நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

வெற்றிக்கான அதிர்ஷ்டத்தை அழைத்துவரும் வழிமுறைகள்

வெற்றிக்கான அதிர்ஷ்டத்தை அழைத்துவரும் வழிமுறைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
வெற்றிக்கான அதிர்ஷ்டத்தை அழைத்துவரும் வழிமுறைகள்

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர்: ஹவ் டு கெட் லக்கி (How to Get Lucky)

ஆசிரியர்: மேக்ஸ் கண்தர் (Max Gunther)

பதிப்பகம்: ஹர்ரிமன் ஹவுஸ் (Harriman House

வில்லியம் ஹாப்மென் என்பவர் பெரிய சூதாட்டக்காரர். ஆனாலும், சொல்லிக்கொள்கிற மாதிரி வெற்றியை அவரால் அடைய முடிந்ததேயில்லை. வாழ்நாளெல்லாம் சூதாடியும் தன்னால் வெற்றி பெற முடியவில்லையே, ஏன் என அவர் ஒருமுறை சிந்தித்துப் பார்த்தார். அப்படி சிந்தித்ததில் அவருக்குப் புரிந்த காரணம், வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பது தனக்குக் கைகொடுக்கும் என்பதை, தான் ஒருபோதும் நம்பியதில்லை என்பதே.    

வெற்றிக்கான அதிர்ஷ்டத்தை அழைத்துவரும் வழிமுறைகள்

அவருடைய தந்தை, விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு பயிற்சியாளர். அவர் தன் மாணவர்களிடம் திரும்பத் திரும்ப சொல்வது, ‘‘சரியான பயிற்சியும் முயற்சியும் இருந்தால், வெற்றி பெற அதிர்ஷ்டமானது தேவையே இல்லை” என்பதையே.   

இதைக் கேட்டு வளர்ந்த ஹாப்மென், ‘அதிர்ஷ்டம் நமக்குத் தேவையில்லை;  நம் திறமை யினாலேயே நாம் முன்னேற முடியும்’ என்கிற நம்பிக்கையைக் கொண்டிருந்ததால் அவரால் சூதாட்டத்தில் வெற்றி பெற முடியவில்லை. ‘‘என்னதான் தலைசிறந்த பயிற்சி பெற்ற விளையாட்டு வீரராக இருந்தாலும், மைதானத்தில் ஓடும்போது கால் சுளுக்கி விளையாட முடியாமல் போய்விடலாம். பயிற்சி, நம்பிக்கை, உடலைக் கச்சிதமாக வைத்திருப்பது, வெற்றிக்கான  டெக்னிக்குகள் எனப் பலவிதமான ஒழுங்கைக் கொண்டிருந்தாலும், எதிர்பாராமல் ஏற்படும் சுளுக்கானது  உங்கள் வெற்றிக்கு உலைவைத்து விடும். அதனால் திறமையுடன், கொஞ்சம் அதிர்ஷ்டக்காரராகவும் இருக்க வேண்டும்  என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்’’ என ‘ஹவ் டு கெட் லக்கி’ என்கிற புத்தகத்தை ஆரம்பிக்கிறார் ஆசிரியர் மேக் குந்தர். 

‘‘வெறும் அதிர்ஷ்டம்  மட்டும் போதுமா என்றால், போதாது என்பேன். வாழ்வில் பல விஷயங்களில் வெற்றி பெற நாம் தகுதியானவர்களாக  இருந்தும், நம்மால் வெற்றி பெற முடியாமல் போவதற்குக் காரணம், அதிர்ஷ்டமின்மையே.    

சீட்டாட்டத்தில் எனக்கு அடுத்த கார்டு டைமண்ட் ராணி வேண்டும் என்று நினைத்து ஆடமுடியாது இல்லையா? அதுவாக வருவது தானே அதிர்ஷ்டம்! நம்மால் அந்த கார்டை வரவைக்க முடியுமா என்றால், அது சாத்தியம் இல்லாத விஷயம். வந்தால் அதிர்ஷ்டம் மட்டுமே காரணம். அதிர்ஷ்டக்காரர் என்பவர் அப்படித் திகழ, அப்படிச் சிறப்பான விஷயங்களைச் செய்கிறாரா என்பது குறித்து இருபது வருடங்கள் தேடிக் கண்டுபிடித்தவற்றைத்தான் இந்தப் புத்தகத்தில் சொல்லியுள்ளார் ஆசிரியர்.

வெற்றிக்கான அதிர்ஷ்டத்தை அழைத்துவரும் வழிமுறைகள்‘‘முயற்சி ஏதுமில்லாமல் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நல்ல மாற்றங்களையே அதிர்ஷ்டம் என்கிறோம். நம்மில் பலரும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று இல்லவே இல்லை என வாதிடுகிறோம். ஏன் தெரியுமா? நாம் அதிர்ஷ்டம் என்ற ஒன்றின் கருணையால் வாழ விரும்புவதில்லை என்பதால்தான். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக மாற விரும்பினால், நீங்கள் அதிர்ஷ்டம் என்று ஒன்று இருக்கிறது என்பதை முதலில் ஒப்புக்கொள்ளுங்கள். பின்னரே அது உங்களைத் தேடி வரும்’’ என்று சொல்லும் ஆசிரியர், நம்மை நோக்கி அதிர்ஷ்டத்தை வரவைப்பதற்கான சில வழிமுறைகளையும் இந்தப் புத்தகத்தில்  சொல்லியிருக்கிறார்.

• அதிர்ஷ்டம் உங்களை நோக்கி வரவேண்டும் என்றால், நீங்கள் செய்யும் செயல்களின் வெற்றிக்கு அதிர்ஷ்டமும் ஒரு காரணம் என்பதை மனதார ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்காக ஒரு காரியத்துக்கான திட்டங்களைத் தீட்டும்போது இதையெல்லாம் அதிர்ஷ்டம் பார்த்துக்கொள்ளும் என்று விட்டுவிட ஆரம்பித்தீர்கள் எனில்,  உங்களை நோக்கிவருவது துரதிர்ஷ்டமாக மட்டுமே இருக்கும்.

• சினிமாவில் வெற்றி பெற வேண்டுமென்றாலும், பார்க்கும் வேலையில் பெரிய பதவிகளை அடைய வேண்டுமென்றாலும், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, பரபரப்பாக அந்த வேலைகள் நடக்கிற இடத்துக்கு நீங்கள் சென்றடைய வேண்டும் என்பதுதான். தூரத்திலிருந்தபடியோ அல்லது ஒதுங்கியிருந்தபடியோ வெற்றியை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. வெற்றியாளர்கள் எல்லோருமே போட்டி குவிந்திருக்கும் இடத்திலிருந்தே புறப்பட்டவர்கள் என்பதை மறக்காதீர்கள்.

• தகுதிக்கு அதிகமாக ரிஸ்க் எடுத்தவனும், தகுதிக்கேற்ற ரிஸ்க் எடுக்காதவனும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை என்கிற அதிர்ஷ்டத்துக்கான மந்திரத்தை ஒருபோதும் மறக்கக்கூடாது. 

• அதிர்ஷ்டம் என்பது ஓரளவுக்கே  என்பதை  நினைவில் வைத்துக்கொண்டு செயல்படுவது  முக்கியம். காரணம், வெற்றிக்கான பாதையானது ஒரு நேர்கோட்டில் அமைவதில்லை என்பதைப் புரிந்துகொண்டு, நம்பிக்கையுடன் தொடர் பயணம் செய்பவர்களுக்கே அதிர்ஷ்டம் கைகொடுக்கும். 

• மதம் மற்றும் மூடநம்பிக்கை என்ற சர்ச்சைக் குரிய இரண்டு விஷயங்களையும் விட்டு விட்டு ஆராய்ந்தால், இயற்கைக்கு மீறிய செயல்கள் பல நடக்கவே செய்கின்றன என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டேயாக வேண்டும். இந்தச் செயல்கள் யாரால் நிகழ்த்தப்படுகின்றன என்பதைப்பற்றியெல்லாம் விவாதித்து வெற்றி பெற முடியாது. ஆனால், அப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்கின்றன என்பதை மட்டும் ஒப்புக் கொள்ளும் அளவுக்கு நிறைய நிகழ்வுகள் நம் வாழ்வில் நடக்கின்றன. அதனால் நமக்குப் பயன்படும் வகையில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கட்டுமே என நினைப்பதில் தவறேதுமில்லை.   

வெற்றிக்கான அதிர்ஷ்டத்தை அழைத்துவரும் வழிமுறைகள்

• ஒரு செயலில் ஈடுபடும்போது, நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்று நாம் நம்புவோம். அதிர்ஷ்டம் என்பது எதிர்பாராமல் நடக்கிற கெட்ட விஷயங்களிலிருந்து நாம் எப்படித் தப்பிக்கப் போகிறோம் என்பதில்தான்  இருக்கிறது. நல்லது நடக்கச் செய்வதைவிட, கெட்ட செயல்களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அதிர்ஷ்டம் உதவியாக இருக்கிறது.

• நம் வாழ்க்கையில் நடக்கும் பல நிகழ்வுகளில் எது நமக்குப் படிப்பினையைத் தருகிறது, எது நமக்குப் படிப்பினையைத் தருவதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். 

• நான் கெட்டவன். என் கெட்ட செயல்களுக்கு ஆண்டவன் என்னைத் தண்டிக்கட்டும். ஏன் என் குழந்தைக்குக் கஷ்டத்தைக் கொடுக்கிறான் கடவுள் என்ற கேள்வியுடன், தன் மகனுக்கு வந்த கொடிய நோய்க்கான காரணத்தைத் தேடிப் புறப் பட்டார் ஒருவர்.  கடைசியில் அவர் கண்டறிந்தது, இயற்கையின் நியாய தர்மத்தினால் மகனுக்கு நோய் வரவில்லை; அவனுக்கு நோய் வந்தது ஒரு துரதிர்ஷ்டமான விஷயமே என்பதைத்தான். எனவே, உலகம் நியாய தர்மங்களை மட்டுமே பார்த்து  நடப்பதில்லை. அவ்வப்போது அநியாயமாகவும் சில விஷயங்கள் நடக்கவே செய்யும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

• இன்னுமொரு ரகசியத்தையும் புரிந்து கொள்ளுங்கள். அதிர்ஷ்டக்காரர் என்றும், அதிர்ஷ்டமில்லாதவர் என்றும் நீங்கள் நினைக்கும் நபர்களைக் கூர்ந்து கவனித்தால், ஒரு   வித்தியாசம் உங்களுக்குச் சட்டெனப் புரியும். அதிர்ஷ்டக்காரர்  என்பவர் எப்போதும் பிஸியாக இருப்பார். ஒன்றுமே செய்யாமல் சும்மா இருப்பவருக்கு அதிர்ஷ்டமானது எப்படித் தேடிவந்து உதவி செய்யும்? பல வேலைகளை இழுத்துப்போட்டு  செய்வதும் அதிர்ஷ்டத்துக்கு வழிவகுக்கவே செய்யும்.

• இந்தப் புத்தகத்தில் இருக்கும் அத்தனை டெக்னிக்குகளையும் கடைப்பிடித்தால் அதிர்ஷ்ட சாலியாகிவிட முடியுமா என்றால், யாருக்குத் தெரியும், உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்து நீங்கள் வெற்றி பெற்றபின்புகூட, புற்றுநோய், துப்பாக்கிச் சூடு, விபத்து போன்றவற்றால் நீங்கள் பெற்ற அத்தனை வெற்றியையும் இழக்கலாம். அப்படி இழப்பதுதான் துரதிர்ஷ்டம்.

‘‘எதையும் செய்யாமல் துரதிர்ஷ்டசாலியாக இருப்பதைவிட, இந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருக்கும் டெக்னிக்குகளைக் கடைப்பிடித்து அதிர்ஷ்டசாலியாக மாற முயலுங்கள். குட் லக்’’ என்று முடிக்கிறார் ஆசிரியர்.அதிர்ஷ்டசாலியாக மாற விரும்பும் அனைவரும் இந்தப் புத்தகத்தை ஒருமுறை நிச்சயம் படிக்கலாம்.       

- நாணயம் டீம்