பிரதமருக்கு ஆலோசனை கூறும் குழுவுக்குத் தலைவராக இருந்தார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் சி.ரங்கராஜன். மோடி தலைமையில் பா.ஜ.க அரசாங்கம் அமைந்த பின்பு, கடந்த 2014-ல் அவர் இந்தப் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்பு, இந்தக் குழு செயல்படாமலே இருந்தது. இந்த நிலையில் பொருளாதார நிபுணர் பிபேக் தேராயின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அதை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார் பிரதமர் மோடி.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ - 2018
ஆட்டோமொபைல் துறையினர் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ, அடுத்த ஆண்டில் கிரேட்டர் நொய்டாவிலுள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட் வளாகத்தில், பிப்ரவரி 9-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்களுக்கான கண்காட்சி, பிரகதி மைதானத்தில் பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கி, 11-ம் தேதி வரை நடைபெறும். இரு கண்காட்சிகளுக்குமான தொடக்க விழா, பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறும். இந்த ஆண்டு, ஒரு நாள் கூடுதலாக கண்காட்சி நடத்தப்படுகிறது. ஆட்டோமொபைல் கண்காட்சி, உதிரிப்பாகங்கள் கண்காட்சி ஆகிய இரண்டையும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு, இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ), இந்திய ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்பு (ஆக்மா) ஆகியன இணைந்து நடத்துகின்றன.

மனைவிக்காக, வேலையைவிடத் துணிந்தேன்!
மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ சத்ய நாதெள்ளா எழுதிய ‘ஹிட் ரெப்ஃரஷ்’ என்னும் புத்தகம், சமீபத்தில் அமெரிக்காவில் வெளியானது. அதில், ‘`கடந்த 1993-ம் ஆண்டில் அனுவைத் திருமணம் செய்தபிறகு, அவரை அமெரிக்காவுக்கு அழைத்துவர தீர்மானித்தேன். ஆனால், அமெரிக்கச் சட்டத்தில் கிரீன் கார்டு உள்ளவர்கள், வெளிநாட்டினரை அழைத்து வந்து வசிக்க அனுமதியில்லை. பிறகு தீர விசாரித்தபோது, தற்காலிகப் பணிக்கான ‘ஹெச் 1–பி’ விசாவில் இருப்பவர், தன் மனைவியை அழைத்து வரலாம் என்று தெரிந்தது. உடனே, கிரீன் கார்டை ஒப்படைத்துவிட்டு, ‘ஹெச் 1–பி’ விசாவில் என் மனைவியை அழைத்து வந்தேன்” எனத் தன் சொந்த வாழ்க்கையைப் பற்றி சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார் சத்யா.

ஹெச்.டி.சி-யை வாங்கியது கூகுள்.
கூகுள் நிறுவனம், ஏற்கெனவே மோட்டரோலா நிறுவனத்தை 2012-ம் ஆண்டு கையகப்படுத்தியது. ஆனால், ஸ்மார்ட் போன் சந்தையில் போட்டியிட முடியாததால், சீனாவைச் சேர்ந்த லெனோவா நிறுவனத்திடம் மோட்டரோலாவை கூகுள் விற்றது. இந்த நிலையில், பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான ஹெச்.டி.சி-யைக் கூகுள் நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் 110 கோடி ரூபாய் கைமாறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தைவானைச் சேர்ந்த ஹெச்.டி.சி நிறுவனத்தில் 2,000 பணியாளர்கள் இனி கூகுள் நிறுவனத்தில் இணைய உள்ளனர்.

தொழிற்துறையில் செல்வாக்குமிக்க பெண்கள்!
அமெரிக்காவுக்கு வெளியே இருக்கும் மிகவும் செல்வாக்குமிக்க பிசினஸ் பெண்கள் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சர், ஆக்ஸிஸ் வங்கியின் தலைவர் ஷிகா சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சர்வதேச அளவிலான பொருளாதாரத்தில் இவர்களின் பங்களிப்பு, பிசினஸை வழிநடத்தும் விதம், அவர்கள் கடந்து வந்த பாதை மற்றும் சமூகக் கலாசாரச் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இவர்களைத் தேர்ந்தெடுத்திருப்பதாக ஃபார்ச்சூன் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. இந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த சந்தா கோச்சர் ஐந்தாவது இடத்திலும், ஷிகா சர்மா 21-வது இடத்திலும் உள்ளனர். பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி, அமெரிக்காவின் மிகவும் செல்வாக்குமிக்க பிசினஸ் பெண்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ரூ 26,000 கோடி ரூபாய் 2018 முதல் 2022 வரை, ஆசிய வளர்ச்சி வங்கி நமது நாட்டுக்கு அளிக்கவிருக்கும் கடன் தொகை!
40-வது இடம் - உலக அளவில் பொருளாதாரப் போட்டிப் பட்டியலில் நம் நாடு பெற்றிருக்கும் இடம். கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் நமக்குக் கிடைத்த இடம் 39.
1,09,98,418 கோடி ரூபாய் - கடந்த செப்டம்பர் 15 -ம் தேதி வரையிலான 15 நாள்களில் நம் நாட்டில் டெபாசிட்டான மொத்தத் தொகை. குறைந்துவரும் வட்டி காரணமாக, வங்கி டெபாசிட் ரூ.41,670 கோடி குறைந்துள்ளது.