நடப்பு
Published:Updated:

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: வாராக் கடன்... இந்திய வங்கித் துறை சந்திக்கும் சவால்கள்!

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: வாராக் கடன்... இந்திய வங்கித் துறை சந்திக்கும் சவால்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: வாராக் கடன்... இந்திய வங்கித் துறை சந்திக்கும் சவால்கள்!

சுமதி மோகன பிரபு

டந்த 2008-ம் ஆண்டில், பங்கு விலை ஒரு டாலர் என்ற மிகக் குறைந்த அளவில் விற்பனையாகி வந்த சிட்டி பேங்கை நமது பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) வாங்கி யிருக்க வேண்டும் என்ற கருத்தை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஒருமுறை தெரிவித்தார். எஸ்.பி.ஐ, சிட்டி பேங்க்கை விலைக்கு வாங்கக்கூடிய சாத்தியக்கூறுகள் பெரும் விவாதத்துக்குரியவை என்றாலும் அந்தக் கருத்து கவனமான் ஆய்வுக்குரியது.  

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: வாராக் கடன்... இந்திய வங்கித் துறை சந்திக்கும் சவால்கள்!

மேற்கத்திய நாடுகளில் உருவான சப்-ப்ரைம் கடன் சிக்கலில் மிகப் பெரிய பன்னாட்டு வங்கிகள் சிக்கித் தவித்த போது, இந்திய வங்கிகள் எந்தவொரு பெரிய சிக்கலையும் சந்திக்கவில்லை. சொல்லப்போனால் உலகப் பொருளாதாரம் தளர்ந்தபோதும், இந்தியா தனித்து வலுவாக நின்றதற்கு முக்கியக் காரணமே, நம் நாட்டின் பொதுத்துறை வங்கிகளும், மத்திய ரிசர்வ் வங்கியும்தான் எனப் பன்னாட்டுப் பொருளாதார அறிஞர்கள் பாராட்டி வந்தனர்.

ஆனால், வங்கிகளின் இன்றைய இன்றைய நிலையோ தலைகீழாக உள்ளது. உலகப் பொருளாதாரம் சிறப்பாக முன்னேறிவரும் நிலையில், இந்தியப் பொருளாதாரம் தள்ளாடுகிறது. பன்னாட்டு வங்கிகள் சப்-ப்ரைம் சிக்கலிலிருந்து மீண்டு, வளர்ச்சி கண்டு வரும் நிலையில், இந்திய வங்கிகள்  வாராக் கடன் பிரச்னை சிக்கி, வளர முடியாமல் தத்தளிக்கின்றன.

ஏன் இந்தத் தடுமாற்றம், இதற்கான  காரணங்கள் என்ன, இந்தியப் பொருளாதாரத்தின் மந்தநிலைக்கு முக்கியக் காரணமானதொரு காரணம் வங்கிகளா என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

தொழில் துறை மந்தநிலை

நாம் ஏற்கெனவே சொன்னபடி, பத்து வருடங்களுக்குமுன் இந்தியப் பொருளாதாரம் சிறந்த நிலையில் இருந்தது. உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜி.டி.பி) வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் வளர்ந்து வந்த நிலையில், உள்நாட்டுத் தேவைகள் மேலும் வேகமாக வளரும் என்ற எதிர்பார்ப்பு தொழில் துறையில் இருந்தது.  எனவே, மின்சார உற்பத்தி, உள்கட்டமைப்பு மற்றும் தொலைத் தொடர்பு துறையில் மிக அதிக முதலீடுகள் செய்யப்பட்டன. 

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: வாராக் கடன்... இந்திய வங்கித் துறை சந்திக்கும் சவால்கள்!



ஆனால், நினைத்தது ஒன்று, நடந்தது வேறு. உலகளாவிய பொருளாதார மந்தநிலை, காலப்போக்கில் இந்தியாவின் தேவைகளை  சுருக்கியது. இந்திய தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்தித்திறனை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை.  இரும்பு உள்ளிட்ட உலோகங்களின் விலை வீழ்ச்சி, உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. மேலும், முறைசாரா மின்சாரம் மற்றும் புதிய தொழில்நுட்ப வரவுகள், பாரம்பரிய வகை முதலீடுகளைச் செயல் திறனற்றதாக மாற்றின. டாடா, அனில் அம்பானி மற்றும் அதானி போன்ற மிகப் பெரிய ஜாம்பவான் களால்கூட நிலக்கரி, மின்சார உற்பத்தி நிலையங்களை லாபம் ஈட்டக் கூடியவைகளாக நிலைநிறுத்த முடியவில்லை.

ஜியோவின் வரவு, டாடா டெலி நிறுவனத்தை விட்டு, டாடா குழுமம் வெளியேற வழி வகுத்தது. இந்தத் துறைகளைச் சார்ந்த பெரு நிறுவனங்கள் வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்தத் தவறின. கடன் வழங்குவதில் ஊழல் மற்றும் அரசியல் தலையீடு, வாங்கிய கடன்களைப் பெரு முதலாளிகள் முறைகேடாகப் பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளும் வாராக் கடன் பிரச்னைக்குக் காரணங்களாகக் கூறப்பட்டாலும், இந்தியத் தொழில் துறையின் அகலக்கால் முதலீடும், கட்டுமானத் துறைகளில் மிக நீண்ட காலக் கடன்களைப் பொதுத்துறை வங்கிகள் வழங்கியதுமே அடிப்படைக் காரணங்களாகும்.

வாராக் கடன்கள்

கடந்த மார்ச் 2017 நிலவரப்படி, மொத்த வாராக் கடன்களின் அளவு 9.6% அளவுக்கு உயர்ந்துள்ளது. இது மார்ச் 2018-ல் 10.2 சதவிகிதமாக மேலும் உயரும் என ஆர்.பி.ஐ-யின் ஜூலை அறிக்கை தெரிவிக்கிறது. இவற்றில் பெரு நிறுவனங்கள் வாங்கிய கடன்கள் மட்டும் 86 சதவிகிதத்துக்கும் மேலே. 

நவம்பர் 2016-ல் நடந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின், வங்கிகளின் கணக்கில் லட்சக் கணக்கான கோடி வைப்புத் தொகை வந்தபின்னரும், பொதுத் துறை வங்கிகள் தொழில் துறைக்கு ஏன் கடன் வழங்கத் தயங்குகின்றன என்பது பொதுமக்கள் பலருடைய மனதிலும் எழக்கூடிய கேள்வி. 

ஆனால், கடன் வழங்குவதற்கு வைப்புத் தொகையைவிட, வங்கி மூலதனம் மிகவும் முக்கியம். வைப்புத் தொகை போதுமான அளவு இல்லாத நிதி நிறுவனங்களால்கூட பலவகையில் பணம் திரட்டிக் கடன் வழங்க முடியும். ஆனால், ‘பேசல்’ கோட்பாடுகள் நடைமுறைக்கு வந்தபிறகு, மூலதனம் குறைவாக இருக்கும் ஒரு வங்கியால் அதிகமாகக் கடன் வழங்க முடியாது.

வாராக் கடன்களுக்கு ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கேற்ப, வங்கிகள் தமது லாபத்தில் இருந்துதான் தேவையான நிதி ஒதுக்கீட்டைச் செய்ய வேண்டும். லாபம் இல்லாதபோது மூலதனத்திலிருந்து நிதி ஒதுக்க வேண்டும். மூலதனம் குறைவதனால், வங்கியின் கடன் வழங்கும் திறன் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமான வணிகக் கடன்களை வழங்க, பொதுத் துறை வங்கிகளுக்குத் தேவையான மூலதனத்தை மத்திய அரசு அளிப்பதுண்டு. ஆனால், இந்த வருடம் மத்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட பின்னரும் இதுவரை மூலதனம் வழங்கப்படவில்லை.

பணமதிப்பு நீக்கம்


இந்தியாவின் இன்றையப் பொருளாதார மந்த நிலைக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிற பணமதிப்பு நீக்க விவகாரம், இந்திய வங்கிகளைக் குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளைப் புரட்டிப் போட்டுவிட்டது. நவம்பர் 2016-க்கு பிறகு ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கும் மேலாக வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பண மாற்றுப் பணியிலேயே ஈடுபட நேர்ந்தது. மேலும், வருமானத் துறை, ரிசர்வ் வங்கி எனப் பலருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையும், வங்கி ஊழியர்களின் செயல்திறனை வெகுவாகப் பாதித்தது. வாராக் கடன் வசூலிப்பதற்கான முயற்சிகள் பாதிக்கப்பட்டது ஒருபக்கம்; புதிய கடன்களை வழங்க முடியாமல் வங்கியின் வளர்ச்சி பாதிப்படைந்தது மறுபக்கம். 

நேரடி கடன் வசதி


பணவசதி படைத்தவர்களும், கடன் தேவைப் படுபவர்களும் நேரடியாகப் பணத்தைப் பரிமாறிக் கொள்ளும் சாத்தியக் கூறுகள் அதிகமாகி விட்டதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, கடன் வேண்டு பவர்களையும், வழங்குபவர்களையும் வெகு எளிதாக இணைக்கின்றன. எம்.சி.எல்.ஆர் (MCLR) எனச் சொல்லப்படும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வட்டி விகிதத்துக்குக் குறைவாக வங்கிகளால் கடன் வழங்க முடியாது.   

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: வாராக் கடன்... இந்திய வங்கித் துறை சந்திக்கும் சவால்கள்!

அதேபோல, கடனைத் திரும்பப் பெறுவதிலும் ஆர்.பி.ஐ-யின் கடுமையான விதிமுறைகளைச் செயல்முறைப்படுத்த வேண்டியிருக்கிறது. இவ்வாறான கடினமான விதிமுறைகளும் வரன் முறைகளும் இல்லாமல் நெகிழ்வுத் தன்மையுடன் கடன் வழங்கும் துணிகரக் கடன் நிதிகளும் (வென்சர் ஃபண்ட்) தற்போது பிரபல மாகி வருகின்றன. இவையனைத்தும் வங்கி கடன் களின் மீதான ஈர்ப்பைக் குறைத்து வருகின்றன.

தனியார் முதலீடு

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் தனியார் முதலீடு பெருமளவு குறைந்து வருகிறது. உலகப் பொருளாதார மந்தநிலை இதற்கு முக்கியக் காரணமாக ஆளும் தரப்பில் கூறப்பட்டு வந்தாலும், தற்போது உலகப் பொருளாதாரம் வெகுவாக மீண்டுவந்த பின்னரும், இந்தியாவில் மட்டும் தனியார் முதலீடு பெருமளவு உயராதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்திய அரசின் நிலையற்ற கொள்கைகள், பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி போன்ற அதிரடி முடிவுகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் துறை முதலீட்டாளர்களிடம் தயக்கத்தை ஏற்படுத்து வதாக உள்ளன. தனியார் முதலீடு உயராத வரை வங்கிகளின் கடன் வழங்கும் அளவு உயர்வது கடினமே. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தொழில் துறைக்கு வழங்கப்பட்ட கடன் 1.5% மட்டுமே உயர்ந்துள்ளது கவலைக்குரிய விஷயம்.

பயனுள்ள பொருளாதாரச் சீர்திருத்தங்கள்

ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு வங்கித் துறையாகும். பொருளாதாரம் மேம்பட வேண்டுமென்றால், வங்கித் துறை சிறப்பாகச் செயல்பட வேண்டியிருக்கும். வங்கித் துறையில் தற்போதுள்ள தேக்கநிலையை நீக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு உடனடியாக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்பவை வெற்று அதிரடித் தேர்தல் கோஷங்களாக இல்லாமல், தொழில்துறை செயல்பாடுகளை எளிமைப்படுத்துவதாகவும், நீண்ட காலத் திட்டங்களைத் துணிவுடன் செயல்படுத்தும் நம்பிக்கையைத் தொழில்முனைவோர் மத்தியில் உருவாக்குவதாகவும் இருக்க வேண்டும். இதர ஆசிய நாடுகளுக்கு நிகரான போட்டித்திறனை நமது ஏற்றுமதியாளர்களும் அடையத் தேவை யான ஊக்கத் திட்டங்களையும்  அறிமுகப்படுத்த வேண்டும்.

வங்கிகளுக்குத் தேவையான முதலீட்டை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். வாராக் கடன்களை வசூலிக்க, செயல்திறன் மிக்க சட்டங்களை அறிமுகப்படுத்துவதுடன், அவற்றை விரைவாக நடைமுறைப்படுத்தவும் வேண்டும். கடன்களை முறைகேடாகப் பயன்படுத்திய பெரு முதலாளிகள் மற்றும் அவர்களுக்குத் துணை நின்ற அதிகாரிகள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதும் வங்கித் துறை மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.

இதெல்லாம் நடக்கும்பட்சத்தில், வங்கிகள் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும். அப்போது நாட்டின் பொருளாதாரமும் வளரும்!