
சுமதி மோகன பிரபு
பொதுத் துறை வங்கிகளுக்கான மறு மூலதனமாக (Recapitalisation) அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ரூ.2,10,000 கோடி வழங்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.
இந்த மொத்தத் தொகையில் ரூ.1,35,000 கோடி வங்கி மறுமுதலீட்டுப் பத்திரங்கள் வாயிலாகவும், ரூ.18,000 கோடி நேரடியாக மத்திய பட்ஜெட் மூலமாகவும் வழங்கப்படும். ரூ.58,000 கோடி பங்குச் சந்தையிலிருந்து திரட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெகுகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த முடிவைப் பங்கு சந்தைகள் பெரிதும் வரவேற்றுள் ளன. பொதுத் துறை வங்கிகளின் சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.1,10,000 கோடி உயர்ந்தது.

மறுமுதலீட்டுப் பத்திரங்கள்
இந்தத் திட்டத்தின் அடிப்படையில், பொதுத் துறை வங்கிகளுக்கு மறுமுதலீட்டுக் கடன் பத்திரங்களை மத்திய அரசு வழங்கும். அந்தப் பத்திரங்களுக்கான தொகையை வங்கிகள் மத்திய அரசுக்கு வழங்க, அதே தொகையை மீண்டும் வங்கிகளுக்கே மத்திய அரசு மூலதனமாக ஒப்படைத்துவிடும். கடன் தொகைக்கு நிகரான பங்குகளைப் பொதுத் துறை வங்கிகள் அரசுக்கு வழங்கும். கடன் பத்திரங்களுக்கான வட்டித் தொகையை வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்க, வங்கிகள் மத்திய அரசுக்கு வருடாந்திர லாபத்திலிருந்து டிவிடெண்ட் வழங்கும்.
இந்த முறையிலான மறுமுதலீட்டுச் சுழற்சியில், அரசுக்குத் தனியாக சந்தையிலிருந்து பணத்தைத் திரட்ட வேண்டிய நிர்பந்தம் இல்லை என்பதுடன் வங்கிகளுக்குத் தேவையான மூலதனத் தொகையும் எளிதில் கிடைத்துவிடும்.
இதுபோன்றதொரு மறுமூலதனத் திட்டங்கள் இதற்குமுன் சிலி, கொரியா, பின்லாந்து, அர்ஜென்டினா போன்ற பல நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. 1990-களில் சீன அரசாங்கம் சுமார் 33 பில்லியன் டாலர் அளவுக்கு அந்த நாட்டு வங்கிகளுக்கு மறுமூலதனம் அளித்தது.
இந்தியாவிலும்கூட 1985-86 முதல் 2000-2001 வரை இந்த முறையின் மூலமாக மத்திய அரசு சுமார் 20,046 கோடி ரூபாய் வரை வங்கி மறுமூலதனமாக வழங்கியுள்ளது.
இதுபோன்ற திட்டத்தின் முக்கிய நன்மையாகக் கருதப்படுவது, மத்திய அரசு பட்ஜெட்டுக்கு நேரடிப் பாதிப்பு வராமல், கடன் சந்தைக்கும் பெருமளவு பாதிப்பு ஏற்படுத்தாமல் மூலதனம் வழங்கப்படுவதாகும்.
அதே சமயம், இந்த முதலீட்டுப் பத்திரங்கள் எஸ்.எல்.ஆர் அந்தஸ்து உடையதாக அதாவது, அரசுக் கடன் பத்திரங்களுக்கு நிகரானவையாகக் கருதப்படுமா என்கிற கேள்விக்கு இன்னும் பதிலில்லை.
வங்கிகளுக்கான ஆக்ஸிஜன்
புதிய கடன்களை வழங்கத் தேவையான மூலதனம் இல்லாத நிலை ஒருபக்கம், பழைய வாராக் கடன்களை என்.சி.எல்.டி (NCLT) மூலமாக வசூல் செய்யத் தேவையான முதலீடு இல்லாமல் தவிப்பது இன்னொரு பக்கம் எனப் பொதுத் துறை வங்கிகள் தடுமாறிவந்த நிலையில், இந்த மறு முதலீடு, தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள ஒரு நோயாளிக்கு ஆக்ஸிஜன் தருவது போன்றதாகும்.
பொதுத் துறை வங்கிகளில் வாராக் கடன் சுமை சுமார் ரூ.5,50,000 கோடி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடன் தொகைக்கான ஒதுக்கீட்டை, வங்கிகள் தமது லாபம் அல்லது மூலதனத்திலிருந்துதான் வழங்க முடியும். கடந்த சில ஆண்டு களாக லாபம் குறைந்துகொண்டே வரும் நிலையில், வங்கிகளின் மூலதன அளவும் குறைந்துகொண்டே வந்தது. எனவே, பொதுத் துறை வங்கிகளால் முக்கியத் திட்டங்களுக்கான கடன் தொகையை வழங்க முடியவில்லை.

இந்த நிலையில், அறிவிக்கப்பட்ட மறுமுதலீட்டுத் தொகையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன் களுக்கான உடனடி ஒதுக்கீடாக உதவும். குறுகிய காலத்தில் நிறைவேற்றப்படவுள்ள பேசல் III இலக்குகளை அடையவும் இந்த ஒதுக்கீடு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடுபோக, மீதமுள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் புதிய கடன்கள் வழங்குவதற்கு ஏதுவாக இருப்பதன் மூலமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு உதவும். ஒரு லட்சம் கோடி ரூபாய் பங்கு முதலீடு, சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் வரையிலான புதிய கடன்களை வழங்க உதவி செய்யும் எனவும், அதன் மூலம் உள்நாட்டு மொத்த உற்பத்தி பெருமளவு வளரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
வங்கித் துறையின் சீர்திருத்தங்கள்
இந்த மறுமுதலீடு வங்கித் துறையில் தேவையான சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு ஒரு முதல்படியாக இருக்க வேண்டும். பொதுவாக, வங்கிகள் கடன் வழங்குவதில் மட்டுமே அரசியல் தலையீடு என்பதில்லை. வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்வதிலும் பெருமளவில் அரசியல் தலையீடுகள் உள்ளன என்ற குற்றச்சாட்டுகள் உண்டு. விவசாயக் கடன் தள்ளுபடிகள் பெருமளவில் ஊடகக் கவனம் பெறும் அதே வேளையில், கார்பரேட் நிறுவனக்கடன் தீர்வுகள் அதிகக் கவனத்தை ஈர்ப்பதில்லை.
பெரிய வாராக் கடன்களில் தள்ளுபடி என்ற சொல் மட்டுமே மாறி, வெவ்வேறு உருவங்களில் வங்கியைப் பாதிக்கின்றன. உதாரணத்துக்கு, 900 கோடி ரூபாய் கடன் பெற்ற ‘சினர்ஜிஸ் காஸ்ட்டிங்க்ஸ்’ என்னும் நிறுவனம் 94% அதாவது, 834 கோடி ரூபாய் கடன் தீர்வுபெற்றதையடுத்து, வெறும் 54 கோடி ரூபாய்க்குக் கடன் முடித்து வைக்கப்பட்டது.
வங்கிகளுக்கான பெரிய உதவித் தொகைகள் மக்கள் வரிப் பணத்திலிருந்தே வழங்கப்படுவதால், வங்கி மற்றும் அரசு அதிகாரிகள் அதிகப் பொறுப்பு உணர்வோடு செயல்பட வேண்டும். உண்மையிலேயே, பொருளாதாரக் காரணங் களால் செயல்பட முடியாமல் போன பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே கடன் குறைப்பு அல்லது தள்ளுபடியை மேற்கொள்ள வேண்டும்.
கடன் தொகையைத் தவறாக உபயோகித்த நிறுவன அதிபர்களுக்கு எந்தவொரு சலுகையும் காட்டக் கூடாது. கடன் தள்ளுபடி சலுகை பெற்றுக்கொண்ட பெரும் தொழில் அதிபர்களுக்கு எந்தக் காரணத்தை முன்னிட்டும் மீண்டும் கடன் வழங்கக் கூடாது

அதிகரிக்கும் பட்ஜெட் பற்றாக்குறை
மத்திய அரசு வழங்கக்கூடிய கடன் பத்திரங்களுக்கு என்ன பெயர் சூட்டினாலும், அவை மத்திய அரசின் நிதி நிலையையும் பட்ஜெட்டையும் கண்டிப்பாகப் பாதிக்கும். ஏற்கெனவே, மத்திய அரசின் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், வங்கி மறுமூலதன கடன் பத்திரங்கள் அரசின் நிதிநிலையை இன்னும் மோசமாக்குவதுடன், அரசுக் கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதத்தை இன்னும் அதிகமாக்கும். மேலும், இந்தியாவின் தரநிர்ணயம் உயரவும் காலதாமதமாகும்.
நடைமுறைச் சிக்கல்கள்
வருகிற குஜராத் தேர்தலை முன்னிறுத்தி வெளிவந்த இந்த அறிவிப்புகள் வெற்றுத் தேர்தல் கோஷங்கள் என்ற அரசியல்ரீதியான குற்றச்சாட்டை மத்திய அரசு எளிதில் புறந்தள்ளினாலும், இந்த அறிவிப்பின் பின்னணியில் எழும் பொருளாதார ரீதியிலான சந்தேகங்களை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும்.
இந்த முதலீட்டுத் தொகை உண்மையிலேயே போதுமானதா என்பதும் முக்கியமான கேள்வி. இரண்டாண்டுகளில் இந்த முதலீட்டுத் திட்டம் முடிந்துவிடும் என்று அரசுத் தரப்பு கூறினாலும், முதலீட்டுக்கான கால அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.
சில பொருளாதார நிபுணர்கள், இந்த அறிவிப்பு மிகக் காலதாமதமானது என்றும், சிக்கலில் உள்ள கடன்கள் எட்டு லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுவிட்ட நிலையில், இப்போது அறிவிக்கப் பட்டுள்ள இரண்டு லட்சம் கோடி ரூபாய் யானைக்கு வழங்கப்படும் சோளப் பொரி என்றும் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே சொன்னபடி, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒரு நோயாளியின் உயிரைத் தக்கவைக்க ஆக்ஸிஜன் அவசியம் என்றாலும், வெறுமனே ஆக்ஸிஜனை மட்டுமே கொடுத்து நோயாளியைக் காப்பாற்றிவிட முடியாது. எனவே, உடனே வழங்க வேண்டிய ஆண்டி பயாடிக் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எவை என்பதையெல்லாம் அரசு தெளிவுப்படுத்தி அவற்றையும் வழங்க வேண்டும்.
மறுமூலதனத் திட்டங்கள் வங்கித் துறை சீர்திருத்தங்கள் ஆகிய இரண்டு திட்டங்களையும் ஒன்றாகவே அறிமுகப்படுத்த வேண்டும்.வங்கிகளின் செயல்பாட்டில் சுதந்திரமும், வெளிப்படைத்தன்மையும் பொறுப்பு உணர்வும் நிர்பந்திக்கப்படவேண்டும்.
ஆகமொத்தத்தில், பொருளாதார ரீதியாக வங்கி மறுமூலதன அறிவிப்பு வெகுவாக வரவேற்கத்தக்கது. என்றாலும், இது வெறும் அறிவிப்போடு மட்டும் நின்றுவிடாமல், மத்திய அரசு இந்தத் திட்டத்தைச் செம்மையாகச் செயல்படுத்துவதிலும் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்து.

பொதுத் துறை வங்கிகள் இணைப்பு!
இந்திய வங்கித் துறையை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுத் துறை வங்கிகள் இணைப்புப் பற்றிய முயற்சி நடந்துவருகிறது. பொதுத் துறை வங்கிகள் இணைப்புக் குறித்து முடிவெடுக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவின் தலைவராக அருண் ஜெட்லி செயல்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.