நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

7-வது சம்பள கமிஷன் அமலாக்கம்... ரொக்கப் பலன்பெறும் மூத்த குடிமக்கள்!

7-வது சம்பள கமிஷன் அமலாக்கம்... ரொக்கப் பலன்பெறும் மூத்த குடிமக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
7-வது சம்பள கமிஷன் அமலாக்கம்... ரொக்கப் பலன்பெறும் மூத்த குடிமக்கள்!

ப.முகைதீன் சேக்தாவூது

7-வது சம்பள கமிஷன் அமலாக்க அடிப்படையில் தமிழக அரசு, மூத்த குடிமக்கள் மகிழும்படியான பல அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறது.       

7-வது சம்பள கமிஷன் அமலாக்கம்... ரொக்கப் பலன்பெறும் மூத்த குடிமக்கள்!

சென்ற அலுவல் குழு அமலாக்கத்தின்படி, அடிப்படை ஓய்வூதியம் 2.26 என்ற காரணியால் மேம்பாடு பெற்றது. ஆனால், தற்போதைய ஓய்வூதியம் 2.57 என்ற காரணி மூலம் நிர்ணயம் செய்யப்படுவதால், பணியில் இருப்போரைவிட ஓய்வூதியம் பெறுபவர்களுக்குப் பணப்பலன் அதிகம் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான செய்தி.

இதற்குக் காரணம், 1.1.2016 முதல் மேம்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் கொள்கை அளவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றாலும், பணப்பலனானது 1.10.2017 முதலே தரப்படும். எனவே, 1.1.2016 முதல் 30.9.2017 வரை ஓய்வு பெற்றவர்களுக்கும் ரொக்கப் பலன், அவர்களது கடைசி ஊதியத்தின் அடிப்படையில் தரப்படும் என்பதே மூத்த குடிமக்களுக்கு அரசு வழங்கும் பிரத்யேக சலுகை.

இந்தச் சலுகைகளின்படி, 31.12.2015-க்குமுன் ஓய்வுபெற்றவர்களைவிட, 1.1.2016-க்குப்பிறகு ஓய்வு பெறுகிறவர்களுக்கு ஓய்வூதியத்தின் முப்பெரும் பணப்பலன்களான பணிக்கொடை, விடுப்பு ஒப்படை ஊதியம் மற்றும் தொகுப்பு ஓய்வூதியம் ஆகியவற்றின் மூலம் குறைந்தபட்சம் 190 சதவிகிதமும், அதிகபட்சமாக 274 சதவிகிதமும் கூடுதல் பணப்பலன் (Additional Monetary Benefit) கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான தகவல்.

பணிக்கொடை

33 ஆண்டுகள் பணித் தகுதியுடன் (Net qualifying Service) ஊதியம் + தர ஊதியம் ரூ.55,350 பெற்று, 31.12.2015-க்குமுன் ஓய்வுபெற்ற ஓர் அலுவலரின் பணிக்கொடை ரூ.10 லட்சமாக இருந்திருக்கும். இதே ஊதியத்துடன் இவரது ஓய்வுநாள் 1.1.2016-க்குப் பிறகு என்றிருந்தால் அவரது பணிக்கொடை ரூ.20 லட்சமாக உயரும். இந்த உயர்வு சுமார் 100% ஆகும்.   

7-வது சம்பள கமிஷன் அமலாக்கம்... ரொக்கப் பலன்பெறும் மூத்த குடிமக்கள்!தொகுப்பு ஓய்வூதியம்

31.12.2015-க்குமுன் ஓய்வுபெற்ற ஓர் அலுவலர், தன் தொகுப்பு ஓய்வூதியமாக ரூ.9,26,670-யைப் பெற்றிருப்பார். இவரது ஓய்வுநாள் 1.1.2016-க்குப் பிறகு என்று இருப்பின், இவரது தொகுப்பு ஓய்வூதியத் தொகை ரூ.24,51,029 என்ற நிலைக்கு உயர்ந்துவிடும். உயர்வுத் தொகை 157 சதவிகிதத்துக்கும் அதிகமாகும்.

விடுப்பு ஊதியம்


இதே அலுவலரின் ஈட்டிய விடுப்பு மற்றும் ஈட்டா விடுப்புக் கணக்கில் மொத்த விடுப்பு இருப்பு 330 நாள்கள் எனில், 31.12.2015-க்குமுன்  ஓய்வு எனில், விடுப்பு ஊதியம் ரூ.13,33,387 ஆகவும், 1.1.2016-க்குப்பிறகு ஓய்வு எனில், விடுப்பு ஊதியம் ரூ.16,10,400 ஆகவும் அமையும். அதாவது, உயர்வுத் தொகையின் சதவிகிதம் 20.78.

ஓய்வூதியம்

ரூ.47,750 + 7,600 = 55,350 என்ற இவரது பழைய ஊதியத்துக்கு இவர், 31.3.2016 அன்று ஓய்வு பெறும்பட்சத்தில், இவரது புதிய ஓய்வூதியம் ரூ.73,200-ஆக நிர்ணயமாகும்.

சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில், தமிழக அரசு தந்துள்ள புதிய ஊதிய நிலைகளின் படி, இந்த அலுவலர் பெறக்கூடிய கூடுதல் பணப்பலன் (Additional Monetary Benefit) மட்டுமே ரூ.28,01,372-ஆக உள்ளது. இந்த உயர்வுத் தொகையின் முதல் தவணையான ரூ.14,00,686 நடப்பு நிதியாண்டிலும், இரண்டாவது தவணை அடுத்த நிதியாண்டிலும் வழங்கப்படுகிறது.

1.1.2016-க்குப் பிறகு ஓய்வு பெறுபவர்களுக்குக்  கிடைத்துள்ள இந்த உயர்வுத் தொகை, இதுவரை கண்டிராத மிகப் பெரும் உயர்வு என்றே சொல்லலாம். 1.10.2017-க்குப்பிறகு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு மேற்கண்ட கணக்கீட்டின்படி, தவணை ஏதுமின்றி ஒட்டுமொத்தமாகவே ஓய்வுக் காலப் பலன்கள் தரப்படுகின்றன.

கவனிக்க வேண்டியவை

* ஓய்வுபெறும் ஊழியர் செலுத்தவேண்டிய நிலுவை முன்பணங்கள், கூட்டுறவு சங்கக் கடன்கள் மற்றும் பிற கடன் பாக்கியைப் பிடித்தம் செய்ய ஏதுவாக பணிக்கொடைத் தொகை, ஊழியர் ஓய்வுபெற்ற அலுவலகம் மூலமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தவணைப் பணிக்கொடையைப் பொறுத்தவரை, நேரடியாக, கருவூலம் மூலம் இ.சி.எஸ் முறையில் தரப்படும்.

* 1.1.2016 முதல் 30.9.2017 வரை ஓய்வு பெற்றவர்கள் தனது பழைய ஊதியத்துக்குச் சமமான பழைய ஓய்வூதியத்தைப் பெற்றிருப்பர். இந்த பழைய ஓய்வூதியத்தின் மூன்றில் ஒரு பங்கைத்தான் தொகுப்பாக மாற்றி, (Commutation) தொகுப்பு ஓய்வூதியம் பெற்றிருப்பர். தற்போது ஊதியமும், அதனடிப்படையில் ஓய்வூதியமும் உயர்ந்துள்ளது. அவ்வாறு உயர்ந்து நிற்கும் புதிய ஓய்வூதியத்துக்குத் தொகுப்பு ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க வேண்டும். மூன்று மாதத்துக்குள் இதைச் செய்யத் தவறினால், புதிய ஓய்வூதியக் கணக்கீட்டின்படி தொகுப்பு ஓய்வூதிய நிலுவையைப் பெற இயலாது.

* 1.1.2016-க்கும் 30.09.2017-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஓய்வுபெற்று, 25.10.2017-க்குமுன் இறந்துபோன ஊழியர்களுக்குத் தொகுப்பு ஓய்வூதிய நிலுவை கிடைக்காது. பணிக்கொடை மற்றும் விடுப்பு ஊதிய நிலுவை கிடைக்கும்.

மாதாந்திர ஓய்வூதியம்

* 31.12.2015-க்குமுன் ஓய்வு பெற்றவர்களானாலும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவராயினும், அதேபோல் 1.1.16 முதல் 30.9.2017 வரை ஓய்வு பெற்றவர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 1.1.2016 முதல் 30.9.2017 வரை நிலுவை இல்லை.

* 31.12.2015-க்கு முந்தைய ஓய்வூதியதாரர் / குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் 1.1.2016-க்குப் பிறகு ஓய்வு பெறுவோர், குடும்ப ஓய்வூதியதாரர் அனைவருக்கும் இனி, ஓய்வூதியமானது ரூ.10-ன் மடங்குகளில் இருக்கும். இதுவரை இவை ரூ.1-ன் மடங்குகளில் இருந்தன.

குடும்ப ஓய்வூதியப் பலன்கள்

* அதிகபட்ச ஓய்வூதியமும், அதிகபட்ச குடும்ப ஓய்வூதியமும், ஒரே அளவாக ரூ.1,12,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்னொரு முக்கிய அம்சம், பணியில் இருக்கும்போது இறந்து போன ஊழியரின் கணவர் / மனைவிக்கு தரப்படும் உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம் (Enhanced family Pension) பெறும் காலத்தை, ஏழிலிருந்து பத்தாண்டுகளாக உயர்த்தியிருப்பது.

பிற சிறப்பம்சங்கள்

ஓய்வூதியத்தின் அளவு 2.57 மடங்காக அதிகரித்த நிலையில், தொகுப்பு ஓய்வூதிய மதிப்பு (Commutation value) மாற்றப்படாது. முதுமூத்த குடிமக்களுக்குத் தரப்படும் உபரி ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் அதே அளவாகத் தொடர்வதும் ஆகும்.