நடப்பு
Published:Updated:

வட்டி மேலும் குறைப்பு... லாபகரமான அரசு ஊழியர் வீட்டுக் கடன்!

வட்டி மேலும் குறைப்பு... லாபகரமான அரசு ஊழியர் வீட்டுக் கடன்!
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டி மேலும் குறைப்பு... லாபகரமான அரசு ஊழியர் வீட்டுக் கடன்!

ப.முகைதீன் சேக்தாவூது

சென்ற ஆண்டின் பணமதிப்பு நீக்கம்  காரணமாக நிலவிய பணப்புழக்க மந்தநிலை, தற்போது சீரடைந்து வருகிறது. இத்துடன், மனைப் பிரிவு அங்கீகாரம் பற்றிய நடைமுறை சீரமைப்பும் சேர்ந்து, வீட்டுக் கடன் பெற்று வீடு கட்டும் முயற்சிக்குப் புத்துணர்வு தந்துள்ளது. எனவே, கடன் பெறலாம்; வீடு கட்டலாம்.  

வட்டி மேலும் குறைப்பு... லாபகரமான அரசு ஊழியர் வீட்டுக் கடன்!

பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், வீட்டுக் கடன் தரும் தனியார் நிறுவனங்கள் எனக் கடன் தரும் வாயில்கள் பல்கிப் பெருகிவிட்டதால், ‘எப்படியாவது கடன் கிடைத்தால் போதும்’ என்ற எண்ணம் மறைந்துவிட்டது. எங்கே கடன்பெறுவது சிறந்தது என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கலாம். தமக்குத் தகுந்த இடத்தில் கடன் பெறலாம்.

கடனும் வட்டியும் சேர்ந்தே இருப்பவை. என்றாலும், அவற்றைப் பிரித்துப் பார்க்கலாம். கடன் முக்கியம். அதைவிட நாம் தரவேண்டிய வட்டியைக் கணக்கிட்டுப் பார்ப்பது அவசியம்.

தற்போது, வீட்டுக் கடனுக்கான வட்டி 8.35 சதவிகிதத் திலிருந்து 11% வரை என்பதாக விளம்பரப்படுத்தப்படுகிறது. இதைவிட அதிகரித்த வட்டி விகிதமும் நடைமுறையில் உள்ளன. ஒவ்வொரு வட்டி விகிதத்துக்குமான கடனுக்கு வெவ்வேறு பெயர்கள். வெவ்வேறு திருப்பிச் செலுத்தும் தவணைக் காலங்கள். தனித்தனியே விதிமுறைகள் உள்ளன.

இவை தவிர, கடன் பெறுவோருக்கான தகுதியாக கடன்தாரரின் வயது, கல்வித் தகுதி, வருமானம் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்கள் வருமானம், கடன்தாரரின் சொத்து மற்றும்    நிலுவையில் உள்ள கடன், தற்போது பார்த்துவரும் வேலை  போன்றவை பரிசீலிக்கப்படுகின்றன. பரிசீலனையில் தகுதி பெறுவோருக்குக் கடன் தரப்படுகிறது. 

வட்டி மேலும் குறைப்பு... லாபகரமான அரசு ஊழியர் வீட்டுக் கடன்!அரசுப் பணியில் உள்ள அரசு ஊழியர், அரசு தரும் வீடு கட்டும் முன்பணம் (House Building Advance) பெற ஒரே தகுதி, முறையான சம்பள ஏற்ற முறையில் (Regular Scale of Pay) ஆறு ஆண்டுகாலம் பணி நிறைவு செய்துள்ளாரா என்பதுதான்.

அரசு வழங்கும் வீடு கட்டும் முன்பணத்துக்கு பல்வேறு பெயர்கள் கிடையாது. ஒரே பெயர் ஹவுஸ் பில்டிங் அட்வான்ஸ்தான். அத்துடன் ஒரே வட்டி விகிதம்தான். அதுவும் கடன் பெற்ற காலம் முதல், கடனும் வட்டியும் செலுத்தி முடியும்வரை வட்டி விகிதம் மாறவே மாறாது. இத்தனை சிறப்புகளைக்கொண்ட வீடு கட்டும் முன்பணத்துக்கான வட்டி விகிதம் சென்ற ஆண்டைவிட, மேலும் குறைக்கப்பட்டு நடப்பு, நிதியாண்டுக்கான வட்டி விகிதம் கீழ்க்காணுமாறு உள்ளது.

கடன் தொகை...

ரூ.50,000 வரை : 5% 

ரூ.50,001 முதல் ரூ.1,50,000 வரை: 6.50%

ரூ.1,50,001 முதல் ரூ.5 லட்சம் வரை: 8.50%

5 லட்சத்துக்கு மேல் : 9.50%

‘8.50% வட்டியிலேயே வங்கிக் கடன் பெற்றுவிட முடியும் என்கிற போது 9.5% வட்டிக்கு உட்பட வேண்டிய அவசியமென்ன’ என்று வட்டி வகிதத்தை மட்டுமே பார்த்து கேள்வி கேட்கக்கூடாது.

வட்டி விகிதத்தைவிட முக்கியம், வட்டி கணக்கிடும் முறைதான். அவ்வாறு, அரசு சலுகை வட்டியுடன் கடன் தருகிறது. அதன்படி, நடப்பு நிதியாண்டில் (2017-2018) ரூ.25 லட்சம் அதிகபட்சமாக வீடு கட்டும் முன்பணம் பெற்று, வீடு கட்டும் ஒருவர், கீழ்க்காணும்படி திருப்பிச் செலுத்தினால் போதும்.

ரூ.25,000 மாதத் தவணை வீதம் 137 தவணையும், 138-வது தவணையாக 6,177 ரூபாயும் செலுத்தினாலே போதும். வீடு கட்டும் முன்பணத்துக்கான அசலும், வட்டியும் முடிந்துவிடும். அதாவது, நாம் செலுத்தும் மொத்தத் தொகை ரூ.34,31,177. இதில் கடன் ரூ.25 லட்சம் போக வட்டித் தொகை ரூ.9,31,177 மட்டுமே.

இதுவே 8.40% வட்டிக்கு வங்கிகளிலோ, பிற வீட்டுக் கடன் தரும் நிறுவனங்களிலோ, நாம் வீடு கட்டும் கடன் பெற்றால் நாம் ரூ.24,896 வீதம் 174 தவணை செலுத்த வேண்டும். மொத்தத் தொகை 43,31,925, கடன் தொகை ரூ.25 லட்சம், வட்டித் தொகை ரூ.18,31,925.   

வட்டி மேலும் குறைப்பு... லாபகரமான அரசு ஊழியர் வீட்டுக் கடன்!

இது எப்படியென்றால் அரசு வழங்கும் கடனுக்குத் தனி வட்டி கணக்கீடு. அதிலும்கூட ஒவ்வொரு மாதமும் நிலுவைத் தொகைக்கு மட்டுமே வட்டி. இது மட்டுமன்றி, கடனைச் செலுத்திய பிறகு, வட்டி கட்டும் காலத்துக்கு வட்டி கிடையாது. அதாவது, கடனுக்கான அசல் தொகை ரூ.25 லட்சத்தைத் திருப்பிச் செலுத்தும் காலமான 100 மாதங்களுக்கு மட்டுமே வட்டி கணக்கீடு செய்யப்படுகிறது.

எனவேதான், வட்டித் தொகையானது வங்கி வட்டியைவிட பாதியாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, வங்கியானாலும், பிற கடன் தரும் நிறுவனங்களாக இருந்தாலும் வீட்டுக் கடன் தருவதற்கு லாபநோக்கம் உள்ளது. ஆனால், அரசு வழங்கும் வீடு கட்டும் கடனின் ஒரே குறிக்கோள், ‘அரசு ஊழியர், கடன் சுமை நெருக்கடியின்றி தன் பணிக்காலத்தில் சொந்த வீடு கட்டிக் கொள்ளட்டும்’ என்பதுதான். எனவேதான் குறைந்த வட்டி. எவராலும் தரமுடியாத வட்டிச் சலுகை தரப்படுகிறது. வீட்டுக் கடன் பெறும் ஊழியர்கள் கவனிக்க வேண்டிய மேலும் சில முக்கிய விஷயங்கள்...

• அரசுக் கடன் தாமதமாகக் கிடைக்கும் என்று எவரோ, எப்போதோ சொன்னதால் தயக்கம் இருக்கக்கூடும். இப்போது தாமதம் கிடையாது.

• எனக்கு மனையே இல்லையே என்ற தயக்கம் வேண்டாம். மனை வாங்கவும் வீடு கட்டவும் சேர்த்தே முன்பணம் பெறலாம்.

• மொத்த முன்பணத்தில் மனை வாங்க வெறும் 20% தொகைதானே கிடைக்கும் என்பது பழைய நிலை. இப்போது அதிகபட்ச முன்பணம் கிடைக்கும்.

• வீட்டை இங்கே கட்டுவதா, அங்கே கட்டுவதா? என்ற தயக்கம். இந்தத் தயக்கம் தவிர்க்கலாம். முன்பணம் ஏற்பளிப்பு செய்வதற்குமுன், அதே மாவட்டத்துக்குள் மனையை மாற்றம் செய்ய விண்ணப்பித்துக் கொள்ளலாம். சரியான இடத்தில் வீடு கட்டலாம்.

• பழைய சொந்த வீட்டைப் புதுப்பிக்கலாம், விஸ்தரிக்கலாம், மாடி கட்டலாம்.

• ஆயத்த வீடு வாங்கிக்கொள்ளலாம்.

• பாதி கட்டி முடித்தபின் பணப் பற்றாக்குறைக் காரணமாக பாதியில் நிற்கும் வீட்டுக்கும் கடன் பெற்று, வீட்டைப் பூர்த்தி செய்யலாம்.

• கூட்டுக் குடும்பத்தில் பூர்வீக சொந்த வீட்டில் இருப்போர் தனி வீடு கட்டலாம்.

• கட்டி முடித்த சற்றே பழைய வீட்டை வாங்கவும் கடன் பெறலாம்.

• அடுக்கு மாடியிலும் வீடு வாங்கலாம்.

• தகவல் குழப்பம் இல்லாத ஒரு முழுமையான திட்டம் ‘அரசு வழங்கும் அரசு ஊழியர் வீடு கட்டும் முன்பணம்.’ பலவகை வீட்டுக் கடனுக்கு முன்பணம் பெற வழியுள்ளது.

அதிகபட்சம் கடனைத் திருப்பிச் செலுத்த 180 தவணை என்றாலும், கடன் பெறுபவர் தனக்குத் தகுதியான தவணைக் காலத்தை நிர்ணயித்து திரும்பச் செலுத்தலாம்.

வட்டிக்கான அதிகபட்ச தவணை 60 என்றாலும், தவணையைக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால், அசல் தவணைத் தொகைக்குக் குறையாதபடி வட்டித் தவணை அமைய வேண்டும்.

வட்டி குறைக்கப்பட்ட நிலையில், இன்றையத் தேதியில் ரூ.50,000 அடிப்படைச் சம்பளத்துடன் 25 லட்சம் கடன் பெறும் ஊழியருக்கு, வங்கி வட்டியைவிட, அவரது 19 மாத சம்பளம் அளவுக்கு வட்டித்தொகை மிச்சமாகும்.