
மிரட்டும் கந்துவட்டி... தத்தளிக்கும் சாமானியர்கள்!
நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்கிரையான சம்பவத்தைக் கண்டு தமிழகமே கலங்கியிருக்கிறது. ஏதோவொரு அவசரத் தேவைக்குக் கடன் வாங்கிய இசக்கிமுத்து, வாங்கிய கடனைவிட அதிகமாகச் செலுத்திய பின்னரும் அவரால் கந்துவட்டிக் கடனிலிருந்து விடுபட முடியவில்லை. கடன் தந்தவர்கள் வட்டித் தொகையைக் கேட்டுத் தொடர்ச்சியாக நிர்பந்திக்க, கலெக்டர் அலுவலகத்துக்கு முறையிடச் சென்று, தன் குடும்பத்தோடு தீக்கிரையானர் இசக்கிமுத்து.

இசக்கிமுத்துவின் குடும்பத்துக்கு மட்டுமோ அல்லது திருநெல்வேலியில் மட்டுமோ இந்தக் கொடுமை நடக்கவில்லை. தமிழகத்தில் பல ஊர்களில் கந்துவட்டிக் கொடுமை ஏழை மக்களின் கொஞ்சநஞ்ச வருமானத்தையும், நிம்மதியையும் சூறையாடிக்கொண்டுதான் இருக்கிறது. வீடு கட்ட, சிறு தொழில் தொடங்க, தொழில் மேம்பாட்டுக்கு என அரசும், வங்கிகளும் பலவிதமான கடன்களைத் தருவதாகச் சொல்லப் பட்டாலும், இந்தக் கடன்கள் பெரும்பாலான ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பதேயில்லை. அவசரத் தேவைக்குப் பணம் தேவைப்படும்போது, இவர்கள் கந்து வட்டிக்காரர்களிடம் மாட்டி படாதபாடுபடுகிறார்கள்.
தமிழகத்தில் கந்துவட்டி ஆதிக்கம் அதிகளவில் இருப்பது தொழில் நகரங்களில்தான். திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை எனப் பல தொழில் நகரங்களான மேற்கு மாவட்டங்களில் கந்து வட்டி ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. கந்து வட்டிக்காரர்களின் முக்கிய டார்கெட்டே தொழிலாளர்களும், சிறு, குறு தொழில் முனைவோர்களும்தான். தொழிலாளர்கள் என்றால் அவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.50,000 வரை வட்டிக்குத் தருகிறார்கள்.
திருப்பூரில் தொழிலாளர்களுக்கு வாரச் சம்பளம்தான் என்பதால், பெரும்பாலும் வார வட்டிதான் அங்கு அதிகம் தரப்படுகிறது. அதாவது, ஒரு தொழிலாளி தன் அவசரத் தேவைக்கு 10,000 ரூபாய் கடன் பெற்றால், அசல் தொகையைத் திருப்பித் தரும் வரை வாரம் ரூ.500 முதல் ரூ.750 வரை வட்டியாகச் செலுத்த வேண்டும். கடன் தொகையில் 20 முதல் 30 சதவிகிதத்தை வட்டியாக ஒவ்வொரு மாதமும் செலுத்தியாக வேண்டும். 3 முதல் 5 மாதங்கள் வரை வட்டி செலுத்தினால் நீங்கள் அசல் தொகையைவிட கூடுதல் வட்டி செலுத்தியிருப்பீர்கள். ஆனால், உங்கள் அசல் தொகை அப்படியே இருக்கும். கடன் தொகை குறையும்போது வட்டி மேலும் அதிகரிக்கிறது. அதாவது, ரூ.1,000 கடன் பெற்றால், வாரம் ரூ100 வட்டியாகச் செலுத்த வேண்டும். அதாவது, கடன் தொகையில் மாதம் 40 சதவிகிதத்தை வட்டியாகச் செலுத்த வேண்டியிருக்கும். சம்பளத் தேதியான சனிக்கிழமை தவறாமல் ஆஜராகிவிடுவார் கந்துவட்டிக்காரர்.
ஒருவர் சரியாக வட்டியைச் செலுத்தினால், அவர்மீது கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள் கந்து வட்டிக்காரர்கள். ‘உங்களுக்குக் கடன் வேண்டுமா?’ என்று அவர்கள் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருப்பார்கள். மீண்டும் கடன் வாங்கினால், வட்டி கட்டுவதிலேயே தொழிலாளியின் பெரும் ஊதியம் கழிந்துவிடும்.

ஆனால், இந்த உண்மையைத்தான் பலரும் சட்டென்று புரிந்துகொள்வதில்லை. ஈரோட்டில் ரவி என்ற விசைத்தறித் தொழிலாளி கந்து வட்டி கட்ட முடியாததால் கிட்னியை விற்க முடிவு செய்து, அறுவை சிகிச்சை வரை சென்று திரும்பி யிருக்கிறார். அவசரத் தேவைக்காக ஆயிரங்களில் வாங்கிய கடன் ரூ.3 லட்சம் வரை நீண்டிருக்கிறது. இதற்கு மாதம் அவர் கட்டவேண்டிய வட்டி மட்டும் ரூ.18,000. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலையில், எப்படியாவது அசலைக் கட்டி கடனிலிருந்து விடுபட வேண்டும் என நினைத்தவர், கேரளாவில் கிட்னியை விற்கச் சென்று மீண்டிருக்கிறார்.
மேற்கு மாவட்டத்தை அடுத்து, கந்து வட்டி சம்பவங்கள் கொடிகட்டிப் பறப்பது தென் மாவட்டங்களில்தான். இதில், மிகவும் பின்தங்கிய மாவட்டமான நெல்லையில்தான் கந்து வட்டித் தொழில் கனஜோராக நடக்கிறது. தொழில் நெருக்கடியைப் பயன்படுத்தியும், மக்களின் பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தியுமே பெரும்பாலும் கந்து வட்டிக் கொடுக்கிறார்கள். வட்டி கட்ட முடியாதபோது, அவர்களின் பொருள்கள் தொடங்கி சொத்துகள் வரை எழுதிவாங்கிக் கொள்வது அதிகமாக நடக்கிறது.
கந்து வட்டித் தொழில், கடந்த ஓராண்டாகத் தொழில் நகரங்களில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி அமலும்தான். கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் இந்த நடவடிக்கைகளால், சிறு, குறுந்தொழில்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. தொழில் நெருக்கடி ஏற்பட்டு வேலையிழந்த தொழிலாளர் கள், அவசரத் தேவைக்குக் கடன் வாங்கி நெருக்கடியில் சிக்கிக்கொண்டதாகவே சொல்கிறார்கள்.
அநியாய வட்டிக்குப் பணம் கொடுப்போரைத் தடுக்க ‘தமிழ்நாடு கடன் வழங்குபவர்கள் சட்டம்’ என்னும் பெயரில் ஒரு சட்டம், 1957-லேயே கொண்டுவரப்பட்டது. அதன்பின், 1979-ல் இதில் மாற்றமும் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு, திரைப்படத் தயாரிப்பாளர் ஜி.வி. தற்கொலையை அடுத்து, கந்து வட்டி தடைச் சட்டம் 2003-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்தச் சட்டங்கள் எதுவும் முறையாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதே கந்து வட்டிப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கக் காரணமாகும்.
சாதாரண மக்களுக்கும், சிறு தொழில் துறை யினருக்கும் வங்கிக் கடன் கிடைக்காததே, கந்து வட்டிக்குக் காரணம் என்கிறார்கள் பலரும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏழை எளிய மக்களுக்கு அதிக அளவில் கடன் தந்தால் கந்துவட்டிக் கொடுமை குறையும். என்றாலும், இந்தப் பிரச்னைக்கு வங்கிகளையும், கந்து வட்டிக்காரர்களையும் மட்டுமே காரணமாகச் சொல்லாமல், இது மாதிரியான கடன்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து, மக்களும் இதன் சதிச்சூழலில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதே நம் கோரிக்கை!
ச.ஜெ.ரவி