மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 19 - லாபத்தைக் கணக்கிடும் ஃபார்முலா!

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 19 - லாபத்தைக் கணக்கிடும் ஃபார்முலா!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 19 - லாபத்தைக் கணக்கிடும் ஃபார்முலா!

செல்லமுத்து குப்புசாமி

“எவ்வளவு சம்பாதிச்சு என்ன? இன்கம் டாக்ஸ் புடிச்சுக்கிட்டுத்தான் அக்கவுன்ட்லையே போடறாங்க. அப்படி அக்கவுன்ட்ல வர்றதுல பாதி ஹவுஸிங் லோன் இ.எம்.ஐ கட்டவே சரியா இருக்கு. அதுபோக மத்த செலவு. எப்படிச் செலவு ஆகுதுன்னே தெரியல. 25-ம் தேதிக்கு மேல யாராவது கடன் கொடுத்தா பரவாயில்லைங்கற மாதிரி ஆகிருது. கிரெடிட் கார்டு இருக்க தப்பிச்சோம்” - நாமும் நம்மைச் சுற்றி பலரும் இப்படிப் புலம்புவது சகஜம்.    

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 19 - லாபத்தைக் கணக்கிடும் ஃபார்முலா!

மாதம் முதல் தேதியன்று எவ்வளவு சம்பளம் வாங்குகிறோம் என்பது முக்கியம்தான். அந்தச் சம்பளத்தில் எவ்வளவு மாத இறுதியில் மிச்சமாகிறது என்பது அதைக் காட்டிலும் முக்கியமானது.தனிநபர்களைப் போலவே, நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். ஒரு நிறுவனம் எவ்வளவு வியாபாரம் செய்கிறது, எவ்வளவு வாடிக்கையாளர்கள் வந்துபோகிறார் கள், எவ்வளவு பணம் புரள்கிறது என்பதைக் காட்டிலும் கடைசியில் லாபமாக எவ்வளவு மிச்சமாகிறது என்பது முக்கியமானது.

நிறுவனங்கள் காலாண்டு அல்லது ஆண்டு முடிவுகளை அறிவிக்கும்போது நாம் லாப, நஷ்டக் கணக்கு (profit and loss) விவரங்களைக் காணலாம். அதில் ‘எவ்வளவு மிச்சமாகிறது’ என்ற கேள்விக்குப் பதில் அடங்கியிருக்கும். உதாரணத்துக்கு, சுருக்கமாக ஒரு கணக்கு.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 19 - லாபத்தைக் கணக்கிடும் ஃபார்முலா!



விற்பனை அல்லது பிசினஸ் மூலம் கிடைக்கும் வருவாய் = ரூ.100

மூலப்பொருள்கள், உற்பத்திச் செலவு, ஊழியர் சம்பளம் = ரூ.60. செலவுகள் போக பிசினஸ் லாபம்  = ரூ.40

இது வட்டி மற்றும் வரிக்கு முந்தைய வருமானம் (Earning Before Interest and Tax - EBIT) எனப்படுகிறது.

நிறுவனம் வாங்கிய கடன்களுக்குச் செலுத்திய வட்டி = ரூ.10. வட்டி செலுத்தியதுபோக மிச்சமிருக்கும் லாபம் = ரூ.30

இது வரி செலுத்துவதற்கு முந்தைய வருமானம் (Earning Before Tax -EBT) எனப்படுகிறது.

வரிகள் 33% எனக் கருதுவோமானால், வரி = ரூ.10. வரிகள் போக மிச்சமிருக்கும் லாபம் = ரூ.20

இது வரி கட்டியபின் இருக்கும் வருமானம் (Earning after Tax -EAT) எனப்படுகிறது. இதுவே நிகர லாபம். இதனை மொத்தமுள்ள பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால், நமக்கு EPS (Earning per Share) கிடைக்கும்.  

இந்த நிகர லாபம், பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழியில் பகிர்ந்து அளிக்கப்படலாம். அல்லது நிறுவனத்தின் உடைமையாக பேலன்ஸ்ஷீட்டில் சென்று சேரலாம்.  

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 19 - லாபத்தைக் கணக்கிடும் ஃபார்முலா!

மேலே உள்ள உதாரணத்தில் நூறு ரூபாய்க்கு வியாபாரம் செய்யும் A நிறுவனம், 20 ரூபாயை லாபமாக ஈட்டுகிறது. இதுவே B என்னும் இன்னொரு கம்பெனி, வெறும் 60 ரூபாய்க்கு வியாபாரம் செய்து, அதில் 20 ரூபாயை லாபமாக ஈட்டினால், A-யைவிட B-யை நல்ல நிறுவனமாகக் கருதுவோமில்லையா? எவ்வளவு சம்பளம் வாங்குகிறோம் என்பதைவிட மாதக் கடைசியில் எவ்வளவு சேமிக்கிறோம் என்பதில் உள்ள சூட்சுமம் இதுதான்.

ரூ.100-ல் ரூ.20 மிச்சம் செய்யும் நிறுவனத்தின் மார்ஜின் 20%. இதுவே 60 ரூபாயில் 20 ரூபாய் மிச்சம் செய்யும் நிறுவனத்தின் மார்ஜின் (20/60) X 100 = 33.33%.

20% மார்ஜின் கொண்ட ஒரு நிறுவனம், 33% மார்ஜினுடன் இயங்கும் நிறுவனம் 100 ரூபாய் விற்பனைசெய்து ஈட்டும் அதே லாபத்தை ஈட்ட ரூ.166.67-க்கு வியாபாரம் செய்ய வேண்டும். இதனால்தான் மார்ஜின் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.   

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 19 - லாபத்தைக் கணக்கிடும் ஃபார்முலா!

அதிக மார்ஜினோடு செயல்படும் கம்பெனியானது பலவகையில் அனுகூலமானது. அதனால் தனது கூடுதல் லாபத்தை வேறு ஆராய்ச்சிகளுக்கும், புதிய பொருள்களை அறிமுகம் செய்வதற்கும், புதிய பிராந்தியங் களில் விரிவாக்கம் செய்வதற்கும், கூடுதலாக மார்க்கெட்டிங் செய்வதற்கும் பயன்படுத்த முடியும். தேவைப் பட்டால் விலையைக் குறைத்து மார்க்கெட்டில் போட்டிகளே இல்லாமல் செய்யவும் இயலும்.

சாஃப்ட்வேர் துறையில் செயல்படும் மூன்று முக்கியமான நிறுவனங்களை அவற்றின் மார்ஜின் அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கலாம். 

டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகிய  மூன்றும், கடந்த ஐந்து நிதியாண்டுகளில் எத்தகைய மார்ஜினைப் பேணி வருகின்றன என்று பார்ப்போம்.

டி.சி.எஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களின் மார்ஜின் சராசரியாக 25 சதவிகிதத்துக்கு மேல் உள்ளது. ஆனால், விப்ரோவுக்கு வெறும் 18 சதவிகிதம்தான். இது ஒரு வருடம் மட்டும் நடந்த விஷயமல்ல. கடந்த ஐந்து வருடங்களாகவே அப்படித்தான் இருக்கிறது. அப்படியானால், ‘விப்ரோவில் எனிதிங் இஸ் ராங்?’ என்று நீங்கள் கேட்டால் அதற்கான பதில், இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்பதே.

ஆனால், இந்த எண்கள் ஏதாவதொரு விஷயத்தை உணர்த்தியாக வேண்டும். விப்ரோ தொடர்பான செய்திகள், அதன் செயல்பாடுகள், தவறுகள், புதிய தொழில்நுட்பத்தில் செய்திருக்கும் முதலீடு, அதன் இலக்கு இவற்றில் ஏதாவது ஒன்று நமக்கு ஒரு செய்தியை உணர்த்தலாம். அதற்குரிய செய்திகளைத் தேடிப் படிக்க வேண்டும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு எல்லோரையும்விட ஒருவருக்கு மட்டும் வித்தியாசமாக இருந்தால், “தினம் என்ன சாப்பிடறீங்க? என்ன மாதிரியாக வொர்க் நேச்சர் சார் உங்களுக்கு? உடல் உழைப்பு ஏதாவது உண்டா?” என டாக்டர் கேட்பதுபோல, அடுத்த கட்டத்துக்கு ஆராய்ச்சியை நகர்த்தலாம்.    

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 19 - லாபத்தைக் கணக்கிடும் ஃபார்முலா!

உதாரணத்துக்கு, பி.இ விகிதம். டி.சி.எஸ் அதிக பி.இ-க்கு விற்கிறது. இன்ஃபோசிஸ் குறைவான பி.இ-க்குக் கிடைக்கிறது. (பார்க்க, கம்பெனி பி.இ. விகித அட்டவணை) சமீபத்தில் அதன் சி.இ.ஓ. விஷால் சிக்கா ராஜினாமா செய்தது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லாது, அன்றாட அலுவல்களில் அந்த நிறுவனத்தை ஸ்தாபித்த நாராயண மூர்த்தியின் தலையீடுகள் அடிக்கடி இருந்ததும் காரணமாக இருக்கலாம்.

டி.சி.எஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் விப்ரோ இருப்பதற்கு, அந்த நிறுவனம் குறைவான மார்ஜின் கொண்டிருந்தாலும், வேறு ஏதோவொரு காரணம் இருக்க வேண்டும். இதுவரைக்கும் சேர்த்து வைத்துள்ள சொத்து, புக் வேல்யூ, வருடா வருடம் அது பகிர்ந்தளிக்கும் டிவி டெண்ட், அதன் எதிர்காலத் திட்டங்கள், நிர்வாகத் திறன், நேர்மை, கம்பெனி மேல் முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என பல காரணங்கள் இருக்கலாம்.

ஆனால், இந்த ஒப்பீடுகளை இந்த மூன்று நிறுவனங்களோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் ஹெச்.சி.எல்,  டெக் மஹேந்திரா (சத்யம் கம்ப்யூட் டர்ஸ் என்ற பெயரில் சில ஆண்டுகளுக்குமுன் கிட்டத்தட்ட திவாலாகி, பின்னர் மஹேந்திரா நிறுவனத்தால் டேக்-ஓவர் செய்யப்பட்டது) என இன்னும் சில நிறுவனங்களோடுகூட ஒப்பிடலாம்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை அதே துறையில் இயங்கும் மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடுவது ஒருபக்கம். இன்னொரு பக்கம், குறிப்பிட்ட துறை முழுவதுமாக முதலீட்டாளர் சமுதாயத்தால் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது என்ற கேள்வி. சில ஆண்டுகளுக்கு முன்னர் சாஃப்ட்வேர் நிறுவனங்களின் விகிதம் 30-40 என அதிக அளவில் திகழ்ந்தது. தற்போது இருபதுக்கும் கீழே இறங்கியுள்ளது. அதுபற்றி அடுத்து வரும் அத்தியாயத்தில் பேசலாம்.

(லாபம் சம்பாதிப்போம்)