மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 43 - ஏற்றுமதியில் நீங்களும் கலக்கலாம்!

நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! ( விகடன் டீம் )

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

ற்றுமதித் தொழிலின் நடைமுறைகள், வெற்றிக்கான நுணுக்கங்கள் என அனைத்தையும் இதுவரை விரிவாகப் பார்த்தோம். அவற்றை எளிமையாக விளக்கும் ஃப்ளோ சார்ட்டையும் முந்தையப் பகுதியில் கொடுத்திருந்தோம். வெற்றிகரமாக ஏற்றுமதித் தொழிலைச் செய்வது எப்படி என்ற தொடரின் நிறைவுப் பகுதியில் நாம் இருக்கிறோம். இதுவரை உங்களுக்கு எடுத்துச் சொன்ன அனைத்தையும் நினைவுபடுத்தும் வகையில் இந்தப் பகுதியில் முக்கியமான விஷயங்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.    

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 43 - ஏற்றுமதியில் நீங்களும் கலக்கலாம்!

முதலில் நிறுவனத்தைப் பதிவு செய்யுங்கள். பான் எண்ணைப் பெற்று நடப்பு வங்கிக் கணக்குத் தொடங்குங்கள். பிறகு டி.ஜி.எஃப்.டி (DGFT) அலுவலகத்திலிருந்து ஐ.இ (IE Code) பெறவும். அதற்கு http://dgft.gov.in என்ற இணையத்திலும் விண்ணப்பிக்கலாம். ஏற்றுமதி இறக்குமதியைச் செய்வதற்கு ஆர்.சி.எம்.சி (Registration cum membership certificate - RCMC) சான்றிதழையும் பதிவு செய்துகொள்ளுங்கள். நீங்கள் எந்தப் பொருளை ஏற்றுமதி செய்கிறீர்களோ, அந்தப் பொருள் சார்ந்த புரமோஷனல் கவுன்சிலில் பதிவு செய்துகொள்ளுங்கள்.

ஏற்றுமதியில் நான்கு பேர் முக்கியமானவர்கள். 1. ஏற்றுமதியாளர்களாகிய நாம், 2. இறக்குமதி யாளர்கள், 3. வங்கிகள், 4. கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்ட்டுகள், இவர்களை வைத்து ஏற்றுமதித் தொழிலை நான்கு பிராசஸ்களாகப் பிரிக்கலாம். 1. ஏற்றுமதியாளர்கள் செய்ய வேண்டியது, 2.கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்ட்டுகள் செய்ய வேண்டியது, 3.வங்கிகள் செய்ய வேண்டியது, 4. டாக்குமென்டேஷன் மற்றும் அக்கவுன்டிங்.

இந்த நான்கு பிராசஸில் ஏற்றுமதியாளர்களாக நாம் ஐந்துவிதமான கம்யூனிகேஷன் செய்ய வேண்டியிருக்கிறது. முதலாவது, ஏற்றுமதி யாளர்களாகிய நாம், ஏற்றுமதி செய்யப்போகும் பொருளைத் தேர்ந்தெடுத்து, இறக்குமதியாளரை அடையாளம் கண்டு அவரிடம் நமது பொருளை விற்பதற்கான விசாரணையை நடத்துவது. முடிந்தவரை ஆர்டரை கன்ஃபார்ம் செய்ய முயற்சி செய்யுங்கள். நான் முன்பே இந்தத் தொடரில் கூறியபடி, இறக்குமதியாளரிடம் கேட்க வேண்டிய 10 கேள்விகளைக் கேட்டு ஆர்டரை உறுதிப்படுத்துங்கள். சாம்பிள் கொடுக்கும் உத்தியைச் சரியாகப் பயன் படுத்துங்கள். சாம்பிள் அதிகமாகக் கொடுத்து நஷ்டமடைந்துவிடாதீர்கள்.  

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 43 - ஏற்றுமதியில் நீங்களும் கலக்கலாம்!



இரண்டாவது, இறக்குமதியாளர் கன்ஃபர்மேஷன் செய்ததும் பொருளைக் கொள்முதல் செய்வது. உற்பத்தி செய்யும் இடத்திலேயே தரமானதாகப் பொருள்களை வாங்கினால் உங்களுடைய வாடிக்கையாளர்களை நீங்கள் தக்கவைத்துக்கொள்ள முடியும். எந்தப் பொருளை எங்கே வாங்க வேண்டும், எப்படிப் பார்த்து வாங்க வேண்டும் என்பதையெல்லாம் முன்பே விரிவாகக் கூறியிருக்கிறேன். அதை மீண்டும் ஒருமுறை படித்து அதற்கேற்ப கொள்முதல் செய்து லாபமடையுங்கள். பொருள்களைப் பேக்கிங் செய்வதில் என்னென்ன முறைகள் உள்ளன, பொருள்கள் சேதமாகாமல் பேக்கிங் செய்யும் முறைகள் போன்றவை பற்றி யெல்லாம் முன்பே கூறியிருப்பதை நினைவு படுத்திக்கொள்ளுங்கள். பேக்கிங்மீது லேபிளிங் செய்வதையும் ஏற்றுமதி செய்யும் நாட்டுக்கேற்ப கவனமாகப் பாருங்கள். 

மூன்றாவது, ஷிப்மென்ட்டுக்கு முந்தைய ஆவணங்களைத் தயார் செய்து கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்டிடம் கொடுப்பது. கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்ட் நமக்குத் தேவையான ஆவணங்கள், சான்றிதழ்களைத் தயார் செய்வார். நமது பொருளை நம்முடைய இடத்திலிருந்து இறக்குமதி யாளரின் இடத்துக்குக் கொண்டு சேர்ப்பதுவரை அவர்கள் பொறுப்பெடுத்துக்கொள்வார்கள். அதாவது, நம்முடைய சரக்குகளுக்கு க்ளியரிங் (Clearing), ஸ்டஃப்பிங் (Stuffing) மற்றும் ஃபார்வேடிங் (Forwarding) செய்வது ஆகியவற்றை கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்டுகள் செய்து முடிக்கிறார்கள்.

நான்காவது, கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்டிட மிருந்து ஷிப்மென்ட்டுக்குப் பிறகான ஆவணங்களைப் பெற்று வங்கியில் கொடுப்பது. வங்கிகள் மூலம் பேமென்ட் முறைகளைச் செயல்படுத்த வேண்டும். பேமென்ட் முறைகள் பற்றியும் வங்கிகளின் செயல்பாடுகள் பற்றியும் விரிவாக முன்பே பார்த்திருக்கிறோம். அதில் மிகவும் கவனம் தேவை.

பேமென்ட் முறைகளுக்கேற்ப இ.சி.ஜி.சி-யில் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொண்டு உங்களுடைய பொருளுக்கும், பணத்துக்கும் பாதுகாப்பு செய்துகொள்ளுங்கள்.

நம் பொருளை நம்முடைய இடத்திலிருந்து எடுத்துச் சென்று, கஸ்டம்ஸ் துறையின் அறிவுரைப் படி செயல்படும் இன்லேண்ட் கன்டெயினர் டிப்போ (ICD) அல்லது கன்டெயினர் ஃப்ரைட் சர்வீசஸ் (CFS) இடத்தில் நம்முடைய பொருளானது சோதனை செய்யப்பட்டு, சரிபார்க்கப்பட்டு கப்பலில் அல்லது விமானத்தில் ஏற்றப்படும் வரை பாதுகாக்கப்படும். 

ஏற்றுமதிக்குப் பயன்படுத்தப்படும் கன்டெயினர்கள் சர்வே செய்யப்பட்டபிறகே பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும். அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் கன்டெய்னர்கள் சர்வே செய்யப்படும். கன்டெய்னர் தரமாகவும் எந்தவிதப் பாதிப்பில் லாமலும் இருக்கிறதா என்பதை அவர்கள் உறுதிசெய்வார்கள். ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் அதைச் சரிசெய்த பின்னரே அதைப் பயன்பாட்டுக்கு அனுமதிப்பார்கள். 

ஐந்தாவது, ஏற்றுமதியை நிறைவு செய்த பிறகு அதற்கான அக்கவுன்ட்டுகளை நிர்வகிப்பது அவசியம். ஒரு பிசினஸ் முறையாகச் செயல் படு வதற்கு அக்கவுன்டிங் ப்ராசஸ் மிகவும் உதவியாக இருக்கும். புரொஃபார்மா, கமர்ஷியல் இன்வாய்ஸ், டாக்ஸ் இன்வாய்ஸ், லாப நஷ்டக் கணக்கு, ஸ்டாக் மேனேஜ்மென்ட்  மற்றும் ஜி.எஸ்.டி வரிக் கணக்குத் தாக்கல் என அனைத்தையும் ஒரு பிசினஸில் செய்ய வேண்டியது அவசியம். இவை அனைத்தையும் செய்வதற்கு ஒரு அக்கவுன்டன்ட், ஆடிட்டர் தேவை.

புதிதாகவும், சிறிய அளவிலும் தொழில் செய்பவர்களுக்கு அக்கவுன்டன்ட், ஆடிட்டர் போன்றவர்களை வைத்து இதையெல்லாம் செய்வது சற்றுக் கடினம்தான். ஆனால், அந்தக் கவலை உங்களுக்கு இனி இல்லை. அக்கவுன்ட்ஸ், ஃபைனான்ஸ் பற்றியெல்லாம் தெரியாவிட்டாலும் நீங்களே உங்கள் கணக்குகளை நிர்வகிக்கலாம். என்னுடைய சொந்தப் பயன்பாட்டுக்காக இவையனைத்தையும் எளிதில் செய்யக்கூடிய வகையில் ஒரு சாஃப்ட்வேரை உருவாக்கினோம். அது மற்றவர்களுக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கில் அதை இப்போது அனைவருக்கும் பயிற்சி கொடுத்துவருகிறேன்.

நாணயம் விகடன் வாசகர்களுக்காக இந்த ஒன் டச் அக்கவுன்டிங் சாஃப்ட்வேர் பயிற்சியை அளிக்கக் காத்திருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் நாணயம் விகடனைத் தொடர்புகொள்ளவும்.

ஏற்றுமதியாளர்கள் அரசின் ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டால், மேலும் லாபம் பார்க்கலாம். 

அரசின் திட்டங்களில் ஐந்து திட்டங்கள் உள்ளன. அவை 1. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கான திட்டம் (MEIS - Merchandise Exports from India Scheme),                       2. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சேவைகளுக்கான திட்டம் (SEIS-Service Exports from India Scheme),   3. வரி திரும்பப்பெறல் திட்டம் (Duty Draw Back), 4.இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருள்களுக்கான வரிவிலக்குத் திட்டம் (Duty Exemption Schemes), 5. இன்ட்ரெஸ்ட் ஈக்வலைசேஷன் திட்டம் (Interest Equalisation Scheme).

இந்தத் திட்டங்கள் பற்றியும், இவற்றை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது பற்றியும் முன்பு கூறியிருப்பதை மறுபடியும் ஒருமுறை படித்துக்கொள்ளவும். 

ஏற்றுமதியில் முக்கியமாக என்னென்ன கட்டுப்பாடுகள், தடைகள் உள்ளன என்பதைத் தெரிந்துகொண்டால் பிரச்னைகள் இல்லாமல் தொடர்ந்து ஏற்றுமதி செய்யலாம்.

வாசகர்கள் அனைவரும் ஏற்றுமதி தொழிலில் கலக்க வாழ்த்துகள்.

(நிறைவு பெற்றது)