
BIZ பாக்ஸ்

எம்.டி பதவியைத் தொடர்கிறார் சிவ் நாடார்
ஹெச்.சி.எல் நிறுவனத்தின் எம்.டி பதவியை மேலும் ஐந்தாண்டுகள் சிவ் நாடார் வகிப்பதற்கு, அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். வருகிற 2022-ம் ஆண்டு வரை இந்த நிறுவனத்தின் எம்.டி.-யாக அவர் இருப்பார். சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் இ-வோட் அளித்த வாக்காளர்களில், சுமார் 99.9 சதவிகிதத்தினர் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவருக்கு ஆண்டு சம்பளமாக ரூ.5 கோடியும் இதர சலுகைகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
அதிகரிக்கும் பி.இ முதலீடு
பி.இ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பிரைவேட் ஈக்விட்டி முதலீடுகள், நம் நாட்டை நோக்கி அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில், சுமார் 7.22 பில்லியன் டாலர் பி.இ முதலீடு நம் நாட்டுக்குள் வந்திருக் கிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், மொத்தம் 14.82 பில்லியன் டாலர் நம் நாட்டுக்குள் வந்திருப்பதாக கிராண்ட் த்ரோன்டன் நிறுவனத்தின் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியினால் நமது பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது எனப் பலரும் சொல்லிவரும் நிலையில், கடந்த ஒன்பது மாதங்களில் பி.இ முதலீடு 74% அதிகரித்திருப்பது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம் நாட்டின்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதையே காட்டுகிறது.

லட்சுமி மிட்டல் அளித்த மெகா நன்கொடை
தொழிலதிபர்கள், தாங்கள் சம்பாதித்ததில் கணிசமான தொகையைத் தங்களை வெற்றி யடையச் செய்த சமூகத்துக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் நன்கொடையாக அளிப்பது மேற்கத்திய நாடுகளில் நல்லதொரு பழக்கமாக மாறிவிட்டது.
லண்டனில் வசிக்கும் இந்தியத் தொழிலதி பரான லட்சுமி மிட்டல், தனது சொத்திலிருந்து சுமார் 150 கோடி ரூபாயை ஹார்வர்டு பல்கலைக் கழகத்துக்கு நன்கொடையாக அளித்துள்ளார். இந்தியாவும் பிற தெற்காசிய நாடுகளுடன் நெருக்கமான தொடர்பை வைத்துக்கொள்ளவே இந்த நன்கொடையை அவர் அளித்திருப்பதாக ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த நன்கொடையைக் கொண்டு, தெற்காசிய மையம் ஒன்று அந்தப் பல்கலையில் அமைக்கப்படுமாம்!

தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி
ஆசிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் தரவரிசையை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிறது குவாக்குவரெல்லி சைமண்ட்ஸ் ஏசியா நிறுவனம். சமீபத்தில் வெளியான 2018-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி 34 -வது இடத்தையும், டெல்லி ஐ.ஐ.டி 41 -வது இடத்தையும் பெற்றுள்ளன. சென்னை ஐ.ஐ.டி 48 - வது இடத்தைப் பெற்று, தமிழகத்தின் மானத்தைக் காப்பாற்றியிருக்கிறது. இந்தப் பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களும் இடம்பெறுவது எப்போது?

ஆண்டுக்கு 300 செயற்கைகோள்
முன்பு ராக்கெட் பட்டாசு களை விட்டமாதிரி, இப்போது விண்வெளிக்கு ராக்கெட்டுகளை (செயற்கைகோள்களை)விட ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில் சுமார் 3,000 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படும் என யூரோ கன்சல்ட் நிறுவனம் சொல்லியிருக்கிறது. ‘செயற்கைகோள்களை விண் வெளிக்கு ஏவுதல் தொடர்பாக அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 304 பில்லியன் டாலர் செலவழிக்கப்படும்’ என பாரீஸில் உள்ள விண்வெளி ஆய்வு நிறுவனமொன்று கணித்திருக் கிறது. இது, கடந்த பத்து ஆண்டுகளில் செய்யப்பட்ட செலவைவிட சுமார் 25% அதிகம். தற்போது, உலகம் முழுக்க ஆண்டுதோறும் 300 செயற்கை கோள்களை விண்வெளியில் ஏவ, சுமார் 30 பில்லியன் டாலர் செலவழிக்கப்படுகிறதாம்!
அடுத்த ஆண்டின்படி, உலக அளவில் மிக அதிகமான அதாவது, 130 கோடி ஸ்மார்ட் போன்களும், நம் நாட்டில் 53 கோடி ஸ்மார்ட் போன்களும் இருக்குமாம்!
555 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3,590 கோடி) கடன் வேண்டுமென்று கேட்டிருக்கிறது ஏர் இந்தியா. போயிங் விமான நிறுவனத்திடமிருந்து மூன்று புதிய விமானங்களை வாங்கவே இந்தக் கடனைக் கேட்கிறது ஏர் இந்தியா!

‘‘இந்தியாவைப் பொறுத்தவரை (எதிர்கால வளர்ச்சி நன்றாக இருக்கும் என்பதால்), நான் ஒரு காளையாகவே இருக்க விரும்புகிறேன்’’ - மார்ட்டீன் சோர்ரெல், சி.இ.ஓ., டபிள்யூ.பி.பி