நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

கனவு இல்லம்... கட்டுமானச் செலவைக் குறைக்கும் வழிகள்!

கனவு இல்லம்... கட்டுமானச் செலவைக் குறைக்கும் வழிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கனவு இல்லம்... கட்டுமானச் செலவைக் குறைக்கும் வழிகள்!

கனவு இல்லம்... கட்டுமானச் செலவைக் குறைக்கும் வழிகள்!

சிறிய வீடாக இருந்தாலும் சொந்தமாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருக்குமான ஆசை. தங்கள் கனவு வீட்டை உருவாக்குவதற்காகத் தேடித் தேடி மனை வாங்கிப் போட்டும் பலர், கட்டுமானச் செலவுகளைப் பார்த்து வீடு கட்டும் எண்ணத்தையே கைவிட்டுவிடுகிறார்கள்.  

கனவு இல்லம்... கட்டுமானச் செலவைக் குறைக்கும் வழிகள்!

ஒரு வீட்டைக் கட்ட அனுமதி வாங்குவதில் ஆரம்பித்து, மணல், செங்கல், கம்பி, சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் மற்றும் எலெக்ட்ரிக்கல், போர்வெல் அமைத்தல், அழகுபடுத்துதல் என்று எவ்வளவோ செலவுகள் உள்ளன. கடன் வாங்கினாலும் நம் கையிலிருந்து குறிப்பிட்ட தொகையை நாம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது என்பதால், கடன் வாங்கி வீடு கட்டவும் பலர் தயக்கம் காட்டுகிறார்கள். அதையும் தாண்டி வீடு கட்ட ஆரம்பித்துவிட்டால் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்று பயப்படுகிறார்கள்.  

ஆனால், கட்டுமான செலவுகளைக் குறைக்கும் பல்வேறு தொழில் நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதன் மூலம், நிச்சயமாக செலவைக் கட்டுப்படுத்தி, தங்களின் சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்கிறார்கள் கட்டுமானத் துறையைச் சார்ந்தவர்கள். 

எல்லோருக்கும் வீடு என்பது  சாத்தியமில்லாத ஒன்று அல்ல எனச் சொல்லும் கடலூரைச் சேர்ந்த கட்டுமான நிபுணர் ரவிச்சந்திரன், கட்டுமான செலவுகளைக் குறைக்கும் வழிகளையும் விளக்கமாக எடுத்துச் சொன்னார். 

“கட்டுமான முறைகளில் புதுமையையும், கட்டுமானப் பொருள்களில் சிக்கனத்தையும் கடைப்பிடித்தால் நிச்சயம் எல்லோரும் குறைந்த செலவில் வீட்டைக் கட்டி முடிக்க முடியும்.

 உதாரணமாக, 300 சதுர அடியில் வழக்கமான முறையில் வீடு கட்டும்போது ரூ. 3 முதல் 4 லட்சம் வரை செலவாகும். ஆனால், நான் சொல்லும் முறையில் வீடு கட்டினால் ரூ.2 லட்சத்துக்குள் வீட்டைக் கட்டி முடித்துவிடலாம்.

அடித்தளம்தான் அடிப்படை

முதலில், அடித்தளத்தை எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு வீட்டுக்கும் அடித்தளம் என்கிற அஸ்திவாரமே அடிப்படை. சில அடிகளுக்குப் பள்ளம் எடுத்து அரை ஜல்லி, பெரிய ஜல்லி யெல்லாம் போட்டு, கருங்கல்லை அடுக்கி சிமென்ட் கலவைப் போட்டு அஸ்திவாரத்தை உருவாக்குவதுதான் வழக்கம். இந்த முறையில் அடித்தளம் தயாராவதற்கு 10 நாள் வரை ஆகும்.

ஆனால் 10, 15 அடிக்குக் குழி எடுத்து ஃபைல் ஃபவுண்டேஷன், ப்ளிந்த் பீம் மற்றும் தூண்கள் ஆகியவற்றை ஒரே மோல்டில் போடும் கட்டுமான முறையால், இரண்டே நாளில் வீட்டுக்கான அடித்தளம் தயாராகிவிடும். ஒரே மோல்டிங்கில் ஒரே நேரத்தில் போடும்போது அடித்தளத்துக்கு உள்வலிமையும் அதிகமாகக் கிடைக்கும்.

சூப்பர் சுற்றுச்சுவர்

அடுத்ததாக, சுற்றுச்சுவரைக் குறைந்த செலவில் எழுப்புவது எப்படி என்று பார்ப்போம். செங்கல், சிமென்ட் கலவை மூலம்தான் சுற்றுச்சுவர் அமைக்கிறோம். ஆனால், செங்கலுக்குப் பதிலாக கான்கிரீட் சாலிட் ப்ளாக் கல்லைப் பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்தி சுற்றுச்சுவர் அமைத்தால் அது பலமாக இருக்குமா, பல ஆண்டுகள் தாங்குமா, ஒன்றுக்கு இரண்டு மாடி கட்ட அது உதவுமா என்றெல்லாம் யோசிக்கிறார்கள். 

கனவு இல்லம்... கட்டுமானச் செலவைக் குறைக்கும் வழிகள்!

ஆனால், கான்கிரீட் சாலிட் ப்ளாக்கைப் பயன்படுத்தி சுற்றுச்சுவர் அமைப்பதால் கூடுதல் அட்வான்டேஜ் இருக்கிறது. செங்கல் சுவரை ஒரே நேரத்தில் ஒரு மீட்டர் உயரத்துக்கு மேல் அடுக்க முடியாது. அப்படி அடுக்கினால் சாய்ந்துவிடும். ஆனால், சாலிட் ப்ளாக் கல்லை ஒரே நேரத்தில் 15 கல் வரை உயர வாக்கில் எழுப்பிக் கட்டலாம். ஒரு சாலிட் ப்ளாக் கல் ஐந்து முதல் ஆறு செங்கல்களுக்குச் சமம். 

எனவே, சாலிட் பிளாக் கல்லைப் பயன்படுத்தினால், விரைவில் வேலை முடியும். அதோடு, லேபர் எண்ணிக்கையும் குறைவாகவே தேவைப்படும். கட்டுமான நேரம் குறைகிறது. லேபர் எண்ணிக்கை குறைகிறது. இவை இரண்டும் குறைந்தாலே பெருமளவு செலவு குறையும். 300 சதுர அடி வீட்டுக்கு 1,000 சாலிட் ப்ளாக் கல் வரை தேவைப்படலாம். இந்த சாலிட் ப்ளாக் கல், சோதனைக் கூடத்தில் சோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுபவை என்பதால் தரத்திலும் வலிமையிலும் குறைவில்லை.
மேலும், சாலிட் ப்ளாக் கல்லைப் பயன்படுத்தினால், செங்கல் பயன்படுத்தும்போது செலவாகும் சிமென்ட் அளவைக் காட்டிலும், குறைவாகவே செலவாகும்.பூச்சு வேலையின்போதுகூட சாலிட் ப்ளாக் கல்லைக்கொண்டு கட்டும்போது சிமென்ட் பூச்சைக் கொஞ்சம் குறைவாகப் பூசலாம். செங்கல்லைப் பயன்படுத்திக் கட்டினால், 170 மூட்டை வரை சிமென்ட் செலவாகும். சாலிட் ப்ளாக் கல்லைப் பயன்படுத்தினால், 110 மூட்டைதான் செலவாகும். அதுமட்டுமல்லாமல், சாலிட் ப்ளாக் கல்லை ரீயூஸ் செய்யவும் முடியும்.

சாலிட் ப்ளாக் கல் எண்ணிக்கையில் குறைவு என்பதால் ஏற்றுதல், இறக்குதல் வேலை விரைவில் முடியும். கூலியும் குறையும். சிமென்ட் பயன்பாடும் குறைவாக இருக்கும் என்பதால், அதற்கான ஏற்றுதல், இறக்குதல் செலவும் குறைகிறது.

கதவும், ஜன்னலும்

கதவு, ஜன்னல் போன்றவற்றை மரத்தால் செய்வதாக இருந்தால், அதிகம் செலவாகும். அந்தச் செலவைச் செய்ய முடிந்தவர்கள் தாராளமாக மரத்தால் செய்யலாம். அந்தச் செலவைச் செய்ய முடியாதவர்கள் வீணாக நிதிச்சுமைக்கு ஆளாகாமல் இருக்க, மரத்துக்குப் பதிலாக இரும்பில் கதவு ஜன்னல்களை வாங்கிப் பயன்படுத்தலாம்.

ஸ்லாப் டெக்னாலஜி

கீழ்தளம் மட்டும் போதுமென்றால், கூரையிலும் செலவைக் குறைக்கலாம். ‘கட்லின்டல் சன்சைட்’ போட்டபிறகு ஸ்லாப் டெக்னாலஜி மூலம் கூரையை காஸ்டிங் செய்துகொள்ளலாம். மேலே இன்னொரு தளம் கட்டப் போகிறோம் என்றால், அடித்தளத்துக்குப் போட்ட அதே முறையில் மோல்டிங் டெக்னாலஜியில் ப்ளிந்த பீம் போட்டு எழுப்பலாம். மேலே எழுப்பப்படும் எடைக்கு ஏற்ப கூரை திக்னஸ் இருக்க வேண்டும். 

இந்த முறையில் செலவு குறைவு என்பதோடு வீட்டின் அமைப்பு பாதுகாப்பாகவும் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறோம். பல வீடுகளை இந்த முறையில் கட்டி முடித்திருக்கிறோம். இந்த முறையில், வீட்டின் எடையானது ஒரே மாதிரி பரவலாக இருக்கும். 

தமிழ்நாடு அரசு வீடு வழங்கும் திட்டம், பிரதம மந்திரி அவாஸ் யோஜனா போன்ற பல்வேறு அரசு திட்டங்கள் மூலம் வழங்கப்படும் வீடுகள் கட்டப்படாமல் இருப்பதற்குக் காரணம், கட்டுமான செலவைப் பார்த்து மக்கள் பயப்படுவதுதான். ஆனால், இங்கே சொல்லப்பட்டுள்ள கட்டுமான முறைகளைப் பயன்படுத்தும்போது, அரசு கொடுக்கும் மானியத்திலேயே வீட்டைக் கட்டி முடிக்க முடிகிறது. கூடுதலாகப் பயனாளர்கள் தங்கள் கையிலிருந்து பணம் செலவு செய்ய வேண்டியிருக்காது. ஏழை எளிய மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.  

கனவு இல்லம்... கட்டுமானச் செலவைக் குறைக்கும் வழிகள்!

கட்டுமான செலவுகளைக் குறைக்கக்கூடிய மேலும் பல நுணுக்கங்களைப் பற்றி பிளாட் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரும் பில்டருமான ராமதுரையிடம் பேசியபோது விளக்கமாக எடுத்துச்சொன்னார்.

மெட்டீரியல்

“வீடு கட்டுமானத்தில் செலவைக் குறைக்க நாம் பயன்படுத்தும் மெட்டீரியல்களில்தான் சமரசம் செய்ய முடியும். நம்முடைய நிதிநிலையைப் பொறுத்து, நம்முடைய தேவைக்கேற்ப நமது கட்டுமானச் செலவுகளை நாம் திட்டமிட வேண்டும்.  ஒரேயடியாக வீட்டுக்குத் தேவையான மொத்த மெட்டீரியல்களையும் வாங்கிவிடக்கூடாது. மழை, லேபர் பிரச்னை போன்ற ஏதோ சில காரணங்களால் கட்டுமானம் தாமதமாக நேரிடலாம். அந்தச் சமயங்களில் சிமென்ட், கம்பி மற்றும் செங்கல் போன்றவை சேதமாக வாய்ப்புண்டு. எனவே, கட்டுமான வேலைகளுக்கேற்ப  அவ்வப்போது பொருள்களை வாங்கிக்கொள்ள வேண்டும்.

பேஸ்மென்ட்டைப் பொறுத்தவரை, பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. ஆனால், பேஸ்மென்ட்தான் வீட்டின் அஸ்திவாரம் என்பதால், அதில் பெரும்பாலும் சமரசம் செய்துகொள்வதைத் தவிர்க்கவும். கூரை அமைப்பதில் வழக்கமாக நான்கரை அங்குலத்துக்கு சென்ட்ரிங் செய்து அமைப்பார்கள். செலவைக் குறைக்க வேண்டும் என்றால், தடிமனைக் குறைத்து மூன்றரை அங்குலத்துக்குப் போடலாம். அதன் மேல் வெதரிங் கோட் போட்டுவிட்டால் போதும்.

அதேபோல், எலெக்ட்ரிக்கல் இணைப்புகள் கொடுப்பதில் சிக்கனப்படுத்தலாம். தேவையான அளவுக்கு மட்டும் இணைப்புகளைக் ‌கொடுக்கலாம். அலங்கார விளக்குகள் போன்றவற்றைத் தவிர்க்கலாம். பணம் இருப்பவர்கள் தரையில் டைல்ஸ் பதிப்பார்கள். கடன் வாங்கி டைல்ஸ் பதிப்பது தேவையற்றது. 

பெரிய கம்பெனி பிராண்ட் கம்பிகள் தரம் உயர்ந்ததாக இருக்கும்தான். ஆனால், செலவைக் குறைக்க ஐ.எஸ்.ஐ, ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்ற கம்பிகள் எந்த நிறுவனமாக இருந்தாலும் பயன்படுத்தலாம். பெரிய கம்பெனிகளின் கம்பிகளைத்தான் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை.பிராண்டட் கம்பிகளுக்கும் சாதாரண கம்பெனி கம்பிகளுக்கும் கிலோவுக்கு 5 முதல் 6 ரூபாய் வித்தியாசம் இருக்கும்.

மணலுக்குப் பதிலாக, கற்களை உடைத்து உருவாக்கப்படும் எம் சாண்ட் (M-Sand) மண்ணைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நாம் ஆற்று மணல் பயன்பாட்டைக் குறைத்துச் சுற்றுச்சூழலுக்கு உதவியாக இருக்கலாம். எம் சாண்ட், கழுவியது, கழுவாதது என்று இரண்டு வகையில் கிடைக்கிறது. கழுவியது ஒரு யூனிட் 20 ஆயிரம், கழுவாதது ஒரு யூனிட் ரூ.12-14 ஆயிரம். முடிந்தவரை நமக்கு அருகிலிருந்தே பொருள்களை வாங்குவது போக்குவரத்துச் செலவை மிச்சப்படுத்தும்.

மெட்டீரியல் பயன்பாடு குறைந்தால், ஆள்களின் தேவை குறைவதோடு, கட்டுமானப் பணிக்கான நாள்களும் குறையும். லேபர் செலவு குறைந்தாலே, கட்டுமானச் செலவில் கணிசமான  அளவு குறையும்.

ஆனால், வீட்டின் ஒவ்வொரு பகுதி கட்டுமானமும் வலுவடைவதற்குத் தேவைப்படும் கால அவகாசத்தைத் தரவேண்டும். கட்டுமானத்துக்கான ப்ரீத்திங் ஸ்பேஸ் நாம் கொடுத்தால்தான், அந்த வீட்டுக்கு நல்ல ஆயுள் கிடைக்கும்” என்றார்.

இனி, புதிதாக வீடு கட்டுபவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, குறைந்த செலவில் மனநிறைவு தரும் வீட்டைக் கட்டலாமே!

- ஜெ.சரவணன்

படம்: தே.அசோக் குமார் 

25% வரை செலவு குறையும்!

ட்டுமானச் செலவுகளைக் குறைக்கும் மேலும் சில முறைகள்... 

அடித்தளம்: அடித்தளம் அமைப்பதில் பழங்காலத்தில் ஆர்ச் ஃபவுண்டேஷன் முறையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதனால் குறைவான ஆழத்தில் ஃபவுன்டேஷனை உறுதியாக அமைக்கலாம். மேலும், அண்டர் ரீம் ஃபைல் பவுண்டேஷன் முறையிலும் அமைக்கலாம். இதன் மூலம் அடித்தளம் அமைக்கும் செலவில் 20-25 சதவிகிதத்தைக் குறைக்கலாம். 

கூரை: கூரை அமைப்பதில் வழக்கமாக நாம் பயன்படுத்தும் முறை கம்பிகட்டி அதில் சிமென்ட், மண் மற்றும் ஜல்லிக் கலவையை நிரப்பி உருவாக்கும் ஆர்.சி.சி ஸ்லாப் முறை. இந்த முறையில் ஆகும் செலவைக் குறைக்க, நாம் ஃபெர்ரோ சிமென்ட் சேனல், ஜாக் ஆர்ஜ், ஃபில்லர் ஸ்லாப் போன்ற தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தலாம். இதன்மூலம் கான்கிரீட் செலவைக் குறைக்கலாம். மேலும், கூரை அமைப்பதில் ஓடுகள், ரூஃபிங் டைல்ஸ் போன்ற பல்வேறு ரெடிமேட் பொருள்களும் உள்ளன. ஆனால், அவை மழை, புயல் போன்றவற்றின்போது பாதிக்கப்படலாம்.