
சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
‘‘நான் 2011 முதல் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். டி.எஸ்.பி. பி.ஆர் டாப் 100 ஈக்விட்டி ஃபண்ட் குரோத், ஹெச்.டி.எஃப்.சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி டாப் 200 ஃபண்ட், ஐ.டி.எஃப்.சி பிரீமியர் ஈக்விட்டி ஃபண்ட் போன்றவற்றில் தலா ரூ.8,000 முதலீடு செய்து வருகிறேன். கடந்த ஒரு வருடமாக ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட், யூ.டி.ஐ மிட் கேப் ஃபண்ட், டி.எஸ்.பி. பி.ஆர் ஸ்மால் அண்டு மிட் கேப் ஃபண்ட் போன்றவற்றில் ரூ.5,000 முதலீடு செய்து வருகிறேன். இந்த முதலீடுகளில் மாற்றம் ஏதும் செய்ய வேண்டுமா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் என் மகளுடைய திருமணத்துக்காக வைத்துள்ள தொகையைக் கொண்டு சொத்து வாங்க பயன்படுத்தலாமா?’’
- கே.ஜோதி

“நீங்கள் மொத்தம் ஏழு ஃபண்டுகளில் மாதந்தோறும் முதலீடு செய்துவருவதாகக் கூறியுள்ளீர்கள். நீங்கள் சொல்லியுள்ள கணக்கின் படி பார்த்தால், நீங்கள் முதல் நான்கு ஃபண்டுகளில் தலா 8,000 ரூபாயும், அடுத்த மூன்று ஃபண்டுகளில் தலா 5,000 ரூபாயும் முதலீடு செய்துவருவதாகவும், ஆகமொத்தம், மாதம் ரூ.47,000 நீங்கள் முதலீடு செய்து வருவதாகத் தோன்றுகிறது. இந்த எஸ்.ஐ.பி முதலீடுகளை நீங்கள் நீண்ட காலத்துக்காக முதலீடு செய்கிறீர்கள் என எடுத்துக்கொள்கிறேன். நீங்கள் தற்போது செய்துவரும் முதலீட்டை ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்டில் ரூ.15,000, பிரின்சிபல் எமர்ஜிங் புளூசிப் ஃபண்டில் ரூ.15,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ ஃபோகஸ்டு புளூசிப் ஈக்விட்டி ஃபண்டில் ரூ.17,000 மாதந்தோறும் முதலீடு செய்யும்படி மாற்றியமைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் மகளின் திருமணம் ஐந்து வருடத்துக்குள் நடக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதற்காக நீங்கள் ரூ.8 லட்சம் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள். திருமணத்துக்காக வைத்துள்ள இந்தத் தொகையில் நீங்கள் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம். ஆகவே, இந்தத் தொகையை ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டில் முதலீடு செய்துகொள்ளுங்கள்.”

‘‘நான் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறேன். சமீபத்தில்தான் எனக்குத் திருமணம் ஆனது. என்னால் மாதம் ரூ.20 ஆயிரம் முதலீடு செய்ய முடியும். நல்ல ஃபண்டுகளைப் பரிந்துரை செய்யவும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் சொந்த ஊரில் வீடு கட்ட இருக்கிறேன். அதற்கு இதைப் பயன்படுத்திக் கொள்ளலாமா?’’
- கணேசமூர்த்தி, மெயில் மூலமாக
“நீங்கள் செய்யப்போகும் ரூ.20 ஆயிரம் மாத முதலீட்டை உங்களின் நீண்ட காலத் தேவை களுக்காக (ஓய்வுக்காலம்) வைத்துக் கொள்ளுங்கள். வீடு கட்டுவதற்கு இந்தத் தொகையைப் பயன்படுத்த வேண்டாம். உங்களின் முதலீட்டை பி.என்.பி பரிபாஸ் டிவிடெண்ட் யீல்ட் ஃபண்டில் ரூ.10 ஆயிரமும், டாடா ரிட்டையர்மென்ட் சேவிங்ஸ் ஃபண்ட் புரோகிரஸிவ் பிளானில் ரூ.10 ஆயிரமும் முதலீடு செய்துகொள்ளுங்கள். டாடா ரிட்டையர்ட்மென்ட் சேவிங்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யும் பணத்தை ஓய்வுக்காலத்துக்கு முன் பணத்தை வெளியே எடுத்தால், வெளியேற்றுக் கட்டணம் உள்ளது என்பதை மறக்காதீர்கள்.
பொதுவாக, பல முதலீட்டாளர்கள் ஓய்வுக் காலத்துக்கென முதலீடு செய்துவிட்டு, வேறு பல காரணங்களுக்காகப் பணத்தை வெளியில் எடுத்துவிடுகிறார்கள். எந்த நோக்கத்துக்காக முதலீடு செய்தார்களோ, அந்த இலக்கை அடைய முடியாமல் போய்விடுகிறது. இதனைத் தவிர்ப்பதற் காகவே வெளியேற்றுக் கட்டணமுள்ள ஃபண்ட் ஒன்றைக் கொடுத்துள்ளேன். இந்த ஃபண்டின் கடந்தகால வருமானமும் நன்றாக உள்ளது.”
‘‘என் வயது 30. எனக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அவளின் மேற்படிப்புக்காகவும், என் ஓய்வுக் காலத்துக்காகவும் ரூ.5,000 முதலீடு செய்ய விரும்புகிறேன். ஓரளவு ரிஸ்க் எடுக்க மட்டுமே தயாராக உள்ளேன். எனக்கான ஃபண்டுகளைப் பரிந்துரை செய்ய முடியுமா?’’
- விஜய், மெயில் மூலமாக
“நீங்கள் ஓய்வுபெறுவதற்கு இன்னும் 28 வருடங்கள் உள்ளன. அதேபோல், உங்கள் குழந்தை, கல்லூரி செல்ல இன்னும் 15 வருடங்கள் உள்ளது. அதன்பிறகுதான் மகளின் திருமணம். ஆகவே, உங்களின் தேவைகள் நீண்ட காலம் கழித்துத்தான் உள்ளன. இவ்வளவு காலம் கழித்து உள்ள தேவைகளுக்கு நீங்கள் தாராளமாக ரிஸ்க் உடைய, அதிக வருமானம் தர வாய்ப்புள்ள ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளலாம். ஓய்வுக்காலத்துக்கு மிரே இந்தியா எமர்ஜிங் புளூசிப் ஃபண்டில் ரூ.3,000, குழந்தையின் கல்விக்கு பி.என்.பி பரிபாஸ் டிவிடண்ட் யீல்ட் ஃபண்டில் ரூ.2,000 முதலீடு செய்யலாம்.
உங்களின் மனநிலை, சுபாவம் காரணமாக நீங்கள் ரிஸ்க் இல்லாத ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்பினால், ஓய்வுக்காலத்துக்கு ரிலையன்ஸ் ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டில் ரூ.3,000, குழந்தையின் கல்விக்கு ஃப்ராங்க்ளின் இந்தியா லோ டூரேஷன் ஃபண்டில் ரூ.2,000 முதலீடு செய்துகொள்ளவும்.”
