நடப்பு
Published:Updated:

பிராண்டிங் பிசினஸ் வெற்றிக்குச் செய்யக்கூடாத 5 விஷயங்கள்!

பிராண்டிங் பிசினஸ் வெற்றிக்குச் செய்யக்கூடாத 5 விஷயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பிராண்டிங் பிசினஸ் வெற்றிக்குச் செய்யக்கூடாத 5 விஷயங்கள்!

பிராண்டிங் பிசினஸ் வெற்றிக்குச் செய்யக்கூடாத 5 விஷயங்கள்!

மூக மாற்றங்கள், லைஃப் ஸ்டைல் மாற்றங்கள் பெரிய நிறுவனங்களையே புரட்டிப் போடுகின்றன. இவற்றைத் தாண்டி உங்கள் பிசினஸ் வெற்றி பெற உங்களுக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டியுள்ளது. அதுதான் பிராண்டிங்.  உங்களின் பொருளையோ, சேவையையோ மக்களிடம் கொண்டு செல்லும் போது, நீங்கள் செய்யக்கூடாத முக்கியமான ஐந்து விஷயங்கள் இவைதான் எனப் பட்டியலிடுகிறார் பிராண்ட் கன்சல்டன்ட் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி.  

பிராண்டிங் பிசினஸ் வெற்றிக்குச் செய்யக்கூடாத 5 விஷயங்கள்!

 1.டிரெண்டைக் கண்டுகொள்ளாமல் இருப்பது    

டிரெண்டுக்கேற்ப நம்மை அப்டேட் செய்யாமல்விட்டால் நாம் காணாமல் போய் விடுவோம். உங்கள் கண்களுக்கே தெரியாத எதிரி ‘டிரெண்டிங்.’ இது எந்த உருவத்திலாவது ஒளிந்திருக்கலாம். இதற்கு உதாரணமாக, பிரிட்டானியாவின் மில்க் பிக்கிஸ் பிஸ்கட் கடந்துவந்த சவாலை எடுத்துச் சொல்லலாம்.  கொடிகட்டிப் பறந்த பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் விற்பனை சட்டெனச் சரியத் தொடங்கியது. ஏன் என்று ஆராய்ச்சி செய்தபோது, பாக்கெட்டிலிருந்து பிஸ்கட் நமத்துவிடுவதாக வாடிக்கையாளர்கள் சொன்னார்கள். பிரிட்டானியா நிறுவனம் அந்த பாக்கெட்டிலிருந்த பிஸ்கட்டின் தரத்தைப் பரிசோதித்தது. அதில் குறையில்லை. ஆனால், வில்லன் எங்கிருந்தான் தெரியுமா? ஒரு காலத்தில் பெரிய குடும்பங்கள் இருந்தன. கூட்டுக் குடும்பத்தில் ஒரு பிஸ்கட்  பாக்கெட்டை உடைத்தால் உடனே தீர்ந்துவிடும். காலப்போக்கில் குடும்பங்கள் சுருங்கி, தனத்தனிக்  குடும்பங்களாக மாறிவிட்டன.   

இந்தத்  தனிக் குடும்பத்தில் அதாவது, சிறிய குடும்பத்தில் பெரிய பிஸ்கட் பாக்கெட்டுகளை மறுநாள் வைத்துச் சாப்பிடுவதால் நமத்துப் போனது கண்டறியப்பட்டது. பிறகு பாக்கெட் அளவை சிறிதாக்கியதால், பிரச்னை தீர்ந்தது. இங்கு டிரெண்ட் என்பது வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம். எனவே, டிரெண்டைப் பின்தொடர்ந்து அதற்கேற்ப உங்கள் பொருளை அப்டேட் செய்ய வேண்டும். உங்கள் பொருளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளரின் லைஃப் ஸ்டைல் மாற்றங்களிலும் ஒருகண் இருக்கட்டும். டிரெண்டைக் கண்டுகொள்ளாமல் இருந்திட வேண்டாம்.
   
வாழ்வில் ஏற்படும் புதிய தேவைகள்கூட டிரெண்டாக மாறும். பெண்கள் அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் செல்வது, தனிக் குடித்தனங்கள் இந்த இரண்டும் இணைந்து புதிய பொருள்களுக்கான தேவையை உருவாக்கியுள்ளன. மார்க்கெட்டில் ரெடிமேட் உணவுகளுக்கான தேவை அதிகரிக்க இந்த இரண்டு டிரெண்டுகளும் காரணம். நீங்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இதுபோன்ற விஷயங்களே தீர்மானிக்கின்றன. 
   
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியத்தின் மீதான அக்கறை மக்களிடம் அதிகரித்துள்ளது. எந்த புராடக்டிலும் ஆரோக்கியம் சார்ந்து உள்ள விஷயங்களை முன்நிறுத்தும்போது, அதுவே உங்கள் பொருளை வாங்கத் தூண்டும். ஷாம்பு உலகில் முதலில் எங்கள் ஷாம்பில் புரோட்டின் உள்ளதென மார்க்கெட்டுக்கு வந்த க்ளினிக் ப்ளஸ், மார்க்கெட்டின் பெரும்பகுதியைப் பிடித்தது. 

2. பிராண்டை ஒரு வார்த்தையில் மனதில் நிறுத்தாமல்போவது    


இதை பிராண்ட் பொசிஷனிங் என்போம். உங்கள் பொருள் எவ்வளவு சிறந்ததாகவும் இருக்கலாம். மக்களிடம் ஒரு வார்த்தையில் உங்கள் பிராண்டைக் கொண்டுசேர்க்க வேண்டும். வெற்றி பெற்ற நிறுவனங்கள் அதை செய்திருக்கின்றன.

உதாரணமாக, பூஸ்ட் - எனர்ஜி, லிரில் - ஃப்ரஷ்னஸ், லக்ஸ் - கிளாமர், பல்சர் - ஸ்டைல், ரஜினி - ஸ்டைல். நாம் எந்த வார்த்தையால் நம் பொருளை மக்கள் மனதில் பதியவைக்கிறோமோ, அதை மையப்படுத்தியே அனைத்து புரமோஷன்களும் இருக்க வேண்டும். உங்கள் நிறுவனத்தை அந்த ஒற்றை வார்த்தையில் மக்கள் மனதில் கொண்டுவருவது மிக முக்கியம்.

உங்களுக்கான தனி அடையாளத்தை ஒற்றை வார்த்தையில் மக்கள் மனதில் பதியவைக்காமல் விடுவது, உங்களை மறக்கச் செய்துவிடும். இப்படி நினைவில் நிறுத்தாத நிறுவனங்கள், தங்களின் பிராண்டை நினைவுபடுத்துவதற்காக ஆண்டு தோறும் கோடிகளை வாரி இறைக்கின்றன.

3. பழைய பிராண்ட் பெயரில் புதிய பொருளைச் சந்தைப்படுத்துவது    

மசாலாப் பொடியில் நீங்கள்தான் ராஜா என்று வைத்துக்கொள்வோம். திடீரென ரெடிமேட் இட்லி மாவு அல்லது இத்துடன் தொடர்பே இல்லாத ஒரு பொருளின் விற்பனையைத் தொடங்க நினைக்கிறீர்கள். ஏற்கெனவே உருவாக்கிய பிராண்ட் பெயரிலேயே இதையும் மார்க்கெட்டிங் செய்தால் பணம் மிச்சமாகும் என்று மனம் சொல்லும். இப்படிச் செய்வதன் விளைவு, முதலுக்கே மோசமாகி விடும். டெட்டால் என்றால் கிருமியைத் தடுக்கக்கூடியது என்று மக்கள் பாத்ரூமில் பயன்படுத்துகின்றனர். அதே நிறுவனம், அதே பெயரில் பாத்திரம் சுத்தப்படுத்தும் லிக்விடை மார்க்கெட்டிங் செய்தால் மக்கள்  அதை ஏற்க மாட்டார்கள். டாய்லெட்டில் வைத்துப் பழக்கப் பட்ட ஒரு பிராண்டை எப்படி சமையல் அறையில் வைப்பார்கள்? 

பிராண்டிங் பிசினஸ் வெற்றிக்குச் செய்யக்கூடாத 5 விஷயங்கள்!

‘ரெக்ஸோனா’ என்றால் பெண்கள் குளிப்பது என்று மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது. அதே நிறுவனம் ரெக்ஸோனா என்ற பெயரில் ஆண்களுக்கான  டியோடரன்ட்  சந்தைப்படுத்தும்போது மக்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இதனால் ரெக்ஸோனா சோப் விற்பனையும் சேர்த்து பாதித்தது. ஒரே பெயரில் பிராண்ட் விரிவாக்கம் செய்வதால், இது போன்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும். புதிய பொருளை, புதிய பெயரில் பிராண்டிங் செய்யுங்கள். ஒருவேளை புதிய பொருள் தோற்றாலும் பழைய பிராண்ட் அடி வாங்காமல் தப்பித்துவிடும்.

4.போட்டியாளர் யார் என்பதைக் கவனிக்காமல் விடுவது

நமது போட்டியாளர் யார் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கான வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க முடியும். ஒருகாலத்தில் ரேடியோ எல்லா இடத்திலும் இருந்தது. பின்பு ரேடியோ காணாமல் போய் விட்டது. ரேடியோவின் மறைமுகப் போட்டி யாளராக செல்போன் உள்ளது. நீங்கள் விற்பனை செய்யும் இன்னொரு விற்பனைப் பொருள்கூட, உங்களுக்குப் போட்டியாக இருக்கலாம்.

பிரபல ஐஸ்கிரீம் நிறுவனம் தண்ணீர் பாட்டில்களையும் விற்பனை செய்தது. நம் ஊரில் தாகம் தீர்ப்பதற்காக ஐஸ்கிரீம் சாப்பிட வருவார்கள். அங்கேயே தண்ணீர் பாட்டில் இருந்ததால் பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள், ஐஸ்கிரீமுக்குப் பதிலாகத் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு சென்றார்கள். ஆக, அவர்கள் விற்பனை செய்த இன்னொரு பொருளே போட்டியாக இருந்து ஐஸ்கிரீம் விற்பனையைக் குறைத்தது.

மில்க் பிக்கிஸைப் பொறுத்தவரை, குடும்பங்களில் ஆள்களின் எண்ணிக்கை குறைந்தது அவர்களுக்குப் போட்டியாக இருந்தது. ஒரு சில போட்டியாளர்களைக் கண்டறிவது சிரமம். ஆனாலும், கண்டறிந்தால் மட்டுமே பிசினஸ் உலகில் சிகரம் எட்ட முடியும்.   

ஃபேர் அண்டு லவ்லி, மார்க்கெட்டில் சக்கைப் போடு போட்ட காலத்தில், ஆண்களுக்கு எனத் தனியே கிரீம் கொண்டுவரலாம் என்று யோசனை வந்தது. ஆனால், மார்க்கெட்டை ஆய்வு செய்ததில் 30% ஆண்களும் ஃபேர் அண்டு லவ்லி பயன்படுத்துகின்றனர். அதனால் தேவையில்லை என்று அந்த முயற்சி கைவிடப்பட்டது. கொஞ்ச நாளில் வேறொரு நிறுவனம் ஆண்களுக்கான அழகு கிரீமைக் கொண்டுவந்தது. ஃபேர் அண்டு லவ்லி பயன்படுத்திய ஆண்கள், புதிய பிராண்டுக்குத் தாவினார்கள். ஃபேர் அண்டு லவ்லி முதலிலேயே அதைச் செய்திருந்தால், தன் வாடிக்கையாளர்களில் ஒரு பகுதியினரை இழந்திருக்கத் தேவையில்லை. போட்டியாளர் விஷயத்தில் நேரடி வில்லன்களைவிட மறைமுக வில்லன்களால் வில்லங்கம் அதிகம். இந்த விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். தனக்குத் தானே போட்டியாளராக இருந்து, அந்த இடத்தையும் தக்க வைத்துக்கொள்வதில் ஜில்லெட் நிறுவனத்தை உதாரணம் காட்டலாம். இரண்டு பிளேடு முதல் ஐந்து பிளேடு வரை அவர்களே தங்களின் புதிய புராடக்டை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். புதிது தேடும் தனது வாடிக்கையாளர்களை, தன்னிடமே தக்க வைத்துக்கொள்ளவும் இந்த முயற்சி உதவுகிறது.
   
5. பிராண்டைப் பராமரிக்காமல் விடுவது    

நாம்தான் மார்க்கெட்டில் ராஜா, நம்மை அசைக்க யாருமே இல்லை என்ற மிதப்பில் இருந்தால், பல இழப்புகளைக் கண்டிப்பாகச் சந்திக்க வேண்டி வரும். நம் வாடிக்கையாளர்களின் மனதில் நிற்க இது கட்டாயம் அவசியம். ஒரு விஷயத்தில் நாம் வாடிக்கையாளர் மனதில் நின்றுவிட்டால், அந்த இடத்தை யாரும் பிடித்து விடாமல் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும்.

செல்போன் நிறுவனங்களில் நோக்கியா அடைந்த உயரம் அதிகம். அது மக்கள் மனதில் உருவாக்கியிருந்த தாக்கமும் அதிகம். உலகம் ஸ்மார்ட் திரைக்கு மாறும்போது, உடனடியாக அவர்கள் பிராண்டை அப்டேட் செய்து அதற்கான பொருளைத் தன் வாடிக்கையாளர் களுக்குக் கொடுக்கவில்லை. மார்க்கெட்டின் நிலைக்கேற்ப தன் பிராண்டை அப்டேட் செய்யாத நிறுவனங்கள், எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் காணாமல் போகும் நிலை வரும். உங்களது பிராண்ட் உச்சத்தில் இருந்தாலும், அதைப் பராமரிக்காமல் விடுவது நஷ்டத்தையே தரும். 
   
நீங்கள் எப்படிப்பட்ட ஒரு தொழிலை நடத்துபவராக இருப்பினும், இந்த ஐந்து விஷயங்களில் கவனமாக இருப்பதன் மூலம் வெற்றியாளாக வலம் வர முடியும்’’ என்கிறார் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி.
   
பிராண்டிங்கை சரியாக செய்வதன் மூலம் உங்கள் பிசினஸ் பெற நடவடிக்கை எடுங்கள்!

- யாழ் ஸ்ரீதேவி