
நாணயம் புக் செல்ஃப்
புத்தகத்தின் பெயர் : தி ஃபோர் (The Four)
ஆசிரியர் : ஸ்காட் காலோவே (Scott Galloway)
Publisher: Portfolio

அமேசான், ஆப்பிள், ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய நான்கு நிறுவனங்கள்தான் இன்றைக்கு இந்த உலகை ஆண்டு கொண்டிருக்கின்றன. இந்த நிறுவனங்களில் மறைந்திருக்கும் டிஎன்ஏ-வைப் பற்றிச் சொல்லும் புத்தகம் ஸ்காட் காலோவே எழுதிய ‘தி ஃபோர்.’
இந்த நிறுவனங்கள் எப்படி மிகப் பெரிய இடத்தைப் பிடித்தன என நாம் எல்லோரும் யோசித்திருப்போம். நீங்கள் இந்த நிறுவனங்களுடன் போட்டிப்போட வேண்டுமானால், அல்லது இந்த நிறுவனங்களுடன் வியாபாரம் செய்யவேண்டு மானால், அல்லது இந்த நான்கு நிறுவனங்கள் வியாபித்திருக்கும் இந்த உலகத்தில் நீங்களும் தொழில் செய்ய வேண்டுமென்றால், இந்த நிறுவனங்கள் பற்றியும் நீங்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், கடந்த 20 வருடங்களில் இந்த நான்கு நிறுவனங்களும் பல்வேறு விதமான சேவைகளை வழங்குவதன் மூலம் பல மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளன.
இந்த நான்கு நிறுவனங்களும் மொத்தம் 2.3 ட்ரில்லியன் டாலர்கள் அளவிலான பங்கு வெளியீடுகளின் வாயிலாக சொத்துகளை உருவாக்கியுள்ளன. பலருக்கு வேலைவாய்ப்பு அளித்ததன் மூலம் அவர்களுக்கு வாழ்க்கைக்கான பாதுகாப்பை வழங்கியுள்ளன. பல்வேறு வகைகளில் உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்றியுள்ளன. இந்த நிறுவனங்கள் குறித்த இத்தகைய வர்ணனையைப் பல்வேறு ஊடகங்கள், கல்லூரிகள், போர்டு ரூம்கள், கருத்தரங்குகள் போன்றவற்றில் கேட்டு வருகிறோம்.
இந்த நிறுவனங்கள் இப்படியொரு நிலையை (சக்தியை) எப்படி அடைந்தன, உயிரற்ற இந்த நிறுவனங்கள் எப்படி நம்முடைய ஆன்மாவுடன் பின்னிப் பிணைந்து என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் தாண்டி பல விஷயங்களைச் செய்கின்றன, எந்த ஒரு நிறுவனமும் இதுவரை கண்டிராத அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுவரும் இந்த நிறுவனங்களினால் எதிர்காலத்தில் பொருளாதாரமும், வணிகமும் எந்தெந்த விதத்தில் பாதிக்கப்படக் கூடும், முற்காலத்தில் இருந்த இதுபோன்ற வெற்றி பெற்ற பல நிறுவனங்களும், பின்னர் வந்த போட்டியாளர்களிடம் தோற்றதைப் போல் இவையும் தோற்குமா அல்லது யாராலும் (தனிநபர், நிறுவனம், அரசாங்கம் என) அழிக்க முடியாத பெரிய நிறுவனங்களாக நிலைத்து நிற்குமா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை விளக்கமாகவே பார்ப்போம்
அமேசான்
அமெரிக்கர்களுக்குப் பற்பசையிலிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புடன்கூடிய டயர்கள் வரை எதை வாங்கவேண்டும் என்றாலும் அமேசான் என்ற ஆன்லைன் ரீடெய்ல் நிறுவனமே தாரகமந்திரமாக இருக்கிறது. மனித வாழ்வுக்கு உதவும் அன்றாடத் தேவைகளைச் சுலபத்தில் கண்டறிந்து வாங்குவது ஒன்றும் சுலபமான காரியமில்லை. ரொம்பவும் அலைந்து திரியாமல், வலியே இல்லாமல் ஒரு சில க்ளிக்குகளில் சாமான்களை வாங்க முடிகிறது. அதுவும் வீடு தேடி வருகிறது. பல ரீடெய்ல் நிறுவனங்களின் மதிப்பைக் கூட்டினால் வருவது, பூமியின் மேல் இருக்கும் மிகப் பெரிய ஸ்டோரான அமேசான் நிறுவனத்தின் மதிப்பு.

ஆப்பிள்
இந்த நிறுவனம், வரலாற்றில் அதிக லாபத்தைச் சந்தித்த நிறுவனமாகத் திகழ்கிறது. ஒரு கணக்குக்குச் சொல்ல வேண்டுமெனில், பெராரி நிறுவனத்தின் லாப சதவிகிதத்தையும். டொயோட்டாவின் விற்பனை அளவீட்டையும் கொண்டுள்ளது இந்த நிறுவனம். ஆரம்பித்து 23 ஆண்டுகளான இந்த நிறுவனம், அமேசான் நிறுவனத்தைப்போல் இரண்டு மடங்கு நிகர லாபத்தைக் கண்டுள்ளது. அந்த நிறுவனத்தின் கையிலிருக்கும் டாலர்களின் மதிப்பு டென்மார்க் நாட்டின் ஜி.டி.பி-யின் அளவாகும்.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக் நிறுவனமோ வேறு மாதிரியான அளவீடுகளைக் கொண்டுள்ளது. மனித இன வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான ஒரு நிறுவனம் என்று சொல்லுமளவுக்கு வேகமாக வளர்ந்த நிறுவனம். 7.5 பில்லியன் மக்களைக் கொண்ட உலகில், கிட்டத்தட்ட 1.2 பில்லியன் மக்கள் இந்த நிறுவனத்தைப் பயன்படுத்துகின்றனர். சராசரியாக இதை ஒவ்வொரு பயன்பாட்டாளரும் தினமும் குறைந்தபட்சம் 50 நிமிடங்களாவது பயன்படுத்துவது இதன் சிறப்பு. ஒருவர் ஆன்லைனில் இருக்கும் ஆறு நிமிடங்களில் ஒரு நிமிடம் ஃபேஸ்புக்கில் செலவழிக்கிறார் என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

கூகுள்
நவீன மனிதனின் கடவுள். நமக்கு அறிவின் ஆதாரம்; எங்கேயும், எப்போதும் நம் கூடவே இருப்பது. நம்மைப் பற்றிய விஷயங்கள் அனைத்தையும் அறிந்துவைத்திருப்பது; நாம் எங்கே இருக்கிறோம் என்பதைத் தெளிவாகத் தெரிவிப்பது, எங்கே போகப்போகிறோமோ அந்த இடத்துக்கு வழிசொல்வது, சில்லறைத்தனமான கேள்விகளிலிருந்து அறிவு முதிர்ச்சியுடன் கூடிய கேள்விகள் வரை அனைத்துக்கும் பதில் சொல்வது எனப் பல்வேறு விஷயங்களையும் இந்த நிறுவனம் செய்கிறது. 24 மணிநேரமும் 2 பில்லியன் மக்களுக்கு உதவுகிறது இந்த நிறுவனம். உங்களுடைய மனம் கவர்ந்த பிராண்ட் குறித்த தேடுதலை 0.000005 மணித்துளிகளில் செய்து முடிக்கிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
2016-ம் ஆண்டின் தகவல்படி, 100 பேர் ஒரு பொருள் குறித்து இணையத்தில் தேடினால், அதில் 55% பேர் அமேசானிலும், 28% பேர் கூகுளிலும் தேடுகின்றனர். அமேசானுக்குக் குறைந்த பொருள் செலவில் அதிக அளவில் முதலீடுகள் கிடைக்கின்றன. 1990-களில் லாபம் ஈட்டுவதற்குமுன், டெக்னாலஜி நிறுவனங்கள் கிட்டத்தட்ட 50 மில்லியன் டாலர்களை மட்டுமே வெஞ்சர் கேப்பிட்டல் நிறுவனங்களிடமிருந்து அதிகபட்சமாக முதலீடாகத் திரட்ட முடிந்தது. ஆனால், அமேசானோ 2.1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை லாபம் ஈட்டுவதற்கு முன்னால் திரட்ட முடிந்தது. இதற்கு அந்த நிறுவனம் பின்பற்றிய ஸ்ட்ராட்டஜி என்ன தெரியுமா? குறைந்த விலை, தேர்ந்தெடுப்பதற்கு அதிகமான பொருள்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்குப் வேகமாகப் பொருள்களைக் கொண்டு சேர்ப்பது என்பதே.

ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அது ஒரு டெக்னாலஜி நிறுவனம். டெக்னாலஜி நிறுவனங்களுக்கே இருக்கிற ஒரு பிரச்னை, அவை பழசானால், பழக்கத்திலிருந்து ஒழிந்துவிடும். ஆனால் ஆப்பிளைப் பொறுத்தவரை, அது ஒரு ஆடம்பரம் சார்ந்த (luxury) பிராண்ட் நிறுவனமாக ஆரம்பிக்கப்படவில்லை என்றாலும், அந்த நிலைக்குத் தன்னை வெற்றிகரமாகக் கொண்டு சென்றுவிட்டது. அப்படி ஒரு லக்சரி பிராண்டாக இருந்தபோதிலும், தலைமுறை மாறுதல்களைத் தாண்டியும் அந்த நிறுவனம் வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது. ஆப்பிள் கம்ப்யூட்டர் என்ற பெயரிலிருந்து கம்ப்யூட்டரை நீக்கி மியூசிக், போன் முதல் வாட்ச் வரையிலான லக்சரி பிராண்டாக தன்னை சுலபத்தில் உருவகப்படுத்திக்கொண்டது. 2015-ன் முதல் காலாண்டில் உலகளவில் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட போன்களில் 18.3 சதவிகித போன்கள் ஆப்பிள் போன்களேயாகும். ஆனால் அதே காலகட்டத்தில், ஸ்மார்ட்போன் துறையின் ஒட்டுமொத்த லாபத்தில் 92 சதவிகித லாபத்தை இந்த நிறுவனமே சம்பாதித்திருப்பது ஆச்சர்யம் தரும் டேட்டா.

சுயதம்பட்டம், பொய்யான செய்திகளுக்கு வழிவகுத்தல், ஒரு குழுவினரின் எண்ணங்கள் வேகமாகப் பரவ வழிவகுத்தல் என ஃபேஸ்புக் பற்றி நீங்கள் என்னதான் சொன்னாலும், எல்லோருடனும் தொடர்பில் இருப்பது என்பது மனிதர்களை மகிழ்ச்சிகரமாக வைத்துக்கொள்ள உதவுகிறது என்கிற அடிப்படையில்தான் பலரும் ஃபேஸ்புக்கில் திரும்பத் திரும்ப வருகிறார்கள் என்கிறார் இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர்.
நம் எண்ணத்தையும், சிந்தனையையும் தெளிவாகத் தெரிந்துவைத்துக் கொண்டுள்ளதாலேயே கூகுள் சக்கைபோடு போடுகிறது. பலருக்கும் ஆப்பிள் தெரியும்; அமேசான் தெரியும்; ஃபேஸ்புக் தெரியும். ஆனால், ஒரு சிலரால் மட்டுமே கூகுள் பற்றித் தெரிந்து கொள்ளவும், புரிந்துகொள்ளவும் முடியும் என்கிறார் ஆசிரியர்.
இந்த நான்கு நிறுவனங்கள் பற்றி சிலபல விமர்சனங்களும் உண்டு. விற்பனை வரி எதையும் கட்டாமல் வியாபாரம் செய்வதுடன், எக்கச் சக்கமான வேலைகளையும் காலி செய்கிறது. கம்ப்யூட்டர் தயாரித் தாலும் அதில் இருக்கும் டேட்டாக் களை அரசாங்கத்துக்குக்கூட தராது. ஒரு சோஷியல் மீடியா நிறுவனம் ஆயிரக்கணக்கான போட்டோக்களை ஆராய்ச்சி செய்து, அதிலிருந்து கிடைக்கும் தகவல்களை பார்ச்சூன் 500 நிறுவனங்களுக்குத் தருகிறது
என விமர்சனங்கள் இந்த நிறுவனங்களின்மீது உண்டு.
என்றாலும், இந்த நான்கு நிறுவனங்களையும் தெளிவாகப் புரிந்துகொண்டால் மட்டுமே எதிர் காலத்தில் பொருளாதாரம் எப்படி இருக்கும், அதில் நம் நிலைமை என்னவாக இருக்கும் என்பதையெல்லாம் நம்மால் நிர்ணயித்துக் கொள்ளமுடியும் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் ஆசிரியர். அனைவரும் ஒருமுறை படிக்கவேண்டிய புத்தகம் இது.
- நாணயம் டீம்