
தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in
மென்தா ஆயில்
மென்தா ஆயில் பற்றிச் சென்ற வாரம் சொன்னது... “மென்தா ஆயில், 1228 என்ற தடைநிலையை உடைத்தால் மிகப் பெரிய ஏற்றம் வரலாம்.”

கடந்த திங்களன்று, 1228 என்ற எல்லையைத் தாண்ட காளைகள் முயற்சியெடுத்தன. ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. அந்த நாள், ஒரு ஸ்பின்னிங் டாப் என்ற உருவமைப்பில் முடிந்தது. ஸ்பின்னிங் டாப் என்பது, கேண்டில் ஸ்டிக் உருவமைப்பில் ஒருவகை. இந்த வகை கேண்டில்கள் காளைகளுக்கும், கரடிகளுக்கும் இடையே வலுவான சண்டை நடப்பதைக் காட்டுகிறது. அடுத்து செவ்வாயன்றும் காளைகள் ஒரு 1228-யைத் தாண்ட முயற்சி எடுத்தன. அதுவும் தோல்வியடைந்து, இரண்டாம் நாளாக மீண்டும் ஒரு ஸ்பின்னிங் டாப் தோன்றியது. இந்த இரண்டு ஸ்பின்னிங் டாப்பும் நமக்குக் கொடுக்கும் ஒரு அடையாளம் என்னவென்றால், காளை களுக்கும், கரடிகளுக்கும் இடையே மிக வலுவான சண்டை நிகழ்ந்து வருகிறது. இதில் யாருக்கு வெற்றியோ, அந்தத் திசையில் விலை வேகமாக நகரும். அந்த வகையில் புதனன்று காளைகள் தங்கள் வலிமையைக் காட்டின. இதுவரை கரடிகள் வலுவாகத் தடுத்துநிறுத்திய 1228 என்ற எல்லையை, அதிக வால்யூமுடன், ஒரு ஜம்ப் அடித்துத் தாண்டின.
காளைகள் புதனன்று ஒரு ஜம்பில் 1231 என்ற எல்லைக்கும், அடுத்த ஜம்பில் 1237 என்ற எல்லையைத் தொட்டன். கரடிகள், தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு வழிவிட்டன. அதன்பின், மென்தா ஆயில் விலை சிறிது நேரம் பக்கவாட்டு நகர்வில் இருந்துவிட்டு, மீண்டும் ஒரு வலிமையான ஏற்றத்தின் மூலமாக 1247 என்ற எல்லையைத் தொட்டது. அடுத்த ஒருமணி நேரத்தில் காளைகள் மீண்டும் வலிமையாக ஏறி, 1257 என்ற எல்லையை தொட்டன. அதன்பின் காளைகள் தங்கள் வேலை முடிந்துவிட்டது என்பதுபோல் வியாழன் மற்றும் வெள்ளி அன்று ஒதுங்கிவிட்டன. அதன்பின் மென்தா ஆயில் விலை, அதிகபட்சமாக 1264-யைத் தொட்டுவிட்டு மெள்ள மெள்ள 1228 என்ற எல்லையை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.

இனி என்ன செய்யலாம்?
தற்போது 1128-யைத்தாண்டி ஏறியபிறகு, 1264 என்ற எல்லையில் தடுக்கப்பட்டு மீண்டும் கீழே உள்ள எல்லையான 1228-ஐ நோக்கி வந்துகொண்டு இருக்கிறது. மென்தா ஆயிலின் 1228 என்ற முந்தைய தடைநிலை, இனி ஆதரவு எல்லையாக மாறலாம். மேலே 1248 என்பது உடனடித் தடை நிலையாக உள்ளது. எந்த எல்லை உடைக்கிறதோ, அந்தத் திசையில் வியாபாரம் செய்யலாம்.

காட்டன்
காட்டன் பற்றிச் சொல்லும்போது அது ஒரு சிக்கலான சூழலில் உள்ளது. ஏறவும் முடியாமல், இறங்கவும் முடியாமல் ஒரு பக்கவாட்டு நகர்வில் இருந்துவருகிறது. ஒரு சிக்கலுக்குத் தீர்வு வரும் போது என்ன நடக்குமோ, அதுதான் காட்டன் விலைக்கும் நடந்தது.
சென்ற வாரம் 18700 என்ற எல்லை உடைக்கப்பட்டால், வலுவாக ஏறும் என்று கூறி யிருந்தோம். அதுவும் நடந்தது. 18700 என்ற எல்லையைத் தாண்டி 18850, 19050 என்ற எல்லைகளையும் தொட்டது. இந்த வலிமையான ஏற்றம் என்பது சென்ற வாரம் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் நடந்தது. ஆனால், ஏற்றம் அதோடு நிற்காமல், தொடர்ந்து ஏறி புதனன்று 19350 என்ற உச்சத்தைத் தொட்டது. அதன்பின் ஒரு க்ளைமாக்ஸ் போல், ஒரு கேப் அப் முறையில் வியாழனன்று 19470 என்ற எல்லையில் தொடங்கி, 19600 வரை சென்று பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. மேலே 19600-லிருந்து 19000 என்ற எல்லைக்கு வீழ்ந்தது. கேப் ஆகும்போது, வலிமையாக இறங்க வாய்ப்புள்ளது. எனவே, கவனமாக இருப்பது அவசியம்.
ஆனால், விற்று வாங்குபவர்களுக்கு அது நல்லதொரு லாபத்தைக் கொடுக்கும். இப்போது மெள்ள மெள்ள இறங்கி, 18700 என்ற எல்லையை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது.
இனி என்ன செய்யலாம்?
முன்பு தடைநிலையாக இருந்த 18700 என்ற தடைநிலை, தற்போது ஆதரவாக மாறலாம். எனவே, 18700 என்ற எல்லையை ஆதரவு எடுத்து மேலே போகும்போது வாங்கி விற்காலாம். ஒருவேளை, 18700-யை உடைத்து இறங்கினால், விற்று வாங்கும்முறையில் வியாபாரம் செய்யலாம்.