
பாஸ்டன் ஸ்ரீராம்
‘பணம் சம்பாதிக்க நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்; பங்குகளில் சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்’ என்று பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு சொலவடை உண்டு. படிக்கும் போது இது முரணாகத் தோன்றினாலும், சிறு முதலீட்டார்கள் முதல் முதலீட்டு நிறுவனங்கள் வரை அனைவரின் முதலீட்டுத் தொகுப்பிலும் இருக்கவேண்டியது கடன் பத்திரங்கள் (Bonds). அவை, போர்ட்ஃபோலியோவுக்கு ஸ்திரத் தன்மை வழங்கக்கூடியவையாக இருக்கும்.

ஓய்வுக்காலத்துக்காக செய்யும் நூறு ரூபாய் முதலீட்டில், அவர் வயது என்னவோ அவ்வளவு சதவிகிதம் பாண்ட் பத்திரங்களிலும், மிச்சத்தைப் பங்குகளிலும் முதலீடு செய்ய வேண்டும் என்பது பொருளாதார நிபுணர்கள் சொல்லும் ஈஸி பார்முலா.
ஒரு நாட்டில் வட்டி விகிதம் அதிகமாகும் போது பாண்டுகளின் மவுசு குறையும். வட்டி விகிதம் குறையும்போது பாண்டுகளின் மவுசு அதிகமாகும். இந்தியாவில் வட்டிவிகிதம் குறைந்துகொண்டு வரக்கூடிய இப்போதைய நிலையில், பாண்டுகள் நல்ல வளர்ச்சி கண்டுவருகின்றன.
கடந்த ஓராண்டில் யூ.டி.ஐ நிறுவனத்தின் கில்ட் அட்வான்டேஜ் ஃபண்ட் 11.3% லாபம் தந்துள்ளது. எஸ்.பி.ஐ, ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் போன்ற நிறுவனங்களின் ஃபண்ட் 10.5% லாபம் தந்துள்ளது. வங்கிகள் தரும் 6-7% வட்டியைவிட இவை அதிகம்.
முன்பு வட்டி அதிகமாக இருந்தபோது வெளியிடப்பட்ட கடன் பத்திரங்கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு, இப்போது நல்ல விலைக்கு வர்த்தகமாகின்றன. இந்தியாவில் அடுத்துவரும் வருடங்களில் வட்டிவிகிதம் குறையவே வாய்ப்பு அதிகம்.எனவே, பாண்டுகளின் ஏற்றம் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெற்றி பெற்ற நவம்பர் 2017-ல், 18250-ஆக இருந்த டவ் ஜோன்ஸ் (அமெரிக்கப் பங்குச் சந்தை குறியீடு களில் ஒன்று) பத்தே மாதங்களில் 22349 புள்ளிகளை எட்டியுள்ளது. அதாவது, கடந்த பத்து மாதங்களில் 22.5% வளர்ச்சி கண்டுள்ளது. இப்போது அமெரிக்கப் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர் தன்னை ரிட்டையர்மென்ட் என்னும் ஊருக்குச் செல்லும் போர்ட் ஃபோலியோ என்னும் தண்டவாளத்தில் செல்லும் ரயிலை ஓட்டுபவர்போல யோசிக்க வேண்டும். வண்டியின் வேகம் அதிகரித்துக் கொண்டேபோகிறது. இலக்கைக் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே அடைந்துவிடுவோம் என்று விட்டுவிட முடியாது. ஒரு நேரத்தில் வேகம் மிக அதிக மாகி, வண்டி தண்டவாளத்தை விட்டு இறங்கி விபத்து நேர வாய்ப்புண்டு.

இப்போது அவர், ‘பாண்டுகள்’ எனும் பிரேக்கை உபயோகித்து வண்டிக்கு ஒரு ஸ்திரத் தன்மையைத் தரவேண்டும். அப்போதுதான் இடையில் ஏதாவது தடங்கல் வந்தால், ரயிலைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
ஓய்வூதியத்துக்கு போர்ட்ஃபோலியோவி லிருந்து ஆண்டுக்கு 5% எடுத்துச் செலவு பண்ண நினைப்பவர்களுக்கு பாண்ட் அதிமுக்கியம். பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் போது, பங்குகளை வாங்க வேண்டுமே தவிர விற்கக் கூடாது.
1,000 ரூபாய்க்கு ஒருவர் வாங்கிய பங்கின் விலை குறையும்பட்சத்தில் 500 ரூபாய்க்குப் போக வாய்ப்பு உண்டு. அவர் தனது மாதச் செலவு ரூ.50,000-த்துக்கு 50 பங்குகளை விற்பதற்குப் பதில் 100 பங்குகளை விற்க வேண்டியிருக்கும். விலை குறைந்து மீண்டும் விலை ஏறத் தொடங்கினால், 50 பங்குகளுக்கே ரூ.50,000 வரை கிடைக்கக்கூடும்.
இந்த மாதிரி நேரங்களில் பங்குகளை விற்காமல் அதிக ஏற்ற இறக்கங்களற்ற பாண்டுகள் உறுதுணையாக இருக்கும். பங்குச் சந்தை வீழ்ச்சியடையும் காலத்தில் போர்ட்ஃபோலியோ வின் வீழ்ச்சியைக் குறைக்க பாண்டுகள் அவசியம். கடன் பத்திரங்கள் வளர்ச்சி, வீழ்ச்சி ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்தி, நம் முதலீட்டை ஒரு நேர்கோட்டில் வைத்திருக்க முடியும்.
அமெரிக்காவிலும் சரி, இந்தியாவிலும் சரி, பங்குச் சந்தை இறக்கத்தில் இருந்தபோது, பாண்ட் சந்தை நல்ல லாபம் தந்தது. உதாரணமாக, 1970-ல் அமெரிக்க பங்குச் சந்தை இழந்தது 22.6%, 2008-ல் நாஸ்டாக் 41.7% வீழ்ந்தது. அதாவது, டிசம்பர் 31, 2007-ம் ஆண்டு ஒரு லட்சம் டாலராக இருந்த போர்ட் ஃபோலியோ, டிசம்பர் 31, 2008 அன்று 58,000 டாலராக ஆகியிருந்தது. ஆனால், 1970-ம் ஆண்டு பாண்ட் மார்க்கெட் 6.5% வருமானம் கொடுத்தது. 2008-ம் ஆண்டு 7 சதவிகிதத்துக் கும் அதிக வருமானம் தந்தது.
இதே ஆண்டுகளில் பங்கு களில் 50 சதவிகிதமும், பாண்டு களில் 50 சதவிகிமும் வைத் திருந்த போர்ட்ஃபோலியோ எப்படி செயல்பட்டது தெரியுமா? 1974-ம் ஆண்டு நஷ்டத்தை 22.6 சதவிகித்தி லிருந்து 8.8 சதவிகிதத்துக்குக் குறைத்திருக்கும். 2008-ம் ஆண்டு 41% நஷ்டத்துக்குப் பதிலாக 19.9% நஷ்டம் மட்டுமே கண்டிருக்கும். இப்போது பாண்டுகளின் முக்கியத்துவம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.
வரி சேமிக்கவும் பாண்டுகள் உள்ளன. டாக்ஸ் ஃப்ரீ பாண்ட், டாக்ஸ் சேவிங்ஸ் பாண்ட் என இரண்டு வகை வரி சேமிப்பு பாண்டுகள் நம் நாட்டில் உள்ளன. வரி கட்டிய பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட்டுக்குப் பதில் டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில் வரும் வட்டிக்கு வருமான வரி கிடையாது. வைப்பு நிதிக்கு 7% வட்டி வழங்கும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி, டாக்ஸ் ஃப்ரீ பாண்டுக்கு 8% வட்டி வழங்குகிறது.
ஒருவர் 2007-ம் ஆண்டு ஒரு நிலத்தை ரூ.10 லட்சம் ரூபாய்க்கு வாங்கி 2017-ல் ரூ.50 லட்சம் ரூபாய்க்கு விற்கிறார் என்று வைத்துக் கொள் வோம். லாபம் ரூ.40 லட்சம். இதில் விலைவாசி சரிக்கட்டல் (Indexsation) போக ரூ.20 லட்சம் நிகர லாபமாகக் கிடைக்கும். இந்த நீண்ட கால மூலதன ஆதாய வரியைக் கட்டுவதற்குப் பதிலாக, என்.ஹெச்.ஏ.ஐ மற்றும் ஆர்.இ.சி போன்ற நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் பிரிவு 54EC-யின் கீழ் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வரி விலக்குப் பெறலாம்.
இனியானது உங்கள் போர்ட் ஃபோலியோவில் பாண்டுகளும் இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள்!