நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மூடப்பட வாய்ப்புள்ளதா?

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மூடப்பட வாய்ப்புள்ளதா?
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மூடப்பட வாய்ப்புள்ளதா?

கேள்வி பதில்

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மூடப்பட வாய்ப்புள்ளதா?

சமீபத்தில் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம், தனது 2ஜி மற்றும் 3ஜி தொலைத்தொடர்பு வணிகத்தை நிறுத்துவதாகத் தகவல் வெளியாகி யுள்ளது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதே போல், ஒரு மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனம், தனது வணிகத்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி மூட வாய்ப்புள்ளதா, அவ்வாறு அந்த நிறுவனம் மூடப்படும் பட்சத்தில் முதலீட்டாளர்களின் நிலை என்ன, முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெற வாய்ப்புள்ளதா?

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மூடப்பட வாய்ப்புள்ளதா?செந்தில், மதுரை.

பா.பத்மநாபன், நிதி ஆலோசகர், Fortuneplanners.com

‘‘மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மூடப்படுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், நாம் முதலீடு செய்துவரும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை, வேறொரு நிறுவனம் கையகப்படுத்த அதிக வாய்ப்புள்ளது. அப்படிக் கையகப்படுத்தும்போது முதலீட்டாளர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் அளிக்கப்படும். முதல் வாய்ப்பு, முதலீட்டாளர்கள், அந்த ஃபண்டில்  முதலீட்டை அப்படியே தொடரலாம். இரண்டாவது வாய்ப்பு, யூனிட்களை விற்று, பணத்தை எந்தவித வெளியேற்றுக் கட்டணமும் இல்லாமல் திரும்ப எடுத்துக்கொள்ளலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடானது, செபி என்ற அரசு கட்டமைப்பின் கீழ் வருவதால், முதலீட்டின் மீதான பாதுகாப்பானது 100% உறுதி செய்யப்பட்டதாக இருக்கிறது. எனினும்,
ஒருவர் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்திருந்தால், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கேற்ப அவருக்குக் கிடைக்கும் லாபம் கூடும் அல்லது குறையும். நீண்ட காலத்தில் முதலீடு செய்வதன் மூலம் இந்த ரிஸ்க்கைச் சமாளிக்க முடியும்.’’

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மூடப்பட வாய்ப்புள்ளதா?

ஏற்றுமதி செய்பவர்களுக்கு இந்திய வர்த்தக இணையதளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என என் நண்பன் சொன்னான். அதைப் பற்றி விளக்கம் தர முடியுமா?

சக்திவேல், கோவை.

உன்னி கிருஷ்ணன், இணை துணை இயக்குநர், ஃபியோ

‘‘இந்திய வர்த்தக இணைய தளத்தில் (www.indiantradeportal.in) ஏற்றுமதித் தொடர்பான அனைத்துத் தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும். இது மத்திய வர்த்தக அமைச்சகம் மற்றும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் (FIEO - ஃபியோ) கூட்டு முயற்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அண்மைக் கால தகவல்களும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவது சிறப்பான அம்சமாகும்.’’

அஸ்ஸாம் கம்பெனி (இந்தியா) நிறுவனத்தின் பங்கை 9 ரூபாய்  என்கிற அளவில் வாங்கினேன். இப்போது சுமார் 5 ரூபாய் என்கிற அளவில் வர்த்தகமாகிறது. இந்தப் பங்கை இப்போது விற்கலாமா அல்லது தொடர்ந்து  வைத்திருக்கலாமா? 

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மூடப்பட வாய்ப்புள்ளதா?விக்டர், மதுரவாயல், சென்னை.

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்,

‘‘அஸ்ஸாம் கம்பெனி (இந்தியா) பங்கு, கடந்த ஏப்ரல் - ஜூன்  காலாண்டில் ரூ.21 கோடி நிகர இழப்பைச் சந்தித்துள்ளது. இந்த நிறுவனப் பங்கின் 52 வார அதிகபட்ச விலை ரூ.9.30 ஆகவும், 52 வாரக் குறைந்தபட்ச விலை ரூ.3.91 ஆகவும் இருக்கிறது. இதன் முக்கிய நிதி விகிதங்கள் குறிப்பாக, பி/இ விகிதம்கூட நெகட்டிவாக உள்ளது. அந்த வகையில், இந்தப் பங்கிலிருந்து உடனே வெளியேறிவிடுவது நல்லது.’’ 

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மூடப்பட வாய்ப்புள்ளதா?

மூன்று வருடங்கள் லாகின் கொண்ட இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் வருமான வரிச் சலுகைக்காக முதலீடு செய்துள்ளேன். மூன்று வருடங்கள் முடிந்ததும் அந்த ஃபண்டிலிருந்து பணத்தை எடுத்துவிட வேண்டுமா?

 கலைவாணி, அருப்புக்கோட்டை

ச.ராமலிங்கம்,  நிதி ஆலோசகர், சென்னை

‘’மூன்றாண்டுகளுக்குமுன் மொத்தமாக ஒரே தவணையில்  முதலீடு செய்திருந்தால், லாகின் காலம் முடிந்தபின், நீங்கள் திரும்ப எடுக்க நினைக்கும் பட்சத்தில் எடுக்கலாம். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்திருந்தால், முதல் எஸ்.ஐ.பி முதலீட்டின்போது வாங்கிய யூனிட்களை மட்டுமே நீங்கள் விரும்பும்பட்சத்தில் தற்போது விற்றுப் பணமாக்க முடியும்.

ஆனால், வரிச் சலுகைக்கான இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளைப் பொறுத்தவரை, லாகின் முடிந்தவுடன் யூனிட்களை விற்றுப் பணமாக்க வேண்டும் என்கிற எந்தக் கட்டாயமும் இல்லை. உங்கள் முதலீடு நல்ல லாபத்தில் இருந்து,   உங்களுக்குப் பணம் தேவைப்பட்டால் மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.  குறிப்பிட்ட நிதியாண்டில் கூடுதலாக வரிச் சலுகை முதலீடு தேவைப்பட்டால்,  ஏற்கெனவே இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் உள்ள யூனிட்களை விற்று, மீண்டும் முதலீடு செய்யலாம். இதை அதே ஃபண்டிலும் செய்யலாம் அல்லது நன்கு செயல்படக்கூடிய வேறு இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டிலும் முதலீடு செய்யலாம்.’’

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.