நிம்மதி தரும் நிதித் திட்டம் - 17 - விவசாய நிலம்... ஓய்வுக்காலம்.... கனவுகள் கைகூட என்ன வழி..?

ஓவியம்: பாரதிராஜா
ஜனனியின் வயது 27. சென்னையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார். ஜனனியின் கணவர் ராஜேஷும் ஐ.டி வேலையில்தான் இருக்கிறார். இருவரும் கைநிறையச் சம்பாதிக்கும் நிலையில், ஆடம்பரமாக வாழ்ந்து பணத்தைச் செலவு செய்யாமல், பட்ஜெட் போட்டுச் செலவு செய் வதுடன், எதிர்கால இலக்குகளுக்காக எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்று நாணயம் விகடனுக்கு மெயில் அனுப்பியிருந்தார் ஜனனி.

இவரைப் போல, முப்பது வயதுக்கு முன்னதாகவே நிதித் திட்டமிடல் செய்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்துடன் பலரும் நம்மைத் தொடர்புகொள்கிறார்கள். எதிர்காலம் குறித்து இளம் வயதிலேயே சிந்திக்க ஆரம்பிப்பவர் களின் எண்ணிக்கை இப்போது அதிகமாகிவிட்டது என்பதையே இது உணர்த்துகிறது.
ஜனனி தன்னைப் பற்றி நம்மிடம் சொல்ல ஆரம்பித்தார். “என் சொந்த ஊர் புதுச்சேரி. திருமண மாகிவிட்டது. நானும் என் கணவரும் சேர்ந்து மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்குகிறோம். வீட்டுக் கடன் மூலம் சென்னையில் வீடு வாங்கி, கடன் முழுவதையும் கட்டி முடித்துவிட்டோம். நாங்கள் இரண்டு குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். ரூ.2 லட்சம் வரை வட்டி எதுவுமில்லாமல் நண்பர்களுக்குக் கடன் தந்துள்ளோம்.

எங்களுக்கு விவசாய நிலம் வாங்க வேண்டும் என்று ஆசை. அடுத்த ஐந்து வருடங்களில் அதற்கு ரூ.20 லட்சம் தேவை. எங்களின் இந்த விருப்பம் சரியானதுதானா? இன்றைக்கு எங்களுக்கு மாதமொன்றுக்கு ரூ.20 ஆயிரம் குடும்பச் செலவு ஆகிறது. ஓய்வுக்காலத்துக்கு அடுத்த 25 வருடங்களில் எவ்வளவு தேவை?
முதல் குழந்தையின் மேற்படிப்புக்கு அடுத்த 18 வருடங்களில் ரூ.15 லட்சமும், இரண்டாவது குழந்தையின் மேற்படிப்புக்கு அடுத்த 20 வருடங்களில் ரூ.15 லட்சமும் தேவை. குழந்தைகளின் திருமணத்துக்கு அடுத்த 25 வருடங்களில் ரூ.20 லட்சம் தேவை” என இலக்குகளைப் பட்டியலிட்டவர் வரவு செலவு விவரங்களை மெயிலில் அனுப்பினார். (இவர் குறிப்பிட்ட தொகை அனைத்தும் இன்றைய மதிப்பில்)
வருமானம்: மாதம் ரூ.1 லட்சம், கார் கடன்: ரூ.13,000 (இன்னும் 15 தவணைகள் செலுத்த வேண்டும்), பெட்ரோல் செலவு: ரூ.5,000, குடும்பச் செலவுகள்: ரூ.20,000, என்.பி.எஸ்: ரூ.3,000, யூலிப் பாலிசி : ரு.20,000, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு : ரூ.9,000, மொத்தம் : ரூ.70,000, மீதம் ரூ.30,000
இவருக்கான நிதி திட்ட மிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.
“ஐ.டி துறையில் மட்டுமல்ல, பொதுவாகவே பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறவர்களுக்கும் விவசாய நிலம் வாங்குவது என்பது சமீப காலமாகவே ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. விவசாயமென்பது பார்ட் டைம் தொழிலல்ல; முழு நேரம் கவனம் செலுத்த வேண்டிய தொழில். எனவே, அதிலுள்ள நெளிவுசுளிவுகளைத் தெரிந்து கொண்டே அதில் இறங்க வேண்டும். இதைப் புரிந்துகொண்டு நிலம் வாங்குவதே சரியாக இருக்கும்.

அடுத்த ஐந்தாண்டுகளில் உங்களுக்கு விவசாய நிலம் வாங்க ரூ.28 லட்சம் தேவையாக இருக்கும். தற்போதுள்ள சூழலில் ரூ.17 லட்சத்துக்கு முதலீட்டைத் தொடங்கலாம். மீதம் தேவைப்படும் ரூ.11 லட்சத்துக்குக் கடன் வாங்கிக் கொள்ளலாம். விவசாய நிலம் வாங்க வங்கியில் கடன் வாங்கினால் அதற்கான வட்டி அதிகம். எனவே, வீட்டு அடமானக் கடன் வாங்கி, அதன் மூலம் விவசாய நிலம் வாங்க லாம். இந்தக் கடனை விவசாய வருமானத்தைக் கொண்டு அடைக்கத் திட்டமிடலாம்.
உங்களின் ஓய்வுக் காலத்துக்கு மாதம் ரூ.20 ஆயிரம் என்ற அடிப்படையில் கணக்கிட்டால், 25 ஆண்டுகளுக்குப்பிறகு ஆண்டுக்கு ரூ.13 லட்சம் தேவையாக இருக்கும். அப்படியானால் கார்ப்பஸ் தொகையாக ரூ.3.36 கோடி தேவை. உங்கள் பி.எஃப் தொகை மற்றும் என்.பி.எஸ் மூலம் ரூ.2.88 கோடி கிடைக்கக்கூடும். மீதி ரூ.48 லட்சத்துக்கு மாதம் ரூ.2,500 முதலீடு செய்ய வேண்டும்.
அடுத்து, முதல் குழந்தையின் மேற்படிப்புக்கு அடுத்த 18 வருடங்களில் ரூ.41 லட்சம் தேவையாக இருக்கும். யூலிப் பாலிசி மூலம் ரூ.39.5 லட்சம் கிடைக்கும். மீதம் சேர்க்க வேண்டிய ரூ.1.5 லட்சத்துக்கு மாதம் ரூ.600 முதலீடு செய்தால் போதுமானதாக இருக்கும்.
இரண்டாவது குழந்தையின் மேற்படிப்புக்கு அடுத்த 20 வருடங்களில் ரூ.58 லட்சம் தேவை.எண்டோவ்மென்ட் பாலிசி மூலம் 36.2 லட்சம் கிடைக்கக்கூடும். மீதம் ரூ.21.8 லட்சம் சேர்க்க மாதம் ரூ.2,200 முதலீடு செய்ய வேண்டும்.

குழந்தைகளின் திருமணத்துக்கு மிகச் சரியான திட்டமிடுதலை இப்போது செய்ய இயலாது. குழந்தைகள் பிறந்தபிறகு ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதற்கேற்ப மாற்றங்கள் இருக்கக்கூடும். குழந்தைகளின் திருமணத்துக்கு நீங்கள் ரூ.20 லட்சம் கேட்டுள்ளீர்கள். 25 வருடங்களில் ரூ.1.08 கோடி தேவையாக இருக்கும். இதற்கு மாதம் ரூ.5,800 முதலீடு செய்ய வேண்டும். அல்லது ரூ.3,700 முதலீட்டில் தொடங்கி ஆண்டுக்கு 5% படிப்படியாக அதிகரிப்பதன் மூலம் இந்த இலக்கை அடையலாம். இந்த முதலீட்டை அடுத்த ஆண்டு முதல் தொடங்குங்கள். இப்போது உங்கள் இருவருக்கும் சேர்த்து ரூ.2 கோடிக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.
நண்பர்களுக்குக் கடனாகக் கொடுத்திருக்கும் ரூ.2 லட்சத்தை அவசரகால நிதியாக வைத்துக் கொள்ளவும். தற்போது நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவரும் தொகையை விவசாய நிலம் வாங்கும்போது கூடுதலாகத் தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளவும். தேவைப்படவில்லையெனில் குழந்தைகளின் எதிர்காலத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பரிந்துரை: ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. ஃபோகஸ்டு புளூசிப் 3,000, மோதிலால் ஆஸ்வால் மோஸ்ட் ஃபோகஸ்டு மல்டிகேப் 35- 5,000, ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்ட் 4,000, ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்ட் 4,000, எஸ்.பி.ஐ கோல்டு ஃபண்ட் 1,500, டி.எஃப்.சி கார்ப்பரேட் டெப்ட் ஆப்பர்ச்சூட்டீஸ் ஃபண்ட் 4,000, ஃப்ராங்க்ளின் இந்தியா டைனமிக் அக்ரூவல் 4,000, யூ.டி.ஐ பாண்ட் ஃபண்ட் 4,000.”
குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.
Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878
- கா.முத்துசூரியா
