நடப்பு
Published:Updated:

ஆபீஸ் அரசியல்... தப்பிக்கும் வழிகள்!

ஆபீஸ் அரசியல்... தப்பிக்கும் வழிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆபீஸ் அரசியல்... தப்பிக்கும் வழிகள்!

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர்: ஹெச்.பி.ஆர். கைடு டு ஆபீஸ் பாலிடிக்ஸ் (HBR Guide to Office Politics)

ஆசிரியர்: கரேன் தில்லான் (Karen Dillon)

பதிப்பகம்: ஹார்வர்ட் பிசினஸ் (Harvard Business)

கட்சி அரசியலிலிருந்து வேண்டுமானாலும் நாம் விலகி நின்றுவிடலாம். ஆனால், அலுவலக அரசியலிலிருந்து நாம் தப்பிக்கவே முடியாது. இதிலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்வதுடன், அதனை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி முன்னேறுவதற்கான வழிகளைத் தெரிந்துகொண்டால், சூப்பராக இருக்குமில்லையா? ‘அலுவலக அரசியலுக்கான கையேடு’ என்கிற புத்தகத்தின் மூலம் அதற்கான வழிகளைப் பிரமாதமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் கரேன் தில்லான். 

ஆபீஸ் அரசியல்... தப்பிக்கும் வழிகள்!

எதிர்ப்புகளுக்கிடையே வளர்வது எப்படி, ஆளுமை சக்திகளின் விளையாட்டைச் சமாளிப்பது எப்படி, அலுவலகத்தில் நல்லுறவை வளர்த்துக்கொள்வது எப்படி எனச் சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம்.

‘‘பாலிடிக்ஸ் இல்லாத அலுவலகங்களே இல்லை. ஆளுமைகள் மோதல், முகமூடி போட்டுக்கொண்டு நம்முடன் உறவாடும் பகைவர்கள் போன்ற பல காரணகாரியங்களே அலுவலகத்தில் யாரையும் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருக்கவிடுவதில்லை. ‘‘யார் என்ன செய்தால் என்ன, சொன்னால் என்ன, சிவனேன்னு நான் போய்விடுவேன்” என்று சொல்லித் தப்பிக்கிற காலமெல்லாம் மலையேறி விட்டது. அரசியல் நீக்கமற நிறைந்த அலுவலகத்தின் பக்கத்து சீட் மனிதர்களின் இருட்டு எண்ணங்களைக் கடந்து சென்று, நாம் எப்படிச் செயல்படுவது?

“நீங்க பெரிய டான் சார், நான் சின்ன ஆளு சார்”் என்று சொல்லித் தப்பிப்பதா? “அண்ணே, உங்க ரேஞ்சே வேற...” என்று முதலில் அவருடைய பவரைப் புகழ்ந்து, பிறகு, “எனக்கும் உங்க அளவுக்கு இல்லாவிட்டாலும் என் கெப்பாசிட்டிக்குக் கொஞ்சமா முன்னேறிக்கொள்ள வழிகாட்டுங்கண்ணே...” என்று அவருடைய பவரால் நாமும் கொஞ்சம் முன்னேறிக்கொள்வதா..? எது சிறந்தது?

பாலிடிக்ஸ் என்பது ஒரு கெட்டவார்த்தை இல்லை. பவரைப் பாக்கெட்டுக்குள் கொண்டுவராமலும், யாரையும் ஏறிமிதித்துச் செல்லாமலுமே அலுவலகத்தில் வெற்றிகரமாகச் செயல்பட முடியும். அப்படி செய்யும் வேளையில்தான் அலுவலகத்தினுள் இருக்கும் பல பவர் சென்டர்களிலும் உங்களுக்கு நல்லுறவு ஏற்படும். அந்த நல்லுறவால் பின்வரும் பலன்கள் நமக்குக் கிடைக்கும். 

ஆபீஸ் அரசியல்... தப்பிக்கும் வழிகள்!“உனக்காகச் செய்கிறேன்...’’ என்ற வார்த்தைகள் அடிக்கடி நம் காதுகளில் விழ ஆரம்பிக்கும்.  வாயைத் திறந்தாலே சண்டை போடும் நபர்கள்கூட, “இந்த இத்துப்போன கூட்டத்துல அவன் நல்ல ஆளுப்பா...” என்று சொல்வார். அனைவருடைய முழு ஒத்துழைப்பும் நமக்குக் கிடைக்கும். “அவசரமாத்தான் கிளம்புறேன்; வேணுமுன்னா சொல்லுங்க. உங்களுக்காக இருந்து முடித்துக்கொடுத்துவிட்டுப் போகிறேன்” என்பார் யூனியன் தலைவர். மிகவும் முக்கியமாக, குறைவான எதிர்ப்புடன் நம்மால் அலுவலகத்தில் வளர முடியும். 

உதாரணத்துக்கு, நமக்கு புரொமோஷன் கிடைக்கும்போது, “திறமைக்காரர் அவரு... அந்த ஆளுக்கெல்லாம் ரொம்ப நாளுக்கு முன்னாடியே புரொமோஷன் கொடுத்திருக்கணும். ரொம்ப லேட். பொறுமைசாலியப்பா அந்த ஆள். நானா இருந்தா எப்பவோ வேலையை விட்டுட்டு போயிருப்பேன்” என்று நம்மைப் பாராட்டுவார் நம்மைவிட சீனியராகவே இருந்தும் புரோமோஷன் கிடைக்காத நபர். இன்னும் முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? நம் பாஸுக்கு வலதுகரமாக இருப்பாரே ஒருத்தர், அவரையும் சுலபத்தில் டீல் செய்ய முடியும்.

“எங்களையெல்லாம் தாண்டி எப்படிச் செயல்படுவீங்க பாஸ்...” என்று சொல்லும் ஒரு கூட்டமும், “இதெல்லாம் உருப்படவே உருப்படாது” என்று எல்லாவற்றையும் குறை சொல்லும் ஒரு கூட்டமும் இல்லாத அலுவலகம் இல்லையென்றே சொல்லலாம். இந்த இரண்டு கூட்டங்களையும் சமாளிக்க நம்முடைய அப்ரோச் மிகவும் உதவியாக இருக்கும்.

மாங்கு மாங்கென்று உழைத்துவிட்டு, அதற்கான பிரதிபலனை யாரோ ஒருவர் எடுத்துக்கொண்டு போகும் சூழல் அடிக்கடி நமக்கு வருவதையும் தவிர்க்கலாம். நீயா, நானா பார்த்துவிடுவோம் என்ற பவர் விளையாட்டையும்,  அற்பமான சண்டைகளையும் அலுவலகத்தில் தவிர்க்கலாம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக அலுவலகத்தில் போட்டியாளர்களாக இருக்கும் நிஜமான திறமைக்காரர்களுடன் சேர்ந்து வேலைசெய்து, கொஞ்சம் தொழிலையும் கற்றுக்கொண்டு முன்னேறலாம் என்கிறார் ஆசிரியர்.  

ஆபீஸ் அரசியல்... தப்பிக்கும் வழிகள்!

‘நான் வேலை பார்த்த அலுவலகம் சிறந்தது. பாலிடிக்ஸே இல்லை. நிர்வாகத்தினரும், சக பணி யாளர்களும் மிகவும் நியாயமாக நடந்துகொண்டார்கள்.  அதுவும் முடிவுகள் எடுக்கும்போது அனைவரையும் கலந்தாலோசித்தே எடுத்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.’ - எனக்கு விவரம் தெரியாதவரைக்கும் இப்படித்தான் நான் என்னுடைய அலுவலகத்தைப் பற்றி நினைத்துக்கொண்டும், புதிதாக வேலைக்கு வருபவர்களிடம் சொல்லிக்கொண்டும் இருந்தேன்.

விவரம் தெரிந்த பின்னர்தான் புரிந்தது எங்கள் அலுவலகத்தில், போட்டிபோட்டு கம்பெனியைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது. பாஸுக்கு வேண்டியவர்களும் அனுபவிக்கிறார்கள்; வேண்டாதவர்களும் அனுபவிக்கிறார்கள். முறையே சுகம் மற்றும் கஷ்டத்தை! இதை நான் புரிந்துகொண்டேன்.  சத்தமில்லாமல் பணமும், பதவி உயர்வும், பல செளகர்யங்களும் சிலருக்குக் கிடைத்துக் கொண்டேயிருந்தன. ‘அட... நாம எந்த அளவுக்கு  ஏமாந்தவனாக இருந்திருக்கிறோம்’ என்று நினைத்து, கொஞ்சம் பார்வையை விரிவாக்கினால் 95 சதவிகித அலுவலகங்களின் நிலை இதுதான் என்கின்றன ஆய்வுகள். அப்படியென்றால், பாலிடிக்ஸில் நீங்களும் சிக்கி, சின்னா        பின்னமாகிக்கொண்டிருக்கிறீர்கள் என்றே அர்த்தம்.

வேலையில் இருந்தால்தானே பிரச்னை என்று தொழில் தொடங்குகிறேன் என்று கிளம்புகிறீர்களா? கொஞ்சம் நில்லுங்கள். அங்கே நீங்கள் எதிர்கொள்ளவேண்டிய பாலிடிக்ஸ் பலப்பல. உங்கள் அலுவலகம் மற்றும் உங்கள் வாடிக்கையாளர் அலுவலகங்கள் எனப் பலமடங்கு பாலிடிக்ஸ்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார் ஆசிரியர்.

“இந்த வருஷம் லாபம் ஏன் குறைந்தது தெரியுமா? இந்த கம்பெனி ஏன் உருப்படாமல் போகுதுன்னு தெரியுமா,  பாலிடிக்ஸ்தான்...” எனப் பேசிப் பயன் எதுவுமில்லை. பாலிடிக்ஸை வெற்றிகளைக் கொண்டுவருவதற்கும் பயன்படுத்த முடியும் என்பதைச் சொல்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கமே. பாலிடிக்ஸை ஒழிக்க முடியாது. முழுக்க முழுக்க பாலிடிக்ஸால் வரும் கேடுகளைக் குறைத்து,  கொஞ்சம் நன்மைகளையும் அதிலிருந்து பெறமுடியும்.

நன்மைகளை எப்படி கொண்டுவருவது என்று பார்ப்போம். பாலிடிக்ஸை உணரும்போது நீங்கள் சிலகேள்விகளை அவ்வப்போது கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். இந்த ஆள் இப்படி செய்கிறாரே... இது வஞ்சகமான எண்ணத்திலா, அல்லது எதேச்சையாகவா என யோசிக்க வேண்டும். பல சமயங்களில் அலுவலகத்தில் எதேச்சையான செயல்பாடுகள் பாலிடிக்ஸ் என்ற கண்ணாடி வழியாகப் பார்க்கப்பட்டு, பின்னால் வஞ்சகம் என்ற நோக்கத்திற்கு மாற்றப்பட்டு விடுகிறது. எனவே, இந்தக் கேள்வியை ஒவ்வொரு முறையும் கேட்டுக்கொள்வது நல்லது.  

ஆபீஸ் அரசியல்... தப்பிக்கும் வழிகள்!

நீங்கள் அந்த இடத்தில் இல்லாமல், மற்றொருவர் இருந்தால் அந்தச் சூழல் எப்படியிருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். ஏனென்றால், பெரும்பாலான சமயம் நாம் எதிர்கொள்ளும் விஷயங்களை நம்முடைய தனிமனித விருப்புவெறுப்புகளில் தோய்த்துஎடுத்த பின்னரே பார்க்கிறோம். அதனால்தான், “எனக்கா உலைவைக்கிறாய்... நான் வைக்கிறேன் பார் உனக்கு அணுகுண்டு” என்று கிளம்பிவிடுகிறோம். எனவே, இந்தக் கேள்வியைக் கேட்டுப்பாருங்கள். நான் இல்லை, யார் இருந்தாலும் இதைத்தான் அந்தச் சூழல் கொண்டுவரும் என்பதுபோல் இருந்தால் அது பாலிடிக்ஸ் இல்லை.

பிரச்னை என்பது தப்பான விஷயம் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். பெரிய சாதனைகளெல்லாம் செய்து என்ன கிழிக்கப்போகிறாய் என்று கேட்டபின்னரும், நீ இதுக்கு லாயக்குப்படமாட்டாய் என்று சொன்னபின்னருமே பிரச்னை வந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

“நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனா, நசுக்குறானுங்க. மூச்சு முட்டுது. எதிர்த்துப் பேசவே முடியாத சூழல். காப்பாற்றுங்கள்...” என்கிற பிரிவா நீங்கள். எதிர்த்துப் பேசக்கூடிய அளவில் சூழல் இருந்தாலும், புகார் கொடுத்தெல்லாம் பாலிடிக்ஸைச் சரிசெய்ய முடியாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என்கிறார் ஆசிரியர். எதிர்த்துப்பேசி உங்கள் பாஸ் உங்களை டிஸ்மிஸ் செய்வதற்கான காரணத்தைத் தேடும் வேலையை, அவருக்கு உருவாக்கிக் கொடுத்துவிடாதீர்கள் எனக் கிண்டல் செய்கிறார் ஆசிரியர்.

நிதானமாக சலனமின்றி இருங்கள். பாலிடிக்ஸ் செய்பவர்களின் ஏவுகணைகளால் நீங்கள் அசைக்கப்படுகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொண்டு விட்டனர் என்றால், உங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அசைத்துப் பிடுங்கி அலுவலகத்துக்கு வெளியே போட்டுவிடுவார்கள். பயப்படவோ டென்ஷனாகவோ செய்தீர்களென்றால், அது அவர்களுக்கு லட்டு சாப்பிடுவது மாதிரி. டென்ஷனானீர்கள் என்றால் அவர்களுக்கு வெல்கம் போர்டு வைக்கிறீர்கள் என்று அர்த்தம். 

பிரச்னை எனும் ஏவுகணைகள் மேலும் உங்களை நோக்கித் தொடர்ந்து வீசப்படும் என்பதில் ஐயமில்லை. அதேநேரம், நான் யாருக்கும் பயப்படமாட்டேன் என்று கொக்கரிக்காமல் அமைதியாக இருந்துவிட்டீர்கள் என்றால் பாலிடிக்ஸ் செய்பவர்கள் அமைதியாகி விடுவார்கள்.

பாஸுக்கு மட்டும் பிடித்தவராக இருப்பதில் பயனில்லை. அனைவருக்கும் பிடித்தவராக இருப்பதில் பயன் நிறைய உண்டு. இது கொஞ்சம் கடினம்தான் என்றாலும், இதை நடைமுறைப்படுத்திவிட்டால் அலுவலகத்தில் நம்முடைய முன்னேற்றத்துக்கான முயற்சிகளை எடுப்பதில் மட்டுமே கவனத்தை முழுவதுமாகச் செலுத்த முடியும் என்கிறார் ஆசிரியர்.

பல்வேறு வகையான பாஸ்கள், பாஸ்களின் ஆஸ்தான ஆல்-இன்-ஆல், சக பணியாளர்கள், பாலிடிக்ஸை உக்கிரப்படுத்தும் சுற்றுலா, பணி நீக்கம் போன்ற அலுவலக நடப்புகள் போன்றவற்றைக் கையாள்வது எப்படி என்றும், பிரச்னைகளைச் சமாளிக்கும் திறனை வளர்த்துக்கொள்வது எப்படி என்றும் எளிய நடையில் தெளிவாக விளக்கியுள்ளார். பணிக்குச் செல்வோரும், தொழில்முனைவோரும் படிக்க வேண்டிய புத்தகம் இது எனலாம்.

-நாணயம் டீம்