ஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - டிவிடெண்ட், எதிர்கால வளர்ச்சி... உங்களுக்கு எது வேண்டும்?

செல்லமுத்து குப்புசாமி
பையன் பெரிய வேலைக்குப் போகிறான். கை நிறையச் சம்பாதிக்கிறான். ஆனால் பெற்றோரைக் கண்டு கொள்வதில்லை. என்ன பிரயோஜனம்? இதைக் கொஞ்சம் விரிவாகப் பார்த்தால் ஒழுக்கம் கற்றுத் தராத கல்வி, மகிழ்ச்சியைத் தருவிக்காத செல்வம் என எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

ஆரம்பத்தில் விதைப்பதன் முழுப்பயன் எப்போது கிடைக்கும்? அறுவடை செய்து களத்து மேடு சேர்த்து, கதிரடித்து முடிக்கும்போதுதானே கிடைக்கிறது. அப்படியானால் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதன் முழுப்பயன் எப்போது கிடைக்கும்? பங்குகளில் முதலீடு செய்வது என்பது அந்த நிறுவனத்தின் பிசினஸில் நாம் பார்ட்னராகும் செயல் என்று ஏற்கெனவே பேசியிருக்கிறோம். அப்படியானால் அந்த பிசினஸிலிருந்து வரும் லாபத்தைப் பங்கிட்டு மகிழ்வதுதானே அறுவடைக்குச் சமமான செயலாக இருக்கும்!
நிறைய பேர் ஷேர் மார்க்கெட்டை அணுகாமல் தூரமாக நிற்பதற்கு முதன்மையான காரணம், “ஷேர் விலை ஏறுகிறது, இறங்குகிறது; நம் கையில் என்ன இருக்கிறது? இதற்கு அரக்கோணம் பக்கத்தில் அரை கிரவுண்டு இடம் வாங்கிப்போட்டால் காலத்துக்கும் அப்படியே கிடக்கும்” என்பதாக இருக்கிறது.
அந்தச் சந்தேகத்திற்கான பதிலாக டிவிடெண்ட் எனப்படும் லாப ஈவுத்தொகை அமையக்கூடும்.
அதற்கு முன் பிசினஸ் என்பது வேறு, பிசினஸ் ஓனர் என்பது வேறு என்பதை நினைவுபடுத்திக் கொள்ளலாம். நாம் செய்கிற பிசினஸ் (கம்பெனி) கோடிக் கணக்கில் லாபம் ஈட்டினாலும், அந்த லாபம் கம்பெனியொடுதான் இருக்கும்; அதற்கு நாம் மட்டுமே ஒரே உரிமையாளராக இருந்தாலுமேகூட. பிசினஸ் ஈட்டுகிற லாபத்தை அதன் உரிமையாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் செயலே டிவிடெண்ட் எனப்படுகிறது.
நாமே ஒரு பிசினஸ் செய்தால் அதிலிருந்து வரும் லாபத்தை மறுபடியும் பிசினஸில் போட்டு அதை விரிவாக்கம் செய்ய விரும்புவோம். லாபத்தையெல்லாம் அவ்வப்போது எடுத்துக்கொண்டால் பிசினஸில் போடுவதற்கு நிறையப் பணம் இருக்காது. கம்பெனி அடுத்த கட்டத்துக்கு நகராது. இது அடிப்படை சாரம்சம்.
ஒரு பிசினஸ் சூழலைப் பாருங்கள். ஒரு நிறுவனம் 500 கோடி லாபம் ஈட்டுகிறது. மொத்தம் 50 கோடி பங்குகள் உள்ளன. ஒரு பங்கின் லாபம் ரூ 10 (EPS). அதன் தற்போதைய பங்கு விலை ரூ.100. ஆக பி/இ விகிதம் 10.

நல்ல முறையில் வெற்றிகரமாக இயங்கிவரும் பிசினஸ் இது. அதன் இன்னொரு கிளையைத் தொடங்க நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. அப்படி புதிய கிளையைத் தொடங்குவதற்கு ரூ.500 கோடி ஆகும் என அது கணித்திருக்கிறது. அதாவது, இந்த வருடம் சம்பாதித்த லாபம் முழுவதையும் மறுபடியும் முதலீடு செய்தாக வேண்டும். அதை மட்டும் வெற்றிகரமாகச் செய்து முடித்து விட்டால், அடுத்த வருடம் லாபம் இருமடங்காக ஆகும். ரூ.500 கோடியிலிருந்து ரூ.1,000 கோடியாக உயரும். இ.பி.எஸ் ரூ.10-லிருந்து ரூ.20 ஆக உயரும்.
அப்படி நடக்குமானால் இன்றைக்கிருக்கும் அதே 10 பி/இ விகிதத்தில் ரூ.20 இ.பி.எஸ்-க்கு நிகரான பங்கு விலை ரூ.200 ஆக உயரும். ஆக, நமது பங்கு முதலீட்டின் சந்தை மதிப்பு இரு மடங்காக உயரும். தேவைப்பட்டால் அதை ஷேர் மார்க்கெட்டில் விற்றுக்கொள்ளலாம்.
அப்படிப்பட்ட ஒரு விளைவை விரும்புவோமா அல்லது ‘புதிய கிளை தொடங்குவதெல்லாம் சரி வராது. அதனால் இந்த வருட லாபம் 10 ரூபாயை டிவிடெண்டாகப் பிரித்து எடுத்துக்கொள்ளலாம்’ என யோசிப்போமா?
அப்படி நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? டிவிடெண்ட் மூலம் நமக்கு 10 ரூபாய் கிடைத்திருக்கும். கம்பெனி புதிய கிளையைத் தொடங்கியிருக்காது என்பதால் அடுத்த வருடமும் அதே 10 ரூபாய் லாபம்தான் (இ.பி.எஸ்) கிடைக்கும். சந்தை அதே பி/இ விகிதத்தைப் பேணுகிறது என்ற அனுமானத்தின் அடிப்படையில், நிறுவனத்தின் பங்கின் விலை அதே 100 ரூபாயிலேயே நிலவும்.
கம்பெனி சம்பாதித்த லாபத்தை மறுபடியும் பிசினஸிலேயே போட்டு இப்போதைய சந்தை மதிப்பான 100 ரூபாயை ரூ.200 ஆக்குவோமா? அல்லது அதே 100 ரூபாயில் இருக்கட்டும். 10 ரூபாய் டிவிடெண்டோடு ரூ.110 கிடைத்தால் போதும் எனக் கருதுவோமா? யோசிக்க வேண்டிய விஷயம்தானே.
பிசினஸை மேம்படுத்துவதற்கும், விரிவாக்கம் செய்வதற்கும் சாத்தியம் இருக்கும்போது, அதற்கென பணத்தைச் செலுத்தாமல் டிவிடெண்டாக எடுத்துக்கொள்வது சரியான முடிவாக இருக்காது.
அதனால்தான் தேர்ந்த முதலீட்டாளர்கள் எப்போதுமே டிவிடெண்டுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கமாட்டார்கள். அவர்களது நோக்கம் நிறுவனங்கள் எவ்வளவு வளரும் என்று கணிப்பதிலேயே இருக்கும்.
ஒரு நிறுவனம் டிவிடெண்ட் அதிகமாக அளிக்கிறது என்றால், அது தனது லாபத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளதென்றும், அதன் மறுமுதலீட்டுக்கான சாத்தியங்கள் குறைந்து ஒரு விதமாகத் தேக்கநிலையை எய்துகிறது என்றும் கொள்ளலாம்.
ஒரு வருட லாபத்தை (ரூ.500 கோடி) பிசினஸில் போட்டால், அடுத்த வருடமே லாபம் இரு மடங்காக உயரும் என்பது போன்ற நம் உதாரணம் எளிமையாகப் புரிந்து கொள்வதற்காகச் சொல்லப்பட்டது. எனினும் டிவிடெண்டாகப் பணத்தைப் பெறுவதைக் காட்டிலும் தொழிலில் மறுமுதலீடு செய்வதில் உள்ள அனுகூலம் கூடுதலாக இருக்குமா என்ற நுட்பத்தை உணர்ந்து கொள்ள போதுமானதாக இருந்திருக்கும்.
இன்றைய பங்கு விலை ரூ.100 + டிவிடெண்ட் ரூ.10 = ரூ.110-ஐவிட கூடுதலான நீண்ட கால நன்மையை அதன் லாபம் மற்றும் பங்கு விலையில் பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்தால் போதும்.
வளர்ச்சிப் பங்குகள் அல்லது வளர்ச்சித் துறைகள் நமக்கு டிவிடெண்ட் தருவதை எதிர்பார்க்க முடியாது. பங்கு விலை ரூ.100- லிருந்து ரூ.300-ஆக உயரும் காலத்தில் ரூ.2.5 டிவிடெண்டாகக் கிடைப்பது என்ன மாற்றத்தை உண்டு பண்ணிவிடும்? அதனால் நிறுவனம் சம்பாதிக்கும் லாபம் வருடாவருடம் வளர்கிறதா, அதற்கேற்ப பங்கு விலையும் வளர்கிறதா என்று நோக்குவதே சரியானது.
அதேநேரம் டிவிடெண்டை முற்றிலுமாக நிராகரித்து ஒதுக்க முடியாது. ரூ.200-க்கு விற்கும் ஒரு பங்குக்கு 1 ரூபாய்கூட டிவிடெண்ட் தரலாம். இது பங்கு விலையில் வெறும் 0.5% மட்டுமே. இதனை, டிவிடெண்ட் யீல்டு (Dividend yield) என்பார்கள்.
பார்ப்பதற்குச் சொற்பமான தொகையாகத் தெரியலாம். ஆனால், வருடாவருடம் டிவிடெண்ட் அறிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் நிறுவனங்கள், தமது நோக்கத்தைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. நிறுவனம் ஈட்டுகிற லாபத்தைப் பங்குதாரர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் மனம், நிர்வாகத்திற்கு உள்ளதென்று எடுத்துக்காட்டும் ஒரு செயல்பாடாக அதனை நோக்கலாம்.
பிசினஸில் மறுமுதலீடு செய்வதற்கான வாய்ப்பு இருக்கும்போது, அதைத் தவிர்த்துவிட்டு டிவிடெண்டாகப் பகிர்ந்தளிப்பது எவ்வளவு தவறோ, அதைவிடப் பெரிய தவறு வாய்ப்புகள் இல்லாதபோது டிவிடெண்டாகப் பகிர்ந்தளிக்காமல் கண்டகண்ட புதிய பிசினஸ்களில் பணத்தைப்போட்டு விரலைச் சுட்டுக் கொள்வதும்.
அறுவடை செய்த கதிரை விற்கவோ, உண்ணவோ செய்யாமல் மறுபடி விதைத்தாக வேண்டும் என்பதற்காகப் பாலைவனத்தில் விதைப்பது முறையா? சிந்தித்து முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு முதலீட்டாளர்களாகிய நம் கையில்தான் இருக்கிறது.
(லாபம் சம்பாதிப்போம்)