நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

ஏழாவது சம்பள கமிஷன்... அள்ளித் தந்ததா தமிழக அரசு?

ஏழாவது சம்பள கமிஷன்... அள்ளித் தந்ததா தமிழக அரசு?
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழாவது சம்பள கமிஷன்... அள்ளித் தந்ததா தமிழக அரசு?

ப.முகைதீன் சேக்தாவூது

ழாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, மத்திய அரசு வழங்கியுள்ள ஊதியம் உள்ளிட்ட சலுகைகளைத் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அமலாக்கம் செய்திட அமைக்கப்பட்ட அலுவல் குழு சமர்ப்பித்த பரிந்துரையை, அமைச்சரவை ஏற்றுக்கொண்டுவிட்டது. அதற்கான அரசாணையையும் அரசு பிறப்பித்திருக்கிறது.  

ஏழாவது சம்பள கமிஷன்... அள்ளித் தந்ததா தமிழக அரசு?

பரிந்துரையின்படி கிடைக்கும் ஊதிய மேம்பாடு

புதிய ஊதிய உயர்வானது, 1.1.2016 அன்று பெற்றிருந்த ஊதியம் மற்றும் தர ஊதியத்தின் கூட்டுத் தொகையைப்போல் 2.57 மடங்காக நிர்ணயிக்கப்படும். அவ்வாறு நிர்ணயிக்கப்படும் எந்தவொரு பதவிக்குமான அடிப்படை ஊதியமானது ரூ.100-ன் மடங்குகளில் இருக்கும். அதுவும், ஊதிய நிர்ணய அட்டவணைப்படி அமையும். இதுதான் அடிப்படை. இதன்படி, ஓர் எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்.

1.1.2016 அன்று அடிப்படை ஊதியம் + தர ஊதியமாக (18,000+4,800) ரூ.22,800-யைப் பெற்றிருந்த, ஒரு துணை வணிக வரி அலுவலரின் அடிப்படை ஊதியமானது ரூ.22,800 X 2.57 என்கிற கணக்கின்படி, ரூ.58,596-ஆக இருக்கும். எனவே, இந்த அலுவலருக்கு ரூ.59,100-க்குக் குறையாமல் ஊதியம் நிர்ணயம் செய்யப்படும். அதாவது, 1.1.2016 அன்று, இவரது ஆண்டு ஊதிய உயர்வு நாள் 1.10.2016 என வைத்துக்கொண்டால், ரூ.59,100-க்கு மூன்று சதவிகித ஊதிய உயர்வுத் தொகை ரூ.1,800-ஆக இருக்கும். 1.10.2016-ல் இவரது ஊதியம் 59,100+1,800=60,900-ஆக உயரும்.

இவரது அடுத்த ஊதிய உயர்வு நாள் 1.10.2017. எனவே, அந்தத் தேதியில் மீண்டும் மூன்று சதவிகித ஊதிய உயர்வாக ரூ.1,800 சேர்க்கப்பட்டு, இவரது அடிப்படை ஊதியம் 1.10.2017 அன்று ரூ.62,700-ஆக அமையும்.
இந்த ரூ.62,700-க்கு, புதிய அகவிலைப் படி 5 சதவிகிதமாகும். இவர் தனது அக்டோபர் 2017 மாத ஊதியம் + அகவிலைப் படியாக ரூ.62,700+3,135 = 65,835 பெறுவார். இத்துடன் புதிய வீட்டு வாடகைப் படி, மருத்துவப் படி, நகர ஈட்டுப் படி முதலானவை சேரும். இதுவே தற்போதைய நிலை.

அதாவது, அடிப்படை ஊதியமும், ஊதிய உயர்வுத் தொகையும் ரூ.100-ன் மடங்குகளாக இருக்கும். எனவே, கணக்கிடும்போது ரூ.49 வரையிலான தொகை விடுபட்டு விடும். 50 ரூபாயும் அதற்கு மேலும் உள்ள தொகை அடுத்த நூறு ரூபாய்க்குக் கொண்டு செல்லப்படும். ரூ.18,040 என்பது ரூ.18,000 என்றே எடுத்துக்கொள்ளப்படும். ரூ.18,050 என்பது ரூ.18,100 எனக் கணக்கிடப்படும்.

குறைந்தபட்ச ஊதியம்

மத்திய அரசு, குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக ரூ.18,000 வழங்கிவரும் நிலையில், தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ள குறைந்த பட்ச ஊதியம் ரூ.15,700 என உள்ளதே என்ற கேள்வி எழலாம். அதற்கான விடையானது பின்வருமாறு...

அரசுப் பணியின் பணிப் பிரிவுகள் A, B, C, D என நான்கு பிரிவாக உள்ளன. இவற்றுள் A, B, C, ஆகியவை மேம்பட்ட பணிகள் (Superior service) வகையையும், பிரிவு D என்பது அடிப்படை பணி (Basic Service) வகையையும் சேர்ந்தது. அலுவலக உதவியாளர், காவலர் (watchman) போன்றோர் இந்த D பிரிவில் அடங்குவர். மத்திய அரசு, கடந்த ஊதியக் குழு அமலாக்கத்தின்போது D பிரிவை நீக்கிவிட்டது. A, B, C பிரிவுகளை மட்டுமே கொண்டுள்ளது.

ஆனால், தமிழக அரசு, அடிப்படைப் பணியாளர்களின் அவசியம் கருதி D பிரிவைத் தொடர்ந்து வைத்துள்ளது. எனவே, D பிரிவுக்கான குறைந்தபட்ச ஊதியம்தான் ரூ.15,700. அதன் கணக்கீடு பின்வருமாறு... 

1.1.2016 அன்று D பிரிவு ஊழியரின் குறைந்த பட்ச ஊதியம் 4,800+1,300=6,100. இதற்கான புதிய ஊதியம் 6,100x2.57=15,700. மத்திய அரசின் C பிரிவு ஊழியருக்கான முந்தைய ஊதியம் 5,200+1,800= 7,000. இதற்கான புதிய ஊதியம் 7,000x2.57 = 18,000.

நிலுவைத் தொகை

சென்ற ஊதியக் குழு நோஷனலாக (Notional அதாவது, காகிதக் கணக்குப்படி) 1.1.2006 முதலாக வும், பணப் பயன் 1.1.2007 முதலாகவும் நிலுவைத் தொகை தரப்பட்டது. தற்போது, 1.1.2016 முதல் நோஷனலாக வழங்கப்பட்டு, பணப் பயன் 1.10.2017 முதல் வழங்கப்படுவதால், நிலுவைத் தொகை இருக்காது.

ஓய்வுபெற்றவர்

பணப் பயன் 1.10.2017 என அறிவிக்கப் பட்டுள்ளதால், 1.1.2016 முதல் 30.9.2017 வரை ஓய்வு பெற்றோர், தமக்குச் சேர வேண்டிய பணிக் கொடை, தொகுப்பு ஓய்வூதியம், விடுப்பு ஊதியம் போன்றவை புதிய கணக்கீட்டின்படி கிடைக்குமா என்று கவலைப்படக்கூடும். அந்தக் கவலை தேவையற்றது. ஏனெனில், கடந்த ஊதியக் குழு அமலாக்கம் பெற்றது 1.1.2006 அன்று, பணப் பலன் ஆணையிடப்பட்டது 01.01.2007 அன்று.

என்றாலும், 1.1.2006 முதல் 31.12.2006 வரை ஓய்வு பெற்றவர்களுக்கும், நோஷனல் ஊதியத்தின் அடிப்படையிலேயே மேம்படுத்தப்பட்ட ஓய்வூதியப் பலன்கள் ரொக்கமாக
வழங்கப்பட்டன.

இதேபோல், தற்போதைய பணப் பலன் 1.10.2017 முதல் என்றாலும், 1.1.2016 முதல் 30.9.2016 வரை ஓய்வுபெற்றிருந்தாலும், ஓய்வூதியப் பலன்கள் புதிய ஊதியத்தின் அடிப்படையிலேயே ரொக்கமாக வழங்கப்படக்கூடும்.

குடும்ப ஓய்வூதியப் பலன்கள்

1.1.2016 முதல் 30.09.2017 வரையிலான காலத்தில், பணியில் இருக்கும்போது இறந்துபோன ஊழியர்களின் குடும்பத்தினருக்குச் சேர வேண்டிய பணிக்கொடை மற்றும் விடுப்பு ஊதியமும் கருத்தியல் ஊதியத்தின் அடிப்படை யிலேயே ரொக்கமாக வழங்கப்படக்கூடும்.

குறைகளைக் களையும் குழு

ஊதிய நிலைகளின் குறைபாடுகளைக் களைய சென்ற முறை அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு அறிக்கையின்படி, பல்வேறு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு ஊதிய ஏற்றமுறை (Pay Scale) மற்றும் தர ஊதியம் ஆகியவை மாற்றி அமைக்கப்பட்டன. 

தற்போது, தர ஊதியம் நீக்கப்பட்டுவிட்டதாலும், அனைத்துப் பதவியினருக்கும் ஒரே சீராக 2.57 மடங்கு என்ற ஊதிய நிர்ணயக் காரணி அமைக்கப் பட்டுள்ளதாலும், சீரமைப்பு என்று வந்தால், அது அனைவருக்கும் ஒரே சீராகவே இருக்கும்.

வீட்டு வாடகைப் படி

வீட்டு வாடகைப் படிக்கான தமிழக அரசின் அட்டவணை, ஐந்து விதமான ஊர் நிலைகளைக் (Civic Status) கொண்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் ஊர் நிலை மூன்று பிரிவுகளை மட்டுமே கொண்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர் தற்போது பெறும் குறைந்தபட்ச வீட்டு வாடகைப் படி ரூ.120. மத்திய அரசின் குறைந்தபட்ச வீட்டு வாடகைப் படி ரூ.1,800. எனவே, வீட்டு வாடகைப் படி இன்னும் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

தமிழக அரசாங்கத்தின் இந்தச் சம்பள உயர்வு மிக அதிகம் என்றோ, மிகக் குறைவு என்றோ சொல்லி விட முடியாது. அள்ளிக் கொடுக்கவேண்டிய இடத்தில் கிள்ளியாவது தந்திருக்கிறார்களே என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்!