
ப.முகைதீன் சேக்தாவூது
கடந்த 2016-17-ம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துள்ளோரின் எண்ணிக்கை 5.43 கோடி. இது, முந்தைய ஆண்டுகளில் வரிக் கணக்குத் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம்.

இந்த நிலையில், ‘நடப்பு நிதியாண்டில், புதிதாக மேலும் 1.25 கோடிப் பேரை வருமான வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்’ என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது மத்திய நேரடி வரிகள் ஆணையம் (Central Board of Direct Taxes). நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை அடைவதற்கு ஆயத்தமாகி வருகிறது வருமான வரித் துறை.
‘ஒரே நிதியாண்டில் 1.25 கோடி யினரை வருமான வரி வரம்புக்கு உட்படுத்த முடியுமா?’ என்று கேட்டால், ‘முடியும்’ என்பதே விடையாக இருக்கும். ஏனெனில், பணப் பரிவர்த்தனையின் கண்காணிப்புக்கு பான் எண் (PAN) ஒருபுறமும், ஆதார் எண் இன்னொரு புறமும் நிலைகொண்டுள்ளன. இவையிரண்டும் ஒன்றோடொன்று இணைந்தே உள்ளன. எனவே, 1.25 கோடியினரை வருமான வரி வட்டத்துக்குள் கொண்டுவந்து சேர்ப்பது எளிதாகவே இருக்கும்.
ஆக, கடந்த ஆண்டின் வரித் தாக்கல் செய்தோர் எண்ணிக்கையுடன், நடப்பு நிதியாண்டில் மேலும் 23 சதவிகிதத்தினர் வரி வரம்புக்குள் வந்துவிடுவார்கள்.

‘அந்த ஒன்றேகால் கோடி பேரில் நானும் ஒருவரா?’ என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். இந்தக் கேள்விக்கான பதிலை இனி பார்ப்போம்.
• வரி கட்டுபவர்களாக மாற்றுவது இலக்கு அல்ல
‘ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்கள் தான் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்பது பழைய வழக்காகிவிட்டது. வரிக் கழிவுக்கு முந்தைய வருமானம் (Income before Deductions) ரூ.2.5 லட்சம் உள்ள 60 வயதுக்கு உட்பட்டோர், ரூ.3 லட்சம் உள்ள 60 வயது கடந்த மூத்தக் குடியினர், ரூ.5 லட்சம் உள்ள 80 வயது நிறைந்த முதுமூத்தக் குடியினர் அனைவரும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பதே எழுத்துபூர்வமான இப்போதைய விதியாகி உள்ளது.
எனவே, மேற்கண்ட வருமான நிலையில் உள்ளோரை வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வைப்பதன் மூலம், அடுத்து வரும் ஆண்டுகளில் அல்லது நடப்பாண்டிலேயே அவர்கள் வரி செலுத்துபவர்களாக மாறக்கூடும் என்பதே வருமான வரித் துறையின் இலக்கு.

தம்முடைய வருமானத்துக்குத் தாமே வரியைக் கணக்கிட்டு (Self Assessment) வரி செலுத்துவோர், நிறுவனத்தினர் மற்றும் வாய்ப்பு உள்ளபோதே வரிப் பிடித்தம் (Tax Deduction or source) செய்யப்படும் மத்திய, மாநில அரசு ஊழியர், ஆசிரியர், பொதுத்துறை பணியினர், உள்ளாட்சி ஊழியர்கள் போன்ற மாத சம்பளம் பெறுவோர் என வருமான வரி செலுத்துபவர்கள் பல்வேறு பிரிவினராக உள்ளனர்.
இவர்களில் டி.டி.எஸ் (TDS) நடைமுறைக்கு உட்பட்ட மாதச் சம்பளக்காரர்களை வரிக் கணக்கு தாக்கல் செய்ய வைப்பது சுலபம். ஏனெனில், ‘வரி கட்டும் அளவுக்கு வருமானம் இல்லையே’ என்ற சுய கணிப்பில் கணக்குத் தாக்கல் செய்யாமல் இருப்போருக்கு ‘வரி வரம்பைத் தொட்டுவிட்டாலே வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்ற சட்ட நியதியைப் புரிய வைத்து விட்டால், இவர்கள் உடனடியாக கணக்குத் தாக்கல் செய்யத் தொடங்கிவிடுவார்கள். அடுத்துவரும் ஆண்டுகளில் முறையாக வரியையும் கட்டிவிடுவார்கள்.
வரியைச் செலுத்திவிட்டு - அதாவது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பின்னும், வரிக் கணக்குத் தாக்கல் செய் யாதவர்களும் இருப்பார்கள். ‘வரி கட்டுவதோடு கடமை முடிந்தது’ என்ற நினைப்பில் உள்ள இவர்களையும், விதி நியதியைச் சொல்லி வரிக் கணக்குத் தாக்கல் செய்யப்போகும் 1.25 கோடி யினரில் ஒருவராகக் கொண்டுவந்து விடலாம்.
மேற்கண்ட இருவகை பிரிவினரும் இதுவரை வரிக் கணக்குத் தாக்கல் செய்வதுதான் தடைப்பட்டிருக்கும். அதேசமயம், வரிக் கணக்கீடு தொடர் பான நியதிகளை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் வரி செலுத்தி, வரிக் கணக்கும் தாக்கல் செய்து கொண்டிருந்தால், அது அரசுக்கு வரி இழப்பை ஏற்படுத்திவிடக்கூடும். அவ்வாறு அரசுக்கு வரி வருமானத்தில் இழப்பு ஏற்படாமல் தடுக்க, தவிர்க்க வேண்டிய விடுபாடுகளில் (omission) சில:
• வருமான வரித்துறை, வரிப் பிடித்தம் தொடர்பாக வெளியிடும் சுற்றறிக்கையில், முந்தைய ஆண்டு (Previous year) என்று குறிப்பிடுவது நடப்பு நிதியாண்டைத்தான். அதாவது, தற்போதைய நிதியாண்டு 2017-18. இதற்கான மதிப்பீட்டு ஆண்டு (Assessment Year) 2018-19. மதிப்பீட்டு ஆண்டை மையமாகக் கொண்டு நடப்பு நிதியாண்டு ‘முந்தைய ஆண்டு’ எனக் குறிப்பிடப்படுகிறது. இது பற்றிய தெளிவின்மை காரணமாக முந்தைய ஆண்டில், அதாவது மார்ச் 2017-ல் செய்த மருத்துவச் செலவு, இன்ஷூரன்ஸ் பிரீமியம் போன்றவற்றை நடப்பு ஆண்டு வருமான வரிக்குக் கணக்கிட்டால், அது பிழையான கணக்கீடாக அமையும். இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படும்.
• இதர வருமானம் (Other Income)
சம்பளம் என்ற வரையறையில், தினக்கூலி, கட்டணம், கமிஷன், நிறுவனத்தால் தரப்படும் வீட்டு வசதி, வாகனம் முதலிய வாழ்க்கைத் தேவைகள், சம்பளத்துக்கு ஈடாகத் தரப்படும் லாபத்தொகை, சம்பள முன்பணம், ஓய்வூதியம் முதலானவை அடங்கும். இவைதவிர,
• வேலையில் இருந்துகொண்டு சம்பளம் பெறும் ஒருவர், குடும்ப ஓய்வூதியம் (Famly Pension) பெறலாம். இது இதர வருமானம் என்ற தலைப்பில் வருமான வரிக்குக் கணக்கிடப்பட வேண்டும்.
• ஓய்வூதியம் பெறும் ஒருவர் குடும்ப ஓய்வூதியமும் பெறலாம். இதுவும் இதர வருமானமே.
இவை பற்றிய தகவல்களை, சம்பளம் தரும் அதிகாரிக்குக் கீழ்க்கண்ட சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
‘..... என்கிற நான் மேற்கண்ட விவரங்கள் யாவும் எனது நம்பிக்கை மற்றும் தகவலுக்கு எட்டிய வகையில் உண்மையானவை’ என உறுதி கூறுகிறேன்.
• ஏற்கெனவே வேறு இடத்தில் பணி செய்து சம்பளம் பெற்ற ஒருவர், புதிய இடத்தில் பணியேற்றதும் முந்தைய பணியில் பெற்ற ஊதிய விவரங்களை, சம்பளம் வழங்கும் அதிகாரிக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
• பிரிவு 80C முதல் 80TTA வரையிலான வரிக் கழிவுக்குரிய இனங்கள் குறித்த தகவல்களை, தற்போது தரப்பட்டுள்ள படிவம் எண் 12BB-யில் சம்பளம் வழங்கும் அதிகாரியிடம் கையொப்பமிட்டுச் சமர்ப்பிக்க வேண்டும்.
• இதேபோல், வீட்டுக் கடன் மீதான வட்டிக்கு வரி விலக்குக் கோருபவர், கீழ்க்காணும் விவரங்களைத் தரவேண்டும்.
அ) மொத்த ஆண்டு வாடகை / மதிப்பு
ஆ) உள்ளாட்சி வரி செலுத்திய விவரம்
இ) வட்டிக்கான கழிவுத்தொகை
ஈ) இதரக் கழிவுகள் (இருக்குமானால்)
உ) சொத்து உள்ள முகவரி
• ஊதியத்துடன் வீட்டு வாடகை பெறாத ஊழியர்கள், தாம் வாடகை வீட்டிலிருந்து கொண்டு வாடகையாகக் கொடுத்த தொகைக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.5,000 வரை வாடகைக்கு வரிக் கழிவு பெற, படிவம் 10BA சமர்ப்பிக்க வேண்டும்.
• வரி நிவாரணம் கோருவோர், உரிய விவரத்து டன் படிவம் 10E-யைச் சமர்ப்பிக்க வேண்டும்.
• சம்பளம் தரும் அலுவலர், சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகைக்குப் படிவம் 16-யைப் பெற்று, வரித்தாக்கல் செய்ய வேண்டும்.
• ஆண்டுதோறும் வரித் தாக்கல் செய்து அதன் நகலைப் பத்திரமாக வைத்துக்கொள்வது அவசியம்.
• ரூபாய்க்குச் சரிசெய்தல் (Rounding Off)
வரிக்குரிய வருமானம் (Taxable income) மற்றும் அதற்கான வரிப் பிடித்த தொகை (TDS Amount) ஆகியவற்றை உள்ளது உள்ளபடி குறிப்பிட வேண்டும். உதாரணமாக, வரிக்குரிய வருமானம் ரூ.7,31,012 எனில், அதை ரூ.7,31,010 என எடுத்துக் கொள்ளக் கூடாது. ரூ.7,31,012 என்றே கணக்கிட வேண்டும். இதேபோல், வரித்தொகை ரூ.11,303.20 எனில், ரூ.11,304 என எடுத்துக்கொள்ள வேண்டும். ரூ.11,303 எனக் கணக்கிடக்கூடாது.
• வரிக்கணக்கிடும் முறை
சம்பளம் வழங்கும் அலுவலரே வரிப் பிடித் தத்துக்குப் பொறுப்பேற்கிறார். டி.டி.எஸ் (TDS) பிடித்தமானது, பிரிவு 192-ன் வழிகாட்டு நெறிமுறைப்படி பின்காணும் முறையில் கணக்கிடப்பட வேண்டும்.

1. முதலில் ஊழியரின் முழு நிதியாண்டுக்குமான ஊதியம் மற்றும் நிலுவைகளைக் கணக்கிட்டு வரும் தொகையில், தொழில் வரியைக் கழித்து நிகர சம்பளத்தைக் குறிப்பிட வேண்டும்.
2. நிகர சம்பளத்துடன், ஊழியர் சமர்ப்பித்துள்ள உறுதிமொழிப்படிவத்தில் இதர வருமானம் குறிப்பிடப்பட்டிருந்தால் அதனைக் கூட்டி ஒட்டுமொத்த வருமானம் (Gross Total Income) கணக்கிட வேண்டும். இந்த ஒட்டுமொத்த வருமானத்தில் பிரிவு 24-ன் கீழ்வரும் வீட்டுக் கடன் வட்டியைக் (இருப்பின்) கழிக்கவும். இதைத் தொடர்ந்து, வருமான வரிப் பிரிவு அத்தியாயம் IV A வழங்கும் 80C முதல் 80 U வரையான இனங்களைக் கழித்துவிட்டால், மீதியுள்ள தொகையே வரி விதிப்புக்குரிய (Taxable Income) வருமானமாக நாம் கருதி, அதற்கான வரியைக் கணக்கிட வேண்டும்.
வரி செலுத்த வேண்டியவர், பிரிவு 87-A ன் கீழ் வரித் தள்ளுபடி (Tax Rebate) பெறத் தகுதியானவர் என்றால், தகுதியான வரியைத் தள்ளுபடி செய்துவிட்டு, நிகர வரியை மார்ச் முதல் பிப்ரவரி வரையிலான 12 மாத ஊதியத்தில் சம தவணைகளில் பிடித்தம் செய்ய வேண்டியது சம்பளம் வழங்கும் அலுவலரின் பொறுப்பு.
இத்துடன், பிடித்தம் செய்த வரிக்கு உரிய BIN எனப்படும் (Bill Index Number) பட்டியல் அடையாள எண்ணைக் கருவூலம் / சம்பளக் கணக்கு அலுவலகத்திலிருந்து பெற்று, ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் படிவம் 24Q அறிக்கையை TIN வரி உதவி மையத்துக்குத் (TIN Facilitation centre) தாக்கல் செய்ய வேண்டும். வரிப் பிடித்தத்துக்கான படிவம் 16-யை ஊழியர்களுக்கு வழங்குவதும் சம்பளம் வழங்கும் அலுவலர் செய்ய வேண்டிய காலம் தவறாத கடமையே.
மேற்கண்ட நடைமுறைகளைச் செயல்படுத்தும் போது, தேவையான ஆவண ஆதாரங்களைக் கேட்டுப்பெறும் உரிமை, சம்பளம் தரும் அலுவலருக்கு உண்டு. சந்தேகத்துக்கிடமின்றி வரிப் பிடித்தம் செய்திட, சம்பளம் தரும் அதிகாரி கேட்கும் எந்த ஒரு வரி தொடர்பான ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டியது சம்பளம் பெறுவோரின் கடமை.
இவ்வாறு வழிகாட்டு நெறி பிறழாமல் வரிப் பிடித்தம் தொடர்பான நடைமுறைகளைக் கையாண்டால், அந்த 1.25 கோடிப் பேரில் யாரெல்லாம் வரக்கூடும் என்பது தெளிவாகும். அரசுக்குச் சேரவேண்டிய டி.டி.எஸ் (TDS) வரிப் பிடித்தம் சேதாரமின்றி போய்ச் சேரும்.
அரசுக்கு வரி மூலம் கிடைக்கும் வருமானம் பெருகப் பெருக, பல்வேறு நலத் திட்டங்களை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். எனவே, அரசுக்கு உரிய வரியைக் கட்டுவதில் மட்டும் யாருக்கும், எந்தச் சுணக்கமும் வேண்டாம்.
ஈஸியாக மாறிய இ - ஃபைலிங்!
வருமான வரித் துறையின் வழியாக இ-ஃபைலிங் செய்யும் போது, தொடர்பு தகவல்கள், தன் விவரக் குறிப்புகளைத் தெரிவித்தால்தான் உள்ளே நுழைய முடியும் என்கிற நிலை இதுவரை இருந்தது. இதனால், பலரும் இ-ஃபைலிங் செய்வதற்கு லாகின் செய்ய சிரமப்பட்டனர்.
இந்தப் பிரச்னைக்கு அண்மையில் தீர்வு காணப்பட்டிருக்கிறது. இப்போது இ-ஃபைலிங் செய்ய, கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இனி இ-ஃபைலிங் செய்பவர்களுக்கு எளிதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.