
ஓவியம்: பாரதிராஜா
“என் பெயர் விஜய், வயது 28. சொந்த ஊர் மதுரை. என் மனைவி குடும்பத்தைக் கவனித்துக்கொள்கிறார். எங்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். என் பெற்றோர் என்னுடன் இருக்கிறார்கள். நானும், நண்பர் ஒருவரும் சேர்ந்து கூட்டாகத் தொழில் செய்துவருகிறோம். தொழிலில், செலவுகள் போக மாதம் சுமார் ரூ.3 லட்சம் கிடைக்கிறது. குறைந்தபட்சம் மாதம் எனக்கு மட்டும் ரூ.1,25,000 வருமானம் கிடைக்கிறது.

மேலும் ரூ.15 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துள்ளேன். எதிர்காலத்தில் இதை அதிகரிக்க வேண்டும். மேலும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் ரூ.2 லட்சத்துக்கு எடுத்துள்ளேன். ஆனால், எனது பெற்றோருக்கு எடுக்கவில்லை. என் தந்தைக்கு வயது 58, தாயாருக்கு வயது 48. அவர்களுக்கு ஹெல்த் பாலிசி எவ்வளவுக்கு எடுக்க வேண்டும்?
லிக்விட் ஃபண்டில் பணம் சேமித்து ரூ.7.5 லட்சத்துக்கு ஒத்திக்கு வீடு எடுத்துக் குடியிருக்கிறோம். இன்னும் இரண்டு வருடங்களுக்குள் ரூ.25 லட்சத்துக்கு வங்கிக் கடன் வாங்காமல், சொந்தப் பணத்தில் வீடு வாங்க வேண்டும் என்பது என் ஆசை.

இப்போது தொழிலிலிருந்து வருகிற வருமானத்தை வைத்து, நான் எனது மகனின் மேற்படிப்பு மற்றும் திருமணத்துக்கு எவ்வளவு சேர்க்க வேண்டும்? மகனுடைய மேற்படிப்புக்கு அடுத்த 16 வருடங்களில் ரூ.15 லட்சம் தேவை. மகனின் திருமணத்துக்கு அடுத்த 22 வருடங்களில் ரூ.10 லட்சம் தேவை. எனக்கும், என் மனைவிக்கும் ஓய்வுக்காலத்தில் மாதம் ரூ.40 ஆயிரம் தேவை” என்ற விஜய், தன் வரவு செலவு விவரங்களை மெயிலில் அனுப்பி வைத்தார்.(இங்கே சொல்லப்பட்டுள்ள தொகைகள் இன்றைய மதிப்பில்)
வரவு செலவு விவரங்கள் : மாத வருமானம்: ரூ.1,25,000, குடும்பச் செலவு: ரூ.30,000, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: ரூ.5,000, டேர்ம் இன்ஷூரன்ஸ் ஆண்டு பிரீமியம்: ரூ.5,500, ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஆண்டு பிரீமியம்: ரூ.6,000, மாதம் மொத்தச் செலவு: ரூ.36,000, மீதம்: ரூ.89,000.
இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“சம்பாதிக்க ஆரம்பிக்கும்போதே எதிர்கால இலக்குகளுக்கான முதலீட்டைத் தொடங்குபவர் களுக்குப் பெரிதாகப் பொருளாதாரச் சிக்கல்கள் வருவதில்லை. அந்த வகையில் 28 வயதிலேயே நீங்கள் உங்களது எதிர்காலம் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
நிதித் திட்டமிடலுக்கு வருகிறவர்களில் பெரும்பாலோர் கடன் வாங்கி வீடு வாங்க வேண்டும் எனக் கேட்பார்கள். மற்ற இலக்குகளுக்கு முதலீடு செய்யவே வாய்ப்புகள் இல்லாத நிலையில், வீடு வாங்க வேண்டாம் என மறுத்துச் சொல்லியிருக்கிறேன். ஆனால், நீங்கள் மட்டும்தான் பணம் சேர்த்துக்கொண்டு வீடு வாங்க வேண்டும் எனச் சொல்லியுள்ளீர்கள். மாற்றி யோசிக்கும் உங்களைப் பாராட்டுகிறேன். ஆனால், நீங்கள் பணம் சேர்த்துக்கொண்டு வீடு வாங்க வேண்டியதில்லை. கடன் வாங்கியே வாங்கலாம். இரண்டு வருடம் வரை காத்திருக்க வேண்டாம். இப்போதே நீங்கள் வீடு வாங்கலாம். எப்படி எனச் சொல்கிறேன்.
நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி பணம் சேர்த்துக்கொண்டு இரண்டு வருடங்கள் கழித்து வீடு வாங்கும்பட்சத்தில், மாதம் ரூ.98,300 முதலீடு செய்ய வேண்டியிருக்கும். அப்படி செய்தால் மற்ற முதலீடுகளுக்கு முதலீடு செய்ய முடியாத நிலை உருவாகிவிடக்கூடும்.
நீங்கள் ரூ.25 லட்சத்துக்கு வீடு வாங்க வேண்டும் எனச் சொல்லியுள்ளீர்கள். நீங்கள் ரூ.18 லட்சம் வீட்டுக் கடன் வாங்கிக் கொள்ளுங்கள். மீதி ரூ.7 லட்சத்துக்கு நீங்கள் வீடு ஒத்திக்குக் கொடுத்துள்ள பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வீட்டுக் கடனுக்காக மாதம் ரூ.22,300 இ.எம்.ஐ செலுத்த வேண்டியிருக்கும்.
நீங்கள் வீடு ஒத்திக்காகக் கொடுத்துள்ள தொகையை ஒருசில மாதங்களில் திரும்பப் பெற இயலாத நிலையில், இரண்டு வருடங்கள் கழித்தே வீடு வாங்கும் முடிவை நீங்கள் எடுத்தால், 22,300 ரூபாயை கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்துவரவும். இரண்டு வருடங்கள் கழித்து இதன் மூலம் கிடைக்கும் தொகை போக, மீதம் தேவைப்படும் தொகைக்கு வீட்டுக் கடன் வாங்கிக் கொள்ளவும். இரண்டு வருடங்கள் கழித்து கட்டுமானச் செலவுகள் உயரும் வாய்ப்பு இருப்பதால், தற்போது வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்க முயற்சி செய்வதே நல்லது.

உங்கள் மகனின் மேற்படிப்புக்கு 16 வருடங்களில் ரூ.44 லட்சம் தேவையாக இருக்கும். அதற்கு மாதம் ரூ.8,500 முதலீடு செய்ய வேண்டும். உங்கள் மகனின் திருமணத்துக்கு அடுத்த 22 வருடங்களில் ரூ.44 லட்சம் தேவைப்படும். அதற்கு மாதம் ரூ.4,000 முதலீடு செய்ய வேண்டும்.
நீங்கள் பிசினஸ் செய்வதால், உங்கள் ஓய்வுக் காலம் 60 வயது என எடுத்துக்கொண்டுள்ளேன். இன்றைக்கு உங்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் தேவையெனில், உங்கள் ஓய்வுக்காலத்தில் மாதம் ரூ.3.48 லட்சம் தேவையாக இருக்கும். அப்படி யானால் நீங்கள் கார்ப்பஸ் தொகையாக ரூ.9.2 கோடி சேர்க்க வேண்டும். அதற்கு நீங்கள் மாதம் ரூ.26,200 முதலீடு செய்ய வேண்டும்.
வீட்டுக் கடன் மற்றும் எல்லா முதலீடுகளுக்கும் ரூ.61 ஆயிரம் ஒதுக்கியதுபோக, மீதம் இன்னும் ரூ.28 ஆயிரம் இருக்கும். இதனை ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்துவந்தால், ரூ.22.8 லட்சம் கிடைக்கும். ஐந்து வருடங்கள் கழித்து இந்தத் தொகையை வீட்டுக் கடனை மொத்தமாக அடைக்கவோ, பிசினஸ் வளர்ச்சிக்கோ பயன் படுத்திக்கொள்ளலாம்.
நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி உங்கள் பெற்றோருக்கு ரூ.5 லட்சத்துக்கு ஹெல்த் பாலிசி எடுத்துக்கொள்ளுங்கள். வீட்டுக் கடன் வாங்கியபிறகு, உங்களுக்கான டேர்ம் இன்ஷூரன்ஸை ரூ.75 லட்சமாக அதிகரித்துக் கொள்ளுங்கள். தற்போது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துவரும் 5,000 ரூபாயை இந்த பாலிசிகளுக்கு பிரீமியம் செலுத்தப் பயன்படுத்திக்கொள்ளவும். பரிந்துரைகள்...
பங்கு சார்ந்த முதலீடுகள்: ஐ.சி.ஐ.சி.ஐ புரூ ஃபோகஸ்டு புளூசிப் -ரூ.6,700, மோதிலால் ஆஸ்வால் மோஸ்ட் ஃபோகஸ்டு மல்டிகேப் -ரூ.6,500, கோட்டக் செலக்ட் ஃபோகஸ் ஃபண்ட் - ரூ.6,800, மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் -ரூ.6,800,
கடன் சார்ந்த முதலீடுகள் : ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் ஃபண்ட் -ரூ.6,600, ஹெச்.டி.எஃப்.சி கார்ப்பரேட் டெப்ட் ஆப்பச்சூனிட்டீஸ் ஃபண்ட்-ரூ.8,000, ஃப்ராங்க்ளின் இந்தியா டைனமிக் அக்ரூவல் ஃபண்ட் -ரூ.9,800, யூ.டி.ஐ டைனமிக் பாண்ட் ஃபண்ட் -ரூ.4,000, ஹெச்.டி.எஃப்.சி கோல்டு ஃபண்ட் -ரூ.3,500, பி.பி.எஃப் - ரூ.8,000”
குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்கு மானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.
Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878
- கா.முத்துசூரியா
