நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

அடுக்குமாடி வீடு... நில்... கவனி... வாங்கு!

அடுக்குமாடி வீடு... நில்... கவனி... வாங்கு!
பிரீமியம் ஸ்டோரி
News
அடுக்குமாடி வீடு... நில்... கவனி... வாங்கு!

ஜி.ஷியாம் சுந்தர், வழக்கறிஞர்

சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குவது தவிர்க்க முடியாது. அப்படி அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடு வாங்கும்போது சில விஷயங்களைக் கண்டிப்பாகக் கவனிக்க வேண்டும். அந்த விஷயங்கள் இனி... 
 
1. நீங்கள் வீடு வாங்கப்போகும் இடம் யாருடைய பெயரில் யாரிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதைக் கடந்த முப்பது வருடங்களுக்கு, அதற்கான மூலப்பத்திரங்களைக் கொண்டு சரிபார்க்க வேண்டும். 

2. சொத்தின் தற்போதைய உரிமையாளர் பெயரில் உள்ள ஒரிஜினல் பத்திரங்களைச் சரிபார்க்க வேண்டும்.   

3. அந்த அப்பார்ட்மென்ட் உள்ள நிலத்தின் தற்போதைய உரிமையாளர் பெயரில் வழங்கப் பட்டுள்ள லேட்டஸ்ட் பட்டா மற்றும் நில அளவை விவரங்கள் ஆகியவற்றைப் பார்ப்பதன் மூலம் வருவாய்த் துறை பதிவுகளில் அந்தச் சொத்து யார் யாரிடமிருந்து கைமாறியிருக்கிறது என்பதைச் சரிபார்க்கலாம். அதன் மூலம் தற்போதைய உரிமை யாளரின் நம்பகத்தன்மையை அறியலாம்.

4. நீங்கள் வாங்கப் போகும் நிலத்தின் தள வரைபட விவரங்களைச் சரிபார்க்கவும். அந்த இடம், குறிப்பிட்ட அலுவலகத்தினால் அனுமதிக்கப் பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்கவும்.

அடுக்குமாடி வீடு... நில்... கவனி... வாங்கு!

5.நீங்கள் வாங்கும் நிலத்தின் பயன்பாட்டுத்தன்மையைப் பார்க்க வேண்டும். அதாவது, நிலமானது விவசாய மல்லாத/குடியிருப்புக்கான நிலமாக மாற்றப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும்.

6.ஒருவேளை, பில்டர் அப்பார்ட்மென்டின் ஓனராக இல்லாமல் இருந்தால் பில்டர் மற்றும் ஓனருக்கு இடையே டெவலப்மென்ட் அக்ரிமென்ட் போட்டிருப்பார்கள். அந்த ஒப்பந்தத்தைக் கேட்டு வாங்கி, அதில் பில்டருக்கான பவர் ஆஃப் அட்டார்னியை ஓனர் தந்திருக்கிறாரா என்பதைச் சரிபார்க்கவும். அதில் எந்த அளவுக்கு உரிமை தரப் பட்டிருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது, அந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள அனைத்து ஃப்ளாட் களையும் விற்க உரிமை வழங்கப்பட்டிருக் கிறதா அல்லது குறிப்பிட்ட ஃப்ளாட்களை மட்டுமே விற்க உரிமை தரப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்கவும்.

மேலும், பில்டருக்கு வழங்கப்பட்டுள்ள பவர் ஆஃப் அட்டார்னி உரிமை இன்னும் நடைமுறையில் உள்ளதா அல்லது காலாவதியாகிவிட்டதா என்பதைப் பார்க்கவும். இடத்தின் தற்போதைய உரிமையாளர் ஃப்ளாட்டின் கிரயப் பத்திரம் பதிவு செய்யும்போது உயிருடன் இருக்கிறாரா என்பதையும் உறுதி செய்துகொள்ளவும்.

7. தற்போதைய உரிமையாளரின் சமீபத்திய கிரயப் பத்திரத்தின் சான்றளிக்கப்பட்ட நகல் ஒன்றை, குறிப்பிட்ட சார்பதிவாளர் அலுவலகத்தி லிருந்து வாங்கிச் சரிபார்க்க வேண்டும். எந்தவொரு ஆவணத்தின் உண்மைத் தன்மையையும் குறிப்பிட்ட அதிகாரம் கொண்ட அலுவலகத்தினர் சான்றளித்து கொடுக்கும் ஆவண நகல் மூலம் மட்டுமே சரிபார்க்க முடியும்.

8. நீங்கள் வாங்கவிருக்கும் ஃப்ளாட் இருக்கும் இடத்தின் கடந்த 30 வருடங்களுக்கான வில்லங்கச் சான்றிதழைச் சரிபார்க்க வேண்டும். எந்த விவகாரமும் இல்லாமல் சொத்து பரிமாற்றம் நடந்திருக்கிறதா, எத்தனை பேரிடம் சொத்து கைமாறியிருக்கிறது என்கிற விஷயங்களை அதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

அடுக்குமாடி வீடு... நில்... கவனி... வாங்கு!9. பில்டிங் கட்டுவதற்கான அனுமதி வழங்கப் பட்டிருக்கிறதா என்பதையும், அந்த பில்டிங் பிளான் அப்ரூவல், குறிப்பிட்ட அலுவலகத்தின் முத்திரையுடன் இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். 2006-க்குப் பிறகு, சி.எம்.டி.ஏ அலுவலகத்தினால் வழங்கப்பட்ட பில்டிங் கட்டுவதற்கான அனுமதி விவரங்களை ஆன்லைன் மூலமாகவே பார்க்கலாம்.

10. பில்டிங் அப்ரூவலில் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பார்ட்மென்ட் எண்ணிக்கையும் கட்டப் பட்டுள்ள அப்பார்ட்மென்ட் எண்ணிக்கையும் சமமாக இருக்கின்றனவா என்பதையும் பார்க்கவும். ஒரு அப்பார்ட்மென்டுக்கு ஒரு கிச்சன் மட்டுமே இருக்க வேண்டும் என்பது விதி. எனவே, கிச்சன் எண்ணிக்கையைச் சரிபார்க்கவும். அதை வைத்து எத்தனை அப்பார்மென்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

11. பில்டர்/டெவலப்பர் அப்பார்ட்மென்ட் இடத்தின் பிரிக்கப்படாத எந்தவொரு பகுதி யையும் (ஏதேனும் அப்பார்ட்மென்ட் அவருக்கு அலாட் செய்யப்பட்டிருந்தால் தவிர) சொந்த மாக்கிக்கொள்ள முடியாது. கட்டப்பட்ட பில்டிங்கின் மாடியிலும் எந்த உரிமையும் அவருக்கு இல்லை. இதன்படி கட்டுமான அக்ரிமென்ட் போடப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்கவும்.

12. பெரும்பாலான மாநிலங்களில் புதிய அப்பார்ட்மென்ட் கிரயப் பத்திரத்திலேயே பிரிக்கப்படாத இடத்தின் பதிவும் செய்யப்படும். ஆனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் பிரிக்கப்படாத இடத்தின் பதிவு தனியாகப் பதிவு செய்யப்படுகிறது. மேலும், தமிழகத்தில் பிரிக்கப்படாத இடம் பதிவு செய்யப்படுவதற்குமுன் புதிய அப்பார்ட்மென்ட் கட்டுமான அக்ரிமென்ட் பதிவு செய்யப்பட்டுவிடுகிறது.

13. பில்டர்/டெவலப்பர் வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் ஏதேனும் கடன் வாங்கியிருந்தால், அந்தக் குறிப்பிட்ட வங்கி, நிதி நிறுவனத்திலிருந்து அப்பார்ட்மென்டை விற்பதற்கான என்.ஓ.சி சான்றிதழ் வாங்கியிருக்க வேண்டும். மேலும், பில்டர்/டெவலப்பருக்குச் செய்யும் பணப்பரிவர்த்தனை, பில்டருக்குக் கடன் வழங்கிய வங்கி மூலம் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும்.

14. பில்டிங் கட்டுமானம் அனுமதிக்கப் பட்டபடியே நிறைவுபெற்றதற்கான சான்றிதழை, குறிப்பிட்ட அலுவலகத்திடமிருந்து பில்டர் பெற்றிருக்க வேண்டும். தண்ணீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு, மின் இணைப்பு போன்ற வற்றுக்கான கட்டண ரசீதுகளைப் பத்திர பதிவுக்குமுன் சரிபார்க்கவும்.   

15. பில்டிங் 20,000 சதுர அடிக்கு மேல் 1.5 லட்சம் சதுர அடிக்குக் குறைவான இடத்தில் கட்டப்பட்டிருந்தால் பில்டர்/புரமோட்டர் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையிடமிருந்து முன்னரே அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

16. ரீசேல் அப்பார்ட்மென்ட் வாங்குவதாக இருந்தால், மேற்சொன்ன விஷயங்களையெல்லாம் சரிபார்ப்பதோடு சமீபத்திய ஒரிஜினல் சொத்து வரி ரசீது, தண்ணீர் வரி ரசீது, மற்றும் மின் இணைப்பு ரசீது ஆகியவை தற்போதைய உரிமை யாளரின் பெயரில் இருக்கிறதா என்பதைப் பார்க்கவும். இரண்டாம் பயனாளராக அப்பார்ட் மென்டை வாங்கும்போது பல நேரங்களில் மூல பத்திரங்களின் நகல்கள் மட்டுமே இருக்கும். அவற்றின் ஒரிஜினல் அனைத்தும் பில்டர் வசம்தான் இருக்கும்.

தொகுப்பு: ஜெ.சரவணன்