நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

ஜி.எஸ்.டி... 22 மாற்றங்களால் என்ன நன்மை?

ஜி.எஸ்.டி... 22 மாற்றங்களால் என்ன நன்மை?
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.எஸ்.டி... 22 மாற்றங்களால் என்ன நன்மை?

ஜி.கார்த்திகேயன் ஆடிட்டர், கோவை

ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் பெரும்பாலான தொழில் நிறுவனங்களும், வணிகர்களும் அது குறித்த தெளிவில்லாமலே இன்னும் இருந்து வருகின்றனர். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள்தான். இந்தியாவில் பல இடங் களிலிருந்து பல்வேறு அமைப்புகள் விடுத்த கோரிக்கை,  ஜி.எஸ்.டி கவுன்சிலில் செவிசாய்க்கப் பட்டு 22 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த முடிவுகள் என்னவென்று பார்ப்போம்.  

ஜி.எஸ்.டி... 22 மாற்றங்களால் என்ன நன்மை?

தொகுப்பு முறை (Composition Scheme)

சிறு வணிகர்கள், தொழில் அமைப்புகள் தங்களது விற்றுமுதல் ரூபாய் 75 லட்சத்துக்குள் இருக்கும்பட்சத்தில், வணிகர்கள் தங்களின் விற்பனையில் 1%, உற்பத்தியாளர்கள் 2%, சிறு உணவு விடுதி அமைப்பினர் 5% செலுத்தினால் போதுமானதாக இருந்தது. தற்போது இந்தத் தொகை ரூபாய் 75 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, இவர்கள் தங்களின் விற்பனையில் வரி வசூலிக்க முடியாது. மேலும், இவர்கள் வாங்கும் பொருள்களின் உள்ளீட்டு வரியையும் (Input Tax Credit) எடுக்க முடியாது. இவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரிக் கணக்கு தாக்கல் செய்தால் போதுமானது.

மாநிலங்களுக்கிடையே வர்த்தகம்


ஜி.எஸ்.டி சட்டப்படி ரூ.20 லட்சம் வரை மொத்த விற்பனை உள்ளவர்கள் பதிவு செய்ய வேண்டியதில்லை. ஆனால், இதுவே வெளி மாநிலங்களில் வர்த்தகம் செய்பவர்களாக இருக்கும்பட்சத்தில் இந்த வரம்பு பொருந்தாது என்று கூறப்பட்டிருந்தது. அதாவது, தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு ஒருவர் ரூ.3 லட்சத்துக்கு வர்த்தகம் செய்தாலும் அவர் பதிவு செய்வது அவசியம் என்ற நடைமுறை சிரமமாக இருந்தது.

தற்போது இந்த விதிமுறை தளர்த்தப்பட்டு, இந்தியாவுக்குள்  எந்த மாநிலங்களுக்கு விற்பனை செய்தாலும் மொத்த விற்பனை ரூ. 20 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், பதிவு செய்ய வேண்டிய தில்லை என்று மாற்றம் செய்திருப்பது சிறு தொழில்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஆனால், தற்போது சேவை என்று மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொருள்களுக்கும் என்ற உள்ளர்த்தத்துடன் எடுத்துக் கொள்ளலாம். 

ஜி.எஸ்.டி... 22 மாற்றங்களால் என்ன நன்மை?



ரூ.1.5 கோடி வரை வரி தாக்கல்


தற்போதைய முறையில், சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்கள் மாதத்துக்கு மூன்று  முறை வரி தாக்கல் செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். இந்தச் சிரமத்தை நீக்கும் விதமாக ரூ.1.5 கோடிக்குள் வியாபாரம் செய்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரியைச் செலுத்தி, வரிக் கணக்கு தாக்கல் செய்தால் போதுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டு முதல் நடைமுறைக்கு வரும்.

எதிர்முறை வரிவிதிப்பு (Reverse Charge Mechanism)

தற்போதைய முறையில், பதிவு செய்துகொண்ட வரிதாரர், பதிவு செய்துகொள்ளாத வரிதாரரிடம் பெறும் பொருள் அல்லது சேவைப் பெறும்போது அதற்கான வரியை முதலில் செலுத்திவிட்டு, பிற்பாடு உள்ளீட்டு வரியாக திரும்ப எடுத்துக் கொள்ள முடியும். இந்த நடைமுறை சிறு அமைப்புகளுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி யிருந்ததன் விளைவாக, பதிவு செய்துகொள்ளாத நபர்களிடம் எந்தப் பரிவர்த்தனையும் செய்ய வேண்டாம் என பெரிய கம்பெனிகள் முடிவெடுத்து, பின்பற்ற ஆரம்பித்தன. தற்போது இந்த எதிர்மறை வரிவிதிப்பானது 31/03/2018 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அட்வான்ஸுக்கு வரிவிதிப்பு

தற்போதைய ஜி.எஸ்.டி முறையில் பொருள்கள் மற்றும் சேவைகளுக்காகப் பெறப்படும் அட்வான்ஸ் தொகைக்குப்  பெறப்பட்டவுடனே வரிவிதிப்பு நிகழ்வு ஏற்படுகிறது. இது நடைமுறை மூலதனத்தைப் பலவகையில் பாதித்துள்ளது. எனவே, இதைத் தவிர்க்கும் விதமாக சிறு தொழில் அமைப்புகளுக்கு, அதாவது ஆண்டுக்கு ரூபாய் 1.5 கோடி வரை விற்பனை உள்ளவர்கள் அட்வான்ஸ் பெறும்போது, வரிவிதிப்பு நிகழ்வுக்கு உள்படாமல் அவர்கள் பொருள்களை சப்ளை செய்யும்போது வரி செலுத்தினால் போதுமானது என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொருள்களுக்கான போக்குவரத்து நிறுவனங்கள் (Goods Transport Agencies - GTA)


தற்போது பதிவு செய்துகொள்ளாத நபர் களுக்குச் சேவை அளிக்கும்போது ஜி.எஸ்.டி-யிலிருந்து வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.   

ஜி.எஸ்.டி... 22 மாற்றங்களால் என்ன நன்மை?

மின்னணு முறை ரசீது (E-way Bill)

மின்னணு முறை ரசீதானது தங்களைப் பாதிக்கும் என தொழில் செய்வோரில் பெரும்பாலோனோர்  அச்சம் தெரிவித்திருந்தனர். இதுவும் 01/04/2018 வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியாளர்களுக்கு

ஏற்றுமதியாளர்கள் உள்ளீட்டு வரியைத் திரும்பப் பெற தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜூலை மாதத்துக்கான உள்ளீட்டு வரியைத் திரும்பப் பெறுவது 10/10/2017 அன்றும், ஆகஸ்ட் மாதத்துக்கான உள்ளீட்டு வரி 18/10/2017 அன்றும் திரும்பத் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உபரி ஏற்றுமதியாளர்களுக்கு

உபரி ஏற்றுமதியாளர்கள் (Merchant Exporters) உள்நாட்டு சப்ளையர்களிடமிருந்து ஏற்றுமதிக் காகப் பெறும் பொருள்களுக்கோ, சேவைகளுக்கோ 0.1% வரி செலுத்தினால்போதும் என்று தளர்த்தப்பட்டுள்ளது.

மின்னணு பணப்பை (E-Wallet )

இ-வாலட் என்கிற புதிய திட்டம் 01/04/2018- லிருந்து நடைமுறைபடுத்தப்படவுள்ளது. இதன் மூலம் நடைமுறை மூலதன பாதிப்பு வெகுவாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 158 நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் ஒரே வரிவிகிதம்தான் இருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் நான்கு வரிவிகிதங்கள் நிர்ணயிக்கப் பட்டிருக்கின்றன.

இவற்றில் அத்தியாவசியமான பல பொருள்கள், ஆடம்பர பொருள்களுக்குண்டான அதிகபட்ச வரிவிகிதத்தை பெற்றிருக்கின்றன. அவை  தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. சில பொருள்களின் முந்தைய வரிவிகிதங்களையும் தற்போதைய வரிவிகிதங்களையும் மேலே உள்ள அட்டவணையில் பார்க்கவும்.

17 வகை தேசிய வரிகளையும் 29 மாநில வரிகளையும் உள்ளடக்கி பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட இந்தியா போன்ற நாட்டில் நடைமுறைபடுத்தப்படும்போது, தேவை மற்றும் உபயோக அடிப்படையில் மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இதைக் கவனத்தில் கொண்டு, அடுத்துவரும் கவுன்சில் கூட்டத்திலும் தேவையின் அடிப்படையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கலாம்.