
கேள்வி பதில்

நானும் என் தம்பியும் குழந்தைகளாக இருக்கும்போதே எங்கள் தந்தை காலமாகிவிட்டார். அதன் பின்னர் எங்கள் தாயார் வழி தாத்தா பாட்டி வீட்டுக்கு வந்துவிட்டோம். அவர்களின் ஆதரவோடு என் தம்பி படித்து ஆசிரியர் வேலைக்குச் சென்றுவிட்டார். அதன் பிறகு என் அம்மாவுடன் என் சொந்த ஊருக்கு வந்துவிட்டோம். அங்கே எங்களுக்குச் சொந்தமாக 5 ஏக்கர் நிலம் உள்ளது. நான் திருமணத்துக்குப் பிறகு புதுச்சேரி வந்துவிட்டேன். என் தாயார் இறந்த பிறகு அந்த 5 ஏக்கர் நிலத்தை என் தம்பி கேட்டுக்கொண்டதற்கிணங்க 1983-ல் தானப்பத்திரம் எழுதிக்கொடுத்தேன். என் தம்பிக்கு ஜவுளி கடைகளும் சொந்தமாக உள்ளது. வசதியாக இருக்கும் நிலையிலும்கூட தானப்பத்திரம் எழுதிக்கொடுத்த காலத்திலிருந்தே என் தம்பி எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எனக்கு அவரிடமிருந்து உதவி கிடைக்க சட்டபூர்வமான வழி ஏதாவது உள்ளதா?
-பிரேமாவதி, புதுச்சேரி

கே.அழகுராமன், வழக்கறிஞர், உயர் நீதிமன்றம்
“நீங்கள் எழுதிக் கொடுத்திருக்கும் தானப்பத்திரத்தில் “உங்கள் தம்பி உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும்” என ஒரு ஷரத்து இருக்கும்பட்சத்தில் மிகச் சுலபமாக அவரிடமிருந்து உதவி கிடைக்க வழி வகை செய்யலாம். அவ்வாறு இல்லாத நிலையில், 1983-ம்ஆண்டு எப்படிப்பட்ட சூழ்நிலையில் தானப்பத்திரம் எழுதி வாங்கப்பட்டது என்பதை விளக்கி, அந்தத் தானப்பத்திரம் செல்லாதென விளம்புகை பரிகாரம் கோரி, ஒரு சிவில் வழக்குத் தாக்கல் செய்யலாம் (Declaration Suit).
1983-ம் ஆண்டு எழுதப்பட்ட தானப்பத்திரம் என்பதால் வெற்றி வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், குடும்ப நபர்களுக்குள்ளான வழக்கு என்பதால், மாற்று முறைத் தீர்வாக Alternative Dispute Redressal Forum மூலம் நடத்தப்படும் லோக் அதலத், மீடியேஷன் முன்பாக உங்கள் வழக்கானது அனுப்பப்பட்டு, அங்கு உங்கள் சகோதரர் ஆஜராக நேரிடும். உங்களுக்கு உதவி கிடைக்க, நிச்சயமாக அதன்மூலம் ஒரு வழி கிடைக்கும்.”
ஐ.பி.ஓ மூலம் பங்குகளில் முதலீடு செய்வதே லாபகரமானது. காரணம், வாங்கும்போது தரகுக் கட்டணம் கொடுக்க வேண்டியதில்லை என்கிறான் என் நண்பன். இது சரியான அணுகுமுறைதானா?

மகேஷ் குமார், தென்காசி
எம்.எஸ்.ஓ.அண்ணாமலை, பங்குச் சந்தை தரகர், சேலம்
“ஐ.பி.ஓ-வில் நீங்கள் விண்ணப்பித்த அலாட்மென்ட் அப்படியே கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. மேலும், பங்கின் விலை நகர்வுகள் ஆரம்பத்தில் எப்படியிருக்கும் என்பதும் தெரியாது. பங்கின் விலை, வெளியீட்டு விலையை விட அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம்.
சந்தையில் பங்குகளை வாங்குவதற்கு தற்போது தரகுக் கட்டணம் மிகக் குறைவு மற்றும் உங்களுடைய வாங்கும்/விற்கும் விலையை அது எந்த வகையிலும் பாதிக்காது.
மேலும், சந்தையிலிருந்து பங்குகளை வாங்கும்போது நாம் எடுக்கும் முடிவுகள், நிறுவனத்தின் ஃபண்டமென்டல் காரணிகள் மற்றும் நிறுவனத்தின் வரலாறு ஆகியவற்றைப் பொறுத்து எடுக்கப்பட்டால் நல்ல முடிவுகளைத் தரும். எனவே ஐ.பி.ஓ சந்தையைக் காட்டிலும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது நல்ல முடிவாக இருக்கிறது.”
அண்மையில் நான் மியூச்சுவல் ஃபண்டில் ரூ.20,000 முதலீடு செய்தேன். எனக்கு ரூ.19,850- க்குத்தான் யூனிட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஏஜென்ட்களுக்குக் கட்டணம் கொடுக்க வேண்டுமா?

ரமேஷ், சென்னை
சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், Wmsplanners.com
“மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்குப் பரிவர்த்தனை கட்டணம் 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இதன்படி, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரூ.10,000 மற்றும் அதற்கு அதிகமாக முதலீடு செய்பவர்கள் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். புதிதாக மியூச்சுவல் ஃபண்ட் கணக்கு தொடங்குபவர்களுக்கென பரிவர்த்தனைக் கட்டணம் ரூ.150. அதேநேரத்தில், ரூ.10,000-க்கும் குறைவாக முதலீடு செய்பவர்களிடமிருந்து பரிவர்த்தனைக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.
மியூச்சுவல் ஃபண்ட் திட்ட விநியோகஸ்தர் களுக்கு ஏற்படும் போக்குவரத்து மற்றும் இதர செலவுகளை ஈடு செய்வதற்காக மேற்கண்ட பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எஸ்.ஐ.பி முதலீடு என்கிறபோது மாதம் ரூ.25 வீதம் 4 அல்லது 6 மாதங்கள் (ரூ.100/150) பிடிக்கப்படும்.
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.