நடப்பு
Published:Updated:

தேவையில்லாத பொருள்களைத் தூக்கிப் போடுங்கள்!

தேவையில்லாத பொருள்களைத் தூக்கிப் போடுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
தேவையில்லாத பொருள்களைத் தூக்கிப் போடுங்கள்!

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர் : தி லைஃப் சேஞ்சிங் மேஜிக் ஆஃப் டைடியிங் (The Life-Changing Magic of Tidying)

ஆசிரியர் : மேரி கோன்டோ (Marie Kondo)

பதிப்பாளர்:
Random House; Latest edition

சுத்தம்... நிறைய பேருக்கு இந்த வார்த்தையின் அர்த்தம் புரிவதில்லை.  மேரி கோன்டோ எழுதிய ‘தி லைஃப் சேஞ்சிங் மேஜிக் ஆஃப் டைடியிங்’ என்னும் சுத்தத்தின் (ஒழுங்குமுறை) அற்புதமான நற்பலன்களைச் சொல்லும் இந்தப் புத்தகத்தைப் படித்தால்,  அதன் சூட்சுமத்தைப் புரிந்துகொள்ளலாம்.   

தேவையில்லாத பொருள்களைத் தூக்கிப் போடுங்கள்!

சுத்தம் என்றால் தூசு தும்புகளை அகற்றுவது என்று நினைத்துவிடாதீர்கள். நம் வீடு, ஆபீஸ் போன்ற இடங்களில் பேப்பர், துணிமணி, பழைய அயர்ன் பாக்ஸ், ஷு பாக்ஸ், ஒருபோதும் அணியாத சட்டை,  உடல்பருமன் அதிகரித்ததால் அணியவே முடியாத திருமண ரிசப்ஷன் கோட்-சூட் எனத்  தேவையில்லாத பல விஷயங்களைக் குப்பைமேடு போல் சேர்த்துவைத்திருப்போம். அந்தக் குப்பைக்குள் நமக்குத் தேவையானவற்றைத் தேடித் தேடிக் களைத்துப்போவோம். அந்த ஒழுங்கின்மையை எப்படி சரிசெய்துகொள்வது என்பதைச் சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம்.

‘‘வேண்டியது, வேண்டாதது என்று என்னதான் பக்காவாகப் பிரித்தெடுத்து வைத்தாலும், நாளடைவில் வேண்டாத குப்பைகள் சுலபத்தில் சேர்ந்துவிடும். குப்பைகளை ஒழுங்கு செய்யும் வேகத்தைவிட அதிவேகத்தில் வேண்டாத குப்பைகள் வந்து சேர்ந்துவிடுகிறது என்பதே நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்னை. இந்தப் புத்தகத்தின் ஆசிரியை சொல்லும் கோன்மாரி (ஆசிரியையின் பெயரைக் கொஞ்சம் மாற்றியமைத்து) என்னும் வழியைக் கடைப்பிடிப்பவர்கள் பலரும் இதில் வெற்றிகண்டுள்ளனர். கோன்மாரி சொல்லும் மிகமுக்கியமான விஷயம், வேண்டாதவற்றை ஆரம்பத்திலேயே நிராகரியுங்கள் என்பதே.  வீட்டையும், அலுவலகத்தையும் எப்படி ஒழுங்குடன் சுத்தமாக வைத்துக்கொள்வது என்பது குறித்துத் தனிநபர்களுக்கு வகுப்புகள் எடுக்கும் இந்தப் புத்தக ஆசிரியையின் வகுப்பு களில் சேர, மூன்று மாதம் காத்திருக்கும் அளவுக்குக் கூட்டம் இருக்கிறதாம்!

ஒழுங்காகப் பொருள்களை வைத்து பாவித்திட, அவர் சொல்லித்தருவது டெக்னிக்குகள் இல்லை.  அன்றாட ஒழுங்குமுறையில் பெரிய அளவில் வெற்றியைக் கொண்டுவரக்கூடிய சின்னச் சின்ன நடைமுறை மாறுதல்களே.

பொதுவாக, மற்றவர்களிடம் என் வேலை  பற்றிச் சொல்லும்போது, வாழ்வில் சுத்த ரீதியான ஒழுங்குமுறையை எப்படிக் கொண்டுவருவது என்பதைப் பயிற்றுவிப்பது என்று சொன்னால், ‘இதையெல்லாம் சொல்லிக் கொடுத்துச் சம்பாதிக்க முடியுமா’ என்று கேட்பார்கள். மனிதனுக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுத்து வரும் விஷயமா  என்பதே அடுத்த கேள்வியாக இருக்கும். 

சமையல், தோட்டம் போடுதல், யோகா, தியானம் போன்றவற்றை நீங்கள் கற்றுக்கொள்ள நினைத்தால் ஊரெங்கும் சொல்லித்தர பலர் இருக்கிறார்கள். ஆனால், சுத்தம், ஒழுங்கு பற்றிச் சொல்லிக் கொடுக்க ஒருவரும் முன்வருவதில்லை. ஏனென்றால், இதெல்லாம் தானாக வரவேண்டும் என்ற எண்ணம் மனிதர்கள் மத்தியில் தீர்க்கமாக நிலவுகிறது என்பதால்தான்.  

தேவையில்லாத பொருள்களைத் தூக்கிப் போடுங்கள்!சமையல் கலை என்பது ஒவ்வொரு குடும்பத்தின் பாரம்பர்யத்தால் வருவது. அந்த டெக்னிக் பொறுமையுடன் குடும்ப அங்கத்தினருக்குச் சொல்லித் தரப்பட்டு, அடுத்த சந்ததியினருக்குக் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், சுத்தம் சார்ந்த ஒழுங்கு சொல்லித் தரப்படுகிறதா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். பள்ளிக்கூடத்திலாவது இதைச் சொல்லித் தந்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. பல விஷயங்களைச் சொல்லித் தரும் பள்ளிகள் இதைப் பற்றி மூச்சே விடுவதில்லை. இதனாலேயே சுத்தம் குறித்த ஒழுங்குமுறைகளை நமக்கு நாமே கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்கிறார் புத்தக ஆசிரியை.

கொஞ்சம் கொஞ்சமாக ஒழுங்கு செய்யலாம் என்று நீங்கள் நினைத்தீர்களென்றால், அது நடக்கவே நடக்காத காரியமாகும். ஏனென்றால், ஒழுங்கின்மை என்பது நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதுமாகக் கடைப்பிடித்துவரும் ஒரு பழக்கம். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிசெய்வதென்பது ஒரு கனவே.

சுத்தப்படுத்துதல் என்பது ஒரே சமயத்தில், ஒரே மூச்சில் செய்து முடிக்கவேண்டிய ஒரு விஷயம். ஏனென்றால், ஒரே மூச்சில் சுத்தப்படுத்தி விட்டால் அதன் பலன்கள் முழுமையாகக் கண்ணுக்குத் தெரியும். நம்மால் ஃப்ரெஷ்ஷாக உணர முடியும். நம் மனநிலையையும், சிந்தனையையும் அது மாற்றி அமைக்கவல்லதாகும்.

ஒரே மூச்சில் சரிசெய்து விட்டாலுமே நாள்பட குப்பைகள் சேரவே செய்யும். ஆரம்பத்தில் இருக்கும் உற்சாகம் கொஞ்சம் குறையவேறு செய்யும். இதனை முறியடிப்பதற்காகவே நீங்கள் சுத்தம் செய்யும் முறை மிகவும் வேகமாக முடிவடைவதாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களுக்குச் சலிப்பே தோன்றாது. உற்சாகமும் குறைய வாய்ப்பில்லை. தினசரி சுத்தம் செய்தல்,  சுத்தம் செய்யும் மேளா (ஸ்பெஷல் ஈவென்ட்) என இரண்டு முறைகளில் நீங்கள் முயற்சி செய்யலாம். 

தினசரி சுத்தம் செய்ய முடியாமல்தானே திண்டாடுகிறோம் என்கிறீர்கள் இல்லையா? அப்படியானால் உங்கள் ஸ்பெஷல் ஈவென்ட் எப்படி இருக்கவேண்டும்? ஒரேமுறை சுத்தம் செய்து ஒழுங்கு செய்தபின்னர் மீண்டும் குப்பை சேராதபடித் திட்டமிட்டிருக்கப்பட வேண்டும் இல்லையா? இப்படி ஒரே ஒருமுறை ஸ்பெஷலாகச் சுத்தம் செய்யும்போது ஒவ்வொரு விஷயத்தையும் ஒரு பொருளாகப் பாருங்கள். இது தேவையா, தேவையில்லையா, தேவை என்றால் எங்கே வைப்பது, தேவையில்லை என்றால் எப்படி விட்டொழிப்பது என்பதைத் தெளிவாக யோசிக்க ஆரம்பியுங்கள்.இப்படி சிந்தித்துச் செயல்படும்போது அடுத்தமுறை அதுபோன்ற பொருள்கள் உங்கள் கையில்/கண்ணில் சிக்கும்போது இந்தக் கேள்வியை உங்களுக்குள்ளேயே கேட்டு அதன்படி நீங்கள் நடந்துகொள்ள ஆரம்பிப்பீர்கள். அதனாலேயே உங்களுக்கு அன்றாடம் சுத்தம் செய்தல் என்பது தேவையில்லாமல் போய்விடும். 

தேவையில்லாதவற்றைத் தூக்கி எறிதல் என்பதில் பலவகைகள் உள்ளன. ஒரு பொருளை வாங்குகிறோம். அதனை முழுமையாக உபயோகித் தாயிற்று. இனி அது தேவை யில்லை என்ற நிலை வரும் போது தூக்கி எறிந்துவிடுதல் ஒரு நிலை. இந்தப் பொருள் தற்போதைய ஃபேஷன் இல்லை என்கிறபோது தூக்கியெறிதல் என்பது மற்றொரு நிலை. ஆறு மாதமோ அல்லது ஒரு வருடமோ உபயோகிக்காத பொருளைத் தூக்கி எறிதல் என்பது மற்றொரு நிலை.

இதையெல்லாம்விட இன்னுமொரு முக்கிய அளவீடு இருக்கிறது. இந்தப் பொருள் நம்மிடம் இருப்பதால், அது நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறதா என்ற கேள்விக்கான பதிலே ஒரு முக்கிய அளவீடாகும். பலன் இருந்தால் மகிழ்ச்சி இருக்கும்; பலன் இல்லாவிட்டால் மகிழ்ச்சி இருக்காது. ஆனால், பலன் இல்லாத பொருளைத் தூக்கியெறிவதன் மூலம் நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் அதைச் செய்வதுதானே நல்லது.

 அதேபோல், சுத்தப்படுத்தும்போது முதலில் பீரோவைச் சுத்தம் செய்கிறேன்; அப்புறம் அலமாரியைச் சுத்தம் செய்கிறேன் என்று ஆரம்பிக்காதீர்கள். மேலே பிரித்த தரவரிசையில் முதலில் எதைத் தூக்கி எறிய வேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அது எங்கே இருந்தாலும் அதை தூக்கி எறிய ஆரம்பியுங்கள். சுலபத்தில் சுத்தம் செய்ய முடியும் என்கிறார் ஆசிரியை.

என்னதான் பிரித்தெடுத்தாலும் தூக்கிப்போட மனசு வரமாட்டேன் என்கிறதா? இல்லை, இது பின்னால் உதவும் என்ற எண்ணம் தோன்றுகிறதா? இதுபோன்ற எண்ணம் எழுவதில் தவறேதும் இல்லை. அப்போது நீங்கள் நினைக்கவேண்டியது, இதுபோன்ற பலவும் சேர்ந்துதான் வாழ்க்கையைக் குப்பையாக்குகிறது என்பதையும், அந்தப் பொருள் நமக்கு எதைக்கொண்டுவந்து சேர்த்தது என்பதையும்தான்.

உதாரணத்துக்கு, பார்க்கப் பிடிக்கிறது என்று ஒரு சட்டையை வாங்கி விடுகிறீர்கள். பிறகு அந்தச் சட்டையைப் போட்டுப் பார்த்தால், அது நமக்குச் சரிப்பட்டு வராது என்று தெரிந்தே, அதை பீரோவுக்குள் புதைத்து வைத்து விடுகிறீர்கள். அதற்கு மாறாக, இந்தச் சட்டை நமக்குக் கற்றுத் தந்த பாடம் என்ன, எந்த டிசைன் நமக்கு உதவாது என்பதை உணர்த்தியதுதான். அந்த அளவுக்குச் சந்தோஷப்பட்டு விட்டு, அதனைத் தூக்கி எறிந்து விட வேண்டியதுதான் என்கிறார் ஆசிரியை.

தரவரிசைப்படுத்துவது எப்படி, பிரிப்பது எப்படி, அடுக்கிவைப்பது எப்படி, குவித்துப்போடுவதைத் தவிர்ப்பது எப்படி, அடிக்கடி உபயோகிக்கும் பொருளை எங்கே வைப்பது என ஆபீஸ் முதல் அடுப்படி வரையிலான பல்வேறு இடங்களில் சுத்தத்துக்கான ஒழுங்குமுறைகளைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை நிச்சயம் படித்துப் பயன்பெறலாம்.

சுத்தமாக வைத்துக்கொள்ளும் சூப்பர் ஃபார்முலாவைத் தெரிந்துகொள்பவர்களுக்கு நேரம் மிச்சமாவதுடன், மனமும் புத்துணர்வுடன் இருக்கும் என்பதை இந்தப் புத்தகம் புரிய வைக்கும்!    

- நாணயம் டீம்