மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 20 - நிறுவனங்களின் காலச் சுழற்சியைக் கவனியுங்கள்!

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 20 - நிறுவனங்களின் காலச் சுழற்சியைக் கவனியுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 20 - நிறுவனங்களின் காலச் சுழற்சியைக் கவனியுங்கள்!

செல்லமுத்து குப்புசாமி

பாட்ஷா படத்தில் சூப்பர் ஸ்டார், “எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ. எந்த எட்டில் இப்ப இருக்கே தெரிஞ்சுக்கோ” என்று பாடியிருப்பார். செய்யவேண்டிய காரியங்களை அந்தந்த காலத்தில் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல். விதைக்கிற காலத்தில் ஊர் சுற்றிக் களிக்கிறவனுக்கு அறுக்கிற காலத்தில் எதிர்பார்க்க ஏதுமில்லை.   

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 20 - நிறுவனங்களின் காலச் சுழற்சியைக் கவனியுங்கள்!

மனித வாழ்க்கையில் பிறப்பு, வளர்ச்சி, முதிர்ச்சி, முதுமை, மறைவு எனப் பல்வேறு கட்டங்கள் இருப்பதுபோல, நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்களுக்கும் இருக்கிறது. மாருதி சுஸூகி நிறுவனம், மாருதி 800 காரைத் தயாரித்தது. இப்போது அந்த கார் காலாவதியாகிவிட்டாலும் நிறுவனம் இயங்கத்தான் செய்கிறது.

இதனை ‘Product Life cycle’ என்பார்கள். அறிமுகம், வளர்ச்சி, முதிர்ச்சி மற்றும் தேய்வு என்னும் சுழற்சி சில பொருள்களுக்கு நீண்ட காலம் பிடிக்கலாம். சிலவற்றின் காலச் சுழற்சி குறுகிய காலத்தில் காணாமல் போகலாம்.         எம்.ஜி.ஆர் காலத்தில் கதாநாயகிகள் 15-20 ஆண்டுகள்கூட நடித்தார்கள். இப்போதெல்லாம் 15-20 படங்களில் நடித்தாலே சாதனையாகக் கருத வேண்டியிருக்கிறது. அப்படித்தான் பொருள்களும். சில பொருள்கள் அறிமுகமான கையோடு வளர்ச்சி நிலையை அடையாமல் தேய்ந்துபோகலாம். சில பொருள்கள் தேயாமல் வளர்ந்துகொண்டே போகலாம் (கோக்க கோலா போல).

ஆக, பொருள்களைப் பற்றிய அறிவு, அவற்றை நுகரும் வாடிக்கையாளர்களின் விருப்பம் தொடர்பான தெளிவு, அதன் பிசினஸ் காரணிகள் எனப் பலவற்றையும் குறித்த புரிந்துகொள்ளலை நமக்குள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 20 - நிறுவனங்களின் காலச் சுழற்சியைக் கவனியுங்கள்!



இந்த ‘Life Cycle’ சுழற்சிகள், குறிப்பிட்ட சில பொருள்களுக்கு மட்டும் பொருந்தாமல் நிறுவனங்களுக்கும் பொருந்தும்; துறைகளுக்கும் பொருந்தும். சில துறைகளை, கடந்த காலத் துறைகள் என்போம். சில துறைகள், தற்போது ஜொலிக்கும் துறைகளாக இருக்கலாம். ஆனால், அவை தமது உச்சத்தை அடைந்துவிட்டிருக்கலாம். இதற்குமேல் உயர்வதற்கு வாய்ப்பில்லை. இனிமேல் தம்மைத் தாமே தகவமைத்துக் கொண்டு, மேம்பாட்டைத் தக்கவைத்தாக வேண்டும் என்போம்.

இப்படியெல்லாம் பிசினஸ் மாடல் உருவாகுமா என நாம் கடந்த தலைமுறையில் சிந்தித்துப் பார்க்காத துறைகளெல்லாம் இப்போது உருவெடுத்திருக்கின்றன. அசைக்கவே முடியாத துறைகள் எனக் கருதியவை காணாமல் போயிருக்கின்றன. நான் எப்போதுமே கோவையின் பஞ்சாலை தொழிலை உதாரணம் காட்டுவதுண்டு. கால் நூற்றாண்டுக்குமுன் வரைக்கும் தென்னிந்தியாவின் மான்செஸ்டராக கோலோச்சிய அந்தத் துறை, இன்றைக்கு இல்லவே இல்லை.

ஆஃப்சோர், அவுட்சோர்சிங் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் மென்பொருள் சேவையை உருவாக்கியவர்கள் ஒரு புதிய துறையை உருவாக்கினார்கள். யாரோ ஒரு சிலரின் யோசனையில் உருவான விதை இன்றைக்கு ஆண்டுக்கு 150 பில்லியன் டாலர் (சுமார் 9.75 லட்சம் கோடி ரூபாய்) வருமானம் ஈட்டுமளவு வளர்ந்திருக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏறத்தாழ முப்பது லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் வருடாவருடம் 30% - 40% வளர்ச்சியை எய்து வந்தது சாஃப்ட்வேர் துறை. மார்ஜின் என்று பார்த்தால், நூறு ரூபாயில் ரூ.35/40 லாபமாக மிஞ்சும். இப்போது எல்லாமே மந்தமாகிவிட்டது. பல நிறுவனங்களுக்கு வருடாந்திர வளர்ச்சி ஒற்றை இலக்கத்தில் உள்ளது. மார்ஜின் 25 சதவிகிதத்துக்கும் கீழே குறைந்து வருகிறது.

கடந்த பத்தாண்டுகளில் உலகை மாற்றிய டெக்னாலஜி மாற்றங்கள் எதையும் இந்திய சாஃப்ட்வேர் நிறுவனங்கள் செய்யவில்லை. தேவைக்கேற்ப ஆட்களை சப்ளை செய்யும் நோக்கிலேயே இன்னமும் அவை கருதப் படுகின்றன. அல்லது உலக அளவில் பெருநிறுவனங்கள் வழங்கும் ஆர்டரை ஒப்பந்தம் எடுத்து செய்து முடிக்கும் பாங்கிலேயே அவை கவனம் செலுத்தி வருகின்றன. ‘ஸ்டார்ட் அப் கல்ச்சர்’ கொஞ்சமாவது இருந்திருந்தால், அவை உலக அளவில் பிசினஸ் நடக்கும் விதத்தையே மாற்றுமளவுக்கு உருமாறியிருக்கும்.

இந்திய சாஃப்ட்வேர் துறை தனது உச்சத்தை அடைந்துவிட்டதோ எனக் கருதத் தோன்றுகிறது. “நாம் அடுத்தகட்டத்துக்கு நகர வேண்டும். டிஜிட்டல், கிளவுட் (cloud), இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப் பரிணாம மாற்றம் காண வேண்டும்” என்று எல்லா கம்பெனிகளும் பேசுகின்றன. ஆனால், அந்த மாற்றங்களை முன்னெடுக்க அவை தயாராக உள்ளனவா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

வாட்ஸ் அப் போல, ஓலா - ஊபர் போல ஆப்-கள், பிசினஸ் நடக்கும் விதத்தையே மாற்றியுள்ளன. அப்படியான மாற்றங்களை உருவாக்கிச் செயல்படுத்த லட்சக்கணக்கான ஆள்கள் தேவையில்லை. திறமையான சில ஆயிரம் ஆள்கள் இருந்தால் போதும். என்னவாகப் போகிறது இந்த மென்பொருள் சமூகம்?

உதாரணத்துக்கு, இனிமேல் ஆபீஸில் இருந்தபடியே வீட்டில் உள்ள வாஷிங் மெஷினை ஆன் செய்யக்கூடிய நிலை வரும். அப்படியான மாற்றங்களை உருவாக்குவதில் நமது சாஃப்ட்வேர் கம்பெனிகள் பங்கெடுக்கப் போகின்றனவா அல்லது ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்க்கப் போகின்றனவா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.   

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 20 - நிறுவனங்களின் காலச் சுழற்சியைக் கவனியுங்கள்!

இந்த அச்சம், மென்பொருள் துறையில் உள்ள 90% பேருக்கு உள்ளது. சாஃப்ட்வேர் கம்பெனிகளில் முதலீடு செய்யும் நமக்கும் எச்சரிக்கை கலந்த அச்சம் இருந்தால் தவறில்லை. “மாற்றம் நடக்கும். ஆனால், என்ன மாற்றமென்று தெரியாது. நாம் தயாராக இருப்போம்” என்ற மனநிலை தவறில்லை. எனினும், நாம் எந்த வகையில் மற்றவர்களைக் காட்டிலும் அனுகூலமுடையவர்களாக உள்ளோம் என்பது தெரியாது.

நான் சிறுவனாக இருந்தபோது, கல்யாணங்களில் அலாரம் கடிகாரத்தைப் பரிசளிப்பார்கள். இப்போது அலாரமே தென்படுவதிலை. எல்லாம் மொபைல் போனில் வந்துவிட்டது. டிஜிட்டல் கேமிரா வருவதற்குமுன், பிலிம் ரோல் போட்டுத்தான் ஃபோட்டோ எடுப்போம். அதை நெகட்டிவ் ஆக்கி பிரின்ட் போடுவார்கள். 1996-ம் ஆண்டு கோடக் நிறுவனம், உலகில் உற்பத்தியாகும் பிலிம் ரோல்களில் 65% ரோல்களை உருவாக்கியது. 1,45,000 பேர் அதில் பணியாற்றினார்கள். 

டிஜிட்டல் கேமிராவை 1970-களில் அறிமுகம் செய்ததே அந்த நிறுவனம்தான். நினைத்திருந்தால் புகைப்படச் சந்தையை, அதன் உலகளாவிய போக்கினை கோடக் மாற்றியிருக்கலாம். ஆனால் பிலிம் ரோல் மூலம் பணம் வந்துகொண்டிருப்பதால் அதனைச் சீர்குலைக்காமல் சொகுசாக இருந்து வந்தது. விளைவு..? தொடர்ச்சியான சரிவையே ஏற்படுத்தியது. அதனால் கட்டுப்படுத்த முடியாத, தவிர்க்க இயலாத பெருமாற்றம் உருவானது. 2012-ல் நிறுவனம் திவாலானது.

முறையற்ற நிர்வாகத்தின் நேர்மையற்ற போக்கினால் அழிந்த கம்பெனிகள் நிறைய உண்டு. ஒரு காலத்தில் கோலோச்சினாலும் மாற்றங்களை உள்வாங்காமல்போன காரணத்தினால் மட்டுமே காணாமல்போன கம்பெனிகளும் உண்டு. அதற்கு அம்பாசிடர் காரை உருவாக்கிய இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு நல்ல உதாரணம்.

இந்திய சாஃப்ட்வேர் கம்பெனிகளுக்கும் ஆஃப்சோர் ஒப்பந்தங்கள் மூலம் இப்போதைக்கு பணம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த ஒப்பந்தங்கள் முடிந்து உலக பெரு நிறுவனங்கள் டிஜிட்டல் டெக்னாலஜிகளுக்கு மாறும்போது நம் நிறுவனங்கள் ஆட்டத்தில் இருக்குமா, இருந்தால் என்ன வடிவத்தில், என்ன பாத்திரத்தில் இருக்கும் என்பதே கேள்வி.

அந்தக் கேள்விகளைக் கேட்பதன் மூலம் பதிலையும் தேடலாம். புதிய டெக்னாலஜிகள் எவ்வாறு பிசினஸை மாற்றுகின்றன என்பதை முதலீட்டாளர்கள் கவனித்துப் புரிந்துகொள்வது  அவசியம். ஷேரில் முதலீடு செய்வோர் பிசினஸ் நோக்கில் பார்க்கும் பாங்கினைப் பெற்று, தாம் ஆராயும் ஒரு துறை எந்த எட்டில் இப்போது இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் நிலைக்கு வந்தால் போதும்!

(லாபம் சம்பாதிப்போம்)