மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 23 - பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சரியா?

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 23 - பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சரியா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 23 - பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சரியா?

செல்லமுத்து குப்புசாமி

மீபத்தில் இரண்டு முக்கியமான செய்திகளை நீங்களும் படித்திருப்பீர்கள். 1. பொதுத் துறை வங்கிகளுக்கு உயிரூட்டும் வகையில் அரசு ரூ.2.11 லட்சம் கோடி தொகையைத் தர முடிவெடுத்த செய்தி. 2. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், தன் 2ஜி சேவைகளை நிறுத்திக்கொள்வதாக வெளியான செய்தி.

இந்தச் செய்திகளை ஆழமாக ஆராயும்முன், ஒரு கால் டாக்ஸி ஓட்டுநரை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். கார் ஓடினால் அவருக்கு வருமானம். ஓடாமல் நின்றால் நஷ்டம். அப்படிப் பட்டவருக்கு, குடும்பத்தில் ஒரு கஷ்டம். அவசர மாக ஒரு லட்சம் ரூபாய் பணம் வேண்டும். என்ன செய்வார்?

யாரிடமாவது கைமாத்தாகக் கேட்டுப் பார்ப்பார். மனைவியின் நகையை அடமானம் வைத்துக் கடன் வாங்க முயற்சி செய்வார். தேவைப்பட்டால் தனது காரைகூட அடமானம் வைத்துக் கடன் வாங்குவார். ஆனால், காரையே விற்க நேரிட்டால்..?

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 23 - பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சரியா?

அவருக்குச் சோறு போடுவது அந்த கார் மட்டுமே. அதையும் விற்றால்..? கடன் மிகுதியால் சிலர் இந்த மாதிரியான நிலைமைக்குத் தள்ளப் படலாம். குடியிருந்த வீட்டையும், குடியானவன் உழுத காட்டையும் விற்கிற நிலை வரக்கூடாது என எங்கள் ஊரில் சொல்வார்கள். ஆனால், இந்த இக்கட்டான நிலைமை வந்தால்..? வாழ் வாதாரமான விஷயத்தை விற்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானால்..?

அவசரத் தேவையின் காரணமாக பெருங்கடன் சுமை ஏற்பட்டாலும் சரி, ஊதாரித்தனமாக செலவு செய்து சிறுகச் சிறுகக் கடன் சுமையை ஏற்றி வைத்திருந்தாலும் சரி, விளைவு ஒன்றுதான். “நான் பணம் தரேன். ஆனா, நீங்க ஓட்டுற கால் டாக்ஸி உனக்குப் பாதி. எனக்குப் பாதி. ரெண்டு பேரும் சேர்ந்து அதுக்கு ஓனரா இருக்கலாம். சம்மதம்னா பணம் தரேன்” என ஒருவர் நிர்பந்தித்தால்..? வேறு வழியில்லாமல் சம்மதிக்கத்தானே வேண்டும்?

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் ரூ.45,000 கோடி கடன் சுமையை ஏற்றி வைத்துள்ளது. கடன் சுமையைக் குறைப்பதற்கான திட்டமொன்றை முன்வைத்திருக் கிறது. அதில் ரூ.17,000 கோடிக்குத் தனது ஸ்பெக்ட்ரம், ஃபைபர் நெட்வொர்க், டவர்கள் உள்ளிட்ட சொத்துகளை மற்ற நிறுவனங்களுக்கு விற்க முடிவு செய்திருக்கிறது. யார் வாங்குவார்கள் என்று தெரியவில்லை. அவரது சகோதரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவேகூட அதனை வாங்கக்கூடும்.

மேலும், ரூ.10,000 கோடிக்குத் தனது மற்ற ரியல் எஸ்டேட் (உள்ளிட்ட) உடைமைகளை விற்கவும் முடிவு செய்துள்ளது. அதுபோக, திரும்பச் செலுத்த முடியாத கடன்களில் சிலவற்றுக்கு (ரூ.7,000 கோடி மதிப்பான கடனுக்கு) அந்தக் கடனுக்குப் பதிலாக நிறுவனத்தின் பங்குகளாக மாற்றிக்கொள்ளும் திட்டத்தை வங்கிகளுக்குத் தெரிவித்துள்ளது. மனைவியின் நகையை விற்று, குடியிருக்கும் வீட்டை விற்று, அதுவும் போதாமல் “சேட்ஜி, என் காரை உன் பேர்ல பாதி எழுதி எடுத்துக்கோ’ என்பது போலல்லவா இது இருக்கிறது?

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 23 - பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சரியா?


பத்துப் பேர் சேர்ந்து ஒரு பிசினஸ் ஆரம்பிக் கிறார்கள். அதில் இரண்டு பேர் அந்த பிசினஸை நடத்துகிறார்கள். நீங்கள் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுவிடுகிறீர்கள். ஒரு வருடம் கழித்து, திரும்பி வந்து பார்த்தால், 15 பேர் பங்கு தாரர்கள் என்றால் நீங்கள் அதிர்ச்சியடைய மாட்டீர்களா? நாலு பேர் சேர்ந்து சாப்பிடலாம் என்று பிட்ஸா ஆர்டர் செய்கிறீர்கள். அதை கையில் எடுக்கும்போது, “ஆறு துண்டா வெட்டு” என்று சொன்னால் குழப்பம் வருமா, வராதா?

ரிலையன்ஸுக்குக் கடன் கொடுத்தவர்கள் குறிப்பிட்ட அளவு பங்குகளை எடுத்துக் கொள்வார்கள். தற்போது அதன் ஒரு பங்கின் விலை ரூ.15-க்கு விற்கிறது. ஒருவேளை, பங்கு ஒன்றுக்கு அதிகபட்சமாக 20 ரூபாயோ, 50 ரூபாயோ அவர்கள் தரக்கூடும். ஆனால், இந்த நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் தனது பங்குகளை வெளி யிட்டபோது என்ன விலைக்கு வெளியிட்டது என ஆராய்ந்து பார்த்தால், ரத்தக் கண்ணீர்தான் வரும். ஐ.பி.ஓ வெளியிட்டதிலிருந்து அந்தப் பங்கை இப்போது வரைக்கும் விற்காமல் வைத் திருக்கும் நபர்களை நினைத்தால் பாவமாகவே இருக்கும்.

இதே நிலைமைதான் வங்கிகளின் கதையிலும். மறுமுதலீடு (Recapitalization) என்கிற பெயரில் அரசாங்கம் பொதுத் துறை வங்கிகளுக்கு மீண்டும் ரத்தம் செலுத்த முன்வந்தாலும், பல்லாயிரம் கோடிகள் வாராக் கடனாக மாறிப்போகும் அளவுக்குச் சென்ற நிர்வாகச் சீர்கேடு குறித்து யோசிக்க நிறைய உண்டு.

நாம் இங்கே குறிப்பாக ஒரேயொரு டெலிகாம் கம்பெனி குறித்தும், சில வங்கிகள் குறித்தும் மட்டுமே பேசவில்லை. எங்கெல்லாம் பங்குகளின் எண்ணிக்கை அதிகமாகிறதோ, அங்கெல்லாம் பிரச்னை என்பதை உணர்த்துவதற்கே இந்த இரு உதாரணங்கள். பிட்ஸா துண்டுகளின் எண்ணிக்கை குறைவதற்கான (பங்குகளின் எண்ணிக்கை) நடவடிக்கையை மேற்கொள்ளும் நிறுவனங்கள் எவ்வளவு மேம்பட்டவையோ, அவற்றுக்கு நேரெதிரானவை பங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்து ஏற்கெனவே உள்ள பங்குதாரருக்குக் கிடைக்கும் பிட்ஸா துண்டின் அளவைக் குறைக்கும் நிறுவனங்கள்.

பங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்து, நிறுவனத்தின்மீதுள்ள பங்குதாரர்களின் உரிமையைத் தளரச் செய்யும் அல்லது நீர்த்துப் போகச் செய்யும் எந்தவொரு செயலும் ‘dilution’ எனப்படுகிறது.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 23 - பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சரியா?

அப்படி நிகழ்வது நிர்வாகத்தின் நேர்மை யின்மை காரணமாக நிகழலாம். அல்லது நிர்வாகத்தின் இயலாமையால் நிகழலாம். அல்லது நேர்மையான, திறமையான நிர்வாகம் அமைந்தாலுமேகூட, பிசினஸ் சுழற்சியின் காரணமாக நிகழலாம். இல்லையென்றால், ஒட்டுமொத்த துறையுமே சிக்கலில் இருப்பதால்கூட நிகழலாம்.

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களும், தத்தளிக்கும் நிறுவனங்களும் மட்டும்தான் நீர்த்தலில் ஈடுபட வேண்டும் என்றில்லை. வெற்றிகரமாக இயங்கி, பெருமளவு லாபம் ஈட்டும் நிறுவனங்களிலும் இது சாத்தியம். சொல்லப்போனால், அந்த மாதிரியான கம்பெனிகளில்தான் அதற்கான சூழலும், தூண்டுதலும் அதிகமாக இருக்கும். சிறு முதலீட்டாளர்கள் கண்டுகொள்ளாமல் விடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

வாரன்ட்டுகள் மற்றும் ஆப்ஷன்கள், பங்குகளாக மாற்றக்கூடிய கடன் பத்திரங்கள், உயர்மட்ட நிர்வாகிகள் பங்குகளாக மாற்றக்கூடிய எம்ப்ளாய் ஸ்டாக் ஆப்ஷன் (Employee Stock Option-ESOP) ஆகியவற்றை இதற்குச் சில உதாரணங்களாகச் சொல்லலாம். 

பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு ஏரியா, ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்தை வாங்குதல் அல்லது ஒன்றிணைதல் (Merger & acquisition).

உதாரணத்துக்கு, வருடம் ரூ.1,000 கோடி சம்பாதிக்கிற ஒரு கம்பெனி (A), ரூ.100 கோடி சம்பாதிக்கிற இன்னொரு கம்பெனியை (B) வாங்க முடிவு செய்கிறது. அதற்கு ஒரு விலையை நிர்ணயித்து, பரஸ்பரம் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தை நிறைவேற்று வார்கள். அந்த விலை ரூ.300 கோடி எனக் கருதுவோம்.

கம்பெனி A-ஆனது B-யின் உரிமையாளர் களுக்கு ரூ.300 கோடி பணமாகக் கொடுத்து வாங்குவதற்குப் பதிலாக, அதே மதிப்பிலான A-யின் ஷேர்களைப் புதிதாக உருவாக்கி B-யின் உரிமையாளர்களுக்கு அளிக்கும் செயல். A-யில் ஏற்கெனவே ஷேர்களை வைத்திருக்கும் முதலீட்டாளரின் உரிமம் அந்த நிறுவனத்தில் நீர்த்துப்போகிறது.

வேறு கட்சியிலிருந்து புதிதாக வந்துசேரும் ஆளுக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்கும்போது, காலம் காலமாகக் கட்சிக்கு உழைத்த விசுவாசிகளுக்கு என்ன மரியாதையோ, அதுவேதான் இங்கும்.

நீர்த்தலை விளைவிக்கும் செயல்கள் அனைத்துமே நிர்வாகத்தின் கண்ணியம் தொடர்பானவை. இதனை அலசுவதற்காக ‘கார்ப்பரேட் கவர்னன்ஸ்’ எனத் தனியாக ஒரு படிப்பே இருக்கிறது. எது எப்படியாயினும் இந்த நீர்த்தல் (dilution), முதலீட்டாளர்களுக்கு நல்லதில்லை என்பதைப் பங்கு முதலீட்டாளர்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு நிறுவனம் எடுக்கும் இது மாதிரியான நடவடிக்கைகளெல்லாம் அடிக்கடி செய்திகளாக வந்துகொண்டே இருக்கும். இந்தச் செய்திகளைத் தவறாமல் வாசித்து, முடிவெடுக்க வேண்டியது முதலீட்டாளர்களாகிய நாம்தான். கீரைச் செடியை மாடு மேய்ந்துவிடக் கூடாது என்பதில் நாம் ஜாக்கிரதையாக இருக்கிறோம்.

கீரைச் செடிக்கே இத்தனை கவனம் காட்டினால், பல ஆயிரம் பணம் போட்டிருக்கும் நிறுவனத்தைப் பற்றி நாம் எவ்வளவு அக்கறைக் காட்ட வேண்டும்?

(ஜெயிப்போம்)