நடப்பு
Published:Updated:

அதிக லாபம் தரும் காலத்துக்கேற்ற முதலீடுகள்!

அதிக லாபம் தரும் காலத்துக்கேற்ற முதலீடுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அதிக லாபம் தரும் காலத்துக்கேற்ற முதலீடுகள்!

சி.சரவணன்

ம் ரோல் மாடல்களே நம் முன்னோர்கள்தான். இன்றைக்கு நாம் ஒழுக்கம் தவறாமல் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றால், அவர்களிடமிருந்து நாம் கற்ற வாழ்க்கைதான். எல்லா விஷயங்களிலும் நம் முன்னோர்களைப்போலவே நடக்கும் நாம், முதலீடு விஷயத்திலும் அவர்கள் பின்பற்றிய முதலீட்டையும், ஸ்டைலையுமே பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறோம்.  

அதிக லாபம் தரும் காலத்துக்கேற்ற முதலீடுகள்!

‘‘அந்தக் காலத்துல நான் சென்ட் 100 ரூபாய்க்கு வாங்கினேன். இன்னைக்கு அதோட விலை 10 லட்ச ரூபா; அந்தக் காலத்துல அஞ்சு ரூபா, பத்து ரூபான்னு நான் நகைச்சீட்டு போட்டு, 100 பவுன் வாங்கினேன். போஸ்ட் ஆபீஸ்ல ஆர்.டி பணத்தைச் சேமிச்சுத்தான் என் மகளுக்கே கல்யாணம் பண்ணிணேன்; இன்ஷூரன்ஸ் பாலிசியில் கட்டுன பணத்தை வெச்சுத்தான் வீடு கட்டினேன்’’ என்றெல்லாம் பெருமையாகச் சொல்வதைக் கேட்டிருப்போம்.

எல்லா விஷயங்களிலும் நமது முன்னோர்களைப் பின்பற்றும் நாம், முதலீட்டிலும் அவர்களைப் பின்பற்றலாமா, இன்றைய காலகட்டத்தில் அது லாபகரமாக இருக்குமா என்பது முக்கியமான கேள்வி. நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு முதலீட்டையும் எடுத்துக்கொண்டு, அந்த முதலீடு தற்போது எந்த அளவுக்குச் சரியாக இருக்கும் எனப் பார்ப்போம்.

தங்க நகை     
       
நம் முன்னோர்களின் விருப்பமான முதலீடு இது என்பதால், இன்றைக்கு நாமும் அதற்கே முன்னுரிமை தருகிறோம். எவ்வளவு பணம் கிடைத்தாலும், அதை ரொக்கமாகவோ அல்லது சிறுகச் சிறுகவோ (நகைச்சீட்டின் மூலம்) தங்கம் வாங்கிச் சேர்க்கிறோம். நம் முன்னோர்கள் தங்கம் வாங்கிச் சேர்த்ததற்கும், நாம் இப்போது தங்கம் வாங்குவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அன்றைய நிலையில், தங்கம், மனை ஆகிய இரண்டு முதலீடுகள் மட்டுமே அதிக அளவில் தெரிந்திருந்தது. அதில் செய்த முதலீட்டை மிக நீண்ட காலத்துக்கு வைத்திருந்தனர். அதனால்தான் குறைந்த அளவிலான அந்த முதலீடுகள் இன்றைக்கு மிகப் பெரிதாக வளர்ந்திருக்கிறது.   

அதிக லாபம் தரும் காலத்துக்கேற்ற முதலீடுகள்!

ரெக்கரிங் டெபாசிட்
           
வங்கி, தபால் அலுவலகத் தொடர் சேமிப்பு திட்டமான ரெக்கரிங் டெபாசிட்டுக்கு (ஆர்.டி) இன்றைக்குக் கிடைக்கும் வட்டி, ஆண்டுக்கு  சுமார் 7.1% மட்டுமே. அதுவும் ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இதில் முதலீட்டை வைத்திருக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ள வேண்டுமெனில், மூன்றாண்டு கழித்தே அது சாத்தியம். ஆனால், ஆர்.டி வட்டிக்குப் பதில் சேமிப்புக் கணக்குக்கான வட்டி 4% மட்டுமே தரப்படும். 

வங்கிகளில் ஆறு மாதம் முதல் ஆர்.டி இருக்கிறது. குறுகிய காலத்தில் (6-12 மாதங்கள்) பணம்  தேவை என்றால் மட்டுமே இதில் சேமிக்க லாம். ஐந்து ஆண்டுகளுக்கு மேலான எதிர்காலத் தேவைகளுக்கு ஆர்.டி-யில் பணம் சேர்ப்பதால், நமக்கு எந்த வகையிலும் லாபம் கிடைக்காது. 

இன்ஷூரன்ஸ் பாலிசி     

மாமன் சொன்னான், மச்சான் சொன்னான், நண்பன் சொன்னான் என்று எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து, வேறு வழியில்லாமல் தொடர்ந்து பிரிமீயம் கட்டி வருபவர்கள் நம்மில் ஏராளம். இந்த பாலிசிகளில் கட்டும் பிரிமீயம் பணம் 20 ஆண்டுகளில் இரு மடங்காகும். இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு 5 - 6% மட்டுமே. இது பணவீக்க விகிதத்தைவிடக் குறைவு.  வரிச் சலுகை என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் பலரும் அதில் தொடர்ந்து பணம் கட்டுகிறார்கள்.  

அதிக லாபம் தரும் காலத்துக்கேற்ற முதலீடுகள்!

ரியல் எஸ்டேட்

நம் முன்னோர்களின் இன்னொரு விருப்பமான முதலீடு மனை வாங்குவது. இன்னும் மனை என்ற அளவைத் தாண்டி ஏக்கர் கணக்கில் வாங்கி தோட்டமும் அமைத்தனர். நம் முன்னோர்கள் காலத்தில் மனை மற்றும் நிலத்தின் விலையானது மிகக் குறைவாக இருந்தது. எனவே, குறைந்த விலையில் இடத்தை வாங்கி, அதை நீண்ட நாள்களுக்கு வைத்திருக்கவும் செய்தனர். ஆனால், இன்றைக்கு மனை மற்றும் நிலத்தின் விலை மிக மிக அதிகம். அதன்மூலம் கிடைக்கும் லாபம் ஆண்டுக்கு இரண்டு சதவிகிதம்கூட இல்லை. தவிர, அவற்றைப் பராமரிக்க ஆகும் செலவு, செலுத்த வேண்டிய பல்வேறு வரிகள் போன்றவற்றைக் கணக்கிட்டால், அதன்மூலம் கிடைக்கும் லாபம் இன்னும் குறையும். சொந்தமாக ஒரு வீடு மட்டும் இருந்தால் போதும் என்று நினைப்பதே இன்றைக்கு சரி.  

லைஃப் ஸ்டைல் மாற்றத்துக்கு ஏற்ப..!
   
சரி, நம் முன்னோர்கள் முதலீடு செய்தார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக நாமும் அதில் முதலீடு செய்ய வேண்டாம் என்பதை ஒப்புக் கொள்கிறோம். அப்படியானால், எதில்தான் முதலீடு செய்வது என்று கேட்கிறீர்களா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறார்  நிதி ஆலோசகர் சா.ராஜசேகரன் (Wisdomwealthplanners.com).   

அதிக லாபம் தரும் காலத்துக்கேற்ற முதலீடுகள்!

‘‘நம் முன்னோர்களின் காலத்தில் விலைவாசி யானது அவ்வளவு வேகமாக உயரவில்லை. மேலும், அவர்களின் காலத்தில் அதிக முதலீட்டு வாய்ப்புகள் இல்லை. இதர முதலீடுகள் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்குக்  கிடைக்கவில்லை. அவர்கள் முதலீட்டின் மூலம் அதிக வருமானத்தை எதிர்பார்க்க வில்லை. காரணம், அவர்களின் வாழ்க்கை முறை  (லைஃப்ஸ்டைல்) மிகவும் எளிமையானதாக இருந்தது. மேல் சட்டை போடாமல், துண்டைப் போட்டுக்கொண்டு ஊர் சுற்றி வந்துவிடுவார்கள்.

இன்றைக்கு அப்படியல்ல. அரை கிலோமீட்டர் தொலைவுக்குக்கூட ஆட்டோ தேடுகிறோம். தலைவலி, காய்ச்சலுக்கே பெரிய மருத்துவ மனையைத் தேடி ஓடுறோம்.  இதனால், நமக்கு அதிகத் தொகை தேவைப்படுகிறது. நம் முதலீடு பணவீக்க விகிதத்தைத் தாண்டி அதிக வருமானம் தந்தால் மட்டுமே நம் லைஃப்ஸ்டைலை இன்றைய நிலைக்கு ஏற்ப நம்மால் வைத்திருக்க முடியும்’’ என்றவர், இன்றைக்கு நாம் பின்பற்ற வேண்டிய புதிய முதலீடுகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

நவீன முதலீடுகள்    

“ பாரம்பர்ய முதலீடுகளை ஓரம் கட்டிவிட்டு நவீன முதலீடுகளில் பணத்தைப்போடத் தொடங்க வேண்டும். முதலில், ஆயுள் காப்பீடு பாலிசியை எடுத்துக்கொள்வோம்.

எண்டோவ்மென்ட் பாலிசிக்குப் பதில், பிரீமியம் குறைவான டேர்ம் பிளான் பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிசி முடிவில் பணம் எதுவும் கிடைக்காது என்றாலும், இது அதிக நன்மை தருவது. உதாரணமாக, எண்டொவ்மென்ட் பாலிசியில் 30 வயதாகும் ஒருவர், ரூ.10 லட்சத்துக்கு, 15 ஆண்டுகள் பிரிமீயம் கட்டுகிற மாதிரி ஒரு பாலிசி எடுத்தால், மாதத்துக்கு சுமார் ரூ.6,000 (ஆண்டுக்கு 72,000 ரூபாய்) கட்ட வேண்டும். பாலிசிதாரருக்கு இடையில்  எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லையெனில், 15 ஆண்டுகள் முடிவில் முதிர்வுத் தொகை ரூ.16 லட்சம் கிடைக்கும். ஆண்டுக்குச் சராசரியாக 5.4% வருமானம் கிடைத்திருக்கும்.    

அதிக லாபம் தரும் காலத்துக்கேற்ற முதலீடுகள்!



இதே ரூ.10 லட்சம் ரூபாய்க்கு  ஒருவர் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தால், மாதந்தோறும் கட்டவேண்டிய  பிரீமியம் ரூ.250 (ஆண்டு பிரீமியம் ரூ.3,000) மட்டும்தான். டேர்ம் பிளானுக்கு மாதம் 250 பிரீமியம் கட்டிவிட்டு, மீதி ரூ.5,750-ஐ வருமான வரிச் சலுகை அளிக்கும் பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்) திட்டத்தில் முதலீடுசெய்து, அதற்கு ஆண்டுக்கு 7.8% வருமானம் கிடைத்தால்கூட, பாலிசி முடிவில் ஒருவருக்கு ரூ.19.70 லட்சம் கிடைக்கும். 

ஆர்.டி, ரியல் எஸ்டேட், தங்க நகை போன்றவை லாபகரமான முதலீடாக தற்போது இல்லை என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. இவற்றுக்குப் பதில் அதிக வருமானம் அளிக்கும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். அதில் அதிக ரிஸ்க் இருக்கிறது. மூலதனத்தைக்கூட சில சமயங்களில் இழக்கும் அபாயம் இருக்கிறது என்பதால், அதைப் பற்றி அதிகம் தெரியாதவர்கள் அந்த முதலீட்டைத் தவிர்க்கலாம். இதற்குப் பதில், நிதி மேலாளர்கள் (ஃபண்ட் மேனேஜர்கள்) நிர்வகிக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.   

பொதுவாகவே, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்றாலே ரிஸ்க்கானது என முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக ரிஸ்க் என்பது பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில்தான்.  இவை பணவீக்க விகிதத்தைவிட கணிசமான அதிக வருமானம் தரக்கூடியவை. என்றாலும், ஒருவரின் மொத்த முதலீட்டையும் பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் போடுவது தவறு. ஒருவர் தனது வயதுக்கேற்ப இந்த ஃபண்டில் முதலீட்டை மேற்கொள்ளலாம். உங்கள் வயது 30 எனில், நீங்கள் 60% பங்கு சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அதாவது, ஒருவரிடம் ரூ.1 லட்சம் உள்ளது. அவரது வயது 30 எனில், ரூ.70 ஆயிரத்தைப் பங்குச் சார்ந்த ஃபண்டுகளிலும், மீதமுள்ள ரூ.30ஆயிரத்தைத் தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், லிக்விட் ஃபண்ட், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட், பேலன்ஸ்டு ஃபண்ட் போன்றவற்றில் பிரித்து முதலீடு செய்யலாம்.

தங்க நகை முதலீட்டுக்குப் பதிலாக கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இவற்றில் முதலீடு செய்யும்போது செய்கூலி, சேதாரம், பழைய நகை, பாதுகாப்புக்காக லாக்கர் என்கிற செலவுகள் மற்றும் இழப்புகள் இருக்காது. இந்த இரு திட்டங்களையும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அளிக்கின்றன.    

கோல்டு இ.டி.எஃப் என்பது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் வெளியிடப் பட்டாலும், அது பங்குச் சந்தையில் வர்த்தகமாகும். உங்கள் பெயரில் ஒரு டீமேட் கணக்குத் தொடங்குவதன் மூலம், இதில் எளிதில் முதலீடு செய்யலாம். டீமேட் கணக்கு இல்லை என்பவர்கள், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் மூலம் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்ய பான் எண் இருந்தால் போதும்.    
 
இதில் ஒரு யூனிட் என்பது பொதுவாக ஒரு கிராம் தங்கத்தைக் குறிக்கும். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப, இந்த யூனிட்டின் மதிப்பு ஏறி இருக்கும். யூனிட்களை விற்கும்போது, பணமாகவே தருவார்கள். அதனைக்கொண்டு நாம்தான் தங்க நகை வாங்கிக்கொள்ள வேண்டும். தங்க நகை தேவை என்பவர்கள் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்துவரலாம். தேவைக்கு ஏற்ப எத்தனை யூனிட்களில் வேண்டுமானலும் முதலீடு செய்யலாம்.

மியூச்சுவல் ஃபண்டில் கடன் சார்ந்த திட்டங்கள் அந்த அளவுக்கு ரிஸ்க் கிடையாது. ஃபிக்ஸட் டெபாசிட் அளவுக்கு வருமானம் கிடைக்கும். பேலன்ஸ்டு திட்டங்களில் {பங்குச் சந்தை (65%) மற்றும் கடன் திட்டங்கள் (35%) கலந்து முதலீடு செய்யப்படுவை}பணவீக்க விகிதத்தைவிட, சிறிது அதிக வருமானம் கிடைக்கும். 

லிக்விட் மியூச்சுவல் ஃபண்டில் அதிக ரிஸ்க் இல்லை. இது வங்கி சேமிப்புக் கணக்குக்கு மாற்றாகும். ஆண்டுக்கு இதில் சுமார் 7% வருமானம் கிடைக்கும்.  வங்கிச் சேமிப்புக் கணக்கில் 3.5 - 4% வட்டி கிடைக்கும் நிலையில் 7% வருமானம் என்பது கூடுதல் லாபம்தானே? எனவே, மியூச்சுவல் ஃபண்டில் அதிக ரிஸ்க் இருக்கிறது என்று ஒதுங்கியிருக்க தேவையில்லை.    

மேலே கூறப்பட்ட ஃபண்டுகளில் தேவைக்கேற்ப நான்கு நாள்கள் முதல் எவ்வளவு நாள்களுக்கு வேண்டுமானலும் வைத்துக் கொள்ள முடியும். அதேநேரத்தில், குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் களில் குறிப்பிட்ட காலத்துக்கு முதலீடு செய்தால் மட்டுமே எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். குறிப்பாக, பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகளில் 3 முதல் 5 ஆண்டுக்கு மேல் முதலீடு செய்தால் மட்டுமே கணிசமான லாபத்தைப் பெற முடியும். கடன் ஃபண்டுகளில் குறைந்தது ஓராண்டுக்காவது முதலீட்டை வைத்திருக்க வேண்டும்.

பங்குச் சந்தை சார்ந்த பேலன்ஸ்டு ஃபண்டுகளில் மூன்று ஆண்டுகள் வரை முதலீட்டைத் தொடர்வது அவசியம். லிக்விட் ஃபண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் பணத்தைப் போடலாம், எடுக்கலாம். ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் ஃபண்டில் வருமானச் சலுகை அதிகம். இவற்றில் வட்டி மற்றும் லாபத்துக்கு வருமான வரி கட்ட வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் கிடைக்கும் டிவிடெண்ட் லாபத்துக்கு வருமான வரி எதுவும் கட்டத் தேவையில்லை. மேலும், ஈக்விட்டி ஃபண்டுகள், பேலன்ஸ்டு ஃபண்டுகளில் ஓராண்டுக்குமேல் யூனிட்களை விற்றால் லாபத்துக்கு வரி எதுவும் கட்டத் தேவையில்லை. உதாரணமாக, ஒருவர் ரூ.1 லட்சத்தை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டால் (வட்டி 6.75%), ஓராண்டு கழித்து ரூ.1,06,750 கிடைக்கும். இதில் லாபமாகக் கிடைக்கும் ரூ.6,750-க்கு அவரவர் வருமான வரம்புக்கேற்ப (10.3%, 20.6%, 30.9%) வரி கட்ட வேண்டும். ஒருவர் 20.6% வரி வரம்பில் இருந்தால், அவர் ரூ.1,390 வரி கட்ட வேண்டும். அதே தொகையை அவர் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்து 14% வருமானம் (பார்க்க, எந்த முதலீடு என்ன வருமானம் என்ற அட்டவணை) கிடைத்தால் ரூ.1,14,000 -ஆகப் பெருகி இருக்கும். லாபமாகக் கிடைக்கும், 14,000 ரூபாய்க்கு வரி எதுவும் கட்டத் தேவையில்லை. 

முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்லர் என்பது உண்மைதான். அதற்காக அவர்கள் செய்த முதலீட்டையே நாமும் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. காலத்துக்கேற்ப நம் முதலீட்டை மாற்றிக்கொள்வதே புத்திசாலித்தனம்” என்று முடித்தார் ராஜசேகரன்.

உங்கள் முதலீட்டைக் காலத்துக்கேற்ப நீங்கள் மாற்றிக் கொள்ளத் தயாரா?

எனக்குக் கைகொடுக்கும் எஸ்.ஐ.பி!

என்.வெற்றி, ஆட்டோ டிரைவர், புதுச்சேரி  

அதிக லாபம் தரும் காலத்துக்கேற்ற முதலீடுகள்!



“தங்கம், மனை வாங்க வேண்டும் என்றால் அதிகத் தொகை தேவைப் படுகிறது. மேலும், இவற்றில் பெரிதாக லாபம் இல்லாமல் இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் என்கிறபோது மாதம் 100 ரூபாய்கூட முதலீடு செய்ய முடிகிறது. குடும்பத் தேவைக்காக ரூ.300, ரூ.500, ரூ.1,000  என மூன்று ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். வருமானமும் நன்றாகக் கிடைத்துவருகிறது.”

அதிக லாபம் தரும் காலத்துக்கேற்ற முதலீடுகள்!

பங்குச் சந்தைதான் அதிக லாபம் தரும்!

ஆர்.ரவி, சேலம்,

“ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம் போன்றவை பணவீக்க விகிதத்தைத் தாண்டி வருமானம் தருவதாக இல்லை. இப்போதுள்ள லைஃப் ஸ்டைலைக் கடைசி காலத்திலும் தொடர வேண்டுமென்றால், பங்குச் சந்தையில் முதலீடு செய்வது மிக அவசியம். மேலும், இந்த முதலீட்டில் டிவிடெண்டுக்கு வரி இல்லை. ஓராண்டுக்கு மேல் முதலீட்டைத் திரும்பப் பெற்றால் வரி இல்லை. மற்ற முதலீடுகளில் வருமான வரி கட்ட வேண்டி வரும் என்பதால், லாபம் இன்னும் குறைந்துவிடும்.”

கடன் இல்லாமல் சொந்த வீடு சாத்தியமா?

மு
ன்பு நிலத்தின் விலையும் குறைவு. மக்களின் செலவும் குறைவாக இருந்ததால், எல்லாராலும் எளிதாக மனை வாங்கி வீடு கட்ட முடிந்தது. ஆனால், இப்போது வீட்டுக் கடன் மூலமே வீட்டைச் சொந்தமாக்கி கொள்ள முடிகிறது. வீட்டுக் கடனில் திரும்பக்கட்டும் கடனுக்கு வருமான வரிச் சலுகை இருக்கிறது. அந்த வகையில்  திரும்பக் கட்டும் தகுதி தாராளமாக இருக்கும் பட்சத்தில் வீட்டுக் கடன் வாங்குவதில் தவறில்லை. இந்த விஷயத்தில் முன்னோர்களைப் போல, மொத்தப் பணமும் சேர்த்து வீடு வாங்க வேண்டுமென நினைத்தால், அதற்குள் விலை உயர்ந்துவிடும். மேலும், வரிச் சலுகையும் கிடைக்காது.