நடப்பு
Published:Updated:

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 17 - வீடு ஃபர்ஸ்ட்... கடன் நெக்ஸ்ட்!

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 17 - வீடு ஃபர்ஸ்ட்... கடன் நெக்ஸ்ட்!
பிரீமியம் ஸ்டோரி
News
நிம்மதி தரும் நிதித் திட்டம் - 17 - வீடு ஃபர்ஸ்ட்... கடன் நெக்ஸ்ட்!

ஓவியம்: பாரதிராஜா

சிலர் கண்ணை மூடிக்கொண்டு கடனை வாங்கி விடுவார்கள். ஆனால், சரியாக நிர்வகிக்கத் தெரியாது. கடன் வாங்குவது தவறில்லை. கடனுக்கான வட்டி, திரும்பச் செலுத்தும் திறன் போன்றவற்றை நன்கு  கணக்கிட்டுப் பார்த்தபின்பே வாங்க வேண்டும். இல்லையெனில், வாழ்க்கையில் முக்கியமான எதிர்கால இலக்குகளுக்குச் சேமிக்க இயலாத நிலை உருவாகிவிடும் என்பதற்கு சேலத்தைச் சேர்ந்த முத்து அதற்குச் சரியான உதாரணம்.  

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 17 - வீடு ஃபர்ஸ்ட்... கடன் நெக்ஸ்ட்!

“எனக்கு வயது 36. நான் சேலத்தில் ஜவுளிக் கடை யொன்றில் வேலை செய்கிறேன். என் மாத சம்பளம் ரூ.23,000. எனக்கு ஆண்டு போனஸாக ரூ.1,20,000 கிடைக்கும். எனக்குக் கடந்த 2012-ல் திருமணமானது. நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும், நான்கு மாதமாகும் ஓர் ஆண் குழந்தையும் உண்டு.

நான்கரை சென்ட் வீட்டு மனை வாங்கியுள்ளேன். அதில் ரூ.15 லட்சம் மதிப்பில் அடுத்த ஐந்து வருடங் களில் வீடு கட்ட விரும்புகிறேன். மேலும், என் குழந்தைகளின் கல்வி, திருமணச் செலவுகள், எங்களின் ஓய்வுக்காலத்துக்குத் தற்போது சிறிய அளவில் முதலீடு செய்யவும் விரும்புகிறேன். 

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 17 - வீடு ஃபர்ஸ்ட்... கடன் நெக்ஸ்ட்!நான் 2012-ல் என் தந்தையின் வீட்டைப் புதுப்பித்தேன். அந்த வகையில் ரூ.5 லட்சம் கடனாகி விட்டது. அதில் பெரும்பகுதியை அடைத்துவிட்டேன். இன்னும் ரூ.50,000 மட்டுமே உள்ளது. மேலும், என் திருமணத்துக்காகப் பெற்ற கடனில் இன்னும் ரூ.95,000 உள்ளது. 2% வட்டியில் மாதம் ரூ.1,900 கடந்த ஆறு மாதங்களாகச் செலுத்திவருகிறேன். மேலும், நகைக் கடன்களாக வங்கியில் ரூ.2.55 லட்சம் உள்ளது.

நான் அரசு வேலைக்கு முயற்சி செய்துவருகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிராபிக் டிசைனராக  வேலைக்குச் சேர்ந்த என் மனைவி, மாதம் ரூ.10,000 சம்பளத்துக்கு வேலைக்குச் சென்றார். தற்போது குழந்தைப்பேறு காரணமாக வேலைக்குச் செல்ல வில்லை. தற்போது வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய பழைய கம்பெனி மூலமாக அழைப்பு வந்துள்ளதால், மாதம் ரூ.6,000 சம்பாதிக்க வாய்ப்புள் ளது. என் பெயரில் பத்து இன்ஷூரன்ஸ் பாலிகள் வரை எடுத்தேன். கடந்த நான்கு வருடங்களாக பிரீமியம் செலுத்திவந்தேன். ஆனால், கடந்த ஒரு வருடமாக ஐந்து பாலிசியாகக் குறைத்துக்கொண்டேன்.   

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 17 - வீடு ஃபர்ஸ்ட்... கடன் நெக்ஸ்ட்!

மூன்று மியூச்சுவல் ஃபண்டுகளில்  ரூ.3,000 எஸ்.ஐ.பி. மூலம் முதலீடு செய்து வருகிறேன். ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தேன். தொடர்ந்து பிரீமியம் செலுத்தத் தவறிவிட்டேன். மீண்டும் செலுத்தி பாலிசியை உயிர்பிக்க வேண்டும்.   இதனுடன் டேர்ம் எடுக்க விரும்பு கிறேன். என் மாமனார் வீட்டில் மாதம் ரூ.5,000 வாடகை வருமானம் வரக்கூடிய ஓட்டு வீட்டை என் மகன் பெயருக்கு எழுதித்தரத் தயார். அதன் மூலம் வாடகை வருமானம் குறைந்தபட்சம் ரூ.3,000 வரும் என எதிர்பார்க்கிறேன். இதனையும் முதலீட்டுக்குப் பயன்படுத்தலாம் என உள்ளேன். வீடு கட்ட வேண்டும் என்பதுடன், மகள், மகனின் மேற்படிப்பு, குழந்தைகளின் திருமணத்துக்குத் தலா ரூ.5 லட்சம் சேர்க்கத் தேவையான திட்டங்களைச் சொன்னால் நன்றாக இருக்கும்” என்ற முத்து, வரவுசெலவு விவரங்களை மெயிலில் அனுப்பி வைத்தார்.(தொகை அனைத்தும் இன்றைய மதிப்பில்)

வரவு செலவு விவரங்கள்

வருமானம் - ரூ. 23,000, குடும்பச் செலவுகள் - ரூ.3,000, பெட்ரோல் - ரூ.2,000, கடனுக்கான வட்டி - ரூ.1,900, குழந்தைக்கான கல்விச் செலவு : ரூ.3,600, இன்ஷூரன்ஸ் பிரீமியம்: ரூ.1,300, கிரெடிட் கார்டு லோன்: ரூ.2,141, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: ரூ.3,000, மொத்தம்: ரூ.16,941.


இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.  

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 17 - வீடு ஃபர்ஸ்ட்... கடன் நெக்ஸ்ட்!

“எல்லோருக்குமே நிறைய ஆசைகள் இருக்கவே செய்கின்றன. அவற்றையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள என்ன வாய்ப்புகள் உள்ளன என்பதையும் நாம் அவசியம் பார்க்க வேண்டும். அதிக அளவுக்குக் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். வாங்கிய கடனை நிர்வகிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். எத்தனைச் சதவிகித வட்டிக்குக் கடன் வாங்கலாம் என ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆண்டுக்கு 24% வட்டிக்குக் கடன் வாங்கியது, 10 இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்தது, கிரெடிட் கார்டு வட்டியைப் புரிந்துகொள்ளாமல் கடன் வாங்கியது  போன்றவற்றை நீங்கள் தவிர்த்திருக்கலாம்.

உங்களுக்கு இவ்வளவு கடன் இருக்கும் நிலையில், மியூச்சுவல் ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்வதால் பெரிய பலன் எதுவும் உங்களுக்குக் கிடைக்காது. மியூச்சுவல் ஃபண்டு களில் கிடைக்கும் வருமானத்தைவிட அதிக வட்டி செலுத்தும் நிலை இருக்கும்பட்சத்தில், கடன்களை அடைப்பது மட்டுமே முதல் இலக்காக வைத்துக்கொள்ள வேண்டும்.

தந்தையின் வீட்டுக் கடன் முடியும் நிலையில், வீட்டு அடமானக் கடன் வாங்கும்பட்சத்தில் எல்லாக் கடன்களையும் அடைத்துவிட முடியும். உங்கள் இலக்குகளுக்கு முதலீடு செய்ய அது உதவக்கூடும். கடனைச் சரியாகக் கையாளத் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம்.

குடியிருக்கும் வகையில் ஏற்கெனவே வீடு இருக்கும் நிலையில், இன்னொரு வீடு கட்டுவதைக் காலம் கனியும் வரை கொஞ்சம் தள்ளிவைப்பதே நல்லது. நீங்கள் கேட்டிருக்கும் எல்லா இலக்கு களுக்கும் முதலீடு செய்ய வேண்டுமானால் மாதம் ரூ.37 ஆயிரம் தேவையாக இருக்கும்.
 
உங்கள் வருமானம் மற்றும் செலவுகளைக் கணக்கிட்டால், அது தற்போது சாத்தியமில்லை என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். நீங்கள் முயற்சி செய்யும் வேலை அமையும்போதும், குழந்தை வளர்ந்தபிறகு உங்கள் மனைவி இரண்டு, மூன்று வருடங்களில் மீண்டும் பணியில் சேர்ந்த பின்னரும் நீங்கள் நினைக்கும் வகையில் வாழ்க்கையின் இலக்குகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ளலாம்.

தற்போதைய நிலையில், குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் மகளின் திருமணம், உங்கள் ஓய்வுக்காலம் போன்ற முக்கிய இலக்குகளுக்கு மட்டும் முதலீட்டைத் தொடங்குவது சிறப்பு. தற்போது மீதமிருக்கும் தொகைக்கு                        அட்டவணையில் சொல்லியுள்ளபடி முதலீட்டை ஆரம்பிக்கவும். 

நீங்கள் குறிப்பிட்டவாறு உங்கள் மாமனார் தரக்கூடிய வீட்டு வாடகை, மனைவியின் தற்காலிக வருமானம் வரும்பட்சத்தில், முக்கிய இலக்குகளின் வரிசைப்படி முதலீட்டை ஆரம்பித்துக்கொள்ளவும். ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தொடரவும். பாலிசி எடுத்துவிட்டு பிரீமியம் செலுத்தாமல் விட்டுவிட்டால் நமக்குத் தான் இழப்பு ஏற்படும். 

உங்களுக்குக் கிடைக்கும் போனஸ் பணத்தி லிருந்து ஆண்டுக்கு 24% வட்டி செலுத்தக்கூடிய 95 ஆயிரம் கடன் தொகையை உடனடியாக அடைத்துவிடவும். ரூ.50 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளவும்.

பரிந்துரை: மோதிலால் ஆஸ்வால் மோஸ்ட் ஃபோகஸ்டு மல்டி கேப் 35 - ரூ.3,000, ஹெச்.டி.எஃப்.சி கார்ப்பரேட் டெப்ட் ஆப்பர்ச் சூனிட்டீஸ்- ரூ.2,500, ஹெச்.டி.எஃப்.சி கோல்டு ஃபண்ட்- ரூ.500”

குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.


Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878

- கா.முத்துசூரியா  

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 17 - வீடு ஃபர்ஸ்ட்... கடன் நெக்ஸ்ட்!