
செல்லமுத்து குப்புசாமி
பீட்சா பிடிக்குமா உங்களுக்கு? அதை அப்படியே சாப்பிடப் பிடிக்குமா அல்லது நான்கைந்து பேருடன் பகிர்ந்து ஆளுக்கொரு துண்டாக சாப்பிடப் பிடிக்குமா?

ஒரு பிரபலமான பீட்சா கடைசியில் புதன்கிழமைகளில் தள்ளுபடி விலைக்கு பீட்சா கிடைக்கிறது. ஐந்து பேர் சேர்ந்து 200 ரூபாய்க்கு போனில் ஆர்டர் செய்கிறீர்கள். அதாவது, ஆளுக்கு 40 ரூபாய். அது உங்களுக்கு டெலிவரி ஆனதும்தான் ஒருவருக்கு “இன்று நான் விரதம். எதுவும் சாப்பிடக்கூடாது’’ என ஞாபகம் வருகிறது.
உடனே மற்ற நால்வரும், ‘‘பரவாயில்லை. நாங்கள் நாலாகப் பங்கிட்டுக் கொள்கிறோம். இந்தா, உன் 40 ரூபாய்’’ என ஆளுக்கு 10 ரூபாய் போட்டுத் தந்துவிடுகிறீர்கள். பிறகு பீட்சாவை ஐந்து பங்குகளாகப் பிரிப்பதற்குப் பதிலாக நாலு பங்காகப் பிரித்து சாப்பிடுகிறீர்கள். அதாவது, ஒருவரின் ஷேரை மற்றவர்கள் எல்லோரும் வாங்கிவிடுகிறீர்கள். ஷேர்களின் எண்ணிக்கை ஐந்திலிருந்து நான்காகக் குறையும்போது மற்ற பங்குதாரர்கள் உண்ணக் கிடைக்கும் துண்டின் அளவு அதிகரிக்கிறது. இதுதான் பை-பேக் (buyback) நடவடிக்கையின் சாராம்சம்.

ஒரு நிறுவனம் நிறைய லாபம் சம்பாதித்து வைத்துள்ளது. ஒன்று, அதனை பிசினஸில் மறுமுதலீடு செய்ய வேண்டும். அப்படி மறுபடியும் பிசினஸில் போடுவதற்கான தேவையும், சாத்தியமும் இல்லாதபோது டிவிடெண்டாகத் திருப்பித் தரலாம் (இதுகுறித்து கடந்த வாரம் பார்த்தோம்). அப்படியும் இல்லையென்றால், ஒரு சிலரின் பங்குகளை கம்பெனியே பைபேக் (buyback) மூலம் திரும்ப வாங்கி நிலுவையில் உள்ள பங்குகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிடலாம்.
பத்து பேர் பங்குதாரர்களாக உள்ள ஒரு டீக்கடை, வருடம் ரூ.90,000 லாபம் சம்பாதிக்கிறது. அதனை டிவிடெண்டாகப் பகிர்ந்துகொடுத்தால் ஆளுக்கு ரூ.9,000 கிடைக்கும். அதற்குப் பதிலாக, அதே ரூ.90 ஆயிரத்தைக் கொண்டு ஒரு நபரின் பங்கைத் திரும்ப வாங்கிவிட்டால்? மற்ற ஒன்பது பேருக்கும் டிவிடெண்ட் கிடைக்காது. ஆனால், பிசினஸில் அவர்களுடைய உரிமம் செறிவடையும்.
அந்த டீக்கடை அடுத்த வருடமும் அதே ரூ.90 ஆயிரம் லாபம் ஈட்டினால், அப்போது அதனை டிவிடெண்டாகப் பகிர்ந்தளிக்கும்போது ஆளுக்கு ரூ.10 ஆயிரமாகக் கிடைக்கும். அடுத்த வருடம் மட்டுமல்ல, அடுத்துவரும் ஒவ்வொரு வருடமும் அப்படித்தான்.
நாம் ஒரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்கிறோம் என்றால், அது பைபேக் நடவடிக்கையை மேற்கொள்ளும் பட்சத்தில், அதை நல்லதொரு நடவடிக்கையாவே கருத வேண்டும். உலகப் பங்குச் சந்தை முதலீட்டின் கடவுளாகக் கருதப்படும் வாரன் பஃபெட், பைபேக் செய்யும் நிறுவனங்கள்மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்துவார்.
கம்பெனி நிர்வாகமானது, கையில் நிறையப் பணம் உள்ளதென்ற ஒரே காரணத்தால் கண்ட தொழில் களிலும் இறங்கி அதனைத் தொலைக்க முனையாமல் அல்லது வேறு சில நிறுவனங்களை வாங்கி விரிவாக்கம் செய்யாமல் (என்ன இருந்தாலும் ரூ.50,000 பேரை நிர்வகிக்கும் சி.இ.ஓ என்பதைவிட ரூ.80,000 பேரை நிர்வகிக்கும் சி.இ.ஓ என்றால் பெருமை அல்லவா!) முதலீட்டாளர்களை மனதில்கொண்டு இயங்குவதாக பொருள்.
ஆனால், பங்குச் சந்தையில் பங்குகள் குறைவான விலைக்கு விற்கப்படும்போது ஒரு நல்ல நிர்வாகம், பைபேக் நடவடிக்கையில் இறங்கும். அதிக விலைக்கு விற்கப்படும்போது பைபேக் செய்தால், அதன் நோக்கத்தைச் சந்தேகிக்க வேண்டியிருக்கும்.
உதாரணத்துக்கு, ரூ.400-க்கு விற்கும் ஷேர்கள் ரூ.200-க்கு தற்போது விற்கின்றன எனில், ரூ.400 விலையை விட ரூ.200 விலைக்கு நிறுவனம் திரும்ப வாங்குவது நலம். ரூ.200 விலையில் 10% பங்குகளைக் காணாமல் போகச் செய்ய முடிகிற தொகைக்கு ரூ.400-ல் 5% பங்குகளை மட்டுமே காணாமல் போகச் செய்ய இயலும்.
குறைந்த செலவில் பங்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குப் பதிலாக, அதிக விலைக்கு பைபேக் செய்யும்போது கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் உண்டு. நிர்வாகத்தைத் தங்கள் கையில் வைத்துள்ள புரமோட்டர்கள், அதிக விலைக்குத் தமது பங்குகளை நிறுவனத்திடமே விற்பதற்கான வழிமுறையாகவும் இதனை நோக்கலாம்.

இன்னும் சில சமயங்களில் நிறுவனத்தின் கையிருப்பில் பணம் கூடுதலாக இருக்காது. ஒருபக்கம் கடன்கள் இருக்கும். அதற்கு வட்டி செலுத்திக்கொண்டிருப்பார்கள். இன்னொரு பக்கம், பைபேக் நடக்கும். பைபேக் நடந்து முடிந்ததும் புரமோட்டர்கள் தங்கள் பங்குகளைக் கணிசமான அளவில் நிறுவனத்திடமே விற்றிருப்பார்கள். இவற்றையெல்லாம் கவனமாக ஆராய வேண்டியது அவசியம்.
பைபேக் பற்றிப் பேசுவதால், இந்த இடத்தில் பொருத்தமான உதாரணம் ஒன்று இதோ. சாஃப்ட்வேர் துறையானது நிறையப் பணம் புழங்கும் துறை. பெரிய முதலீடு இல்லாமல் மனிதவளம் வாயிலாக பணம் ஈட்டும் துறை. அநேகமாக பெரிய ஐ.டி கம்பெனிகளெல்லாமே கையிருப்பில் நிறையப் பணம் வைத்துள்ளன. ஆனால், தற்போது வளர்ச்சி மந்தமடைந்துள்ளது. பெரிதாக மறுமுதலீடு செய்வதற்கான வழிகளும் குறைவு. இந்த வருடம் டி.சி.எஸ், விப்ரோ, ஹெச்.சி.எல் என முக்கியமான எல்லா நிறுவனங்களுமே பைபேக்கில் இறங்கியுள்ளன.
அந்த வரிசையில், நமது பரிசீலனைக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வோம். அது, 11.3 கோடி பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது. நிறுவனம், தான் திரும்ப வாங்கும் ஒவ்வொரு பங்குக்கும் ரூ.1,150 விலையாகத் தருகிறது. ஒட்டுமொத்த பைபேக் பரிவர்த்தனையின் மதிப்பு ரூ.13,000 கோடி. இதில் 15% பைபேக், சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.1,950 மதிப்பிலான பங்குகள்.
இதை எழுதும் நேரத்தில் (அக்டோபர் 24) இன்ஃபோசிஸ் பங்கின் விலை ரூ.930. அறிவிக்கப் பட்டிருக்கிற பைபேக் விலையான ரூ.1,150, தற்போதைய சந்தை விலையைக் காட்டிலும் 23% அதிகம். பைபேக் நடவடிக்கைக்காக அறிவிக்கப் பட்டுள்ள ரெக்கார்டு தேதி நவம்பர் 1. அதாவது, நவம்பர் முதல் தேதி யார் பெயரில் ஷேர்கள் உள்ளனவோ, அவர்களெல்லாம் பைபேக் நடவடிக்கையில் பங்கு பெறத் தகுதியானவர்கள். இன்று பங்கு வாங்கினால் அது நாளை மறுநாள் நமது டீமேட் கணக்கில் வந்துசேரும். நவம்பர் 1-ம் தேதி நம் பெயரில் ஷேர்கள் இருக்க வேண்டும் என்றால், அக்டோபர் 30 அல்லது அதற்குமுன் நாம் பங்குகளை வாங்கியாக வேண்டும்.
தகுதியானவர்களுக்கெல்லாம் நோட்டீஸ் அனுப்பப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து நிறுவனம், நம்மிடம் வாங்கும் பங்குகளின் எண்ணிக்கை தீர்மானமாகும்.
15% சிறு முதலீட்டாளர் களுக்கு என ஒதுக்கப்பட்ட 1.7 கோடி ஷேர்களுக்கான பைபேக் கோரிக்கைக்கு 17 கோடி விண்ணப்பங்கள் வந்து சேர்கின்றன எனக் கருதினால், வந்திருக்கும் 10 விண்ணப்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பங்கு மட்டுமே திரும்ப வாங்கப்படும். நாம் 20 பங்குகளுக்கு விண்ணப்பித்தால், இன்ஃபோசிஸ் இரண்டு பங்குகளை மட்டும் ரூ.1,150-க்கு நம்மிடம் பெற்றுக்கொள்ளும்.
இந்த பைபேக் நிகழ்வில் கம்பெனியின் புரமோட்டர்களான நாராயண மூர்த்தி குடும்பத் தினரும், இன்னபிறரும் பங்கெடுக்க ஆர்வமாக உள்ளதாகச் செய்திகள் உலவுகின்றன. இதை யெல்லாம் கவனத்தில்கொண்டுதான் நம் முதலீட்டு முடிவை எடுக்க வேண்டுமே தவிர, ‘ஆஹா, அது நல்ல கம்பெனியாச்சே’ என்று வலியப்போய் சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக்கொள்ளக் கூடாது!
(ஜெயிப்போம்)