
சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
அடுத்த பத்து வருடங்களில் நான் ஒரு கோடி ரூபாய் சேர்க்க வேண்டும். தற்போது என்னிடம் ரூ.12 லட்சம் உள்ளது. இதனை எப்படி முதலீடு செய்ய வேண்டும், தவிர, எஸ்.ஐ.பி முதலீட்டின் மூலம் நான் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
-மகேஷ், திருச்சி

“பல புதிய முதலீட்டாளர்களுக்கு உள்ள குழப்பம்தான் உங்களுக்கும் உள்ளது. உங்களுடைய இலக்கு இன்னும் பத்து வருடங்களில் ஒரு கோடி ரூபாய் வேண்டும் என்பதுதான். கையில் ரூ.12 லட்சம் இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். இந்தத் தொகையை எஸ்.டி.பி (STP - Systematic Transfer Plan) முறையில் மல்டிகேப் வகையைச் சேர்ந்த பி.என்.பி பரிபாஸ் டிவிடெண்ட் யீல்டு ஃபண்டில் முதலீடு செய்துகொள்ளுங்கள். ரூ.12 லட்சம் அடுத்த பத்து வருடங்களில் ரூ.37 லட்சத்துக்கும் மேலாகப் பெருகியிருக்கும் (ஆண்டுக்கு 12% வருமானம் என்ற அடிப்படையில்).
மேலும், மாதம் 30,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும்பட்சத்தில் உங்களுடைய முதலீடு ரூ.63 லட்சத்துக்கும் மேலாக வளர்ந்திருக்கும். மல்டிகேப் வகையான பிரின்சிபல் குரோத் ஃபண்டில் ரூ.15,000, ஸ்மால் அண்ட் மிட்கேப் வகையான எல் அண்ட் டி எமர்ஜிங் பிசினஸஸ் ஃபண்டில் ரூ.15,000 எனப் பிரித்து முதலீடு செய்யவும். நீங்கள் சொல்கிற கால இலக்கில் நீங்கள் ஒரு கோடி ரூபாயை அடைவதற்கு வாய்ப்புண்டு. வருடத்துக்கு ஒருமுறை உங்கள் முதலீட்டை மறுபார்வை செய்துகொள்ளுங்கள்.”

என் வயது 30. நான் துபாயில் இருக்கிறேன். கடந்த ஒரு வருடமாக கோட்டக் செலக்ட் ஃபோகஸ் ஃபண்டில் ரூ.2,000, எஸ்.பி.ஐ புளூசிப் ஃபண்டில் ரூ.2,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ பேலன்ஸ்டு ஃபண்டில் ரூ.2,000, பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்டில் ரூ.2,000, மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் ஃபண்டில் ரூ.3,000, ஆக்ஸிஸ் டைனமிக் ஈக்விட்டி ஃபண்டில் ரூ.1,000 என எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறேன். இந்த ஃபண்டுகளில் தொடர்ந்து பத்து வருடங்கள் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். என் முதலீடுகளில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா?
-கார்த்திகேயன், துபாய்
“தற்போது ஆறு ஃபண்டுகளில் மாதம் ரூ.12,000 முதலீடு செய்துவருகிறீர்கள். மிரே ஃபண்டைத் தவிர்த்து, பிற ஃபண்டுகள் அனைத்தும் லார்ஜ்கேப் அல்லது பேலன்ஸ்டு ஃபண்டுகளாகத்தான் உள்ளது. உங்களின் முதலீட்டுக் காலம் நீண்ட காலம் என்றும், வெளிநாட்டில் வசிப்பதாகவும் கூறியுள்ளீர்கள். மேலும், உங்களுக்கு இளம் வயது தான். ஆகவே, அதிக ரிஸ்க் உடைய மற்றும் அதிக வருமானம் தரவல்ல மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டுகளான ரிலையன்ஸ் ஸ்மால்கேப் ஃபண்டில் மாதம் ரூ.6,000, ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் ஈக்விட்டி ஃபண்டில் மாதம் ரூ.6,000 என முதலீட்டை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்.”
எனக்கு வயது 27. நான் இரண்டு ஃபண்டுகளில் தலா ரூ.1,000 எஸ்.ஐ.பி முறையில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்புகிறேன். எனக்கு முதலீட்டு ஆலோசனை வழங்கவும்.
-தமிழ்செல்வன், மெயில் மூலமாக
“உங்களின் இலக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் என்பதால், லார்ஜ்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்வது சிறந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ புரூ ஃபோகஸ்டு புளூசிப் ஈக்விட்டி ஃபண்ட், ஆதித்ய பிர்லா சன் லைஃப் டாப் 100 ஃபண்டுகளில் மாதந்தோறும் தலா ரூ.1,000 முதலீடு செய்யவும்.”
என் வயது 40. தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ளேன். நான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா? மாதம் ரூ.5,000 எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய எனக்கு ஏற்ற ஃபண்டுகள் எவை?
-இரா.சந்திரசேகரன், வேலூர்
“அரசுப் பணியில் உள்ளவர்கள் தாராளமாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அதற்குத் தடையேதும் இல்லை. ரூ.5,000 முதலீட்டை உங்களின் ஓய்வுக்காலத்துக்கென எடுத்துக்கொள்கிறேன். பிரின்சிபல் எமர்ஜிங் புளூசிப் ஃபண்ட், கோட்டக் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் தலா 2,500 ரூபாயை மாதந்தோறும் முதலீடு செய்து கொள்ளுங்கள்.”
