
BIZ பாக்ஸ்
பொருளாதாரத்தைத் துரிதப்படுத்தத் திட்டம் இருக்கு!
``நமது பொருளாதாரம் வேகமான வளர்ச்சியைக் காண வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். அப்படிச் செய்வதற்கு நாம் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. தற்போதைய நிலையில், நமது பொருளாதாரம் நல்ல வளர்ச்சியைத்தான் கண்டு வருகிறது. என்றாலும், இன்னும் நன்கு வளர்வதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்கலாம். அதற்கான திட்டங்களும் எங்கள் மனதில் இருக்கவே செய்கிறது.

தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கத் தயாராக இருக்கிறோம். இதனை, தொழில் ஊக்குவிப்பு சலுகைகளைத் தர மத்திய அரசு தயாராகி வருவதாக பத்திரிகைகள் எழுதுகின்றன. நான் அப்படி எதுவும் சொல்லவில்லை என்பதே உண்மை’’ என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
பசி இண்டெக்ஸிலும் இந்தியா பின்தங்கியது!
உலக அளவில் பசி தொடர்பான குறியீட்டில், (Global Hunger Index) இந்தியா கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின்தங்கி யிருக்கிறது. கடந்த ஆண்டில் இந்தக் குறியீட்டுப் பட்டியலில் 97-வது இடத்தைப் பிடித்த நம் இந்தியா, இந்த ஆண்டு நூறாவது இடத்துக்குச் சென்றிருக்கிறது. கடந்த 2014-ல் 54-வது இடத்தில் இருந்த நாம், இப்போது 100-வது இடத்தை அடைந்திருக்கிறோம். சரியான அளவில் குழந்தைகளின் உடல் எடை இல்லாதது போன்ற முக்கியமான விவரங்களை அடிப்படையாக வைத்து, இந்தக் குறியீடு வெளியிடப்படுகிறது.

75 வயதிலும் கலக்கும் அமிதாப்!
அமிதாப் பச்சனுக்கு 75 வயதாகிவிட்டது. இந்த வயதிலும் மிகப் பெரிய பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார். ஏறக்குறைய 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, அவர் மூலமாக பிசினஸ் நடந்துகொண்டிருக்கிறது. சினிமா நடிகர்களில் அமிதாப்பிடம் இருக்கும் ஈர்ப்பு சக்தி, வேறு எவரிடமும் இல்லை. ஒன்ப்ளஸ், லக்ஸ், கல்யாண் ஜுவல்லர்ஸ், குஜராத் டூரிஸம், ஜஸ்ட் டயல் எனப் பல நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு அவர்தான் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார். அரசு விளம்பரமான ஜி.எஸ்.டி-யிலும் அமிதாப்தான். போர்ப்ஸ் நிறுவனம் அளிக்கும் தகவல்படி ஆண்டுக்கு ரூ.54 கோடி சம்பாதித்து, ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார் அமிதாப்.

சீனப் பணக்காரர்களில் மூன்றாவது இடத்தில் ஜாக் மா!
சீனாவின் பெரும் பணக்காரர்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார் அலிபாபாவின் ஜாக் மா. இவருடைய சொத்து மதிப்பு சுமார் 30 பில்லியன் டாலர். கடந்த ஆண்டைவிட இவரது சொத்து மதிப்பு, சுமார் 2% இந்த ஆண்டு குறைந்துள்ளது. ஆனால், எவர்கிராண்ட் நிறுவனத்தின் அதிபர் ஜு ஜியாய்ன் என்பவரின் சொத்து மதிப்பு சுமார் 272% அதிகரித்து, முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு 43 பில்லியன் டாலர். சீனாவின் டென்சென்ட் நிறுவனத்தின் அதிபரான போனி மா ஹுடெங்கின் சொத்து மதிப்பு 52% அதிகரித்து, இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 37 பில்லியன் டாலர்.
பி.பி.எம் வருமானம் பெருகும்!
பிசினஸ் பிராசஸஸ் மேனேஜ்மென்ட் (BPM) மூலம் இந்தியாவுக்குக் கிடைக்கும் வருமானம், வருகிற 2025-ல் ரூ.55 பில்லியன் டாலர்களாக இருக்கும் என நாஸ்காம் நிறுவனம் கணித்திருக்கிறது. தற்போது நம் நாடு பி.பி.எம் துறையின் மூலம் சுமார் 30 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டி வருகிறது.
வங்கித் தேவை ரூ.3.3 லட்சம் கோடி!
வங்கிகளின் வாராக் கடன் பிரச்னை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தப் பிரச்னையைச் சமாளிக்க வேண்டுமெனில், 2017-ம் ஆண்டு ரூ.2.2 லட்சம் கோடியும், 2018-ல் ரூ.3.3 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தரக் குறியீடு நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது.
ஒரு பெண் இயக்குநர்கூட இல்லை!
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் ஒரு பெண் தனி (Independent) இயக்குநராவது இருக்க வேண்டும் என்பது செபியின் பரிந்துரை. ஆனால், என்.எஸ்.இ.யில் இதுவரை 1,670 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் 637 நிறுவனங்களில் ஒரு இன்டிபெண்டன்ட் இயக்குநர்கூட இதுவரை நியமிக்கப்படவில்லை என்பதுதான் நிஜம்!

இசைப் புயலுடன் கூட்டுச் சேர்ந்த ஆப்பிள்!
இசைப் புயலுடன் ஏ.ஆர்.ரகுமானுக்குச் சொந்தமான கே.எம்.மியூசிக் கன்சர்வேட்டரீஸுடன் இணைந்து இரு மேக் லேப்ஸ்களை (Mac Labs) உருவாக்கியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். ஏ.ஆர்.ரகுமான் நடத்தும் இசைப் பள்ளியில் படிக்கும் முழுநேர மாணவர்கள் பத்து பேருக்கு ஸ்காலர்ஷிப் அளிக்கவும் முடிவு செய்துள்ளது ஆப்பிள்.
3,86,000 கோடி - கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரை நேரடி வரிகள் மூலம் வசூலான தொகை.
ஆன்லைன் கரன்சியான பிட்காயினின் விலை, கடந்த வாரத்தில் 5,200 டாலரைத் தொட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.